அழியாத செல்வம் – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 12)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோவிந்தையர் பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்கள் இருந்தார்கள். நான்காம் வகுப்புக்கும் ஐந்தாம் வகுப்புக்கும் பாடம் எடுத்தவர் கண்ணன் ஐயா. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாடம் எடுத்தவர் தா.மு.கிருஷ்ணன் ஐயா. கண்ணன் ஐயா ஒல்லியாக இருப்பார். கிருஷ்ணன் ஐயா உயரமாகவும் வாட்டசாட்டமாகவும் இருப்பார். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழா கொண்டாடினார்கள். கொடியேற்றி பாட்டு பாடினார்கள். சிறுவர் சிறுமிகளுக்கெல்லாம் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்கள். அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு கொடிவணக்கம் பாடிய இடத்திலேயே மண்தரையில் உட்கார்ந்தோம்.
அப்போது கொடிக்கம்பத்துக்கு அருகில் வந்து நின்று “மாணவர்களே, மாணவிகளே” என்று கிருஷ்ணன் ஐயா பேசத் தொடங்கினார். “நான் இப்போது உங்களிடம் ஒன்றிரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். சரியான பதில் சொல்பவர்களுக்கு வண்ணவண்ன மிட்டாய்கள் பரிசாகத் தருவேன்” என்று எதிரில் மேசை மீது வைக்கப்பட்டிருந்த மிட்டாய்த்தட்டைக் காட்டினார். அதைக் கேட்டு நாங்கள் உற்சாகமடைந்தோம்.

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு பாட்டை முழுமையாகப் பாடத் தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள்?” என்று கேட்டார் ஐயா. கூட்டத்திலிருந்து பல கைகள் உடனடியாக உயர்ந்தன. அதைப் பார்த்து அவர் ஆச்சரியத்தில் மூழ்கினார். ஏராளமாக உயர்ந்த கைகளை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரைக்கும் வரிசையாகப் பார்த்துவிட்டு ஒரு சிறுமியைப் பார்த்து விரலைக் காட்டி “நீ சொல்லும்மா” என்றார். உடனே அச்சிறுமி எழுந்து ராகம் போட்டு அந்தப் பாட்டைப் பாடினாள். முதல் நான்கு வரிகளை மட்டுமே அவள் பாடினாள். நாவால் நக்குதுவெள்ளைப்பசு என்று ஐந்தாவது வரியைத் தொடங்கும்போது கையை உயர்த்திய எல்லாப் பிள்ளைகளும் ராகத்தோடு அவளுடன் சேர்ந்து பாடத் தொடங்கினார்கள். பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி என்று அவர்கள் இழுத்துப் பாடும்போது கிருஷ்ணன் ஐயாவும் சேர்ந்துகொண்டார்.

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி என்று முடித்தபோது எல்லோரும் கைதட்டினோம். ஐயா அச்சிறுமியை அருகில் அழைத்து ஒரு பிடி ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளிக் கொடுத்தார். “சரி, இன்னொரு கேள்வி. இதைப் பாடிய கவிஞர் யார்?” என்று கேட்டார் ஐயா. எங்களில் யாருக்குமே அந்தப் பெயர் தெரியவில்லை. ஒரு கை கூட உயராததைப் பார்த்து “என்ன, யாருக்கும் தெரியலையா?” என்றபடி ஆச்சரியத்தை அவர் வெளிப்படுத்திய தருணத்தில் ஒரு சிறுவன் கையை உயர்த்திவிட்டான். உடனே அவர் அவனை உற்சாகப்படுத்தியபடி “எழுந்து நின்னு சொல்லு” என்றார். அவன் உடனே பின்பக்கத்திலிருந்து மணலை உதறியபடி எழுந்து நின்று “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை” என்றான். ஒரு பிடி மிட்டாயோடு ஐயாவே அச்சிறுவனுக்கு அருகில் சென்று கொடுத்துவிட்டுத் திரும்பினார்.

