குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா – கன்னிக்கோவில் இராஜா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பள்ளிச் சிறுவர் சிறுமியர்

     பாடிப் பாடி மகிழ்வெய்த

தெள்ளத் தெளிந்த செந்தமிழில்

     தேனார் கவிதைகள் செய்துதரும்

வள்ளியப்பா….

என குழந்தை இலக்கிய முன்னோடியான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாராட்டுத் தெரிவித்திருந்தார். அந்தப் பாராட்டிற்குரியவர் இன்று குழந்தை இலக்கியம் என்றாலே நினைவுக்கு வருகிற குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா தான்.

தனது 13வதுவயதில் கவிதை எழுத தொடங்கிய வள்ளியப்பா, குழந்தைகளுக்காக மட்டுமே என்ற எழுத வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால் தனக்கானதொரு பாதையை வகுத்தவர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதியை குழந்தை நாளாக கொண்டாடிவந்த குழந்தைக் கவிஞரின் மறைவுக்கு பின், அவருடைய பிறந்தநாளான நவம்பர் 7ம் நாளை ‘குழந்தை இலக்கிய தின’மாக அவரது குடும்பத்தார் கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகளுக்கென தன் பாடல்களால் நிறைவு பெற்ற அழ. வள்ளியப்பா அவர்களுக்கு முன்னரே, பல குழந்தைக் கவிஞர்கள் தோன்றி இருக்கிறார்கள். நமக்கு கிடைத்த வரலாற்றின் படி 12ம் நூற்றாண்டில் தோன்றிய ஔவையாரின் ‘ஆத்திசூடி’தான் குழந்தைப் பாடல்களுக்கு முன்னோடி என்கிறது ஓர் ஆய்வு. ‘அறம் செய விரும்பு’ என்பதை படிக்காத குழந்தைகள் இருக்க முடியாது.

அவருக்குப் பின்வந்த வள்ளுவர் பல கருப்பொருள்களில் திருக்குறள்களை அமைத்திருந்தாலும், குழந்தை இலக்கியமாக அதாவது பாடல்களாக இல்லாமல் குழந்தைகள் உளவியலை படம்பிடிப்பதாக

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். (குறள்: 66)

என்றும்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்

சொல்கேட்டல் இன்பம் செவிக்கு (குறள்: 65)

என்றும் இயற்றியிருந்தார்.

1876ல் தோன்றிய கா. நமச்சிவாயம் (20.02.1876 – 13.03.1936) அவர்கள் குழந்தைகளுக்காக பல பாடல்களை புனைந்திருக்கிறார். அதில் ‘எறும்பு’ என்ற தலைப்பில் அவர் இயற்றிய,

சின்னச் சின்ன எறும்பே

    சிங்காரச் சிற்றெறும்பே

உன்னைப் போல நானுமே

    உழைத்திடவே வேணுமே!

என்பதும், இவருக்குப் பின் வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (27.07.1876 – 26.05.1954) அவர்களின்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு

    அங்கு துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு

    உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

என்ற பாடல் அன்றிலிருந்து இன்றுவரை குழந்தைகள் மனத்திலும், குழந்தையாய் இருந்து பெரியவர்களான குழந்தைகள் மனத்திலும் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது. குழந்தை இலக்கியம் என்றாலே அதில் கவிமணி அவர்களின் பெயர் இடம்பிடித்திருப்பது பெருமைக்குரியதே.

இவர்களுக்கு பின்வந்த மகாகவி பாரதியாரும், பாவேந்தர் என்று அழைக்கப்படுகிற பாரதிதாசனும் தங்களின் படைப்புகளின் வழியே குழந்தைகளுக்காகவும் படைப்புகளைப் படைத்தனர். ஆயினும் பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’, பாரதிதாசனின் ‘இளையோர் ஆத்திசூடி’ ஆகியவை குழந்தை இலக்கித்திற்கு நல்வரவாக அமைந்தது.

இவர்களைப் போன்றே மயிலை சிவ.முத்து, வாணிதாசன் போன்றோரும் குழந்தை இலக்கியத்திற்கு தனது பங்களிப்பைத் தந்தனர்.

இவர்களுக்கு நடுவேதான் பெரியசாமித்தூரன் தோன்றினார். இவர் குழந்தை இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றினார். தன்னுடைய பெரும் முயற்சியினால் ‘குழந்தைக் கலைக்களஞ்சியம்‘ என்று பத்து பாகங்களாக வெளியிட்டார்.  அந்த அரும்பெரும் பணி இன்றுவரை இவ்விலக்கியத்திற்கு அடிநாதமாக விளங்குகிறது.

இவர்கள் ஆற்றிய குழந்தை இலக்கியப் பாதைக்கு 1922க்கு பிறகு வந்து சேர்ந்தவர்தான் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.

ஏடு தூக்கிக் பள்ளியில்

    இன்று பயிலும் சிறுவரே

நாடு காக்கும் தலைவராய்

    நாளை விளங்கப் போகிறார்

எனத் தன்னம்பிக்கை வரிகளுடன் குழந்தை இலக்கியத்தில் நுழைந்து தனக்கென ஒரு பரம்பரையை உருவாக்கினார்.

தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் நலனுக்காக பாடல்களையும், கதை, கட்டுரை வாயிலாகவும் பல அரிய நூல்களை எழுதினார்.

தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், குழந்தை எழுத்தாளர்கள் பலர் உருவாகவும் 1950ல் ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ நிறுவினார். அதுமட்டுமின்றி தென்மொழிப் புத்தக டிரஸ்டின் குழந்தைப் புத்தக அலுவலராகவும் பணி புரிந்தார்.

பல சொற்பொழிவுகளில் குழந்தை இலக்கியம் சார்ந்து உரையாற்றியும், பல ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். எட்டுமுறை குழந்தை இலக்கிய மாநாடுகளை தமது நண்பர்களோடு இணைந்து நடத்தினார்.

தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய ‘யார் – எவர்?’ என்ற விவரத் தொகுப்பு நூல்களையும் வெளியிட்டார்.

பாரதியார் பாடல் பரம்பரை, பாரதிதாசன் பாடல் பரம்பரை என கவிஞர்கள் கொண்டாடி வரும் இவ்வேளையில், குழந்தை இலக்கியத்திற்காக தன் பங்களிப்பை ஆற்றிய ‘குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா’வைக் கருத்தில் கொண்டு, குழந்தை இலக்கியம் படைப்போர் ‘குழந்தைக்கவிஞர் பாடல் பரம்பரை’யை பின்பற்றினால் தற்போதைய சிறுவர் இலக்கியம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.

இவரை சிறப்பிக்கும் வகையில் கவிஞரின் 85ம் பிறந்த நாளில் (07.11.2006) இந்திய அஞ்சல்துறை குழந்தைக் கவிஞர் நினைவு சிறப்பு அஞ்சல்உறையை வெளியிட்டது. அவரது மறைவுக்குப் பின் பல அமைப்புகள் அவரின் பிறந்தநாளை ‘குழந்தை இலக்கிய தின’மாக்க கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைக் கவிஞரின் வரலாற்றையும், குழந்தை இலக்கிய வரலாற்றையும் முதன்முதலில் வெளியிட்ட மணிவாசகர் பதிப்பக அதிகம் தெய்வத்திரு ச.மெ.மெய்யப்ப செட்டியார் அவர்கள் “குழந்தைக் கவிஞர் பிறந்த ஊரில், அவர் படித்த பள்ளியில் சிலைநிறுவ வேண்டும்“ என்கிற கோரிக்கை வைத்திருந்தார். அதனை குழந்தை இலக்கிய பணிச்செல்வர் திரு.பி. வெங்கட்ராமன், தனது பெரு முயற்சியால் வெற்றிகரமாக நிறைவேற்றினார். அவருக்கு நண்பர்கள் பலரும் உதவி புரிந்தனர்.

குழந்தைக் கவிஞரை குரு என்று போற்றி வரும் கவிஞர் செல்லகணபதி, டாக்டர் பூவண்ணன், அவரது மகள் தேவி நாச்சியப்பன் ஆகியோர் இணைந்து ‘வள்ளியப்பா இலக்கிய வட்டம்‘ என்ற அமைப்பைத் துவக்கி ஆண்டுதோடும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் ‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளிய்பபா கலை இலக்கிய பெருவிழா’வாக கொண்டாடி வருகின்றனர்.

தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன் அவர்கள் ‘ஞாயிறு தமிழ்மணி’யில் “குழந்தை இலக்கிய ஆர்வலர்கள் கவிஞரின் பிறந்த நாளை ‘குழந்தை இலக்கிய தின’மாகக் கொண்டாடுவது மிகச் சிறப்பானதாக இருக்கும்” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை மெய்ப்பிக்கும் விதமாக சென்னையில் ஆண்டுதோறும் ‘குழந்தைக் கவிஞர் பேரவை’ சார்பாக அதன் நிறுவனத் தலைவர் குழந்தை இலக்கிய பணிச்செல்வர் திரு.பி. வெங்கட்ராமன் நவம்பர் 7ம் தேதியை வெகு சிறப்பாக ‘குழந்தை இலக்கிய தின’மாகக் கொண்டாடி வருகிறார். இதற்கு ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றமும் அதன் செயலாளர் திரு. பக்தவச்சலமும் பேருதவி புரிந்து வருகின்றனர். 2013ல் திரு. பி.வெங்கட்ராமன் மற்றும் நீரை அத்திப்பூ ஆகியோர் இணைந்து ‘குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை’ நூலைத் தொகுத்தனர். அதனை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டு சிறப்பு செய்தது.

இப்படி குழந்தை நலனுக்காக வாழ்ந்து மறைந்த குழந்தைக் கவிஞரின் பாடல் பரம்பரை தொடரும் பட்சத்தில் மீண்டும் குழந்தை இலக்கியம் தழைத்தோங்கும். அந்த மறுமலர்ச்சி வெகு விரைவில் என நம்புகிறோம்.

இவரின் இச்சிறப்பை பாரெங்கும் பரவ வழிச் செய்யும் ‘பஞ்சுமிட்டாய்‘ அமைப்பினருக்கு ‘குழந்தைக் கவிஞர் பேரவை’ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கன்னிக்கோவில் இராஜா,
செயலர்,
குழந்தைக் கவிஞர் பேரவை,
சென்னை
குறிப்பு : பஞ்சு மிட்டாய் வெளியீடாக அழ.வள்ளியப்பாவின் “ஏழும் ஏழும் பதினாலாம்” பாடல் தொகுப்பு வந்துள்ளது. விலை ரூ.40/- , தொடர்புக்கு: பிரபு – 9731736363

Leave a comment