சத்தியம் சத்தியம் சத்தியமே – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 13)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எங்கள் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒரு திருவிழாபோல கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய வகுப்புப்பிள்ளைகள் சிலர் நடைப்பயிற்சியையும் மேளப்பயிற்சியையும் தொடங்கிவிடுவார்கள். மேளம் முழங்க முழங்க, ராணுவத்திலிருந்து இறங்கி வந்தவர்கள்போல விறைப்பாகவும் மிடுக்காகவும் அவர்கள் ஒரே சீராக நடப்பதும் திரும்புவதும் வியப்பாக இருக்கும். கொடிக்கம்பத்தை அண்ணாந்து பார்த்தபடி அவர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல கையை உயர்த்தி சல்யூட் அடிப்பதைப் பார்க்க அழகாக இருக்கும். பார்க்கப்பார்க்க சலிக்காத காட்சி அது. அவர்கள் பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்கு வசதியாக மைதானத்தில் நாங்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருப்போம்.

ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. உடனே ஆடல், பாடல் என எல்லா வகுப்பினரும் பயிற்சியைத் தொடங்கிவிட்டார்கள். என்ன செய்வது என்று புரியாமல் எங்கள் வகுப்பினர் குழப்பத்தில் மூழ்கினோம். அன்று பாடம் நடத்த வந்த கண்ணன் ஐயா “சுதந்திர தினத்துல நீங்க என்ன செய்யப்போறீங்க?” என்று கேட்டார். நாங்கள் அவரையே ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். கண்ணன் ஐயா “புதுமையா ஒரு கதைப்பாட்டு நிகழ்ச்சி நடத்தலாம்” என்று சொன்னார். நாங்கள் உடனே அதை ஏற்றுக்கொண்டோம்.

மறுநாள் ஐயா வகுப்புக்கு வரும்போது ஒரு புத்தகத்தை எடுத்து வந்து எங்களுக்குக் காட்டினார். அது ‘பாட்டிலே காந்தி கதை’ என்னும் புத்தகம். “இது காந்தித்தாத்தாவுடைய வாழ்க்கைக்கதை. வள்ளியப்பான்னு ஒரு கவிஞர் எழுதியது. காந்தியுடைய வாழ்க்கையில நடந்த சில முக்கியமான நிகழ்ச்சிகள அவர் பாட்டா எழுதியிருக்காரு. அதிலேருந்து சிலத மட்டும் நாம் தனியா எழுதி வச்சி படிக்கலாம்” என்றார். நாங்கள் மகிழ்ச்சியோடு தலையசைத்தோம்.

ஐயா என்னைத்தான் முதலில் அழைத்தார். பிறகு குமாரசாமி, ஸ்ரீதர், மீனாட்சி மூவரையும் அழைத்தார். “நீங்க நாலு பேரும் ஆளுக்கொரு பத்திய படிக்கணும். கேக்க நல்லா இருக்கும். ஒரே ஆள் கதை சொல்றமாதிரி இல்லாம நாலுபேர் சேர்ந்து ஒரு கதையை சொல்றமாதிரி இருக்கும்” என்றார். எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. அப்போதே அந்தப் புத்தகத்தைப் பிரித்து ஒரு பக்கத்தைத் திறந்தார் ஐயா. காந்தித்தாத்தாவின் தோற்றத்தைப்பற்றிய பாட்டு அது. நாலே நாலு
பத்திகள். ஒவ்வொரு பத்தியாக படிக்கும்படி சொன்னார் ஐயா. உடனே குமாரசாமி முதல் பத்தியை உரத்த குரலில் படித்தான். “போர்பந்தர் என்னுமோர் ஊரினிலே புத்திலிபாயின் வயிற்றினிலே” என்று அந்தப் பத்தி தொடங்கியது. அவனுக்கு அழுத்தமான குரல். ஓங்கிய தொனியில் அவன் படிக்கும்போது ஏதோ மேடைப்பேச்சைப்போல இருக்கும். அவன் படிக்கப்படிக்க ஐயாவின் முகம் மலர்ச்சி பெற்றபடி இருந்தது.

