கணினி நிரல் மொழி கல்வி – சிவா

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இன்றைய உலகில் கணினி என்பது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்று விட்டது. நம் ஒவ்வொருவர் கையில் இருக்கும் திறன் பேசியே(Smartphone) கூட ஒரு கையடக்க கணினி எனலாம். 10-20 வருடங்களுக்கு முன்பு கற்பனை கூட செய்து பார்க்க இயலாத காரியங்களை இன்று நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உணவு வரவழைக்க முடிகிறது. பேருந்துக்கும் இரயிலுக்கும் பயணச்சீட்டு வாங்க கால் கடுக்க நிற்க தேவையில்லை. வங்கிக்கு செல்லாமலே பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது. ஐரோப்பாவில் நடக்கும் செய்திகள் அடுத்த நொடியில் நம் திரைகளில். இனி வரும் காலங்களில் இவற்றின் பயன்பாடு மேலும் அதிகரிக்க செய்யுமே தவிர குறையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இரயில் பயணத்திற்கான ஐஆர்சிடிசி இணையதளம், உணவு தேவைக்கான சொமேட்டோ செயலி என ஒரு நாளில் நாம் பல்வேறு இணையதளங்களையும் செயலிகளையும் பயன்படுத்துகிறோம். இந்த இணையதளம் மற்றும் செயலிகளை எவ்வாறு செய்கிறார்கள்? அதற்கு என்ன படிப்பு தேவைப்படுகிறது? இது பற்றி பலருக்கும் தெரியாது. இதற்கும் பள்ளி கல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதைப் பற்றிய ஓர் அறிமுகத்தை இந்தக் கட்டுரையில் காண்போம்.

இன்று நாம் பயன்படுத்தும் இணைய தளங்கள், செயலிகள் எல்லாமே எதோவொரு கணிப்பொறி நிரலை(Computer program)அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகிறது. ஜாவா, பைத்தான், C# போன்றவை சில முக்கியமான கணிப்பொறி நிரல் மொழிகள்(programming languages). பெரும்பாலான மக்கள் பொறியியல் கல்வி கற்றால் மட்டுமே இவற்றை எல்லாம் உருவாக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கணிப்பொறி நிரலாளராக (Programmer) ஆக வேலை பார்க்கும் பலர் கல்லூரிக்குக் கூட செல்லாதவர்கள். அப்படி என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளையும் இணையதளங்களையும் எவ்வாறு அவர்களால் உருவாக்க முடிகிறது?

இதற்கான பதில் இணையம் (Internet) என ஒற்றைச் சொல்லில் கூறி விடலாம். ஏற்கனவே கூறியது போல இணையம் உலகை ஒரு மிகப் பெரிய திறந்த வீதியாக மாற்றி வைத்திருக்கிறது. சரியான ஆர்வம் இருக்கும் பட்சத்தில் இணையம் மூலமாக நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் இன்று சிறு நகரங்களில் வேலைபார்க்கும் ஆண்/பெண் என பலரும் யூட்யூப் பார்த்து சமைப்பது போல, நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இலவசமாக கற்றுக் கொள்ளலாம். எந்த வித முன் அனுபவம் இல்லாதவரும் கூட இணையம் மூலமாக ஒரு செயலியோ அல்லது இணையதளமோ செய்வதைத் தானாக கற்றுக் கொள்ளலாம்.

கணிப்பொறி துறையில் மற்றவர்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக மென்பொருட்கள்/செயலிகள்/ பாடநூல்கள் போன்ற பலவற்றை உலகின் எல்லா மூலையில் இருந்தும் தன்னார்வலர்கள் இலவசமாக மக்கள் பயன்பாட்டிற்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக இயங்கும் தன்னார்வலர்கள் குழுக்களை கட்டற்ற குழுக்கள் என இணையத்தில் அழைக்கிறார்கள் (Open source group). இவர்களின் நோக்கம் கணிப்பொறி சார்ந்த கருத்துக்கள்/அறிவு போன்றவை உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கு  இனம், மொழி, நாடு, ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதாகும். நீங்கள் அடிக்கடி பார்க்கும் விக்கிப்பீடியா போன்ற இணையதளம் கூட இவ்வாறான ஒரு கட்டற்ற குழு மூலமாக உருவாக்கப்பட்டது தான். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான கூகிள், பேசுபுக் போன்றவை கூட இந்த கட்டற்ற குழுக்களுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகின்றன.

சரி, இவ்வாறு இலவசமாக கிடைக்கும் அறிவை எதற்காக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கும் பள்ளி கல்விக்கும் என்ன தொடர்பு? உலகெங்கிலும் கணிப்பொறி நிரலாளர்கள் இருந்தாலும், இன்றும் நல்ல கணிப்பொறி நிரலாளர்களுக்கு கடுமையான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் கணிதம், அறிவியல், மொழி (இன்னும் பிற விசயங்கள்) போன்றே கணிப்பொறியை அறிந்து கொள்வது, அதற்கு தேவையான சிறு சிறு நிரலக்ள் எழுதுவது போன்றவை ஒரு அத்தியாவசிய திறன் என்றாகி விடும்.

எவ்வாறு பிற மொழியை குழந்தைகள் கற்கிறார்களோ, அது போலவே கணிப்பொறி நிரல் மொழியையும் கற்றுக் கொள்ளச் செய்வது மிக எளிதானதாகும்(அவர்களது விருப்பம் இருக்கும் சூழலில்). எவ்வாறு நாம் கற்கும் மொழிகள் உலகத்தோடு இயந்து வாழ உதவுகிறதோ அதைப் போலத் தான் இனி வரும் காலங்களில் இந்தக் கணினி நிரல் மொழிகளும் சமூகத்தோடு இயங்கி வாழவும் அதன் கற்றலை மேம்படுத்தவும் உதவு போகிறது.

