கிரகணங்கள் பொதுவாக வானில் ஏற்படும் நிகழ்வுகள் என்றாலும், இது குறித்த கற்பனைகள், கட்டுக்கதைகள் வானியல் முக்கியத்துவம் இவற்றின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன.
சுழற்சிகள்:
விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை சுழலும் தன்மையை பெற்று வலம் வருகின்றன. சூரியன் – புவி – சந்திரன் ஆகிய மூன்றும் கிரகணத்திற்கு காரணமாகின்றது. கிரகணம் என்பதற்கு ஒளி மறைப்பு என்பது பொருளாகும்.
சூரியனிடம் இருந்து பிரிந்த பொருட்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுழன்று வருகின்றன. புவியும் சூரியனை சுற்றி வருகின்றது. புவியிடம் இருந்து பிரிந்த சந்திரன் புவியைச் சுற்றி வருகின்றன.
சூரியன் மட்டுமே இயற்கை ஒளி மூலம். சூரியனே ஒளியை சந்திரனுக்கும், புவி உள்ளிட்ட கோள்களுக்கும் தருகின்றது. இவ்வாறான சுழற்சியில் மூன்றும் நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் போது ஒளி மறைப்பு நிகழ்ச்சி ஏற்படும்.
இதன்காரணமாக சூரியகிரணம் மற்றும் சந்திரகிரகணம் நிகழ்வுகள் வானில் ஏற்படுகின்றன.
சூரிய கிரகணம்:
அமாவாசை அன்று ஏற்படும். சூரியன் – புவிக்கு இடையில் சந்திரன் வரும் போது சூரியன் மறைக்கப்படுகின்றது. இதனை சூரிய கிரகணம் என்கிறோம். கடந்த மாதம் டிசம்பரில் 26 இல் ஏற்பட்டது. இது குறித்த விளக்கமான எனது பதிவு.
கீழ்கண்ட சுட்டியில் உள்ளது. காண்க.
https://www.panchumittai.com/2019/12/27/post_230/
சந்திரகிரகணம்:
பௌணர்மி ( முழு நிலவு) நாளில் ஏற்படும். சூரியன் – சந்திரனுக்கு இடையே பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனுக்கு வராமல் புவி மறைக்கின்றது. இதை சந்திரகிரகணம் என்கிறோம்.
பொதுவாக வானில் நிலவினை வெறும் கண்களினால் காண முடியும். எனவே நாம் சந்திரகிரகணத்தை எவ்வித உதவியும் இன்றி காணலாம். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சந்திரகிரகணம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 37 நிமிடத்தில் தொடங்குகிறது. 11ஆம் தேதி அதிகாலை 12 மணி 40 நிமிடம் சரியாக தெரிகின்றது. கிரகணம் 11ஆம் தேதி அதிகாலை 2.42 மணிக்கு முடிகிறது.
2020 ஆம் ஆண்டின் சந்திர கிரகணங்கள் :
2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களுக்கும்,இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் அடங்கும்.
ஜனவரி 10ம் தேதி சந்திர கிரகணம் 2020 ஆம் ஆண்டின் முதல் வான் நிகழ்வாகும். இரண்டாவது சந்திர கிரகணம் ஜூன்(5 மற்றும் 6) மாதத்திலும், மூன்றாவது ஜூலை (4 மற்றும் 5) மாதத்திலும், நான்கவாது சந்திர கிரகணம் நவம்பர் ( 29-30)மாதத்திலும் நிகழும் என்றும் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த ஆண்டின் அனைத்து சந்திர கிரகணங்களும் புறநிழல் (Penumbra) சந்திர கிரகணங்களாகவே இருக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அது என்ன புறநிழல் கிரகணம்:
Penumbral Lunar Eclipse என அழைக்கப்படும் புறநிழல் கிரகணம் என்பது சூரியனை மறைக்கும் பூமியின் நிழல் கொஞ்சம் மட்டுமே நிலவின்மீது விழும். அதனை நிழல் சந்திரகிரகணம் என்கிறோம்.
நாளை நடக்கவிருப்பது முழுமையான சந்திர கிரகணம் அல்ல.முழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும்.
