வளைய சூரிய கிரகணம்(26-12-2019) கேள்விகளும் பதில்களும் – எஸ்.ஆர்.சேதுராமன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வரும் 26-12-2019 அன்று நிகழ இருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து அது சார்ந்த அறிவியல் விசயங்களை பகிர்ந்து வருகிறது. வானியல் அற்புதத்தை காணத்தவறாதீர்கள் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுக் குறித்து பஞ்சு மிட்டாய் இணையத்தின் சார்பாக திரு.அரிச்சந்திரன் (கிருஷ்ணகிரி மாவட்டம் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) அவர்களிடம் பேசிய போது சூரிய கிரகணத்தை பார்க்க உதவும் கண்ணாடிப் பற்றியும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அறிவியல் விளக்கம் பற்றியும் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்கள் மனதில் உள்ள கேள்விகளை அழகாக தொகுத்து வெளியிட்ட புத்தகம் பற்றியும் அறிமுகம் செய்தார். அந்தக் கேள்வி-பதில்கள் நமது வாசகர்களுக்காக…

மேலும் சூரிய கிரகணத்தை பார்க்க உதவும் கண்ணாடியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களிடமும் பொது மக்களிடமும் கொண்டு சேர்க்க முனைப்பாக செயல்பட்டுவருகிறது. உங்கள் பகுதியில் நீங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் அந்தக் கண்ணாடியைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு நண்பர் திரு.அரிச்சந்திரன் (96887 42812) அவர்களை தொடர்பு கொள்ளவும். சரி வாருங்கள், இப்பொழுது கேள்விகளுக்கு செல்வோம்.

2019 டிசம்பர் 26 கிரகணம் எப்போது நடைபெறும்?

காலை சுமார் எட்டு மணிக்கு கிரகணம் துவங்கும். சூரியனின் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைக்க துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்து பின்னர் சுமார் 11:16 (காலை) வரையில் இவ்வாறு பிறைவடிவில் காட்சி தரும். அதன் பின்னர் கிரகணம் விலகி சூரியன் பின் முன்புபோல் முழுமையாகக் காட்சி தரும்.

எல்லா இடங்களிலும் வளைய சூரிய கிரகணம் தென்படுமா?

இல்லை. தமிழக்கத்தில் கோவை, ஊட்டி, திருச்சி, புதுக்கோட்டை முதலிய இடங்களில் காலை 9:31க்கு சூரியனின் மையத்தில் அற்புத காட்சி புலப்படும். சூரியனின் நடுவில் பொட்டு வைத்தது போல் நிலவு கருமை பகுதி சூரியனின் மையத்தை மறைத்துக் கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம்போலக் காட்சி தரும். சுமார் இரண்டு நிமிடம்வரை நெருப்பு வளைய வடிவத்தில் சூரியன் காட்சி தரும். இதுவே வளைய சூரிய கிரகணம். இதை கங்கன சூரிய கிரகணம் எனவும் கூறுவார்கள். கிழே உள்ள தென்னிந்திய வரைபடத்தில் எங்கே வளைய சூரிய கிரகணம் தென்படும் என்பதை பார்க்கலாம். மற்ற இடங்களில் பாதி சூரிய கிரகணம் தென்படும். அதுவும் அற்புத காட்சி தான். 

எங்கள் ஊரிலிருந்து பார்க்க முடியுமா?

கூகிள் பிளே ஸ்டோர் சென்று கிழே உள்ள செயலியை தரவிறக்கம் செய்துகொளவும். அதில் இந்தியாவில் எங்கெங்கு தென்படும், எந்த நேரத்தில் தென்படும் போன்ற விவரங்கள் உள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.alokm.solareclipse&hl=en_IN

Annular Solar Eclipse Alok Mandavgane என்றும் தேடலாம்.

கிரகணம் என்றால் என்ன?

சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல் மற்றொரு வான் பொருளில் விழுவதை தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல் தான். சூரியனை மறைத்து நிலவின் நிழல் விழும்போது அது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவின் விழுந்து அது மறையும்போது சந்திர கிரகணம்.

அளவில் சிரிய நிலவு சூரியனை மறைப்பது எப்படி?

