டும் டும் டும் – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 17)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு முறை கதை கூறல் வகுப்புக்கு பானுமதி டீச்சர் வந்தார். வழக்கமாக கண்ணன் ஐயாதான் வரவேண்டும். என்ன இது, இவர் வந்து நிற்கிறாரே என்று நாங்கள் குழப்பத்தில் திகைத்தபடி திருதிருவென்று விழித்தோம். டீச்சர் எங்களுக்கு கணக்குப் பாடம் எடுப்பவர். கணக்குப் பாடம் காலையிலேயே முடிந்துவிட்டது. வேறு வகுப்புக்குச் செல்லவேண்டியவர் ஏதோ நினைவில் வந்துவிட்டாரோ என்று தோன்றியது. அவசரப்பட்டு ராமலிங்கம் எழுந்து நின்று “இது கதை கூறல் டீச்சர்” என்று கைகளைக் கட்டிக்கொண்டு பணிவாகச் சொல்லி நிறுத்தினான்.

“தெரியும்டா. என்னைப் பார்த்துக்கச் சொல்லிட்டு ஐயா அவசரமா வெளியே கிளம்பி போயிட்டார்டா. அதான் வந்தேன்.” டீச்சர் சிரித்துக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தார். “கதைகூறல் வகுப்புதானே, ஆளுக்கொரு கதை சொல்லணும், சரியா?. செல்வகுமார், நீ முதல்ல ஆரம்பி” என்று முதல் வரிசையில் இருந்தவனை எழுப்பிவிட்டார். அவன் அழகாக ஒரு சுண்டைக்காய் கதையைச் சொன்னான். நகைச்சுவையான கதை. வகுப்பே விழுந்துவிழுந்து சிரித்தது. கணக்கு நடத்தும் நேரத்தில் கறாராகப் பேசும் டீச்சர் கண்களில் நீர் தளும்பும் அளவுக்குக் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார். “நீயே சுண்டைக்காய் மாதிரி இருக்கறேன்னு பார்த்தா, நீ சொல்ற கதையும் சுண்டைக்காயா?” என்று சொன்னபோது எல்லோருமே சிரித்தோம்.

குமாரசாமி முதலில் எழுந்து தவளை கதை சொன்னான். தொடர்ந்து சிவகாமி ஒரு வெட்டுக்கிளி கதை சொன்னாள். எல்லாமே நல்ல நல்ல கதைகள். டீச்சர் திடீரென வரிசை மாறி “நீ சொல்டா” என்று என்னை எழுப்பிவிட்டார். முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் சீக்கிரமாகவே சமாளித்துக்கொண்டு ஒரு எலி கதையைச் சொன்னேன். டீச்சருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. மற்ற பிள்ளைகளுக்கும் பிடித்திருந்தது. எல்லோரும் கைதட்டிப் பாராட்டினார்கள். தொடர்ந்து குமாரவேல், ஸ்ரீதரன், கணேஷ், சுமதி அனைவருமே ஆளுக்கொரு கதையைச் சொல்லிவிட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் சொல்லி முடித்ததும் டீச்சர் “சரி, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நாங்கள் அவரை ஒருகணம் விசித்திரமாகப் பார்த்தோம். கணக்கு நடத்தும்போது கண்டிப்பான குரலில் அவர் பேசுவதைக் கேட்டுக்கேட்டு பழகியதால், இவரால் கதைகூடச் சொல்லமுடியுமா என்பதையே எங்களால் நம்பமுடியவில்லை. அதற்குள் டீச்சர் கதையைத் தொடங்கிவிட்டார்.

“ஒரு ஊர்ல ஒரு குரங்கு” என்று தொடங்கியதும் டீச்சருக்கே சிரிப்பு வந்துவிட்டது. தொடர்ந்து “ரொம்ப குறும்புக்காரக் குரங்கு” என்றார். “ஐய்” என்று நாங்களும் சிரித்தோம். “அந்தக் குரங்குக்கு இவ்ளோ பெரிய வாலு” என்று ஒரு கையை நீட்டினார். அந்த வரியைச் சொன்னதுமே கதை களைகட்டிவிட்டது. நாங்கள் அவர் முகத்தையே பார்த்தோம். “ஒரு நாள் அது ஒரு மரத்துல ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு தாவித் தாவி ஆடிட்டே இருந்தது. அதுல அதுக்கு ஒரு ஆனந்தம். ஒரு தரம் அது தாவின வேகத்துல திடீர்னு கிளை முறிஞ்சி கிளையோடு தரையில தொம்னு விழுந்துட்டுது. சரியான அடி. வால் நசுங்கிட்டுது. என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சுது. அந்தப் பக்கமா வந்த ரெண்டு காக்காய்ங்க அதுங்கிட்ட வந்து என்ன நடந்திச்சின்னு கேட்டுதுங்க. குரங்கு அடிபட்ட செய்தியைச் சொன்னதும், இந்தப் பக்கமா போனா ஒரு வைத்தியர் வீடு வரும். அங்க போனா அவர் சரி பண்ணிடுவாருன்னு காக்காய்ங்க சொல்லிச்சிங்க. உடனே குரங்கு வைத்தியர்கிட்ட போச்சி”.

