நவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கணக்குப் பாடமும் சூத்திரங்களும் பிரிக்கமுடியாத உறுப்புகள். ஒரு கணக்குக் கேள்வியில் கண் படரும்போதே, அதை விடுவிக்கப் பயன்படுத்தவேண்டிய சூத்திரங்கள் நெஞ்சில் உடனுக்குடன் எழுந்துவந்து நிற்கவேண்டும். அது ஒரு பயிற்சி. நாய்க்குட்டிக்கும் கிளிக்கும் பயிற்சி கொடுப்பதுபோல மனத்துக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளமுடியும்.

ஒருவர் பள்ளியைவிட்டும் கல்லூரியைவிட்டும் வெளியேறிய பிறகு கூட, அப்போது படித்த சூத்திரங்களை எளிதில் மறப்பதில்லை. கணக்குச் சூத்திரங்களைப்போல, குழந்தைப்பருவத்தில் படித்த கதைகளில் சிற்சில உரையாடல்களையும் மனம் மறப்பதில்லை. எங்காவது பழைய கதைகளைச் சொல்லிப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் அந்த உரையாடல்களைச் சொல்லாமல் எந்தச் சந்திப்பும் நிறைவுறுவதில்லை. உரையாடல்கள் நினைவில் இருப்பதாலேயே கதைகளும் நினைவிலேயே தங்கியிருக்கின்றன.

தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது எங்கள் நவநீதம் டீச்சர் எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். தூக்கணாங்குருவியையும் குரங்கையும் பற்றிய கதை. கதையில் இரண்டும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும். ஆணவம் கொண்ட குரங்கு மரத்தில் ஏறி தூக்கணாங்குருவியின் கூட்டைக் கலைத்துவிடும். குஞ்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தத்தளிக்கும் அம்மாக்குருவியைப் பார்த்து ஏளனம் செய்து பேசும். அங்கிருந்து பறந்துபோகும் குருவி வேறொரு இடத்தில் கூடு கட்டி வசிக்கத் தொடங்கிவிடும். குரங்கு வழக்கம்போல மரத்துக்கு மரம் தாவியும் குதித்தும் விளையாடி பொழுதுபோக்கும். திடீரென மழைக்காலம் வந்துவிடும். கூடு கட்டத் தெரிந்த குருவி பாதுகாப்பாக இருக்கும். கூடு கட்டத் தெரியாத குரங்கு தவியாய்த்தவித்து துன்பத்தில் ஆழ்ந்துவிடும். அந்தக் கதையை புத்தகத்தைப் பார்க்காமலேயே ஏற்ற இறக்கம் நிறைந்த குரலில் எங்களுக்குச் சொன்னார் டீச்சர். கதையை முடித்துவிட்டு அவர் புத்தகத்தை எடுத்தபோதுதான் அவர் சொன்ன கதை புத்தகத்தில் இருப்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம்.

“ஊசி மூஞ்சி மூடா, உனக்கு கூடு ஒரு கேடா?” என்றொரு உரையாடல் அக்கதையில் உண்டு. அது குருவியைப் பார்த்து குரங்கு கேட்கும் கேள்வி. எங்கள் டீச்சர் குரங்குபோலவே முகத்தை கோணலாக வைத்துக்கொண்டும் உதடுகளை உட்பக்கமாகக் குவித்துக்கொண்டும் கீச்சுக்குரலில் அந்தக் கேள்வியைக் கேட்டார். அழகான நீதிக்கதை அது. அந்தக் கேள்வியின் வழியாகவே அக்கதை நினைவில் நிலைத்திருக்கிறது.

