அம்மா, தாயே, பெத்தவளே – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 16)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எங்கள் கிராமத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் நான்கு சாலைகள் ஒன்றாக இணையும் ஒரு இடம் உண்டு. அதுதான் கடைத்தெருவின் தொடக்கப்புள்ளி. எங்கெங்கும் துணிக்கடைகள். காய்கறிக்கடைகள். இரும்புசாமான் விற்கும் கடைகள். பலகாரக்கடைகள். பூக்கடைகள். திருவிழாக்கூட்டம்போல மக்கள் ஜேஜே என்று திரண்டிருப்பார்கள். அந்தச் சந்திப்பில் எல்லோருடைய பார்வையிலும் படும்படி உயரத்தில் நாலைந்து தட்டிகள் நிரந்தரமாக ஒரு மூலையில் இருக்கும்.

திரையரங்குகளில் அப்போது திரையிடப்பட்டிருக்கும் படங்களின் சுவரொட்டிகளும் வரப்போகிற படங்களின் சுவரொட்டிகளும் அவற்றில் விளம்பரத்துக்காக ஒட்டியிருப்பார்கள். பக்கத்தில் இருக்கும் இன்னொரு தட்டியில் ஏதேனும் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் பற்றிய விவரம் எழுதப்பட்டிருக்கும்.

பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் விளம்பரத் தட்டிகளைப் பார்ப்பது என் பழக்கம். ஒருமுறை வில்லுப்பாட்டு என்று நீல மையால் எழுதப்பட்ட ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அப்படி ஒரு கலைநிகழ்ச்சியை நான் அதுவரை பார்த்ததில்லை என்பதால் அது எனக்குப் புதுமையாக இருந்தது. தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் போன்றவை மட்டுமே நான் பார்த்துப் பழகிய நிகழ்ச்சிகள். வில்லுப்பாட்டு என்பது மிகவும் புதுமையாக இருந்தது. நான் மீண்டும் ஆவலோடு தட்டியைப் படித்தேன். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி என்று பெரிய பெரிய எழுத்தில் தலைப்பும் அதற்குக் கீழே நிகழ்த்துபவர் குலதெய்வம் ராஜகோபால் என்றும் எழுதப்பட்டிருந்தது.

வ.உ.சி. என்ற பெயர் எனக்கு ஆர்வத்தை ஊட்டியது. எங்கள் கண்ணன் ஐயா வ.உ.சி பற்றி ஏற்கனவே எங்களுக்குச் சொல்லியிருந்தார். கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் வழியாகவும் அந்தப் பெயர் என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. அன்று பள்ளியில் பாடம் எடுப்பதற்காக கண்ணன் ஐயா வந்திருந்தபோது வில்லுப்பாட்டு நிகழ்ச்சி விளம்பரத்தைப்பற்றிச் சொன்னேன். “பூ வாங்கப் போனபோது நானும் பார்த்தேன்” என்று தொடங்கினார் ஐயா. “தெருக்கூத்து மாதிரி அதுவும் ஒரு கிராமியக்கலை. கிட்டத்தட்ட கதாகாலட்சேபம் மாதிரி இருக்கும். பாட்டு, வசனம், இசை எல்லாமே இருக்கும். நாம அவசியம் பார்க்கணும்.” ஐயாவின் பரிந்துரை என்பது எங்களுக்கெல்லாம் வேதவாக்கு. நிகழ்ச்சியன்று என் அம்மாவின் துணையோடு நான் திடலுக்குச் சென்றுவிட்டேன். நாங்கள் ஆளுக்கொரு சாக்கு எடுத்துச் சென்றிருந்தோம். மணல்மீது அதை விரித்து மேடையிலிருந்து சிறிது தொலைவில் அமர்ந்துகொண்டோம். என் வகுப்புப்பிள்ளைகளையும் ஐயாவையும் கண்கள் தேடின. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஒருவரைக்கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் ராஜகோபால் மேடைக்கு வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். அவர் முன்னால் ஒரு பெரிய ஒலிபெருக்கி இருந்தது. ராஜகோபால் மேடையின் மையத்தில் இருந்தார். அவருக்கு வலது பக்கமாக மூன்று பேரும் இடது பக்கமாக மூன்று பேரும் வெவ்வேறு வாத்தியக்கருவிகளோடு இருந்தார்கள்.

ராஜகோபாலுக்கு முன்னால் ஒரு பெரிய வில் ஒரு தாங்கியில் சாய்ந்தவாக்கில் நிறுத்தப்பட்டிருந்தது. இரு விளிம்புகளையும் இணைக்கும் வண்ண நாண்களில் சீரான இடைவெளிகளில் சின்னச்சின்ன மணிகள் தொங்கின. நாணைத் தீண்டி மணியோசையை எழுப்புவதற்குத் தோதான வகையில் ராஜகோபாலின் மடியில் ஒரு புல்லாங்குழல் நீளத்துக்கு மூங்கில் குச்சிகள் இருந்தன.