கதை போகிற வேகம் எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. நாங்கள் டீச்சர் முகத்தையே கவனித்தோம். “வைத்தியர் நசுங்கிப்போன குரங்கு வாலப் பார்த்தாரு. இரு வரேன்னும் உள்ள போயி ஒரு கத்தியை எடுத்து வந்து நசுங்கிப்போன வால் பகுதியை நறுக்கி எடுத்துட்டு மருந்து போட்டு கட்டுபோட்டு சரியாடும் போன்னும் சொன்னார். ஐயையோ என் வால ஏன் நறுக்கனீங்கன்னு சண்டைக்கு வந்துட்டுது குரங்கு. என் வாலை குடு, இல்லன்னா கத்திய குடுன்னு சத்தம் போட்டுது. வைத்தியருக்கு வேற வழி தெரியாம, கத்திய குடுத்து அனுப்பிட்டாரு” கற்பனையில் அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தபோது எங்களுக்கு அக்கணமே வாய்விட்டுச் சிரிக்கவேண்டும்போல இருந்தது. “கத்திய எடுத்துகிட்டு வாய்க்கால் ஓரமா இருந்த ஒரு மாந்தோப்பு பக்கமா நடந்துபோச்சி குரங்கு. அங்க ஒரு பையன் மாம்பழத்துக்கு குறி வச்சி கல்லால அடிச்சிட்டிருந்தான். ஒரு கல்லு கூட பழத்து மேல படலை. குரங்கு அவன்கிட்ட போயி, இந்த கத்தியால அடின்னு குடுத்திச்சி. பையன் கத்திய வாங்கி அடிச்சதும் பழம் விழுந்திட்டுது. ஆனா கத்தி வாய்க்கால்ல போய் விழுந்திட்டுது. என் கத்திய குடு, இல்லன்னா பழத்த குடுன்னு அவன்கிட்ட சண்டைக்கு போயிட்டுது குரங்கு. அவன் பேசாம பழத்த குடுத்து அனுப்பிட்டான்.” “பழத்தோடு குரங்கு வரும்போது எதுத்தாப்புல ஒரு பொண்ணு ரொம்ப சோகமா வந்திச்சி. ஏன் சோகமா இருக்கறன்னு குரங்கு கேட்டுது. பசி தாங்கலை, கண்ணைக் கட்டுதுன்னு சொல்லிச்சி அந்தப் பொண்ணு.

இந்தா இந்த பழத்த சாப்புடுன்னு கொடுத்தது குரங்கு. அந்தப் பொண்ணும் அத வாங்கி உடனே சாப்ட்டு முடிச்சிட்டுது. என் பழத்த குடு, இல்லன்னா நீ எங்கூட வான்னு சண்டை புடிச்சிது குரங்கு. வேற வழியில்லாம அந்த பொண்ணு குரங்குகூடவே வந்துட்டுது.” “பொண்ணோடு நடக்கும்போது செக்குல எண்ணெய் ஆட்டிட்டிருந்தான் ஒரு ஆளு. தனியா ஏன் சிரமப்படறேன்னு குரங்கு கேட்ட கேள்விக்கு, எனக்கு துணையா யாரும் இல்லைன்னு பதில் சொன்னான் அவன். இந்த பொண்ண துணைக்கு வச்சிக்கோன்னு சொல்லிச்சி குரங்கு. சாயங்காலம் வரைக்கும் அவளே செக்கு ஆட்டினா. என் பொண்ண அனுப்பு, இல்லன்னா எண்ணெய குடுன்னு சண்டை புடிச்சிது குரங்கு. வேற வழியில்லாம அவன் ஒரு பாத்திரத்துல எண்ணெய ஊத்தி அனுப்பனான். எண்ணெயோட நடக்கும்போது ஒரு பாட்டி தோசை சுட்டிட்டிருந்தத பார்த்திச்சி குரங்கு. தோசையெல்லாம் ஏன் கிழிஞ்சி கிழிஞ்சி இருக்குதுன்னு பாட்டிகிட்ட கேட்டுது குரங்கு. எண்ணெய் இல்லாம சுடறதால கிழியுதுன்னு சொன்னாங்க பாட்டி. இந்த எண்ணெய வச்சிக்கோன்னு குடுத்திச்சி குரங்கு. தோசையெல்லாம் சுட்டு முடிச்சபிறகு என் எண்ணெய குடு, இல்லன்னா தோசையை குடுன்னு அடம் புடிச்சிது குரங்கு. பாட்டியும் தோசைங்கள குடுத்து அனுப்பிவச்சாங்க”.