கிரகணம் குறித்த கட்டுக்கதைகள்:
பொய்களை நிறுவதில் முதல் இடத்தில் இருக்கும் வேதங்கள் மற்றும் புராணங்களில் கூறுவதை சற்று பார்ப்போம்.
பாற்கடலைக் கடைந்து, அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் பங்கு போட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட பிணக்கில் சுவர்ணபானு என்ற அரக்கனை, மோகினி வடிவில் இருந்த விஷ்ணு, தலை வேறு உயிர் வேறாகப் பிரித்தார். அப்போது, பாம்பின் தலை மற்றும் உடலைக்கொண்டு இரு உடல்களை ஒட்ட வைத்ததில் உருவானதே (சாயா கிரகங்களான) ராகு மற்றும் கேது.
தங்களது இந்த நிலைக்கு முக்கியக் காரணமான சூரிய, சந்திரர்களைப் பழிவாங்குவதற்காக பிரம்மனிடம் தவமிருந்து, ஆண்டுக்கு நான்கு முறை, சூரிய சந்திரரின் ஒளியை விழுங்கும் வரம் பெற்றனர். ஆக, கிரகணங்கள் மூலம் உலகின் பெரிய ஒளிசக்தியை ராகு மற்றும் கேது மட்டுப்படுத்தினர்’ என்கிறது ரிக் வேதம்.
சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறது. ஆனால் சந்திரன், கடவுளை வேண்டி மந்திரங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு ஆசி அளித்தவுடன் , சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.இதனால் கிரகணத்தின் போது பய பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தனை செய்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.
பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைத்தல்:
கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறி பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கிறது.
கோவில்களில் நடை சாத்துதல்:
கோவில்களின் கதவுகள் கிரகணத்தைக் கண்டு பயந்து சாத்தப்படும். கிரகணம் முடிந்ததுமே திறக்கப்படும். சர்வ வல்லமை படைத்தாத இவர்களினால் கருதப்படும் கடவுள் கூட கிரகணத்தில் வெளிவர மறுக்கிறார். ஆனால், தமிழர் தெய்வங்களும், இக்கூட்டத்தினரால் ஒதுக்கப்படும் சிறு தெய்வங்கள் வெட்ட வெளியில் எவ்வித அச்சமும் இன்றி நிற்கின்றன. கிரகணம் முடிந்ததும் விளக்கேற்றி தெய்வ வழிபாடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாயன் நாகரிகத்தில் மலைப்பாம்பு, சீனாவில் டிராகன், ஜெர்மனில் வைகிங் மரபில் நரிகள், ஹங்கேரியில் ராட்சசப் பறவை. அமெரிக்கப் பழங்குடியில் கரடி, கொரியாவில் நாய் என வான்வெளியில் விழுங்கும் பல கதைகள் கிரகணங்களுக்குக் கூறப்படுகின்றன.
ஆர்யபட்டா:
கிரகணங்களின் அறிவியலை முதன்முதலாக உலகுக்கு எடுத்துரைத்தது. இந்தியரான நமது ஆரியபட்டாதான். தனது வானவியல் கணக்கீடுகள் மூலம், கோள்கள் பற்றிய அறிவியலை எடுத்துரைத்து பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் ஆரியபட்டா. ‘ராகு கேது விழுங்கிய சூரிய சந்திர கிரகணங்கள் வெறும் நிழல்களே’ என்றும் கி.பி.476-ம் ஆண்டே அவர் கணித்தார்.
அப்போது மறுக்கப்பட்ட ஆரியபட்டாவின் அறிவியல், பிறகு படிப்படியாக முன்னேறி, இன்று கிரகணங்கள் வாயிலாக ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடுகளை உறுதி செய்தது.
அறிவியல் முன்னேற்றம் பல அடைந்துள்ள இக்காலத்திலும் கூட சிறப்பு வழிபாடு, மூடநம்பிக்கைகள், பாம்பு விழுங்குதல் போன்றவற்றை உதறித் தள்ளி வானில் சந்திரகிரகணத்தை கண்டு மகிழ்வோம்.
தென் இந்தியாவில் சரியாகத் தெரியாது. ஆனால் வட இந்தியப் பகுதியில் காண இயலும். உலக அளவில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சந்திர கிரகணத்தை நன்கு காண முடியும்.
செ.மணிமாறன்
திருவாரூர்.
9952541540