ராஜகோபால் நாணை மீட்டி மணிகளை இசைக்கவைத்து பாடத் தொடங்கினார். அவர் குரல் கணீரென்று இருந்தது. இறைவணக்கம் பாடிவிட்டு, அவர் நேரிடையாக வ.உ.சி.யைப்பற்றிய செய்திகளுக்கு வந்துவிட்டார். அவர் பிறப்பு, கல்வி, பட்டம், ஈடுபாடு, சுதந்திர தாகம் என கதை வளர்ந்துகொண்டே போனது. பின்பாட்டுக்காரர்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்வதுபோல சுதந்திரப் போராட்டத்தின் கதையை மிகவும் சுவாரசியமாகச் சொன்னார். கதையின் மீதான ஆர்வத்தில் இந்த உலகத்தையே நான் மறந்துவிட்டேன்.

மறுநாள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றபோது வகுப்புமுழுக்க வில்லுப்பாட்டு பேச்சாகவே இருந்தது. வில்லுப்பாட்டு கேட்டவர்கள் என்னைத் தவிர இன்னும் நாலைந்து பேர் இருந்தார்கள். எங்கள் ஊர்ப்பக்கம் இல்லாத புதுமை என்பதால், பார்த்ததுமே எங்களுக்கு அந்த நிகழ்ச்சி பிடித்துவிட்டது. நாங்கள் சொன்னதையெல்லாம் ஐயா பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். ராஜகோபால் பாடிய ஒரு பாட்டையே குமாரசாமி மனப்பாடமாக ஏற்ற இறக்கத்தோடு பாடிக் காட்டினான். ஐயா அவனை அருகில் அழைத்துத் தட்டிக்கொடுத்தார். பிறகு “இனிமே வில்லுப்பாட்டு எங்க நடந்தாலும் பார்க்கத் தவறாதீங்க” என்று சொன்னார்.

நாங்கள் தலையசைத்துக்கொண்டோம். அந்த வாய்ப்பு வெகுவிரைவில் எங்களுக்கு மறுபடியும் கிட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் நேரடி நிகழ்ச்சி இல்லை. வானொலி நிகழ்ச்சி. அதையும் கண்ணன் ஐயாவே எங்களுக்குச் சொன்னார். அந்த நிகழ்ச்சி காந்தியடிகளைப் பற்றியது என்றும் நிகழ்த்தவிருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு என்றும் சொன்னார். பிறகு அவராகவே “கொத்தமங்கலம் சுப்பு யார் தெரியுமா?” என்று கேட்டார். எங்களில் யாருக்குமே தெரியவில்லை. எல்லோரும் ஒரே சமயத்தில் உதட்டைப் பிதுக்கினோம். “அவரும் குலதெய்வம் ராஜகோபால் மாதிரி ஒரு சினிமாக்காரர். சினிமாவுக்கு கதை எழுதறவர். தில்லானா மோகனாம்பாள்னு ஒரு படம் வந்ததே, அது இவர் எழுதிய கதைதான்” என்றார். அவர் சொன்ன தகவல்களைக் கேட்கக் கேட்க எங்கள் ஆர்வம் அதிகரித்தது. நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும் தேதி, நேரம் பற்றி ஐயா தெரிவித்த விவரங்களையெல்லாம் குறித்துக்கொண்டோம்.

எங்கள் வீட்டில் ஆறு பேட்டரிகளைக் கொண்ட பெட்டியோடு இணைந்து இயங்கும் ஒரு பழைய வானொலிப்பெட்டி இருந்தது. ஆனால் பேட்டரிகள் மாற்றாததால் அதை யாரும் தொடவே இல்லை. எப்படியாவது காந்தி வில்லுப்பாட்டைக் கேட்டுவிடவேண்டும் என்னும் ஆவலால் தினமும் என் அம்மாவிடம் பேட்டரி மாற்றித்தரவேண்டுமென மன்றாடிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா கொஞ்சம் கூட என் சொற்களைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இரக்கம் காட்டாமலேயே இருந்தார்.

இறுதி நாளில் என் பிடிவாதத்தைக் கண்டு இரக்கப்பட்டு பேட்டரி வாங்க பணம்கொடுத்தார். பேட்டரியின் மின்னாற்றலால் தூண்டப்பட்டு வானொலி பேசத் தொடங்கியதும்தான் நிம்மதி பிறந்தது. நிகழ்ச்சியைக் கேட்பதற்காக, என் வகுப்பு நண்பர்கள் ஆறேழு பேர் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். அடுப்படியில் சோறாக்கிக்கொண்டே எங்கள் அம்மாவும் கேட்டுக்கொண்டிருந்தார். வில்லிசையோடு நிகழ்ச்சி தொடங்கியது. நான் ஒருகணம் குலதெய்வம் ராஜகோபால் அமர்ந்திருந்த மேடையை மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு பாடலும் தாளக்கட்டோடு அமைந்திருந்தது. ஒருமணி நேர நிகழ்ச்சி என்பதால் பாடல்கள் செறிவாக்கப்பட்டிருந்தன. காந்தியடிகளின் பிறப்பு, படிப்பு, பெற்றோர் மீதான மதிப்பு, உண்மை நாட்டம், வெளிநாட்டுப் படிப்பு, ஆப்பிரிக்கப் பயணம், இந்திய சுதந்திரப் போராட்டம், உப்பு சத்தியாகிரகம், கதர்ப்பிரச்சாரம், தீண்டாமை எதிர்ப்பு என நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக தாவித்தாவி வேகமாக வளர்ந்துகொண்டே போனது.

