பாடல்களும் பரவசமும் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 11)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தொடக்கப்பள்ளியில் எங்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்த நவநீதம் டீச்சர் எங்கள் மீது வைத்திருந்த அன்புக்கு எல்லையே இல்லை. பாடல்களையும் கதைகளையும் சொல்லிச்சொல்லி எங்கள் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். எல்லாப் பிள்ளைகளையும் அவர் தன் சொந்தப் பிள்ளையைப்போலவே பார்த்துக்கொள்வார். ஒவ்வொருவருடைய பெயரும் வீடு விவரங்களும் அவருக்கு மனப்பாடமாகத் தெரியும். யாராவது ஒரு பிள்ளை பேசாமலோ சிரிக்காமலோ மெளனமாகவும் சோர்வாகவும் இருப்பதை அவர் பார்த்துவிட்டால், உடனே நெருங்கி வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்து விசாரிப்பார்.
“என்னடா பசிக்குதா, காலையில சாப்ட்டியா?” என்றுதான் முதலில் கேட்பார். ஒருசில பிள்ளைகள் வீட்டில் எதுவும் சாப்பிடாமலேயே வகுப்புக்கு வருவது வழக்கம். அவர்கள் நேரிடையாக பள்ளியில்
வழங்கப்படும் மதிய உணவை உண்பார்கள். அதுவரை பசியைத் தாங்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை டீச்சர் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். உடனே அவர் பையிலிருந்து தன் சாப்பாட்டுப் பெட்டியை எடுத்து இரண்டு இட்லியை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். பசி தவிர வேறு ஏதேனும் காரணம் இருந்தால் பேச்சுக்கொடுத்து விசாரிப்பார். அவன் கவனத்தை வேறு திசையில் திருப்பி ஆறுதல் சொல்வார்.

ஒருமுறை காய்ச்சலடித்ததால் நான் மூன்று நாட்களாக பள்ளிக்குச் செல்லவில்லை. கஞ்சி குடித்துவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டு படுத்த படுக்கையாகவே இருந்தேன். மூன்றாம் நாள் மாலை பொழுது சாய்ந்த வேளையில் டீச்சர் எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார். “பையன் ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை?” என்று அவர் என் அம்மாவிடம் சத்தமாகக் கேட்பது அறைக்குள் என் படுக்கைவரைக்கும் கேட்டது. உடனே அவர் குரல் கேட்டு மெதுவாக எழுந்து வெளியே வந்துவிட்டேன். என்னைப் பார்த்ததுமே என்னை நெருங்கி கன்னத்தைத் தொட்டு “வரலையே என்னாச்சின்னு ஒன்ன பார்த்துட்டு போவலாம்ன்னுதான் வந்தேன்” என்று புன்னகைத்தார். அவர் கண்களில் நிறைந்திருந்த கனிவைக் கண்டு நான் உருகிவிட்டேன்.

வகுப்பு நேரம் முழுதும் டீச்சர் பேசிக்கொண்டே இருப்பார். அல்லது யாராவது ஒரு சிறுவனிடமோ, சிறுமியிடமோ ஏதேனும் கேள்வி கேட்டு பதில் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பார். பொதுவாக அவர் பாட்டு சொல்லிக்கொடுக்கிறாரா, கதை சொல்கிறாரா அல்லது பாடம் நடத்துகிறாரா என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது.

உற்சாகமூட்டுவதற்காகத்தான் எங்களுக்கு ஏதோ ஒரு கதையைச் சொல்கிறார் என நினைப்பதற்குள் அதை ஒரு பாடத்தின் ஒரு பகுதி என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார். ”அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா” பாட்டையும் ”கைவீசம்மா கைவீசு” பாட்டையும் அவர்தான் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். எங்களை ஒவ்வொரு நாளும் அப்பாடல்களைப் பாட வைத்து மகிழ்ச்சியில் கைதட்டியதை மறக்கவே முடியாது. ”என்னால் உனக்குத் தொல்லை ஏதும் இல்லை அம்மா” என்ற வரியைக் கேட்டதும் அவர் உதடுகளில் தானாக ஒரு புன்னகைக்கோடு மின்னி மறையும். அதே போல ”கைவீசம்மா” பாட்டைப் பாடும்போது ”மிட்டாய் வாங்கலாம் கைவீசு மெதுவாய்த் தின்னலாம் கைவீசு” வரியைச் சொல்லும்போது ஒரு கையை தட்டு போலவும் இன்னொரு கையால் அதிலிருந்து எடுத்துச் சாப்பிடுவது போலவும் அவர் செய்து காட்டும் சைகை அற்புதமான ஓர் ஓவியத்தைப் போல நெஞ்சில் புதைந்திருக்கிறது.

”காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா” பாடலைக் கற்றுக்கொள்ளும்போது உண்மையாகவே எங்கள் வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த மரத்தடியில் காகமும் குருவியும் அலைந்துகொண்டிருந்தன. காகத்தையும் குருவியையும் பார்த்தபடியே அந்தப் பாடலைப் பாடும்போது எங்கள் உற்சாகம் இரு மடங்காகப் பெருகிவிடும். எங்கள் குரலும் உயர்ந்துவிடும். அக்கம்பக்கத்து வகுப்பில் இருப்பவர்கள் எங்கள் பக்கமாகத் திரும்பி ஒருகணம் வேடிக்கை பார்த்தபடி புன்னகைப்பார்கள். அவர்கள் வேடிக்கை பார்க்கப்பார்க்க நாங்கள் இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்திப் பாடத் தொடங்கிவிடுவோம்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகும் என்னால் அந்தப் பாட்டை மறக்க முடியவில்லை. தோட்டத்துக்குப் போகும்போதும் வாசலில் நிற்கும்போதும் எங்கள் பார்வையில் காகமோ குருவியோ பட்டுவிட்டால் போதும், உடனே காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா என்று தொடங்கிவிடுவேன். என் கோரிக்கை அதற்குப் புரிந்துவிட்டால், அது உடனடியாகவே எனக்கு மையும் பூவும் கொண்டுவந்து கொடுக்கும் என்று உண்மையாகவே நான் நம்பிக்கொண்டிருந்தேன். அப்படி ஒருவேளை அவை எனக்கு மையையும் பூவையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டால் முதன்முறையாக கொடுப்பதை அவற்றை யார் பார்வையிலும் படாமல் ரகசியமாக பைக்குள் வைத்து எடுத்துச் சென்று எங்கள் டீச்சருக்கே கொடுக்கவேண்டும் என மனத்துக்குள் தீர்மானித்திருந்தேன். இரண்டாவது முறையாக கொடுப்பதை அம்மாவுக்கும் மூன்றாவது முறையாக கொடுப்பதை என் தங்கைக்கும் கொடுக்கவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். இதற்காகவே ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் தோட்டத்தின் பக்கம் தனிமையிலேயே அலைந்து திரிந்தேன். பாடிப்பாடி அந்தப் பாட்டுதான் மனப்பாடமாக ஆனதே தவிர ஒருநாளும் காக்கையும் குருவியும் கொக்கும் கிளியும் நெருங்கி வரவே இல்லை. அந்த ஏமாற்றம் முதலில் எனக்கு வருத்தமளித்தது. பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு, விரைவிலேயே அக்கற்பனையிலிருந்து வெளிவந்துவிட்டேன்.

டீச்சர் சொல்லிக்கொடுத்த இன்னொரு கதைப்பாட்டு “பாட்டியின் வீட்டில் பழம்பானை அந்தப் பானை ஒருபுறம் ஓட்டையடா” என்னும் பாடல். ஒருநாள் அந்த ஓட்டை வழியாக ஒரு சுண்டெலி உள்ளே போய்விடுகிறது. பானையில் இருந்த நெல்லைப் பார்த்து ஆசையோடு தின்னத் தொடங்குகிறது. அளவு மீறித் தின்றதால் வயிறு புடைத்துவிடுகிறது. உள்ளே நுழைந்த ஓட்டை வழியாக வெளியே வரமுடியாமல் திண்டாடுகிறது. அடுத்தநாள் காலை பானையின் மூடியை பாட்டி திறக்கிறாள். அப்போது சுண்டெலி பானையிலிருந்து தப்பி வெளியே குதித்து ஓடுகிறது. அந்தத் தருணத்தில் எதிர்பாராமல் அங்கே வரும் பூனை அதைப் பாய்ந்து கவ்வித் தின்றுவிடுகிறது. அந்தப் பாட்டை மீண்டும் மீண்டும் பாடிக் களிப்போம். இறுதியில் கள்ள வழியில் செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு பூனைக்கு இரையான சுண்டெலியின் நிலைமைதான் நேரும் என்று இறுதியாகச் சொல்லி முடிப்பார் டீச்சர். ”உள்ளபடியே நடப்பவர்க்கு தெய்வம் உற்ற துணையாக நிற்குமடா” என்று கைகளைக் குவித்து பாட்டை முடிக்கும்போது அவர் முகத்தில் படர்ந்த மலர்ச்சியை இப்போது நினைத்தாலும் மனம் விம்முகிறது.

Leave a comment