சூரிய கிரகணமும், சுயநலமற்ற தொண்டும் – மொ.பாண்டியராஜன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கிறிஸ்துமஸ் இரவு. நாங்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முடித்துவிட்டோம். ஆகாஸ் நாளைக்கு நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்திற்கு தேவையான ஏற்பாட்டை செய்யலாம் என்றான். எங்களோடு வேல்முருகனும் இணைந்து கொண்டான். நாங்கள் எங்கள் டெலஸ்கோப்பை எடுத்து வைத்து திரையிடுவதற்கான ஏற்பாட்டை செய்தோம். அதற்கென பிரத்தேகமாக தயாரித்த சூரிய ஒளி வடிகட்டியை இணைத்து பிம்பத்தை பிடித்துப் பார்த்தோம். சரியாக இருந்தது. அதேபோல நாளை எடுத்துச் செல்ல வேண்டியதை கவனமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு தொலைபேசி வந்தது. அதில் கலைஞர் செய்தி தொடர்பாளர் தொடர்பு கொண்டார். நாங்கள் உங்கள் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய
இருக்கிறோம். நீங்கள் காலை 6 மணிக்கெல்லாம் ஆரப்பாளையம் ரவுண்டானா வந்து விடுங்கள் என்றார். நாங்களும் சரி என்றோம். ஆனால் என் மாணவர்கள் யாரும் அந்த நேரத்திற்கு வருவதற்கு முடியாது என்று சொல்லிவிட்டனர்.

நான் மட்டும் காலை 5 மணிக்கெல்லாம் புறப்பட்டு 5.40க்கெல்லாம் சென்று விட்டேன். அங்கே ஒரு சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நான் என்னுடைய டெலஸ்கோப்பை இறக்கி வைத்து சேர்ப்பதற்குள் கூட்டம் வந்துவிட்டது. என்னைச் சுற்றி நின்றுவிட்டனர். நான் தனியாக இந்த வேலைகளை செய்து கொண்டிருந்தபோதே தொலைகாட்சி நண்பர்களும் வந்துவிட்டனர். அவர்களும் தயாராகிக்கொண்டிருந்தனர் சுமார் 7 மணிக்கு சூரியன் வெளியே வந்துவிட்டது. ஆனால் சூரிய கிரகணம் 8.10க்குதான் தொடங்கும். அதுவரை மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் அவர்களை தயார் படுத்த வேண்டும் என யோசித்துக் கொண்டே இருந்தபோது அவர்களை வெறுமனே சூரியனை சூரிய கண்ணாடியில் பார்க்கச் சொன்னேன். அவர்களும் சூரியனை பார்த்தனர். அது நிலவு போல வட்டமாக தெரிகிறது என்றனர். இதுவும் கூட சில நிமிடங்கள் தான். அதற்குள் சிலர் வீட்டக்கு போய்விட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டனர். சிலர் டீ கடைக்கு சென்றுவிட்டனர். கூட்டம் சற்று குறைந்துவிட்டது. சூரியன் மெல்ல மெல்ல மேலே ஏறிக்கொண்டிருந்தது. நேரடி ஒளிபரப்பும் தயாராகி என்னுடைய பேச்சும் ஒளிபரப்பட்டுவிட்டது.

அவ்வளவுதான் மக்கள் சுமார் 7.50க்கு எல்லாம் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதே சமயத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே துணி துவைக்கும் சலவை தொழிலாளர்கள் துவைத்துக்கொண்டிருந்தனர். இளநீர் விற்பவர் விற்றுக்கொண்டிருந்தார். சற்று தொலைவில் சூப்பு விற்பவர் பலவகையான சூப்புகளை விற்றுக்கொண்டிருந்தனர். ஆண்கள் பெண்கள் என நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஆரப்பாளையம் ரவுண்டானவுக்கு எதிரில் டீக்கடையில் வடை சுட்டக்கொண்டிருந்தனர். சிலர் டீ குடித்துக்கொண்டிருந்தனர். பழ வியாபாரி வண்டியில் பழங்களை அடுக்கிகொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் சவாரிகளை அழைத்துக்கொண்டிருந்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிட்டும் இங்கிட்டும் போய்கொண்டிருந்தனது. சில பேருந்து ஓட்டுனர்கள் என்னை நோட்டமிட்டு சென்றனர். ஒரு நண்பர் எனக்கு ஒரு சூப்பு வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். ( இது போன்ற அன்புகளை நீங்கள் பொது சேவையில் ஈடுபடும் போது உங்களை தேடி தானே வரும்.) நான் அதனை குடித்துக்கொண்டே அங்கே இருந்தவர்களிடம் உரையாடினேன். அதே சமயத்தில் சுமார் 15 சூரிய ஒளி வடிகட்டிகளை கொடுத்து சூரியனை பார்க்க கொடுத்துவிட்ட அவர்களிடம் கிரகணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டேன். திடீரென்று ஒரு சத்தம்.

ஓ வாவ்வ்.. மேலே இருந்து கருப்பா உள்ளே வருகிறது. அவ்வளவுதான் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. கிரகணத்தைப் பார்க்க மக்கள் கூடி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். நிலவின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை பார்க்க ஆரம்பித்தனர். அவர்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பலதரப்பு மக்களும் வந்து பார்த்துச் சென்றனர். பலர் ஆட்டோக்களை எடுத்துக்கொண்டு குழந்தைகளை வெகு தொலைவிலிருந்து வந்து பார்த்துச் சென்றனர். அருகில் இருந்த பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தனர். சிலர் கண்ணாடிகளை தங்கள் பகுதிக்கு எடுத்துச் சென்று காட்டுவதற்காக சொல்லாமல் கொள்ளாமல் எடுத்தச் சென்றுவிட்டனர். உழைக்கும் மக்கள் எங்களை கண்டுகொள்ளாமல் அவர்கள் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. என் நா வரண்டுவிட்டது. யாரோ ஒரு சிறுவன் எனக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான். பாதுகாப்பிற்காக வந்திருந்த இரண்டு காவலர்கள் விளக்கங்கள் கொடுத்து சூரிய கிரகணம் பார்ப்பதற்கான செயல்பாட்டில் எனக்கு உதவினர். இதனால் அக் கூட்டத்தை சமாளிக்க முடிந்தது. அதே சமயத்தில் கண்ணாடி பிம்பத்தை பிடித்து காட்டுவதற்காக அந்த பகுதியில் 11ம் வகுப்பு படிக்கும் பிரேம் என்ற மாணவன் அவனுடைய நண்பர்களுடன் உதவினான். அவன் ஒரு பகுதி மக்களை கவர்ந்து கொண்டான். அதே வேளையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அமலராஜன் வந்தார். அவரும் எங்களுக்கு உதவினார். அந்த மூன்று மணி நேரத்தில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர்.

ஒன்று மட்டும் உறுதியானது சமூக செயல்பாட்டில் தனிநபராக நாம் செயல் பட தொடங்கினால், அது எந்த இடத்தில் தொடங்கினாலும் நமக்கு இந்த சமூகம் உதவி செய்யும். அது மட்டுமல்ல நமக்கு உதவதற்கான சுயநலமற்ற தொண்டு செய்யும் தொண்டர்களை அங்கேயே நாம் கண்டறிந்து கொள்ள முடியும் என்பது உறுதியாக தெரிகிறது.

மொ. பாண்டியராஜன்
மதுரை.3

Leave a comment