கணினி நிரலை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் (அறிமுகம் செய்தப் பிறகு விருப்பம் இருக்கும் பட்சத்தில்  கற்றுக் கொடுக்க வேண்டுமென்றால்) அதற்குத் தேவையான ஆசிரியர், உபகரணங்கள் என பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஏற்கனவே கூறியது போல, கணினி சார்ந்த அறிவு எவருக்கும் கிடைக்க வேண்டும் என செயல்பட்டு வரும் பல்வேறு கட்டற்ற குழுக்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருகின்றனர். அவற்றுள் எனக்கு தெரிந்த ஒரு குழுவைப் பற்றி இங்கு பகிர்கிறேன்.

எனது நிறுவனத்தின் சமூகத் தொண்டின் ஒரு பகுதியாக வறுமை நிலையிலிருக்கும் சிறார்களுக்கு கணினி நிரல் கற்றுக் கொடுக்கும் வகுப்புகளை ஒரு அறக்கட்டளை மூலமாக நடத்தியது. ராசுபெரி பை அறக்கட்டளை என்கிற இந்த தொண்டு நிறுவனம் ஐக்கிய முடியரசை (UK) தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் கணினியின் பயன்கள் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத்தோடு இத்தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கணினியின் மூளைப் பகுதியாக செயல்படும் CPU வை 3000 ரூபாய்க்கு விற்கிறது. இதனோடு ஒரு திரையயும் (monitor), ஒரு விசைப்பலகையும் (keyboard), ஒரு சொடுக்கியையும் (mouse) வாங்கி மாட்டி விட்டால் ஒரு முழு கணினி தயார். இதே போல இந்நிறுவனத்தில் சார்பாக கோட் கிளப் (code club) என்கிற குழு தன்னார்வலர்களால் இயங்கி வருகிறது. இந்தக் குழு 9 முதல் 13 வயதிலான குழந்தைகளைக்கு இலவசமாக கணினியின் நிரல் மொழிகளை சொல்லிக் கொடுக்கிறது. இது எதோ வெளிநாட்டில் மட்டும் இருக்கும் தன்னார்வலர்கள் குழு என்று எண்ணி விட வேண்டாம். 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தன்னார்வலர்கள் குழு இயங்கி வருகிறது.

வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு வாரங்களுக்கு ஒரு நாளிலோ தன்னார்வலர்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரி அல்லது நூலகத்தில் கூடுவார்கள். அங்கு வரும் மாணவர்களுக்கு நிரலி மொழி கற்பிப்பதற்கென்று பாடத்திட்டமும் இவர்களிடம் இருக்கிறது. மாணவர்களுக்கு கணினியின் அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுத்து, பின்பு மாணவர்களாகவே செய்வதற்கு ஏற்ற வகையில் செயல் திட்டம் (project) செய்வதற்கும் உதவுகிறார்கள். இது தொண்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக தன்னார்வலர்களால் நடத்தப்படுவதால் இதெற்கென பணம் எதுவும் இவர்கள் வாங்குவதில்லை. இவர்களின் பாடத்திட்டம் என்ன, மாணவர்கள் தாங்களாகவே செய்யக் கூடிய நிரலி செயல் திட்டங்கள் என்ன (programming projects) போன்ற எல்லாவற்றையும் வெளிப்படையாக இணையத்திலும் வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் இந்தக் குழு 500 க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். தமிழகத்திலும் சென்னை, கோவை, கொடைக்கானல் போன்ற இடங்களில் இந்தக் குழு இயங்கி வருகிறது. இது தன்னார்வலர்கள் குழு என்பதால், உங்கள் ஊரிலும் இந்தக் குழுவை நிறுவி உங்கள் ஊர் மாணாக்கர்களுக்கும் சொல்லித் தரலாம். கணினி நிரல்கள் பற்றிய அடைப்படை அறிவு இருந்தால் போதும். மற்ற உதவிகளை குழுவிலிருப்போர் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் இயங்கக் கூடிய கோட் கிளப்புக்கான இணையதளம்: https://www.codeclubworld.org/india/

இது ஒரு உதாரணம் தான். இதே போல இணையத்தில் நீங்கள் தேடினால், ஏகப்பட்ட தன்னார்வலர் குழுக்கள் இருக்கின்றன. எல்லாக் குழந்தைகளும், அந்தக் குழந்தைகள் யாராக இருந்தாலும், எங்கு இருந்தாலும் கணினி நிரல் மொழி கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதே இந்த கோட் கிளப் போன்ற கட்டற்ற குழுக்களின் நோக்கம். அறிவு என்பதே பொதுவானதும், எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதுமாக இருக்க வேண்டியது தான். அது ஆங்கில மொழியறிவாக இருந்தாலும் சரி, கணினி நிரல் மொழி அறிவாக இருந்தாலும் சரி.

குறிப்பு : சிறார் உலகில் நடக்கும் விசயங்கள் குறித்தும் கணிப்பொறி நிரல் பற்றியும் கல்வியுடனான அதன் தொடர்பு குறித்தும் உரையாடுவது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம். அதில் ஒரு பகுதியாகவே ராசுபெரி பை அறக்கட்டளையின் செயல்பாடுகளை பகிர்ந்துள்ளோம்.

2 Comments

Leave a comment