காந்தியடிகள் படிப்பதற்காக வெளிநாட்டுப் பயணத்துக்குத் தயாராகும் வேளையில் தன் அம்மாவுக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கிறார். அந்த நிகழ்ச்சியை ஒரு நீண்ட பாட்டாகவே பாடினார் சுப்பு. அந்தப் பாட்டின் சூழலும் ஒரேஒரு வரியும் இப்போதும் என் நினைவில் உள்ளது. “அம்மா தாயே பெத்தவளே, நான் அப்படி மகனல்ல” அதுதான் காந்தி கொடுக்கும் முதல் சத்தியவாக்கு. அதற்குப் பிறகு அவர் வாழ்வே சத்தியத்தின் பாதை. நிகழ்ச்சி முடிந்த சமயத்தில் நாங்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டிருந்தோம். மறுநாள் ஐயாவிடம் எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, எங்கள் உணர்வுநிலை இன்னும் கூடுதலானதே தவிர, தணியவில்லை. வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் இடம்பெறாத காந்தியின் வாழ்க்கைச்சம்பவத்தைப்பற்றி ஐயா எங்களுக்குக் கதைபோல உருக்கமான குரலில் சொன்னார்.

அவர் வகுப்பைவிட்டுக் கிளம்பும் முன்பாக “காந்தியைப் போன்றவர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு, என்ன தெரியுமா?” என்று கேட்டார். நாங்கள் பதில் பேசாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். “காந்தி மாதிரியான ஆட்களும் இந்த மண்ணுல பொறக்கறாங்க. நாமும் பொறக்கிறோம். அவுங்களும் வளர்ந்து வாழறாங்க. நாமும் வளர்ந்து வாழறோம். என்னைக்கோ ஒருநாள் அவுங்களும் மறைஞ்சிடறாங்க. நாமும் மறைஞ்சிடுவோம். அப்படி மறைஞ்சபிறகு கூட அவுங்க வாழ்வாங்க. ஆனா நமக்கு அப்படி ஒரு வாழ்க்கை கிடையாது. அதுதான் நமக்கும் அவுங்களுக்கும் உள்ள வித்தியாசம்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அச்சொற்கள் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

“அம்மா தாயே பெத்தவளே, நான் அப்படி மகனல்ல” என்ற வரி ஒரு மனப்பாடச்செய்யுள் வரிபோல என்னோடு கலந்துவிட்டது. காலாற நடக்கும்போதும் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுக்கும்போதும், துணிதுவைக்கும்போதும் தனிமையில் எனக்குள் பாடிப்பாடி மகிழ்கிற ஒரு வரியாகவே மாறிவிட்டது. ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்ணன் ஐயா வகுப்பில் ஒரு புதிய புத்தகத்தைக் காட்டினார். அது காந்தி மகான் கதை. “இது என்ன தெரியுதா? அன்னைக்கு ரேடியோவுல காந்தி வில்லுப்பாட்டு வந்ததே, அதனுடைய முழுவடிவம்தான் இந்தப் புத்தகம்” என்றார். ஒரு திருமணத்துக்காக சென்னைக்குச் சென்றிருந்தபோது வாங்கியதாகச் சொன்னார். ஒவ்வொருவராக நாங்கள் அதை வாங்கித் தொட்டுப் புரட்டிப் பார்த்தோம். நான் வேகவேகமாக “அம்மா தாயே பெத்தவளே, நான் அப்படி மகனல்ல” என்னும் வரி எங்கே இருக்கிறதென தேடினேன். இப்படியும் அப்படியுமாக புத்தகத்தைப் புரட்டுவதை ஐயா பார்த்துவிட்டார். “என்னடா தேடற?” என்று கேட்டார். உடனே நான் கூச்சத்தோடு சொல்லவேண்டியிருந்தது. ஐயா புத்தகத்தை வாங்கி, ஒரே கணத்தில் அந்தப் பாட்டு இடம்பெற்றிருக்கும் பக்கத்தைக் காட்டினார்.

அதைப் பார்த்ததும் என் மகிழ்ச்சி பல மடங்காகப் பெருகிவிட்டது. “ஓய்விருக்கும்போது வீட்டுக்கு வந்து படி” என்று சொல்லிவிட்டு புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார் ஐயா. எனக்கு அது ஒரு பெரிய சலுகையாகத் தோன்றியது. அவருடைய வீட்டுக்குச் சென்ற அடுத்தடுத்த நாட்களில் ஐயாவின் வீட்டிலேயே அமர்ந்து ’காந்தி மகான் கதை’ புத்தகத்தைப் படித்துமுடித்தேன்.

Leave a comment