இந்தியக் கல்விப் போராளிகள் நூல் அறிமுகம் – செ.மணிமாறன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள் எத்தனையோ வரலாம். ஆனால் இக்கல்வி அனைவருக்குமான கல்வி என்று மாறியதன் வரலாறு குறித்த அறிமுகம் செய்திடும் நூலாக இந்நூல் விளங்குகின்றது.

ஆசிரியர் பயிற்சி நூல்கள், கல்வியியல் ஆராய்ச்சி நூல்கள், வரலாற்று நூல்கள் அறிமுகம் செய்திடாத கல்விப் போராளிகள் 20 பேரைப்பற்றிய கட்டுரைகள் அடங்கிய இந்நூல் 2017 – 2018 ஆண்டிற்கான சிறந்த நாவல் என்ற விருதினை பெற்றுள்ளது. வெளியான 3 மாதங்களிலே இரண்டாம் பதிப்பு அச்சாகி உள்ளது என்பதில் இருந்தே இந்நூலின் சிறப்பினை நாம் அறிந்து கொள்ள இயலும்.

பயணங்களே உண்மையான பாடங்கள் என்பதனை உணர்ந்த சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன்ராஜ் 17 நாடுகளில் பிரிட்டீஸ் அரசு பொதுக்கல்வி முறையினை கொண்டுவரக் காரணமானவர். டேவிட்ஹேர் என்ற பிரிட்டீஸ் கல்வியாளருடன் இணைந்து இந்தியாவின் முதல் பொதுப்பள்ளியான ஆங்கிலோ – இந்தியப் பள்ளியினையும் ஒரு கல்லூரியையும் தொடங்கினார்.

இப்பெரும் தவறுக்காக 1812 இல் வங்காளத்தில் இருந்து வெளியாகும் சமாச்சார் சந்திரிகா என்னும் பத்திரிக்கை இப்படிப்பட்ட ஒருவரை விட்டு வைப்பது நமது பாரம்பரியத்தை நாசமாக்கி விடும்… நமது ஆச்சார அனுஷ்டாங்களில் தலையிடாமல் அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் – இல்லை எனில் அவர் விரைவில் இவ்வுலகத்தில் இருந்தே அனுப்பப்பட வேண்டும் என்று கதறுவதில் இருந்தே ராஜாராம் மோகன்ராஜின் பணியினை நாம் உணர்ந்து கொள்ள இயலும்.

தாமஸ் மன்றொ போன்ற ஆங்கில அதிகாரிகள் இந்தியர்களுக்கு கல்வி அளிக்க முன்வந்தனர். அக்காலத்திலேயே 1 லட்சம் செலவில் மாவட்ட்த்திற்கு இரண்டு பள்ளிகளை திறந்தாலும், மக்கள், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால் அவர்களது குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தது. இதனை எதிர்த்து தனி மனிதனாக இங்கிலாந்து சென்று குழந்தைகளை மனமக்கள் ஆக்காதீர்கள் மாணவர்களாக பள்ளிக்குச் சென்றிட சட்டம் கொண்டு வர வலியுறுத்திய கல்வியாளர் கவிஞர் பக்ராம்ஜி மலபாரி இந்து மத அடிப்படைவாதிகளினால் தான் கல்வி நம் நாட்டில் படுதோல்வி அடைந்தது என்பதனை வலியுறுத்தி 1882 இல் கடிதமும் எழுதினார். குழந்தைகள் திருமணத்தை நிறுத்தி மனமக்களை மாணவர்கள் ஆக்கியவரது பணிகளை ஏன் வரலாறு இருட்டடிப்பு செய்தது?

ஆங்கிலக்கல்வி என்பது கிறிஸ்துவ மதமாற்றக் கல்வியாக மாறிப்போய் இருந்தது. கடவுளின் பெயரால் மதமாற்றம் செய்த கல்வியை, மதச்சார்பற்றக் கல்வியாக மாற்றியது துணை ஆட்சியர் ராஸிக்கான் தான். இதற்கான பரிசாக ஒரே ஆண்டில் 7 முறை பணி மாறுதல் பெற்றார். தமது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மத கல்வி நிறுவனங்களை பூட்டி விட்டு அவற்றினை பொதுப்பள்ளிகளாக மாற்றினார். அரசு வேலையினை துறந்து கல்விக்கான போராட்டத்தினை தொடர்ந்தார் மாலிக். இந்து, கிறிஸ்துவ, முகலாயர் என அனைத்து மதங்களின் பிடியில் இருந்தும் கல்வியை அகற்றி மதங்களை கல்வியில் இருந்து நீக்கிய இவரே இந்தியாவின் மதசார்பின்மைக்கு வித்திட்ட கல்வியாளர் ஆவார்.

கல்வியில் மேன்மையுற்ற பிரஜைகளைக் கொண்ட நாடே உயர்ந்த நிலையினை அடைய முடியும் என்ற சட்ட முன்வடிவினை 1817 இல் கொண்டுவந்த மலையாள சமஸ்தானத்தின் ராணி கவுரி பார்வதிபாய் தான் இன்றைய கேரள கல்வி அறிவு 100% பெறுவதற்கு அடிப்படையானவர். சமஸ்தானப்பள்ளிகளில் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம் கற்றுத்தர உத்தரவிட்டார். நாயர்கள் மற்றும் பார்ப்பணர்களின் வீடுகளைப் போன்றே அனைவரும் மேற்கூரை அமைத்த வீடுகளைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார். வாழ்நாள் முழுவதும் கல்விக்காக போராடினார். பெண்கள், கீழ்சாதி குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்க வைத்ததும் இவர்தான்.

200 க்கும் மேற்பட்ட பிளேக் பாதித்த குழந்தைகளுடன் தங்கி பிளேக் நோயினால் பாதித்து இறந்த பெண் ஆசிரியர் சாவித்திரிபாய்பூலே உலகத்திற்கே முன்மாதிரி அல்லவா. இந்தியர்கள் ஆசிரியராக முடியாது. அவர்களுக்கு ஆசிரியருக்கு உரிய தகுதி இல்லை என்றதை எதிர்த்து போராடி சொந்த பணத்தில் ஆங்கிலையேருக்கு இணையாக இந்திய ஆசிரியர்களையும் உடை உடுத்த வைத்த ஈஸ்வரசந்திர வித்தியாசாகர்.1895 ஆம் ஆண்டிலேயே தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று அறிவித்த பாரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் தான் பாபாசாகிப்பை ஆதாரித்து படிப்பதற்கு உதவினார். பாகுபாடு இன்றி அனைவரும் கல்வி பெறுவதற்கான நிலையினை உருவாக்கினார்.

இதனைப்போன்ற 20 பேரின் பெருமுயற்சியினால் தான் கல்வி என்பது அனைவருக்கும் சாத்தியாமனது. கல்வி புலத்தில் பணியாற்றும், சமையலர் உதவியாளர் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலாகும். இந்திய கல்வி வளர்ச்சியில் ஆங்கில அரசின் பங்களிப்புகளையும், இந்துத்துவவாதிகளின் கொடுமையினையும் ஒரளவிற்கு ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது சிறப்பு. ஒவ்வொரு பள்ளிக்கும் இந்நூலினை அரசே வழங்கிடலாம். அத்துணை தகுமிக்க கல்வி நூலாகும்.

செ.மணிமாறன்
திருவாரூர்.
9952541540

இந்தியக் கல்விப் போராளிகள் – ஆயிஷா இரா.நடராஜன் | புக்ஸ் பார் சில்ரன் – பாரதிபுத்தகாலயம். | விலை: ரூ.100/-

Leave a comment