என் நோட்டுக்கு வந்த விக்கிரமாதித்தன் – (என் வாழ்வில் புத்தகங்கள் – பகுதி : 04) – பாவண்ணன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மீண்டும் மீண்டும் அம்புலிமாமா இதழைப் படிக்க நேர்ந்ததில் எனக்கு அதன்மீது இயல்பாகவே ஓர் ஆர்வம் உருவாகிவிட்டது. பக்கம்தோறும் இருந்த வண்ணவண்ணப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பெரிய மீசை வைத்தவர்கள், தலைப்பாகை வைத்தவர்கள், குடம் சுமந்து செல்லும் பெண்கள், தலையில் மகுடம் வைத்திருப்பவர்கள், தோளில் வில்லும் அம்பும் சுமந்தவர்கள், சிங்கங்கள், மயில்கள், நரிகள் என  பக்கங்கள்தோறும் காணப்பட்ட விதவிதமான படங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டன.குறிப்பாக, இடுப்பில் செருகப்பட்டிருக்கும் நீண்ட வாளுடன் தோளில் வேதாளத்தைச் சுமந்தபடி திரும்பிப் பார்க்கும் விக்கிரமாதித்தனின் படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பார்வையை விலக்காமல் அதையே பல நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு உடனே அந்தப் படத்தை வரையவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அடுத்த முறை நூலகம் சென்றபோது ஒரு நோட்டுப்புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு சென்றேன். வேதாளத்தைச் சுமந்து செல்லும் விக்கிரமாதித்தனின் உருவத்தைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டேன். சில நொடிகளிலேயே விக்கிரமாதித்தன் அம்புலிமாமா இதழிலிருந்து என் நோட்டுக்கு வந்துவிட்டதைப்போல இருந்தது.

அந்தப் பக்கமாக வந்த பாண்டியன் அண்ணன் நான் குனிந்து வரைவதைப் பார்த்துவிட்டு நெருங்கி வந்து “என்னடா செய்யற?” என்று கேட்டார். அவர் பார்வை என் கையில் இருந்த நோட்டுப்புத்தகத்தில் படிந்தது. ”இப்படி கொடு. ரொம்ப நல்லா இருக்குதே” என்றபடி கைநீட்டி நோட்டை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். அந்த நோட்டில் ஏற்கனவே வரைந்திருந்த சில படங்களும் இருந்தன. அவற்றையும் ஆவலுடன் திருப்பிப் பார்த்தார் அண்ணன். ”ரொம்ப நல்லா இருக்குதுடா. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்றது நூத்துல ஒரு வார்த்தை. விடாம பயிற்சி செய்” என்று என் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தார். போகும்போது இன்னும் இரண்டு அம்புலிமாமா இதழ்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு “படம் வரையறதுக்கு நல்ல நோட்ட வீணாக்காதடா. என்கிட்ட ஒரு பக்க தாளு நெறய இருக்குது. உனக்கு ஒரு நோட்டு தச்சி தரேன். அதுல வரைஞ்சி பழகு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தினான் என்று தொடங்கும் கதையின் வரிகளைப் படித்துப் படித்து அப்படியே மனத்தில் பதிந்துவிட்டன. கதையின் தொடக்கத்தில் வேதாளம் விக்கிரமனிடம் ஒரு கதையைச் சொல்லும். அந்தக் கதை பல திருப்பங்களைக் கொண்டதாக இருக்கும். இறுதிப்பகுதியில் அந்தக் கதையை ஒட்டி விக்கிரமனிடம் வேதாளம் ஒரு கேள்வி கேட்கும். அவன் ஆழ்ந்து யோசித்து பொருத்தமான ஒரு பதிலைச் சொல்வான். அது சரியான பதிலாக இருக்கும். உடனே வேதாளம் தப்பித்துச் சென்று முருங்கைமரத்தில் ஏறிவிடும். வேதாளத்தின் கேள்வியைப் படித்ததுமே, இக்கேள்விக்கு விக்கிரமன் எப்படிப் பதில் சொல்வான் என்று மனம் பத்தடி தொலைவு முன்னால் பாயத் தொடங்கிவிடும். விக்கிரமனுக்கு முன்னால் அந்தப் பதில் என்ன என்பதைக் கண்டுபிடிக்கும் ஆவல் ஒருவித பரபரப்பான மனநிலையை உருவாக்கும். என்ன பதில், என்ன பதில் என ஆழ்மனம் ஒவ்வொரு கணமும் அலசிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு பதிலும் மனத்துக்குள் திரண்டெழுந்து வந்து நிற்பதும் பிறகு அதுவல்ல என்று கலைத்துவிடுவதுமாகவே நேரம் போகும். உடனடியாக பக்கத்தைப் புரட்டி கடைசி வரிகளைப் படித்து அந்தப் பதிலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றொரு வேகம் எழும். ஆனால் குழப்பம்தான் அதிகமாகுமே தவிர, எதையும் கண்டுபிடிக்கமுடியாது.

