யானையும் பூனையும் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 09)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒருமுறை கண்ணன் ஐயா எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். அவர் பெரிய படிப்பாளி. பள்ளி அலுவலகத்தில் அவர் மேசைமீது ஏராளமான புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். அதைவிட அதிகமான எண்ணிக்கையில் வீட்டிலும் புத்தகங்கள் வைத்திருப்பதாக அவர் சொன்னார். கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டுத்தான் ஐயா  அன்று கதையைச் சொல்லத் தொடங்கினார். அந்தக் கதையின் பெயர் ‘யானையும் பூனையும்’. ஓர் ஊரில் ஒரு யானை நடந்துபோகிறது. கழுத்து மணியசைய தும்பிக்கையை அப்படியும் இப்படியுமாக அசைத்தபடி யானை தெருவில் நடந்துபோகிறது. தெருவோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் பெரியவர்களும் சிறியவர்களும் வெளியே வந்து யானையை வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து ஒரு பூனையும் வேடிக்கை பார்க்கிறது. மலையைப்போல உயரமான யானை அசைந்து அசைந்து நடப்பதைப் பார்த்து பூனையின் மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.

அப்போது பூனையின் நெஞ்சில் ஓர் ஆசை அரும்புகிறது. யானையின் முதுகில் அமர்ந்து சவாரி செய்யவேண்டும் என்பதுதான் அதன் ஆசை. ஆனால் யானையின் உயரத்தைப் பார்த்து ஒரு நொடி பூனை மலைத்துப்போகிறது. யானையின் முதுகில் எப்படி ஏறலாம் என்று பல கோணங்களில் யோசித்தபடியே அதற்குப் பின்னால் நடந்து செல்கிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு தூணைப்போல இருக்கும் யானையின் பின்னங்காலில் தொற்றி ஏறி முதுகில் அமர்ந்துவிடலாம் என்று திட்டமிடுகிறது. திரும்பத்திரும்ப தன் திட்டத்தை மனத்துக்குள்ளேயே
நடைமுறைப்படுத்திப் பார்க்கிறது.

தன் திட்டத்துக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை பிறந்ததும் பூனையின் நடையில் ஒரு வேகம் உருவாகிறது. சில அடிகள் தொலைவில் யானையைப் பின்தொடர்ந்து நடக்கிறது. ஓடிச் சென்று காலைப் பற்றி, பிறகு முதுகை நோக்கித் தாவுவதற்கான தருணத்தை எதிர்பார்த்தபடி யானைக்கு அருகில் நெருங்கிச் செல்கிறது. எதிர்பாராத விதமாக யானை திடீரென நின்று தும்பிக்கையை உயர்த்திப் பிளிறத் தொடங்குகிறது. அதே நேரத்தில் தன் வாலையும் நாலாபக்கமும் விசையோடு சுழற்றுகிறது. அந்த எதிர்பாராத அசைவுகளால் அதிர்ச்சியுற்ற பூனை நடுங்கி அங்கிருந்து ஓட்டமாய் ஓடிவிடுகிறது..

பூனை நடுங்கி ஓடிய கதையைக் கேட்டு நாங்கள் எல்லோரும் சிரித்து கைதட்டினோம். ”இது ஒரு கதைப்பாட்டு. ஓர் ஆர்வத்துக்காக நான் பாட்டை மாற்றி உங்களுக்கு கதையாகச் சொன்னேன்” என்றார் ஐயா. “அந்தப் பாட்டைப் படித்துக் காட்டட்டுமா?” என்று சொல்லிக்கொண்டே பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து பக்கத்தைப் புரட்டி ராகத்தோடு படித்தார். அந்தக் கதை எங்கள் கண்முன்னால் மீண்டும் நடப்பதுபோல இருந்தது. ஐயா படித்து முடித்ததும் முத்துகிருஷ்ணன் என்னும் சிறுவன் எழுந்து இன்னொரு முறை படிக்கும்படி கேட்டுக்கொண்டான். ஐயாவும் புன்னகைத்தபடி மீண்டும் படித்தார்.

“சரி, இந்தக் கதைய நடிச்சிப் பார்க்கலாமா?” என்று ஐயா கேட்டார். யாரும் கையை உயர்த்தவில்லை. எல்லோரும் மெளனமாக அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். பிறகு ஐயாவே மாணவர் வரிசையிலிருந்து இருவரைச் சுட்டிக்காட்டி அருகில் வரும்படி சொன்னார். இருவரையும் பக்கத்தில் நிற்கவைத்துக்கொண்டு ஒருவனிடம் “நீ யானையா நடந்துவா” என்று சொன்னார். மற்றொருவனிடம் “நீ பூனையா பின்னால வா” என்று சொன்னார். இருவரும் அதுபோலவே செய்தார்கள். யானையாகவும் பூனையாகவும் அவர்கள் செய்த காட்டிய குறும்புகளுக்கு அளவே இல்லை. கடைசியாக யானையின் பிளிறல் ஓசையைக் கேட்டு தப்பித்து ஓடவேண்டிய கட்டத்தில் பூனையாக நடித்த சிறுவன் வகுப்பறையையே சுற்றிச்சுற்றி வந்து அனைவரையும் கலகலப்பாகச் சிரிக்கவைத்தான்.

