என் வாழ்வில் புத்தகங்கள் (பகுதி : 05) – பாவண்ணன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒருநாள் நூலகத்துக்குச் சென்றிருந்தபோது பாண்டியன் அண்ணன் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ”இந்தா, இந்தப் புத்தகத்த படிச்சிப் பாரு. முழுக்கமுழுக்க படம்தான். கன்னித்தீவு மாதிரி படக்கதை. ராமாயணக்கதை. உனக்கு ரொம்ப புடிக்கும். படிச்சிப் பாரு” என்று சொன்னார். நான் ஆசையோடு அதை வாங்கி, பக்கங்களைப் புரட்டினேன். அந்தப் புத்தகத்தின் பெயரே சித்திர ராமாயணம். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை முழுக்கமுழுக்க ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியத்துக்குக் கீழேயும் இரண்டு மூன்று வரிகளில் கதையின் போக்கைப் பற்றிச் சில வரிகள். அவ்வளவுதான்.

இப்படியும் ஒரு புத்தகமா என நம்பமுடியாமல் புரட்டிப்புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். பார்க்கப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ராமாயணத்தின் கதையை ஓவியங்கள் வழியாக உணர்த்தும் முயற்சியென அந்தப் புத்தகத்தைப்பற்றி ஓர் எண்ணம் எழுந்தது. ராமாயணக்கதையையும் மகாபாரதக்கதையையும் எங்கள் அம்மா வழியாக நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். முழுக்கதையாக இல்லாவிட்டாலும் சின்னச்சின்ன கதைகளாக அவ்வப்போது எங்கள் ஆசிரியர்களும் வகுப்பில் சொன்னதுண்டு. அப்போது நான் அடிக்கடி கேட்ட பெயர் கும்பகர்ணன். நேரம் பொழுது வேறுபாடின்றி நெடுங்காலம் உறக்கத்திலேயே மூழ்கியிருப்பவன் அவன். அவன் எப்போதாவது ஒருமுறை எழுந்திருப்பான். எழுந்திருந்ததும் அவனுக்குத் தேவையான உணவுகளை அளிக்கவேண்டும். அவனுக்கு அளிக்க வண்டிவண்டியாக உணவு வேண்டும். அவனைப்பற்றி சொல்லும்போதே எங்கள் ஐயாவுக்கு சிரிப்பை அடக்கமுடியாது. கேட்கக்கேட்க நாங்களும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிப்போம். வகுப்பில் உறங்குபவர்களுக்கு கும்பகர்ணன் என்று அவர் பட்டப்பெயர் சூட்டுவார்.

கும்பகர்ணனை அடுத்து அதிக அளவில் கேட்டு மனத்தில் பதிந்த பெயர் அனுமன். அவர் குரங்கு இனத்தைச் சேர்ந்தவர். ராமனையே தன் தெய்வமாக நினைப்பவர். ராமனின் மனைவி சீதையைத் தேடி, அவர் சிறைபட்டிருக்கும் இலங்கைக்கு கடலைக் கடந்து சென்று சந்தித்து பேசிவிட்டு வந்தவர். யுத்தகளத்தில் இலட்சுமணன் மயங்கி விழுந்ததும் அவரைப் பிழைக்கவைப்பதற்காக மூலிகைச்செடி வளர்ந்திருக்கும் மலையையே பெயர்த்தெடுத்துக்கொண்டு வந்தவர். சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு விரிந்த வானத்தில் அனுமன் பறந்துபோகும் சித்திரத்தை நான் பலமுறை பலருக்காக வரைந்து கொடுத்திருக்கிறேன். கடைத்தெருவில் ஏபிடி பார்சல் சர்வீஸ் கடைக்கு

