மறக்க முடியாத சித்திரக்கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – பதிவு 06)

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தினத்தந்தி நாளேட்டில் கன்னித்தீவு வெளிவந்த சமயத்திலேயே சிவப்பு ரோஜா என மற்றொரு சித்திரக்கதையும் வெளிவந்தது. நான்கே நான்கு வரிகளில் கதை. அந்த நான்கு வரிகளுக்கு நான்கு சித்திரங்கள். கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் காலத்தில் அதைப் படித்துவிடுவேன். மாலைக்கு மணி கோர்ப்பதுபோல முதல்நாள் படித்த கதையின் காட்சிகளோடு புதிய பகுதியைக் கோர்த்துத் தொகுத்துக்கொள்வேன். நேரம் என ஒன்று இருப்பதையே அந்தக் கதைகள் மறக்கவைத்துவிடும். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். மற்ற கதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சம் சித்திரக்கதைகளுக்கு உண்டு. அந்தக் கதைகளைப் பார்த்ததுமே நமக்குள் ஓர் ஈர்ப்பு ஊற்றெடுத்துச் சுரக்கும் என்பதுதான் அது. பார்த்த கணத்திலேயே அதைப் படிப்பதற்கு ஆசை பிறந்துவிடும். இளம்பருவத்தில் நல்ல கதை, சுமாரான கதை என்றெல்லாம் எந்தப் பேதமும் இல்லை. சித்திரங்களின் வசீகரத்தில் திளைக்கத் தொடங்கியதும் கண்கள் கதையைப் படிக்கத் தொடங்கிவிடும். எங்கள் வளவனூர் நூலகத்தில் ஏராளமான சித்திரக்கதைப் புத்தகங்கள் இருந்தன. அடுக்கிலிருந்து எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும்.

எந்தக் கதையைப் படித்தாலும் அந்தக் கதையின் பாத்திரங்களுடன் ஒன்றிவிடுவேன். மனத்துக்குப் பிடித்த ஒரு பாத்திரமாக என்னையே கற்பனை செய்துகொள்வேன். அந்தக் கற்பனை அந்தக் கதையுடன் இன்னும் மேலும் நெருக்கம் கொள்ளவைக்கும். யானை மீது ஏறி காட்டுக்குள் செல்லும் சிறுவனைப்பற்றிய கதையைப் படிக்கும்போது நானே யானை மீது ஏறிச் செல்வதுபோலத் தோன்றும். எதிர்பாராத ஒரு கணத்தில் தீயவர்களின் பிடியில் சிக்கி எண்ணற்ற துன்பங்களில் அமிழ்ந்து, இறுதியாக தன் சாகச முயற்சிகளால் அனைவரையும் வீழ்த்தி தப்பித்துச் செல்லும் வீரனைச் சித்தரிக்கும் சித்திரங்களைப் பார்க்கப்பார்க்க அந்த வீரனாகவே என்னை நினைத்துக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த மகிழ்ச்சியின் உந்துசக்தியால்  அந்தச் சிறுவனையும் வீரனையும் வெவ்வேறு நிலைகளில் படமாக வரைந்துவிடுவேன்.

அப்போது படித்த புத்தகங்களில் நான் கண்ட சில சித்திரங்கள் இன்னும் என் நினைவில் மங்கலாகப் படிந்திருக்கின்றன. ஒரு பெரிய பாறை. அந்தப் பாறையில் சிங்கம் ஏறி நின்றிருக்கிறது. அதைச் சுற்றி தரையில் யானை, புலி, சிறுத்தை, மான், நரி, கரடி, குரங்கு என பல விலங்குகள் நிறைந்திருக்கின்றன. சில நின்றிருக்கின்றன. சில ஓய்வாக அமர்ந்திருக்கின்றன. சில மரங்களை ஒட்டிச் சாய்ந்திருக்கின்றன. எல்லா விலங்குகளின் பார்வையும் சிங்கத்தின் மீது பதிந்திருக்கிறது. அதன் கதைப்பின்னணி நினைவில் இல்லை. ஆனால் இந்தச் சித்திரம் மட்டுமே நினைவில் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்துவிட்ட இந்தச் சித்திரத்தை என் நோட்டில் வரைந்துகொண்டது மட்டுமன்றி, என் நண்பர்கள் பலருக்கும் வரைந்து வரைந்து வண்ணம் தீட்டிக் கொடுத்ததால் சித்திரம் மட்டும் நினைவில் பதிந்திருக்கிறது.

