கண்ணன் இதழ் ஆசிரியர் ஆர்வி (சிறுவர் இதழ் 1950 – 1971) – பி.வெங்கடராமன்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

சென்ற நூற்றாண்டின் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான நற்பணியாற்றியதில் “கலைமகள்” நிறுவன வெளியீடான “கண்ணன்” ஆசிரியர்  2008ல் மறைந்த ஆர்.வி (ஆர்.வி.வெங்கடராமன்) அவர்களுக்கும் பெரும் பங்கும் உண்டு. 1950 முதல் 1971 வரை 22 ஆண்டுகளாக ஒரு சிறுவர் இதழின் ஆசிரியராக பணியாற்றிய பெருமை “ஆர்.வி” அவர்களுக்கு உண்டு. மாத இதழாகத் தொடங்கிய “கண்ணன்” , பின்னர் இரண்டணா விலையில் மாதமிருமுறையாக வெளியானது .

நாற்பதுகளில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த “பாலர் மலர்” இதழுக்கு கெளரவ ஆசிரியராக திகழ்ந்த குழந்தைக் கவிஞர் ஆலா.வள்ளியப்பா அவர்களின் அறிமுகத்தினாலும், ஊக்குவிப்பினாலும், “குழந்தைக் கவிஞர் எழுத்துப் பரம்பரை” என உருவானது போல் . 50-60 களில் “கண்ணன்” ஆசிரியர் ஆர்வி அவர்களின் அறிமுகத்தினாலும் ஊக்குவிப்பினாலும் வளர்ந்த எழுத்தாளர்கள் ஏராளம் .

கண்ணன் இதழ் விரும்பத்தக்க வகையில் மிளிர ஆசிரியர் ஆர்வி அவர்கள் எடுத்த வித்தியாசமான முயற்சிகள் பெரிதும் குறிப்பிடத்தக்கவை. ஆண்டுதோறும் வெளியாகும் கண்ணன் தீபாவளி மலர் நேர்த்தியிலும் கருத்திலும் நன்கு சிறந்து விளங்கின . தி.ஜெ.ர , கி.வா.ஜ – கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் இம்மலர்களில் எழுதி சிறப்பித்து வந்தனர்.

பொதுவாக, சிறுகதைப் போட்டி என்றுதான் கேள்விப் பட்டுள்ளோம். ஆனால் தொடர்கதை போட்டி என்று புதுமையை புகுத்தியவர் இவரே. கண்ணனில் வெளியான சிறந்த தொடர்கதைகள்
பின்னர் புத்தகங்களாகவும் வெளிவந்தன. ஆர்வியின் தொடர்கதைகளும், படக்கதைகளும் பெரிதும் குறிப்பிடத்தக்கவை. கண்ணன் இதழில் வெளிவந்த சிறந்த சிறுகதைகள் மிக அருமையாக தொகுக்கப்பட்டு “கண்ணன் கதை களஞ்சியம்” என பன்னிரெண்டு தொகுதிகளாக கலைஞன் பதிப்பகம் .திரு.மாசிலாமணி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இது சிறுவர் இதழியல் வரலாற்றில் மிகச் சிறப்பான முதல் முயற்சி என்பதுடன் முதல்தரமான முயற்சி என சொல்லலாம். மூன்றாண்டுகள் குழந்தை எழுத்தாளர் சங்க தலைவராக பணியாற்றுகையில் குடியரசு தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் மாநாட்டினை மிகத் திறம்பட நடத்தியவர் ஆர்வி. ஆர்வி அவர்களின் மறைவு சிறுவர் இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பு.

குறிப்பு: ஒரு பி. ஆர். ஓ வின் இலக்கிய டைரி – பி.வெங்கடராமன் அவர்களின் புத்தகத்தில் வெளியான கட்டுரை.

Leave a comment