வீட்டிலிருந்து தொடங்கலாம் ‘பறவை பார்த்தல்’ எனும் கலையை – செழியன்.ஜா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொழுதுபோக்கு என்பது உட்கார்ந்த இடத்திலே முடிந்து விடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது,  எப்படி குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவில்லையோ அதைப் போன்று பெரியர்வர்களையும் தன்னுள்ளே அடைத்துவிட்டது. வீட்டிற்கு வெளியே சென்று ஒரு  மரத்தை ஐந்து நிமிடம் உற்று கவனிப்பது கூட குறைந்துவிட்டது. ஆனால் இந்தக் குரானோவால் ஏற்பட்ட ஊரடங்கு என்பது வீட்டினிலுருந்து சுற்றத்தை கவனிக்க வைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

ஒரு சாரார் தொழிநுட்பத்தை நம்பியே தங்களது இந்த விடுமுறை நாட்களை முழுவதுமான கழிக்கின்றனர் என்றாலும் இன்னொரு பக்கம் தொழில்நுட்பத்தை உதவியாக கொண்டு கலை, இலக்கியம், சூழலியல், விளையாட்டு, சமையல், கைவினைப் பொருட்கள் என குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் தங்கள் நேரங்களை மகிழ்ச்சியுடன் கடத்தி வருகின்றனர். அப்படி ஆர்வமுள்ள பெற்றோர்களுக்காக, “பறவை பார்த்தல்” என்ற கலையை பற்றியும், இந்தச் சூழலில் நாம் வீட்டிலிருந்தே இந்தக் கலையை எப்படி பழகலாம் என்பதைப் பற்றியும் இங்கு உங்களுடன் பகிர இருக்ககிறேன்.

முதலில் பிள்ளைகளுடன் சேர்ந்து பரந்த வானத்தைப் பார்க்க பழகுங்கள். அப்படியே பிடித்த மிட்டாய்களை  எண்ணுவதுபோல் அருகில் இருக்கும் மரத்திலுள்ள பறவைகளை எண்ணுங்கள். பறவைகளின் பெயர் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை முதலில் பார்க்கும் பழக்கத்தை  தொடங்குங்கள். இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல நமது பொழுதுபோக்கில் தானாகவே  சேர்ந்துவிடும். முக்கியமாக, குழந்தைகளிடம் இந்தப் பழக்கம் வளரும் நேரத்தில் அவர்களது கவனிப்பு திறன் மேன்பட்டிருப்பதை நன்கு உணர முடியும்.  நிறங்களை வைத்து சுலபமாக பறவைகளை சுலபமாக வகைப்படுத்த முடியும். பெற்றோருடன் வெளியே சென்ற ஒரு குழந்தை அத்தனை வாகன இரைச்சலிலும் வானில் குரல் எழுப்பிச் சென்று கொண்டிருந்த பறவையைக் கவனித்து சொல்லிய நிகழ்வுகளையெல்லாம் நான் எனது சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

சரி, எங்கிருந்து பறவைகளைப் பார்க்க துவங்குவது ?

சரணலாயதிற்கு சென்றால்தான் பறவைகள் பார்க்க முடியும் என்று நினைப்பைத் தள்ளிவைத்துவிடுங்கள். அதுவும், குறிப்பாக தற்போதைய சூழலில்.  வீட்டிலிருந்தே முதலில் துவங்குங்கள்.  ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தாலே காகம் பறந்துகொண்டிருக்கும். காகம் உங்கள் முதல் பறவையாகக் கூட இருக்கலாம்.

இப்படித் தான் இலக்கியாவின் அப்பா வீட்டின் முன் இருந்த முருங்கை மரத்தில், ஒரு சிட்டுக்குருவி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததை இலக்கியாவுக்கு காண்பித்தார் அவருடைய அப்பா. அதை காண்பித்து… 

“சிட்டுக் குருவிகள் மனிதர்கள் அருகில் வாழக்கூடிய பறவையாகும். அது வீட்டில் உள்ளேயே வந்து சிதறி இருக்கும் நெல்மணிகளைக் கொத்திச் சாப்பிடும்..” என்று அப்பா சொன்னதும்.. 

“இந்த சிட்டுக் குருவி நம் வீட்டிற்குள் வருமா அப்பா?” என்று கேட்டாள் இலக்கியா.