இப்படி மனத்தில் பதிந்திருக்கும் இன்னொரு சித்திரம் ஆறேழு குரங்குகள் ஆட்டம் போடும் சித்திரம். ஒன்று கிளையில் தொங்கும். இன்னொன்று கிளைமீது நடக்கும்.  மற்றொன்று பாறை மீது அமர்ந்திருக்கும். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் அலைந்தபடி இருக்கும். எண்ணற்ற முறை இந்தக் குரங்குகளின் சித்திரத்தை வரைந்திருப்பேன். குரங்குகளைப் படமாக வரைவது என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடும். தொங்கும் வால், சுழலும் வால், வளைக்கும் வால் என பல விதமாக குரங்கின் வாலை வரைந்து மகிழ்ச்சியடைவேன்.

புராணக்கதைகளும் விலங்குக்கதைகளும் மட்டுமன்றி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட எண்ணற்ற சாகசக்கதைகள் கூட சித்திரக்கதை நூல்களாக வெளிவந்துள்ளன. மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருந்தாலும் கூட அக்கதைகளில் ஒருவித புராணச்சாயல் படிந்திருக்கும். ஒரு கதை மிக எளிதாக இன்னொரு கதையை நினைவுக்குக் கொண்டுவரும். ஆனால் அந்தமாதிரியான எந்தச் செய்தியும் கதை படிப்பதற்குத் தடையாக இருக்காது.

பரந்ததொரு நாட்டை யாரோ ஓர் அரசன் ஆட்சி செய்துவந்தான். அந்த அரசனும் அவன் மனைவியும் ஒருநாள் திடீரென இறந்துவிடுகிறார்கள். முறைப்படி அந்த ராஜ்ஜியம் அவர்களுடைய பிள்ளைக்குச் சென்று சேரவேண்டும். அவனோ வயதில் மிகச்சிறியவன். அதனால் அவனுடைய சித்தப்பாவும் சித்தியும் சேர்ந்து அவனைக் காட்டுக்குள் விரட்டியடித்துவிட்டு நாட்டுக்கு அரசனும் அரசியுமாக ஆட்சி செய்யத் தொடங்குகிறார்கள். காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்ட சிறுவனை விலங்குகள் அனைத்தும் சேர்ந்து அவனைச் சீராட்டி பாராட்டிவளர்க்கிறது. விலங்குகளே அவனுக்கு உற்ற துணை. காட்டுக்குள் அவனுக்கு புதையல்  கிடைக்கிறது. அவன் பெரிய செல்வந்தனாகிறான்.

எல்லா விலங்குகளோடும் அவன் புறப்பட்டு வந்து சித்தப்பாவை எதிர்த்து வீழ்த்தி, நாட்டைக் கைப்பற்றி அரசனாகிறான். இப்படி ஒரு கதையைப் படித்தது நினைவில் உள்ளது. மறக்கமுடியாத மற்றொரு சித்திரத்தைப்பற்றியும் குறிப்பிடவேண்டும். ஆற்றில் ஒரு பரிசில் மிதந்துபோகிறது. அதில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறான். ஆற்றுக்கு நடுவில் உயிருக்குப் போராடியபடி தவிக்கும் மற்றொரு சிறுவனை பரிசிலில் அமர்ந்தபடி கையை நீட்டி அவன் காப்பாற்றுகிறான். காப்பாற்றும் அந்தக் காட்சிதான் அச்சித்திரம். அந்த ஆற்றின் கரையோரம் மரங்கள் செறிவாக நின்றிருக்கின்றன. ஒரு மரக்கிளையில் ஒரு காகம் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறது. அந்தக் காட்சியை நான் பலருக்கும் வரைந்து  கொடுத்திருக்கிறேன்.

Leave a comment