அடுத்த பத்தியை ஸ்ரீதர் படிக்க, மூன்றாவது பத்தியை நான் படித்தேன். “படிப்பிலே புலியாய் இருக்கவில்லை – காந்தி பரீட்சையில் முதன்மை பெறவுமில்லை நடுத்தரமாகவே இருந்துவந்தார் – ஆனால் நல்லவன் என்றே பெயரெடுத்தார்” அந்த வரிகளைப் படிக்கும்போதே எனக்குள் ஒருவித உற்சாகம் ஊற்றெடுத்துப் பரவுவதை உணரமுடிந்தது மீனாட்சி இறுதிப்பத்தியைப் படித்து முடித்தாள். ஐயா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். வகுப்பில் கேட்டுக்கொண்டிருந்த மாணவமாணவிகள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ஐயா அந்தப் புத்தகத்தை வாங்கி ஒவ்வொரு வரியையும் எப்படி உச்சரிக்கவேண்டும் என்று நிறுத்தி  நிதானமாக ஒருமுறைக்கு இருமுறையாகப் படித்துக் காட்டி பயிற்சியளித்தார். நாங்களும் மனசுக்குள்ளேயே அவற்றை இரண்டுமூன்று முறை சொல்லிப் பழகிவிட்டு, இறுதியில் ஐயாவின் முன்னால் தாளத்தோடு சொல்லிக் காட்டினோம். “என்ன, நாடகம் பார்க்கிறமாதிரி இருக்குதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் ஐயா. நாங்கள் மகிழ்ச்சியோடு தலையாட்டினோம்.

“புத்தகத்துல ஆறேழு முக்கியமான பாட்டுங்கள குறிச்சித் தரேன். அத மட்டும் உங்க நோட்டுல எழுதி வச்சிக்குங்க. தினமும் நல்லா படிச்சி படிச்சி பழகினீங்கன்னா, நிகழ்ச்சியில வெளுத்துக் கட்டிடலாம்” ஐயா சொன்னபடி அவர் குறித்திருந்த பாடல்களையெல்லாம் பார்த்து எழுதிக்கொண்டோம். அடுத்த நாள் அவற்றை சொல்பிரித்துப் படிக்கும் முறையை ஐயா எங்களுக்கு விளக்கமாக சொல்லிக்கொடுத்தார். முக்கியமாக எங்கள் உச்சரிப்பைத் திருத்தினார். ஒவ்வொரு பாட்டிலும் அடங்கியிருக்கும் கதையையும் எங்களுக்கு விளக்கினார். காலையில் சூரியனைப் பார்த்த பிறகே உணவு உண்ணும் பழக்கமுள்ள காந்தித்தாத்தாவின் அம்மா, சூரியனைப் பார்க்க முடியாத நாட்களில் பசியோடு விரதமிருப்பதைப் பார்த்து மனம்கலங்கும் கதை, அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்துவிட்டு உண்மைவழியிலேயே நடக்கவேண்டும் என உறுதிகொள்ளும் கதை, ஆட்டுக்கறியும் மாட்டுக்கறியும் தின்றால்தான் உடல்வலிமை பெருகுமென்று சொன்னதை நம்பி, யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் சென்று மாமிசம் உண்டுவிட்டு இரவெல்லாம் தூங்காமல் துன்பப்பட்டு இறுதியில் தன் அன்னையிடம் இனிமேல் மாமிசம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லி ‘இது சத்தியம் சத்தியம் சத்தியமே’ என்று சொல்லும் கதை, தன் அப்பாவிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கும் கதை, உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்லாததால் அபராதம் கட்டுமாறு ஆசிரியர் சொல்லும் கதை என அனைத்தையும் ஐயா எங்களுக்குப் பொறுமையாக எடுத்துரைத்தார். காந்தித்தாத்தா கதையைக் கேட்டு நாங்கள் மிகவும் நெகிழ்ந்துபோனோம்.