“நாம் அவற்றுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு தருகிறோமா என்று இரண்டு மாதம் நம்மைக் கவனிக்கும். எந்தவித ஆபத்தும் இவர்களால் இல்லை என்று தெரிந்தால் வீட்டிற்குள் வந்து நம் அருகில் இருக்கும் இரையைச் சாப்பிடத் தொடங்கும். நம் வீட்டின் மேற் கூறையில்
கூடக் கூடு அமைக்கும் இலக்கியா” என்றார் அப்பா

இப்படி சின்ன சின்ன கதை சொல்லிக் கூட பறவைகளை அறிமுகப்படுத்தலாம்.

வீட்டைச் சுற்றி என்ன பறவைகள் இருக்கும்?

மரங்கள் உள்ள வீடு என்றால் நிச்சயம் முப்பது வகை பறவைகளை வரை பார்க்காலாம். வீட்டில் முருங்கை, மா, வேப்பிலை மரங்கள் இருந்தால் பறவைகளின் சொர்க்கம் என்றே சொல்லலாம். ஆபத்து நேரத்தில் பறவைகள் அடர்த்தியான மா மரத்திற்கு வந்துவிடும். முருங்கையில் எந்த நேரமும் ஒரு பறவை வந்து அமர்வதும் பறப்பதுமாக இருக்கும். வேப்பிலை மரத்தை வெய்யில் காலத்தில் ஓய்வு எடுக்க இடமாக பயன்படுத்தி கொள்ளும். சிட்டுக் குருவியை விட சிறிய பறவையான தேன் சிட்டு(Sun bird) வேப்பிலை மரத்தில் கிளை விட்டு கிளை தாவி பறந்துக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் வெய்யில் காலம் தொடங்கிவிட்டதால் பறவைகள் நீர் தேடி பல தூரம் அலையும். சில சமயம் நீர் கிடைக்காமல் மத்திய நேரத்தில் உரத்த குரல் கொடுத்து கொண்டிருக்கும் அதனால் கோடை காலத்தில் உங்கள் வீட்டு மாடியில், தோட்டத்தில் பறவைகளுக்கு நீர் வையுங்கள். இதனால் இன்னும் நிறைய பறவைகள் வருவதை பார்க்கலாம்.

“வீட்டில் எந்த மரங்கள் இருந்தால் பறவைகள் வரும்?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். மரங்கள் என்றுதான் இல்லை சிறு செடி, கொடிகள் இருந்தாலும் அங்கு புதர் பறவைகள் பறந்துக்
கொண்டிருக்கும். கதிர் குருவி(Ashy Prinia) என்ற மிக சிறிய பறவை நிச்சயம் உங்கள் செடிகளை சொந்தம் கொண்டாடுவதை ரசிக்கலாம்.

பறவைகளில், வீட்டை சுற்றி வாழும் பறவைகள், வயல்வெளிகளில் இருக்கும் பறவைகள், நீர் நிலைகளில் வாழும் பறவைகள், காடுகளில் இருக்கும் பறவைகள், மலைபிரதேசத்தில் வாழும் பறவைகள் என்று பிரிவுகள் உண்டு. தமிழ்நாட்டு சரணாலயத்தில் பார்க்கும் பறவைகள் அனைத்தும் நீர்வாழ் பறவைகள் ஆகும். தமிழ்நாட்டில் அனைத்தும் சரணாலயங்களும் நீர்நிலைகளில் அமைத்துள்ளது. முதலில் வீட்டின் அருகே உள்ள பறவைகள் முழுவதும் பார்த்தபிறகு சரணாலயம், காடுகளுக்கு செல்லுங்கள். தினம் பத்து நிமிடம் உங்கள் வீட்டை சுற்றி பாருங்கள் அவை போதும். புது புது பறவைகள் வீட்டை சுற்றி வாழுந்துகொண்டிருப்பது தெரியவரும். இதுவரை ஏன் இத்தனை பறவைகள் நம் பார்வைக்கு படவில்லை என்ற உணர்வு வரும்போது இயற்கையை ஐந்து நிமிடம் கூட நாம் கவனிக்கவில்லை என்பது புரியும்.

பறவைகளை முதல் முறை பார்க்கும்பொழுது அனைத்தும் ஒன்று போலவே தெரியலாம் ஆனால் சிறிது கவனித்து அதன் உடல், அலகு, வால் நிறம் மற்றும் உடல் அளவையும் குறித்துக் கொண்டால் சுலபமாக புத்தகத்தை கொண்டு கண்டுபிடித்துவிடலாம்.அளவு எப்படி குறிக்க வேண்டுமென்றால் நமக்கு தெரிந்த காகம்,மைனா, சிட்டுக்கு குருவி, புறா போன்ற பறவைகளுடன் ஒப்பிட்டு நீங்கள் பார்க்கும் பறவைகள் அளவை குறித்துக்கொண்டால் போதும்.

