ஐம்பத்தாறு தேசங்களின் கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 07)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வாண்டு மாமா என்னும் பெயரை ஒரு புத்தகத்தில் பார்த்தாலே போதும், அதை உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். கதைகளுக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்புகளைப் படித்ததுமே அந்தக் கதைகளைப் படித்துவிடவேண்டும் என்னும் ஆர்வம் பிறந்துவிடும். புலி வளர்த்த பிள்ளை, தவளை இளவரசி, மந்திரக்குளம், மாயமோதிரம், கண்ணாடி மனிதன் என்பதுபோல ஒவ்வொரு தலைப்பும் புதுமையாக இருக்கும்.அழகான ஓவியங்களுடன் நான் படித்த புத்தகங்களில் ஒன்று தேச தேசக்கதைகள். நார்வே, டென்மார்க், இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்சு என ஐம்பத்தாறு தேசங்களிலிருந்து ஐம்பத்தாறு நாட்டுப்புறக்கதைகளைக் கண்டுபிடித்து சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்றவாறு எழுதித் தொகுக்கப்பட்டிருந்தது. இக்கதைகளைத் தொகுத்து எழுதியவர் வாண்டுமாமா. எண்ணற்ற சித்திரக்கதைகளையும் சித்திரம் இல்லாத கதைகளையும் எழுதிய அனுபவமுள்ளவர் அவர். ஒவ்வொரு கதையும் தொடங்கும் முன்பாக, அந்தக் கதை உருவான நாட்டைப்பற்றிய சின்னச்சின்ன தகவல்கள் அடங்கிய பக்கம் இருக்கும். அந்த நாட்டைப்பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள இக்குறிப்புகள் துணையாக இருக்கும். எடுத்துக்காட்டாக பிரான்ஸ் நாட்டின் கதை தொடங்குவதற்கு முன்பாகவே பிரான்ஸ் நாடு எங்கே இருக்கிறது, அதன் தலைநகரம் என்ன, அங்கு பேசப்படுகிற மொழி எது, அதன் மக்கள் தொகை என்ன, அந்த நாட்டில் பாய்ந்தோடும் முக்கியமான ஆறு எது, அந்த நாட்டின் உயரமான மலை எது என்பது போன்ற கேள்விகளும் பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கும்.

அத்தொகுப்பில் படித்த ஒரு கதை மங்கலாக நினைவில் உள்ளது. ஒரு நாட்டில் எங்கோ ஒரு பகுதியில் ஒரு பணக்காரர் வசித்து வருகிறார். அந்தப் பணக்காரருக்கு மூன்று பெண்கள். மூன்று பேர் மீதும் அவர் அளவற்ற பாசம் கொண்டிருக்கிறார். பெண்களுக்கு தன் மீது உள்ள பாசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறியவேண்டும் என்று ஒருநாள் அவர் நினைக்கிறார். உடனே அவர் மூன்று பெண்களையும் அருகில் அழைக்கிறார். முதல் பெண்ணிடம் ”நீ எந்த அளவுக்கு என் மீது பாசம் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறார். அந்தப் பெண் ”என் உயிரைவிட மேலாக உங்களை நேசிக்கிறேன்” என்று பதில் சொல்கிறாள். அந்தப் பதிலைக் கேட்டு அவர் மனம் குளிர்ந்துபோகிறது.

அடுத்து இரண்டாவது பெண்ணை அருகில் அழைத்து “நீ எந்த அளவுக்கு என் மீது பாசம் கொண்டிருக்கிறாய்?” என்று அதே கேள்வியை மறுபடியும் கேட்கிறார். அந்தப் பெண் புன்னகையோடு ”இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட மேலாக நான் உங்களை நேசிக்கிறேன்” என்று பதில் சொல்கிறாள். அந்தப் பதிலைக் கேட்டு அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விடுகிறார். இறுதியாக மூன்றாவது பெண்ணை அருகில் அழைத்து “நீ எந்த அளவுக்கு என் மீது பாசம் கொண்டிருக்கிறாய்?” என்று பழைய கேள்வியையே மீண்டும் கேட்கிறார். அவள் எவ்விதமான பாசாங்கும் இல்லாமல் “ஓர் உணவுக்கு உப்பு அவசியப்படும் அளவுக்கு நான் உங்களை நேசிக்கிறேன்” என்று பதில் சொல்கிறாள். அந்தப் பதிலைக் கேட்டு அவருக்கு கோபம் வந்துவிடுகிறது. அவள் தன்னை சிறுமைப்படுத்துவதாக நினைத்து அவளை நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறார்.