வாசிப்பின் போக்கில் ஒருவழியாக இறுதிக்கட்டத்தைத் தொட்டுவிடுவேன். கதையின் கடைசி பத்தியைப் படிக்கும்போது விக்கிரமன் சொன்ன பதில் தெரிந்துவிடும். அதைப் புரிந்துகொண்டதுமே அடடா, இப்படி நாம் யோசிக்கவே இல்லையே என நினைத்து வெட்கப்படுவேன். ஒருமுறை கூட எனக்கு சரியான பதிலுக்கான பிடி கிடைத்ததே இல்லை. எல்லாச் சமயங்களிலும் அந்தப் பதில் என் கற்பனைக்கு எட்டாததாகவே இருந்தது. சரியான பதிலைக் கண்டுபிடிப்பது என்பது எப்போதுமே ஒரு பெரிய சவால். அப்போது எனக்குள் நானும் ஒரு விக்கிரமன் என்னும் எண்ணம் தோன்றும். வேதாளம் கதையைத் தொடர்ந்து இதழில் சிறுவர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு வெளியாகியிருக்கும் கதைகளை நான் மிகவும்
விருபிப் படிப்பேன்.

கதைகளைப்போலவே ஓவியங்களும் அழகாக இருக்கும். எந்த ஓவியமும் பாத்திரங்களை மட்டுமே முக்கியத்துவப் படுத்துபவையாக இருப்பதில்லை. ஒரு பாத்திரத்துக்குப் பின்னால் வீடு, தோட்டம், காடு, சாலை, தோப்பு, குன்றுகள், மரங்கள் என. அனைத்தும்  இணைந்ததாகவே இருக்கும். ஒரு பெண்ணோ அல்லது பாட்டியோ தெருவில் நடந்துசெல்லும் காட்சியை முன்வைக்கும் படத்தில் அப்பெண் நடந்துபோகும் பாதை, பாதையோரங்களில் நின்றிருக்கும் மரங்கள், பாதையின் விளிம்பில் தளும்பி நிற்கும் நீர்நிலை, பாதையின் முடிவில் நின்றிருக்கும் குன்றுகள், புதர்கள், சூரியன், பறவை என எண்ணற்ற காட்சிகளும் இணைந்திருக்கும். அந்த இயற்கைக்காட்சிகள் எனக்கு மிகமிகப் பிடிக்கும். அவற்றையும் ஒன்றுவிடாமல் வரைந்துவிடுவேன்.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் திருப்பிக் கொடுப்பதற்காக எழுந்து சென்றேன். பாண்டியன் அண்ணன் அதை வாங்கிவைத்துக்கொண்டு, தன் மேசையின் இழுப்பறையிலிருந்து ஒரு நோட்டுப்புத்தகத்தை எடுத்து “இந்தாடா வச்சிக்க” என்று கொடுத்தார். முழுக்கமுழுக்க ஒரு பக்கத் தாட்களாலான நோட்டு. வெண்மையான அந்தப் பக்கத்தைப் பார்த்ததுமே அதில் படம் வரையவேண்டும் என ஆசை பீறிட்டெழுந்தது.

Leave a comment