பறவையின் அலகை பலர் மூக்கு என்று குறிப்பிடுவார்கள் அவை மூக்கு அல்ல அலகு(Beak) என்று குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பறவைக்கும் அலகு சிறியதாக-பெரியதாக அதன் இரை பிடிக்க ஏற்றார் போல் அமைந்து இருக்கும். சிட்டுக்குருவிக்கு நெல்மணிகளை கொத்தி சாப்பிடுவதற்கு ஏற்றாற்போல் அதன் அலகு இருக்கும்.

குறித்துக் கொள்ளுதல்

நீங்கள் பார்க்கும் பறவைகளை ஒரு குறிப்பேட்டில் வரிசையாக குறித்து வாருங்கள். உதாரணமாக இன்று காலை பறவைகளை பார்த்திருந்தால்,

இன்றய தேதி
பார்த்த நேரம்
இடம்
பறவைகளின் பெயர் மற்றும்
பறவைகளின் எண்ணிக்கை (முடிந்தால்)

[இதுப் போன்று நீங்களும் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவு மாதிரியை உருவாக்கிக்கொள்ளுங்கள்]

என்று பறவைகளை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே சுலபமாக குறித்துவிடலாம். வருட முடிவில் உங்கள் தெருவில் எவ்வளவு பறவைகள் வாழ்கிறது என்று துல்லியமாக தெரிந்துவிடும். அடுத்த வருடம் இதேபோல் குறித்துவரும் பட்டியலுடன் முந்தைய பட்டியலை சரிபார்த்தால் போனவருட பறவைகள் எவை இல்லை, புதியதாக என்ன பறவை வந்திருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

உதவும் புத்தகங்கள்:

பறவைகளை அடையாளம் கண்டுபிடிக்க தமிழிலும், ஆங்கிலத்தில் சில நல்ல புத்தகங்கள் உண்டு. பறவைகள்-அறிமுக கையேடு: பா.ஜெகநாதன், ஆசை எழுதிய புத்தகம் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த புத்தகத்தை கொண்டு நம் வீட்டில் சுற்றியுள்ள மற்றும் நீர்நிலைகள் உள்ள பறவைகளை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

காகம்(House Crow) மற்றும் Jungle Crow(உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் காகம் இருக்கும்), சிட்டுக்குருவி(House Sparrow), கதிர்குருவி(Ashy-Prinia), தேன்சிட்டு(Sunbird), நாகணவாய்(Myna), வெண்மார்பு மீன் கொத்தி(White Throated Kingfisher), தவிட்டு குருவி(Yellow-billed babbler), வால்காக்கை(Rufous Treepie), செம்போத்து(Southern Coucal), குயில்(Koyel), கரிச்சான்(Balck Drango), வெண்புருவ வாலாட்டி(White browed wagtail), கொண்டு கரிச்சான்(Oriental Magpie Robin), பச்சைக்கிளி(Parakeet), மரங்கொத்தி(Balck Rumped-Flameback), கொண்டலாத்தி(Common Hoopoe), சின்னான்(Red vented bulbul), மாங்குயில்(Golden Oriel), புறா(Pigeon), கழுகு(Black Kite), வல்லூறு(Shikra) போன்ற பறவைகளை நிச்சயம் உங்கள் வீட்டருகில் பார்க்க முடியும். இவை தவிர இன்னும் பல வகை பறவைகளும் வரலாம்..

Birds of Indian Subcontinent-Richard Grimmett எழுதிய புத்தகம் இந்தியாவில் உள்ள அனைத்து பறவைகளை பற்றி அதிகமான படங்களுடன் இருக்கும் புத்தகம். இவையும் மிக பயனுள்ள புத்தகமாகும்.

முதலில் பெற்றோர்கள் பறவைகளை பார்க்க தொடங்குங்கள் பிள்ளைகள் நம்மை பின்பற்றிக் கொள்வார்கள்.

2 Comments

 • Arun says:

  Good and intersting article

  • Felix Raj says:

   நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் !!

   வாகன இரைச்சல்களுக்கிடையே இந்த பறவைகளை நாம் தொலைத்துத்தான் விட்டிருக்கிறோம் !!

   நினைவூட்டியமைக்கு நன்றி !!

Leave a comment