சுதந்திர தினத்துக்கு முதல்நாள் இரவு வரைக்கும் எழுதிவைத்திருந்த பாடல்களை ஏதோ தேர்வுக்கு மனப்பாடம் செய்வதுபோல மீண்டும் மீண்டும் படித்தேன். பாடல்களை பார்த்தே படிக்கலாம் என்றுதான் ஐயா எங்களிடம் சொல்லியிருந்தார். ஆனால், மனப்பாடமாகச் சொன்னால் எடுப்பாக இருக்கும் என்று நம்பி, நானே அப்பாடல்களை மனப்பாடம் செய்தேன். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட சொல்லிவிடக்கூடிய அளவுக்கு அப்பாடல்கள் என் மனத்தில் பதிந்துவிட்டன.

சுதந்திரத்தினத்தன்று சீருடையோடு நாங்கள் பள்ளியை அடைந்தோம். மார்பில் சின்ன அளவிலான தேசியக்கொடியை குண்டூசியால் குத்திக்கொண்டு நின்றிருந்தோம். கொடியேற்றம்,தலைமையாசிரியர் உரை, ஆசிரியர்கள் உரை, மிட்டாய் விநியோகத்தோடு முதல் கட்டம் முடிந்தது. பிறகு அனைவரும் அமைதியாக கொடிக்கம்பத்தின் முன்னால் உட்கார்ந்துவிட, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பெரிய வகுப்புப்பிள்ளைகள் உரை நிகழ்த்த வந்தார்கள். சின்ன வகுப்புப் பிள்ளைகளின் நிகழ்ச்சி தொடங்கியதும் நாங்கள் மேடைக்குச் சென்றோம். சீரான இடைவெளியில் நான்கு பேரும் வரிசையில் பாடல்கள் எழுதப்பட்ட தாள்களை ஏந்தியபடி நின்றுகொண்டோம். ஓரமாக நின்றபடி ஐயா சைகை செய்ததும் குமாரசாமி முழங்கத் தொடங்கினான். மாணவமாணவிகளின் வரிசை சட்டென அமைதியில் ஆழ்ந்து மேடையைப் பார்க்கத் தொடங்கியது. குமாரசாமியின் தொடக்கம் அற்புதமாக அமைந்துவிட்டது. ஒரு விமானம் கிளம்புவதுபோல எங்கள் நெஞ்சிலும் வேகம் தொற்றிக்கொண்டது. என் பங்குக்குரிய பாடல்களை நான் மனப்பாடமாகவே சொன்னேன். ஒவ்வொரு கதையையும் நாங்கள் முடிக்கும்தோறும் எழுந்த கைத்தட்டலால் நாங்கள் இன்னும் வேகம் கொண்டவர்களானோம்.

ஒவ்வொரு பாட்டையும் நாங்கள் பாடி முடிக்கும்போதெல்லாம் கைதட்டலின் ஓசை பெருகியபடி இருந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி ஆறு கதைகளையும் சொல்லிவிட்டு நாங்கள் இறங்கினோம். ஆசிரியர் வரிசையில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஐயா எங்களைப் பார்த்து பெருமையோடு புன்னகைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தலைமையாசிரியர் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்தார். காந்தி கதை பாடல்களைச் சொன்ன எங்களுக்கும் பரிசு கிடைத்தது. எங்கள் நான்கு பேருக்கும் எதிர்பாராமல் கிடைத்த புதையலைப்போல ’பாட்டிலே காந்தி கதை’ புத்தகமே பரிசாகக் கொடுக்கப்பட்டது. வியப்போடு நாங்கள் ஐயாவின் திசையில் பார்த்து புத்தகத்தை உயர்த்தினோம். அப்போதும் ஐயா சிரித்துக்கொண்டே இருந்தார்.

Leave a comment