மேல் பெரிய அளவில் அந்தப் படத்தைத்தான் வரைந்துவைத்திருப்பார்கள். அதைப் பார்த்து வரைந்து வரைந்து எனக்கு கைவந்த கலையாகிவிட்டது. அந்தப் புத்தகத்தை கையில் வாங்கியதும் நான் கும்பகர்ணனையும் அனுமனையும்தான் நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு பக்கமாக புரட்டிப்புரட்டி அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பரவசத்துடன் தேடத் தொடங்கினேன். தசரதன், கைகேயி, கோசலை, விசுவாமித்திரர், சீதை, சுக்ரீவன், வாலி, ஜடாயு, வீடணன், இராவணன் என ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்திலும் கடந்துபோக அப்படியும் இப்படியுமாக புரட்டிப்புரட்டி அவர்கள் இருந்த இடங்களைக் கண்டுபிடித்தேன். உயரமாக அனுமன் நின்றிருந்த தோற்றத்தை ஒரு விஸ்வரூபம் என்றே சொல்லவேண்டும். அனுமன் ஓவியத்தைப் பார்க்கும்போதே அந்த எண்ணம் தானாகவே எழுந்தது. அவருடைய ஆற்றல் அவருடைய உடலமைப்பிலேயே தெரிந்தது. பச்சை வண்ணம் கொண்ட உடலைக் கொண்டவராகவே அனுமனின் சித்திரத்தைப் பார்த்த எனக்கு, இளஞ்சிவப்பும் வெண்மையும் குழைந்த உடல்நிறம் கொண்டவராக அனுமனைப் பார்த்தபோது முதலில் விசித்திரமாகத் தோன்றியது. பார்க்கப்பார்க்க அந்த மாபெரும் தோற்றம் கண்ணில் வந்து முட்டுவதுபோல இருந்தது. அந்த நிறமே அனுமனுக்குப் பொருத்தமானது என நினைத்துக்கொண்டேன். கும்பகர்ணனுடைய படமும் இதுவரை நான் பார்க்காத சாயலில் இருந்தது. நான் அதுவரை பார்த்ததெல்லாமே வயிறு பெருத்த, பருமனான, அலங்கோலமான தலைமுடியை உடைய ஒரு பாத்திரம். அதற்கெல்லாம் மாறாக, வலிமையும் நல்ல உடல்வாகும் கொண்ட மாவீரன் ஒருவனின்
தோற்றத்தைக் கொண்டிருந்தது அந்தப் படம்.

என் கற்பனைகள் கலைந்துபோனதால், நான் அப்பத்திரங்கள் மீது மேலும் ஆர்வம் கொண்டவனாக மாறிவிட்டேன். முதல் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் அழகாகவும் ஒன்றை ஒன்று விஞ்சும் வண்ணமும் இருந்தது. ஒவ்வொரு படத்திலும் பாத்திரங்களின் நடமாட்டத்தைச் சித்தரிப்பதோடு மட்டுமன்றி, காட்சிக்குப் பொருத்தமாக நகரம், அரண்மனை, ஆறு, காடு, புதர்கள், சோலைகள், மலைப்பகுதி என பல்வேறு பின்னணிகளும் நுட்பமாக சித்திரிக்கப்பட்டிருந்தன. பார்க்கப்பார்க்க என் கை துறுதுறுத்தபடி இருந்தது. வேகவேகமாக படித்துமுடித்தேன். அந்தப் புத்தகத்தில் வினு வரைந்திருந்த ஒவ்வொரு சித்திரமும் என் நெஞ்சில் பதிந்துவிட்டது. என் நோட்டுப்புத்தகத்தை எடுத்து ராமனின் சித்திரத்தை வரையத் தொடங்கினேன். அருகில் வில்லும் அம்புக்கூடும் இருக்க, நீண்ட தலைமுடியுடன் புலித்தோல் ஆடை அணிந்து அமர்ந்திருக்கும் ராமன் மெல்ல மெல்ல என் ஓவியச்சுவடியில் உருவாகத் தொடங்கினார்.

அந்தப் பக்கமாக வந்த பாண்டியன் அண்ணன் அதை வாங்கிப் பார்த்துவிட்டு புன்னகையோடு பாராட்டினார். “இந்தப் புத்தகம் உனக்குத் தோதான புத்தகம்னு இத பார்த்ததுமே புரிஞ்சிபோச்சி. அதனாலதான் எடுத்து வச்சேன். இரு இரு. இதுக்காகவே உனக்கு ஒரு நோட்டு தச்சிக் குடுக்கறேன்” என்று தட்டிக் கொடுத்தார். அடுத்த முறை சென்றபோது சொன்னதுபோலவே ஒரு நோட்டைக் கொடுத்து “இத ராமாயணம் வரையறதுக்குன்னே வச்சிக்கோ” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

Leave a comment