தமிழகப் பள்ளிகள், கல்லூரிகள் படித்தக் காலம் வரையில் கூட தாய்மொழிப் பற்று இருப்பினும், ஏன் கல்லூரிகளில் ஆங்கிலம் வழியிலான பாடத்திட்டங்கள் இருக்கிறது? என்ற சிந்தனைத் தோன்றவில்லை. முதன்முதலில் நோர்வே நாட்டிற்கு முனைவர் பட்ட ஆய்விற்காக பயணத்தைத் தொடங்கிய வேளையில், சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்புர்டு நகரத்திற்கு நான் ஏறிய லுஃப்தான்சா விமானத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ் அறிவிப்புகள் என் சிந்தனைக்கான விதை எனலாம்.
நோர்வே பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள், வகுப்பு மொழி, தேர்வு, கடிதங்கள், தொழிற்சாலை நிறுவனங்களில் எங்கும் எல்லா இடத்திலும் நோர்வேஜிய மொழியிலேயே இருந்ததும், ஆங்கிலம் என்பதன் அவசியமே இல்லாமல் நோர்வேயில் வாழத் தொடங்கியக் காலம் என் சிந்தனைக்கான அடுத்தக் கட்டக் காலம் எனலாம்.
ஐரோப்பிய பயணங்களில் எந்த நாடுகளிலும் ஆங்கிலத்தின் அவசியமற்ற வாழ்க்கைச் சூழல், குறிப்பாக, ஃபிரான்சு, இத்தாலி, போர்த்துக்கல் நாடுகளின் பயணங்களில் நான் கண்டு வியந்த வாழ்க்கை முறை, மேலும் மேலும் பலவற்றைக் கற்றுக்கொடுத்தது எனலாம்.
எனக்கு திருமணமாகி நோர்வேயில் குழந்தை பிறந்த பொழுது, மருத்துவர்கள் தாய் மொழி பேசுதல் தொடர்பான ஆலோசனை, அது தொடர்பாக படித்து அறிந்த செய்திகள், நோர்வே, சுவீடன், ஃபின்லாந்து, டென்மார்க் நாடுகளின் பள்ளிக்கல்வியில் அவரவர் தாய் மொழிக்கும் தங்கள் நாட்டிற்கு குடிப்பெயர்ந்து வந்தவர்களின் தாய்மொழிக்கும் அவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் கல்வித்துறைச் சார்ந்த புதுப்பார்வையை எனக்கு விளக்கியது.
நோர்வேயில் முனைவர் பட்டம் பெற்றப்பின் தமிழகத்தில் சுற்றிய நாட்களில் அறிமுகமாகி நெருக்கமான நட்புடன் தொடர்ந்த மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் தமிழ்க்குரிசில் ஐயாவின் உறவும் அவர் மூலம் அறிமுகமான அரசுப் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகளுடனான நட்பு, உரையாடல், விளக்கங்கள் நம் ஊரில் நம் குழந்தைகளின் கல்வியில் சமூகநீதியின் ஒரு வடிவமே தாய்மொழி வழியிலான கல்வி என்பது விளங்கியது.
சீனாவில் பல்கலைக்கழக ஆய்வு வாழ்க்கையில் கண்டுணர்ந்த அவர்கள் தாய்மொழிக் கல்விக்கும் அவர்கள் அறிவாற்றலுக்குமான தொடர்பு பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டியது.
இவையனைத்தும் சேர்த்துதான் நோர்வேயில் பிறந்த எங்கள் குழந்தை கவின் திலீபனை கோவையில் அரசு நிதியுதவிப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படிக்க வைக்கத் தூண்டியது. சுவீடனில் குடியேறி, இங்குள்ள பள்ளியில் எங்கள் மகன் படிக்கத் தொடங்கிய வேளையில், அவருக்கான முதற்கட்டச் சோதனைகளை தமிழில் வைத்தார்கள் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்தியினை எனக்கு உணர்த்தியது.
2017 செப்டம்பரில் திருப்பூரில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு நடத்திய மாநில கல்வி உரிமை மாநாட்டில் நான் பேசிய, ”உலகெங்கும் தாய்மொழிக் கல்வி” என்னும் உரையே இப்புத்தகத்தின் ஆணிவேர் எனலாம். அவ்வுரையினை நூலாக்க வேண்டும் என பேராசிரியர் பிரபா கல்விமணியும் (பேரா. கல்யாணி) மறைந்த தமிழ்க்குரிசில் ஐயாவும் பலமுறைக் கூறினர். சிங்கனூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் எழில், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பைச் சார்ந்த ஆசிரியர் மூர்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்தும் இப்பணி குறித்து அவ்வப்பொழுது பேசி உற்சாகமூட்டினர். வாசல் பதிப்பகத்தின் ரத்தின விஜயன் தாய்மொழிக் கல்வி குறித்தக் கட்டுரைகளை நூலாக துணை நிற்பதாகக் கூறி மேலும் உற்சாகமூட்டினார்.
தமிழகக்கல்வித் தொடர்பான என்னுடையக் களச் செயற்பாட்டிற்கு ஆணிவேராக இருந்த தோழர் நியாஸ் அகமது அவர்களின் ’பாதுக்கலாம் தோழர், துணிந்து செய்யுங்கள்’ என்னும் வரிகள் எதிரொலித்துக்கொண்டே இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இத்தனைச் சூழல்கள், செயற்பாடுகள், அனுபவங்கள், தோழர்களின் அன்பு உறவுகள், வழிகாட்டல்களோடுதான் இப்புத்தகத்தின் கட்டுரைகளை கடந்த 2 ஆண்டுகளாக எழுதி வந்தேன். இப்புத்தகத்தினை வெளியிடும் ஆழிப் பதிப்பகத்திற்கும் கடந்த ஓராண்டு காலமாக பல பயணங்கள், அரசியல் விவாதங்கள், செயற்பாட்டுக் களங்களில் தோழமையுடன் உரிமையுடனும் வழிகாட்டும் ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்!
– முனைவர் விஜய் அசோகன்,
சால்மர்ஸ் பல்கலைக்கழகம், சுவீடன்.