கதை போகும் விறுவிறுப்பில் எங்களுக்கு உடனே எழுந்து நிற்கவேண்டும் போல இருந்தது. இமைப்பதைக்கூட மறந்து நாங்கள் டீச்சரையே பார்த்தோம். “தோசைங்களோட நடக்கும்போது ஒரு மோளக்காரன பாத்திச்சி குரங்கு. அவன் ரொம்ப முகவாட்டத்தோடு இருந்தான். காலையிலேருந்து ஒன்னுமே சாப்படலைன்னு சொன்னான் அவன். இந்தா சாப்புடுன்னு அவன்கிட்ட தோசைங்கள குடுத்திச்சி குரங்கு. அவனும் வேகவேகமா சாப்ட்டுட்டு ஏப்பம் விட்டான். என் தோசைங்கள குடு, இல்லன்னா மேளத்த குடுன்னு அடம் புடிச்சிது குரங்கு. அவனும் மேளத்த குடுத்து அனுப்பிவைச்சான்.” மேளத்த எடுத்துட்டு போன குரங்கு ஒரு மரத்து மேல ஏறி உக்காந்திச்சி. காலையிலேருந்து நடந்ததையெல்லாம் நினைச்சிப் பார்த்திச்சி. அதுக்கு ஒரே ஆனந்தம், கொண்டாட்டம். மேளத்த அடிச்சி அடிச்சி சிரிக்குது. குலுங்கி குலுங்கி சிரிச்சிகிட்டே பாட்டு பாடி ஆடுது. அதான் கதை” என்று முடித்தார். எங்களுக்கும் ஆனந்தமாக இருந்தது.

நாங்களும் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே கைதட்டினோம். “அது என்ன பாட்டு பாடிச்சி தெரியுமா?” என்று மீண்டும் தொடங்கினார் டீச்சர். “என்ன பாட்டு டீச்சர்?” என்று ஆசையோடு ஒரே குரலில் நாங்கள் கேட்டோம். “சொல்றேன். சொல்றேன். அவசரப்படவேணாம். நான் ஒரு ஒரு வரியா சொல்வேன். நீங்களும் அதே போல திருப்பிப் பாடணும், சரியா” என்று எங்களைத் தயார்ப்படுத்திவிட்டு டீச்சர் முதல் வரியைச் சொன்னார்.

“வாலு போச்சி, கத்தி வந்தது டும் டும் டும்”

அந்த வரியையும் தாளத்தையும் கேட்டதுமே நாங்கள் எல்லோரும் எழுந்து நின்றுவிட்டோம். ஒவ்வொருவரும் குரங்குபோலவே குதித்துக்கொண்டே பாடினோம். டீச்சரும் வாய்விட்டு மகிழ்ச்சியோடு சிரித்தபடியே அடுத்தடுத்த வரிகளைச் சொல்லிக்கொண்டே போனார்.

“கத்தி போச்சி, மாம்பழம் வந்தது டும் டும் டும்
மாம்பழம் போச்சி பொண்ணு வந்தது டும் டும் டும்
பொண்ணு போச்சி எண்ணெய் வந்தது டும் டும் டும்
எண்ணெய் போச்சி தோசை வந்தது டும் டும் டும்
தோசை போச்சி மேளம் வந்தது டும் டும் டும்”

பாடப்பாட எங்கள் மனத்தில் ஒவ்வொரு வரியும் பசைபோல ஒட்டிக்கொண்டது. அன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது இந்தப் பாட்டைப் பாடிக்கொண்டே திரும்பினோம். அன்று மட்டுமல்ல, அதற்குப் பிறகு பத்து பதினைந்து நாட்கள் வரைக்கும் ஒருவரைப் பார்த்து டும் டும் டும் என்று சொன்னால் போதும் குரங்கு பாட்டு நினைவுக்கு வந்து முழுப் பாட்டையும் ஆடிப் பாடும் வழக்கம் வந்துவிட்டது.

Leave a comment