“மற்றொரு கேள்வி. லட்டும் தட்டும் பாட்டு யாருக்குத் தெரியும்?” என்று கேட்டார் ஐயா. அப்போது கைகள் உயர்வதற்கு மாறாக ”வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு” என்று அனைவரும் ஒரே குரலில் பாடவே தொடங்கிவிட்டார்கள். ஐயா ஆச்சரியப்பட்டாலும் சிரித்துக்கொண்டே அதைக் கேட்டு ரசித்தார். மீதி காலி தட்டு என்று கடைசி வரியை மூன்று முறை அழுத்தமாகச் சொல்லிவிட்டு நிறுத்தினோம். உடனே ஐயா “சரி, இதைப் பாடிய கவிஞர் யார்னு சொல்லுங்க?” என்றார். தொடக்கத்தில் இருந்த தயக்கம் உடைந்து நாலைந்து பேர்கள் ஒரே நேரத்தில் கையை உயர்த்தினர். ஐயா அதைப் பார்த்து நிறைவு கொண்டார். ஒரு சிறுவனை நோக்கி கையை நீட்டி “நீ சொல்லுப்பா” என்றார். அவன் உடனே எழுந்து நின்று கைகளை மடித்துக் கட்டியபடி “அழ.வள்ளியப்பா ஐயா” என்றான். ஐயா அவனுக்காக கைதட்டும்படி சொல்லி சைகை காட்டினார்.

“இதே கவிஞர் எழுதிய இன்னொரு பாட்டைப்பற்றித்தான் நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன் பிள்ளைகளே. கவனமாகக் கேளுங்கள். இது உங்கள் புத்தகத்தில் இல்லாத பாடல். ஆனால் நீங்கள் அனைவரும் இதில் நீங்கள் முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான கருத்து உள்ளது. இதுவும் ஒரு கதைப்பாடல்” என்றார். நாங்கள் அவர் சொல்லவிருக்கும் கதையைக் கேட்கத் தயாரானோம். கதையைச் சொல்வதற்கு மாறாக உங்களுக்கு பாரதியாரைத் தெரியுமா?” என்று மீண்டும் கேள்வியில் தொடங்கினார். கிட்டத்தட்டவகுப்பில் இருந்த அனைவருமே தெரியும் என்பதைத் தெரிவிக்கும் விதமாக “ஓ” என்று மகிழ்ச்சியோடு ஓசையெழுப்பினோம். சுந்தரம் மட்டும் வேகமாக “பாரதியார் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பாடல்களை எழுதி மக்களுக்கு எழுச்சியூட்டினார்” என்று சொன்னான்.

அதைக் கேட்டு ஐயா முகம் மலர்ந்தது. “நல்லது, அவர் எழுதிய பாடல்களில் ஏதேனும் ஒன்றை யாராவது சொல்லமுடியுமா?” என்று கேட்டார். மற்றவர்களுக்கு முன்னால் சுந்தரமே மீண்டும் எழுந்து “ஓடி விளையாடு பாப்பா” என்று பாடினான். “அந்த பாரதியாருடைய வாழ்க்கையில நடந்த ஒரு நிகழ்ச்சி இது” என்றபடி ஐயா அந்தக் கதைப்பாடலை ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி உணர்ச்சியோடு பாடிமுடித்தார். பிறகு அந்தப் பாட்டின் பொருளை கதையாகச் சொல்லத் தொடங்கினார். பாட்டு ஓரளவு எங்களுக்குப் புரிந்ததென்றாலும் ஐயா சொல்லத் தொடங்கிய கதையை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினோம்.