சூரியனின் விட்டம் 13,91,980 கி.மீ., சந்திரனின் விட்டம் 3476 கி.மீ.தான். அதாவது சூரியன் சந்திரனைவிட சுமார் 400 மடங்கு பெரியது. அதே சமயம் பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு போல 400 மடங்கு தொலைவில் சூரியன் உள்ளது. எனவே இரண்டின் பார்வைக் கோணம் சமம். உயரே வெகு தொலைவில் பறக்கும் விமானத்தின் உருவம் தாழ்வாக பறக்கும் கழுகின் அளவாக தென்படுவது போல பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் சந்திரன் உருவம் சற்றேறக்குறைய சமம்.

2019 டிசம்பர் 26 அன்று வளை வடிவ கிரகணம் ஏன் ஏற்படுகிறது?

நிலவு பூமியை நீள் வட்ட பாதையில் சுற்றிவருகிறது. அவ்வாறு சுற்றிவரும்போது அருகே உள்ள புள்ளியில் வரும்போது அதன் காட்சிக் கோணம் பெரிதாகவும், தொலைவில் உள்ள நிலைக்குச் செல்லும்போது காட்சிக்கோணம் சிறிதாகவும் ஆகும். அதே போல பூமியும் சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றிவருகிறது. எனவே சூரியனுக்கு அருகே பூமி இருக்கும் போது அதன் பார்வை கோணம் கூடுதலாக இருக்கும். தொலைவில் இருக்கும் போது குறைவாக இருக்கும். கிரகணம் நடைபெறும் டிசம்பர் 26க்கு நெருக்கமாக வரும் 2020 ஜனவரி 5 அன்று சூரியன் பூமிக்கு மிக அருகில் அமையும். எனவே டிசம்பர் 26 அன்று சராசரியை விட சூரியனின் பிம்பம் சற்றே பெரிதாக இருக்கும். உருவில் சற்றே பெரிதாக உள்ள சூரிய பிம்பத்தை நிலவால் எளிதில் முழுமையாக மறைக்க முடியாது. எனவே தான் நிலவு சூரியனை மறைக்கும்போது அதன் மையப் பகுதி மட்டும் மறைய விளிம்பு பகுதி தீ
வளையம் போல காட்சியளிக்கும். இது அற்புத வானக் காட்சி.

சூரிய கிரகணங்களின் பல்வேறு வகைகள் யாவை?

பகுதி சூரிய கிரகணம், முழுமையான சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் போன்றவை ஆகும். சூரியனில் எத்தனை சதவிகிதம் மறைப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து இவ்வகை சூரிய கிரகணங்கள் ஏற்படும்.

சூரிய கிரகணத்தைப் பார்க்கும்போது பாதுகாப்புக் கண் காவலர்களை அணிய அறிவுறுத்தப்படுவது ஏன்?

சூரியனில் இருந்து வரும் நேரடி கதிர்கள் மிகவும் பிரகாசமாகவும் வெப்பமாகவும் இருப்பதை அறிவோம்.. நமது கண்கள் மிகவும் சிக்கலானவை. மேலும் உணர் உறுப்பான விழித்திரையில் உள்ள கூம்பு மற்றும் குச்சி செல்கள் குறைந்த வெளிச்சத்தில் பார்க்கவும், மின் சமிக்ஞைகளை மூளைக்கு கடத்தவும் அதன் மூலம் உருவங்களை பார்க்கவும் உதவுகின்றன. ஆகவே மிகவும் பிரகாசமான நேரடி சூரிய ஒளிக் கதிர்களைப் பார்ப்பதால் அவை நம்மை நிரந்தரமாக குருடர்களாக்கும். எனவே பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை கண்டு களிக்க பாதுகாப்புக் கண் காவலர்களை அணிய அறிவுறுத்தப்படுகிறது

அப்படியென்றால் கிரகணம் அன்று கண்களை பாதிக்கும் கதிர்கள் சூரியனிலிருந்து வருகிறதா?