காட்டில் பல நாட்கள் நடந்து செல்கிறாள் அவள். அவள் உடைகளெல்லாம் கந்தலாகிவிடுகிறது. பசி தாளமுடியவில்லை. காட்டின் விளிம்பிலிருந்த இன்னொரு நாட்டின் அரண்மனைக்குச் சென்று பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்துவிடுகிறாள். ஒருநாள் அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எல்லாப் பணியாளர்களும் அந்த விருந்தை வேடிக்கை பார்க்கச் செல்கிறார்கள். களைப்பாக இருப்பதாகச் சொல்லிவிட்டு சமையலறையிலேயே தங்கிவிடுகிறாள் அவள். தன் கந்தலுடைக் கோலத்தோடு எப்படிப் போவது என்னும் தயக்கம்தான் உண்மையான காரணம். மன வருத்தத்தோடு அவள் தோட்டத்துப் பக்கம் செல்கிறாள். ஒரு தேவதை அவள் முன் தோன்றி அவளுக்கு வெள்ளியால் ஆன ஓர் ஆடையைக் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்கிறது. விருந்து முடிவதற்கு முன்பாகவே கிளம்பி வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையோடு அவளை விருந்துக்கு அனுப்பிவைக்கிறது தேவதை. புதிய ஆடையில் தோன்றிய அவள் மீது, பார்த்த கணத்திலேயே மையல் கொள்கிறான் இளவரசன். அவளுடன் நடனமாடுகிறான். நடனம் முடிவதற்குச் சற்று நேரம் முன்பாகவே அவள் அங்கிருந்து வெளியேறிவிடுகிறாள். இரண்டாம் நாள் நடனத்துக்கு அவளுக்கு தங்கத்தால் ஆன உடைகளைக் கொடுத்தனுப்புகிறது தேவதை. அன்றும் இளவரசன் அவளுடன் நடனமாடுகிறான். வழக்கம்போல நடனம் முடிவதற்குச் சற்று நேரம் முன்பாகவே அவள் அங்கிருந்து வெளியேறிவிடுகிறாள்.

மூன்றாம் நாள் நடனத்துக்கு அவளுக்கு வைரத்தால் ஆன உடைகளைக் கொடுத்தனுப்புகிறது தேவதை. அன்று இளவரசன் அவளுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசாக அளிக்கிறான். அன்றும் நிகழ்ச்சி முடிவதற்குச் சற்று நேரம் முன்பாகவே அவள் அங்கிருந்து வெளியேறிவிடுகிறாள். அடுத்த நாள் இளவரசன் அந்தப் பெண்ணைக் காணமுடியாத ஏக்கத்தால் காய்ச்சலில் படுத்துவிடுகிறான். அவனுக்காக சமையலறையில் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. கஞ்சியில் அவன் கொடுத்த மோதிரத்தைப் போட்டு அனுப்பிவைக்கிறாள். கஞ்சிக்கு அடியில் மோதிரம் இருப்பதைப் பார்த்து, அந்தக் கஞ்சியைத் தயாரித்தவளை அழைத்துவரும்படி கட்டளையிடுகிறான் இளவரசன். அவளை நேருக்கு நேர் பார்த்து, தன் மனத்துக்கு உகந்தவள் அவளே என நினைத்து திருமணம் செய்துகொள்கிறான்.

சில நாட்களுக்குப் பிறகு திருமண விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. நாட்டில் வாழும் எல்லாப் பணக்காரர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. அந்தப் பெண்ணின் அப்பாவும் அதில் கலந்துகொள்கிறார். விருந்துக்கு சமைக்கப்படும் உணவை உப்பில்லாமல் சமைக்கும்படி கேட்டுக்கொள்கிறாள் மணப்பெண். விருந்து தொடங்கியதும் அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது. அப்போது அந்தப் பணக்காரர் கண்கலங்குகிறார். அமைதிப்படுத்த முனையும் இளவரசனிடம் காரணத்தை விவரிக்கிறார் பணக்காரர். உணவுக்கு உப்பைப்போல நேசிப்பதாகச் சொன்ன மகளின் பாசமே மிக ஆழமான பாசம் என்பதைக் காலம் தனக்கு உணர்த்திவிட்டதாகச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார். தந்தையின் துயரத்தைப் பார்க்க மனமில்லாத மகள் உண்மையைச் சொல்லி அவரைத் தழுவிக்கொள்கிறாள். இழந்த மகளை மீண்டும் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் அவர். கதை சொல்லும் போக்கில், அந்தக் கதை நம் கண்முன்னால் நிகழ்வதுபோல உணரவைத்துவிடுவதில் வல்லவர் வாண்டுமாமா. அவர் கதைகளைப் படிக்கத் தொடங்கினாலே மனம் சிறகுவிரித்து வானிலேறிப் பறக்கத் தொடங்கிவிடும்.

Leave a comment