என் நினைவில் தங்கியிருக்கும் மற்றொரு உரையாடல் ”என் மீது ஏறி விளையாட உனக்கு எப்படி துணிச்சல் வந்தது?” என்று கர்ஜனை புரியும் உரையாடல். அது ஒரு சுண்டெலியைப் பார்த்து ஒரு சிங்கம் அதட்டலோடு கேட்கிற கேள்வி. அந்தக் கேள்வியிலேயே சிங்கம் கர்ஜிக்கும் ஓசையைக் கேட்கமுடியும். இதுவும் நவநீதம் டீச்சர் சொன்ன கதை. ஒரு காட்டில் ஒரு சிங்கம் வேட்டையாடி உண்ட களைப்பில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. அப்போது வளையைவிட்டு வெளியே வந்த ஒரு சுண்டெலி படுத்திருக்கும் சிங்கத்தின் மீது ஏறி இறங்கி விளையாடுகிறது. அதனால் தூக்கம் கலைந்து விழித்துக்கொண்ட சிங்கம் எலியைச் சீற்றத்துடன் பார்த்து முறைக்கிறது. ”என் மீது ஏறி விளையாட உனக்கு எப்படி துணிச்சல் வந்தது?” என்று கேட்டு கர்ஜிக்கிறது. நடுநடுங்கிப் போன சுண்டெலி சிங்கத்தின் முன் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்கிறது. ”சரி மன்னித்தேன். ஓடிப் போ” என்று கர்ஜிக்கிறது சிங்கம்.

சில நாட்களுக்குப் பிறகு வேட்டைக்குப் போன சிங்கம் வேடன் விரித்திருந்த வலையில் அகப்பட்டுக்கொள்கிறது. அதைக் கொன்று பிடிப்பதற்காக ஆட்களை அழைத்து வருவதற்காக ஊருக்குள் செல்கிறான் வேடன். மரணம் எந்த நேரத்திலும் தன்னை நெருங்கிவிடும் என்று நினைக்கிறது சிங்கம். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பக்கமாகச் சென்ற சுண்டெலி சிங்கத்தைப் பார்த்து நின்றுவிடுகிறது. அந்த ஆபத்திலிருந்து சிங்கத்தை தன்னால் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறது. உடனே குனிந்து சிங்கம் அகப்பட்டிருக்கும் வலையை கொஞ்சம்கொஞ்சமாகக் கடித்துக் குதறி அறுத்துவிடுகிறது. சுண்டெலிக்கு நன்றி சொல்லிவிட்டு சிங்கம் தப்பித்து காட்டுக்குள் ஓடிவிடுகிறது.

“ஆபத்துக்கு உதவாத நண்பனை பக்கத்தில் சேர்க்காதே” என்பது என் நினைவிலிருக்கும் இன்னொரு உரையாடல். இது எங்களுக்கு கண்ணன் சார் சொன்ன கதை. இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டே காட்டுவழியில் நடந்து போகிறார்கள். சிரித்தும் கதை பேசிக்கொண்டும் சென்றதால் இருவருக்கும் நடந்துபோகும் அலுப்பே தெரியவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு கரடி தம்மை நோக்கி வருவதை அவர்கள் பார்க்கிறார்கள். மரமேறத் தெரிந்த ஒரு நண்பன் சட்டென பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தில் ஏறி கிளைகளிடையில் மறைந்துகொள்கிறான்.

மரமேறத் தெரியாத மற்றொருவன் அச்சத்தில் நடுங்கி உறைந்துபோகிறான். இறந்துபோனவரை கரடி தின்னாது என எப்போதோ யாரோ சொன்ன சொல் நினைவுக்கு வர, அங்கேயே தரையில் விழுந்து அசைவில்லாமல் இறந்ததுபோலக் கிடக்கிறான். கரடி அவனை நெருங்கி வருகிறது. முகத்துக்கு நேராக வந்து முகர்ந்து பார்க்கிறது. பிறகு அச்சத்தில் அவன் இறந்துவிட்டதாக நினைத்து ஓடிவிடுகிறது. கரடி போன பிறகு மரத்திலிருந்து இறங்கிவந்த நண்பன் அவனிடம் “கரடி உன் காதருகில் வந்து என்னடா சொன்னது?” என்று கேட்கிறான். நண்பனின் சுயநலத்தைக் கண்டு மனம் உடைந்துவிட்ட அவன் ”ஆபத்துக்கு உதவாத நண்பனை பக்கத்தில் சேர்க்காதே” என்று கரடி தன்னிடம் சொன்னதாகச் சொல்லிவிட்டு அவனிடமிருந்து விலகி தனிவழியில் செல்கிறான்.

1 Comment

Leave a comment