இல்லை. சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்பது கிரகண தினத்துக்கு மட்டும் பொருந்தும் எச்சரிக்கை இல்லை. எல்லா நாட்களிலும் சூரியனை வெகு நேரம் பார்க்கக்கூடாது. எடுத்துக்காட்டாக பிரகாசமான வெளிப்புற நடைப்பயணத்திலிருந்து திடீரென ஒரு இருண்ட அறைக்குள் நுழையும்போது தற்காலிக குருட்டுத்தன்மையை நாம் அனுபவிக்க முடியும், சாதாரண நாளில் சூரியனை வெகுநேரம் பார்த்தபடி இருக்க நமக்கு எந்த முகாந்திரமும் இல்லை. கிரகணம் அன்று அதன் அற்புத காட்சியை காண ஆவல் மிகும். அவ்வளவே. எனவே தான் குறிப்பாக கிரகணத்தன்று எச்சரிக்கை செய்யபப்டுகிறது. .

சந்திர கிரகணங்கள் ஏற்படும்போது ஏன் எச்சரிக்கை செய்வது இல்லை.?

சந்திர கிரகணங்கள் போது நாம் நிலவில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளியை தான் காண்கிறோம். அதன் பிரகாசம் கூடுதல் அல்ல. எனவே தான் சந்திர கிரகணத்தின் போது எந்த எச்சரிக்கையும் செய்யப்படுவது இல்லை.

கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?

நேரடியாக சூரியனை பார்க்கும்போது தான் அதன் அளவு கடந்த பிரகாசம் நமது கண்களை உறுத்தும். சூரிய ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் சூரிய கண்ணாடிகள் பயன்படுத்தலாம். சூரிய பிம்பத்தை நுண்துளை கேமரா (பின் ஹோல் கேமரா) கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரியனின் நிழலை ஏற்படுத்தி காண்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கிரகணங்கள் போது சூரியனிலிருந்து எதாவது மர்ம கதிர்கள் வெளிவருமா?

கிரகணம் ஏற்படுவது என்பது வெறும் பார்வை சார்ந்த விஷயம் மட்டுமே. சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை. சூரிய ஒளியை மறைக்கும் மரம் எப்படி நிழலை ஏற்படுத்துகிறதோ அதுபோல சூரிய ஒளியை மறைத்து நிலா நிழலை ஏற்படுத்துகிறது. மரம் நிழலை ஏற்படுத்தும் போது சூரிய இயக்கத்தில் எந்தவித தாக்கமும் செலுத்தாது அதுபோல, நிலா சூரியனை மறைக்கும்போது எந்தவித தாக்கமும் செலுத்தாது.

கிரகண காலத்தில் திறந்த வெளியில் செல்வது ஆபத்தானதா?

இல்லை. இது போன்ற மூட நம்பிக்கைகளை அப்புறப் படுத்துவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த கிரகணம் பற்றிய நிகழ்வுகளை பொது இடங்களில் நடத்துகிறோம். கிரகணத்தின் போது சூரியனின் கதிர்கள் எல்லா உணவையும் விஷமாக மாற்றி விடுமா? மாஹராஷ்டிராவை சார்ந்த பாஸ்கராசாரியா ஆய்வு மையத்தின் உதவியோடு மைக்ரோபயாலாஜி ஆய்வாளர்கள் நால்வர் ஸ்ரீகாந்த் என்ற ஆய்வாளர் தலைமையில் 2010 ஜனவரி 15 அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் Journal of Ecobiotechnology 2012, 4(1): 51-53 என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளிவந்துள்ளது. அவர்களது ஆய்வின் அடிப்படையில் சூரிய கிரகணத்தின் போது சமைத்த உணவுகள் கெட்டுபோகின்றன அவற்றை தூக்கி எறிய வேண்டும் என்ற கருத்துக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இதுபோன்ற பல்வேறு மூடநம்பிக்கைகள் குறித்த நாசா பதிவை இங்கே பார்க்கலாம் https://eclipse2017.nasa.gov/eclipse-misconceptions

கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது வெளியே செல்வது ஆபத்தானதா, கதிர்கள் பிறக்காத குழந்தைக்கு பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்துமா?

கிரகணம் என்பது எப்படி ஏற்படுகிறது எனற அறிவியல் அறிவு இல்லாத காலத்தில் அச்சம் காரணமாக ஏற்பட்ட கருத்து இது. கருவில் உள்ள குழந்தைக்கோ வெளியில் செல்லும் யாருக்கேனும் சூரிய சந்திர கிரகணம் எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது.

நன்றி,
முனைவர்.எஸ்.ஆர்.சேதுராமன்.
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

1 Comment

Leave a comment