ஒருநாள் எட்டயபுரத்து மன்னரைச் சந்திப்பதற்காக பாரதியார் செல்கிறார். மன்னரும் பாரதியாரும் சேர்ந்து பல ஊர்களுக்குப் பயணம் போகிறார்கள். அலைந்து திரிந்துவிட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊருக்குத் திரும்புகிறார்கள். பாரதியாரும் வண்டியில் வீட்டுக்கு வருகிறார். வண்டி நிறைய ஏராளமான மூட்டைகள் காணப்படுகின்றன. தொலைவிலிருந்து அவற்றைப் பார்க்கும் பாரதியாரின் மனைவி அவையனைத்தும் நெல், கம்பு, கேழ்வரகு என பலவிதமான தானிய வகைகளும் வண்ணவண்ண பட்டுப்புடவைகளும் பாத்திரங்களும் வருவதாக நினைத்து மகிழ்கிறார்.

தம் கஷ்டகாலம் தீரப் போகிறது என நினைத்து இன்பக் கனவில் மூழ்கிவிடுகிறார். வண்டி வந்து வாசலுக்கு நிற்கிறது. செல்லம்மாள் பாரதியாருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். வண்டியோடு வந்தவர்கள் மூட்டைகளை இறக்கி வீட்டுக்குள் கொண்டுவந்து வைக்கிறார்கள். செல்லம்மாள் மூட்டைகளுக்கு அருகில் சென்று தொட்டுத்தொட்டுப் பார்த்து மகிழ்கிறார். பிறகு ஒரு மூட்டையை ஆவலோடு பிரிக்கிறார். அதில் வெறும் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. பிறகு எல்லா மூட்டைகளையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்கிறார். எல்லாவற்றிலுமே புத்தகங்களே இருந்தன. அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார். அவர் நினைத்தது எதுவும் ஒரு மூட்டையில் கூட இல்லை. மன்னர் கொடுத்த பணத்தில் ஒரு காசு கூட மிச்சம் வைக்காமல் பாரதியார் புத்தகங்களை மட்டுமே வாங்கி மூட்டை கட்டி எடுத்து வந்திருக்கிறார். ஏமாற்றத்தில் செல்லம்மாள் வெடித்து அழுகிறார். அப்போது அவரை ஆறுதல் சொல்லித் தேற்றுகிறார் பாரதியார். மன்னர் கொடுத்த பணம் அழிகின்ற செல்வம். நான் வாங்கி வந்துள்ள புத்தகங்களோ அழிவில்லாத செல்வம். அழியும் செல்வத்தைக் கொடுத்து நான் அழியாச் செல்வத்தை வாங்கி வந்தேன் என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் பாரதியார்.

நான்கு நான்கு வரியாக நிறுத்திநிறுத்தி முதலில் பாடலைப் பாடினார் ஐயா. பிறகு அதற்குப் பொருள் சொல்லும் வகையில் கதையைச் சொன்னார். அந்த நேரத்தில் மகிழ்ச்சியும் சோகமும் கலந்த கலவையான மனநிலையில் இருந்தோம். அப்பாட்டின் பல வரிகள் மறந்துவிட்டன என்றாலும் ஒரு நான்கு வரி மட்டும் நினைவில் இருக்கிறது. “பட்டுப்புடவையும் அங்கில்லை பாத்திர பண்டமும் அங்கில்லை பொட்டலத்துள்ளே இருந்ததெல்லாம் புத்தகம் புத்தகம் புத்தகமே” செல்லம்மாளின் வருத்தத்தைப் புலப்படுத்தும் வரிகள் ஆழமாகப் பதிந்துவிட்டன.

இறுதியாக ஐயா எங்களைப் பார்த்து ”உங்களுக்கு அழியாத செல்வம் வேண்டுமா, அழியும் செல்வம் வேண்டுமா?” என்று கேட்டார். நாங்கள் அனைவரும் ஒரே குரலில் “அழியாத செல்வம்” என்று சொன்னோம். ”அழியாத செல்வம்னா புத்தகம். புத்தகம்னா கல்வி. மனித வாழ்க்கையில் கல்விதான் அழியாத செல்வம். அதை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது. நாம் பற்றிக்கொண்டிருக்கும் வரையில் அதுவும் நம்மை கைவிடாது” என்று சொல்லி உரையை முடித்தார் ஐயா.

Leave a comment