நடித்து முடித்ததும் ஐயா இருவரையும் மீண்டும் அருகில் அழைத்து நிறுத்தி பாராட்டினார். நாங்கள் மகிழ்ச்சியில் அவர்களுக்காக கைதட்டினோம். இறுதியில் ஐயா ”இந்த மாதிரி இந்தப் புத்தகத்தில் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன. அடுத்த வகுப்பில் இன்னொரு பாட்டைப் பாடிக் காட்டுகிறேன். இப்போது யானையும் பூனையும் பாடலை இன்னொரு முறை பாடலாமா?” என்று கேட்டார். “ஓ” என்று ஓசையெழுப்பி நாங்கள் அனைவரும் சம்மதம் சொன்னோம். ஐயா ஒவ்வொரு வரியாக அந்தப் பாடலை அழகாக ராகத்தோடு பாடிக் காட்டினார்.

மற்றொரு நாள் ஐயா இன்னொரு புதிய கதையை எங்களுக்குச் சொன்னார். அந்தக் கதையின் பெயர் கடிகாரம். ஒரு வீட்டுச் சுவரில் ஒரு பெரிய கடிகாரம் தொங்குகிறது. சின்ன முள்ளும் பெரிய முள்ளும் நகர்ந்து செல்லும் டக்டக் ஓசை சீரான இடைவெளியில் ஒலிக்கிறது. கடிகாரத்துக்குக் கீழே ஒரு மேசையில் ஒரு தட்டு நிறைய இனிப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

வீட்டின் மூலையிலிருந்து ஒரு சுண்டெலி எட்டிப் பார்க்கிறது. வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு மெல்ல மெல்ல மேசையை நோக்கி ஓடி வருகிறது. கால் வழியாக மேசை மீதும் ஏறிவிடுகிறது. வாய்க்கெட்டும் தொலைவில் உள்ள இனிப்பின் மணத்தை நுகர்ந்து நுகர்ந்து மகிழ்ச்சியடைகிறது. ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து தட்டை நெருங்கி வருகிறது. இதோ இனிப்பை இழுத்துக் கடிக்கலாம் என்று முனைகிற நேரத்தில் கடிகாரத்தின் மணி அடிக்கத் தொடங்குகிறது. டண் டண் என்னும் ஓசையால் அறையே அதிர்கிறது. மணியோசையைக் கேட்ட சுண்டெலி அஞ்சி மேசையிலிருந்து தாவி கீழே இறங்கி வந்து ஓட்டமாக ஓடித் தப்பித்துவிடுகிறது. கண்ணைமூடி கண்ணைத் திறப்பதற்குள் மாயமாக மறைந்துவிடுகிறது.

எல்லோருக்கும் கதை பிடித்துவிட்டது. அனைவரும் கைதட்டி மகிழ்ந்தோம். புத்தகத்தைப் பிரித்து எங்களுக்கு ராகத்தோடும் ஏற்ற இறக்கத்தோடும் அந்தப் பாட்டைப் படித்துக் காட்டினார். கடிகாரமாக நடிப்பதற்கும் சுண்டெலியாக நடிப்பதற்கும் ஐயா அழைக்காமலேயே பலர் தயாராக எழுந்து நின்றார்கள். ஐயாவே இருவரை அருகில் அழைத்து நடித்துக் காட்டும்படி சொன்னார்.

கடிகாரம் போல நின்ற சிறுவன் தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்தபடி நாக்கைத் தட்டி டக்டக் என்று கடிகார முட்களைப்போல ஓசையெழுப்பினான். சுண்டெலியாக நடித்த சிறுவன் இனிப்பைச் சாப்பிடும் ஆசையோடு நடக்கும்போதும், ஏமாற்றத்தோடும் அச்சத்தோடும் திரும்பி ஓடியபோதும் அழகாகச் செய்தான். சிரித்துச்சிரித்து எங்களுக்கு வயிற்றுவலியே வந்துவிட்டது. ஐயா அந்தக் கடிகாரம் பாட்டை கடைசியாகப் பாடி வகுப்பை நிறைவு செய்தார்.

“ஐயா, இது யார் எழுதுன பாட்டு?” என்று ஐயாவிடம் கேட்டான் கணேஷ். “பெரியசாமித் தூரன்னு ஒருத்தர். உங்களமாதிரி பிள்ளைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார்” என்று சொன்னார் ஐயா.

Leave a comment