வரலாறு என்பதின் வழியே நாம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனால் தான் என்னவோ, வரலாற்றை மாற்றி எழுதவோ, மறைக்கவோ சதிகள் பல நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியல் என்பது வரலாற்றின் தொடர்ச்சியே. கல்வியும் இலக்கியமும் கலையும் குழந்தைகள் உலகின் மிக முக்கியமானவை. இந்த முக்கியமான துறைகளில் நிறைய ஆக்கப் பூர்வமான முயற்சிகள் நடந்திருக்கிறது. அதுவும் சுதந்திரத்திற்கு பின்பான அந்த துறைகளின் வரலாறு மிக முக்கியமானது. அதன் வழியே தான் கல்வி சார்ந்த இன்றைய அரசியல் முடிவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கல்வியைப் போலவே தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் வரலாற்றையும் நாம் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் மிக முக்கியமான நபர் அழ.வள்ளியப்பா அவர்கள். அவரது காலத்தில் தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்காக மாநாடு தொடர்ந்து நடந்திருக்கிறது, அதில் பல விசயங்கள் விவாதிக்கப் பட்டிருக்கிறது. சிறுவர்களுக்காக பலர் எழுதி இருக்கின்றனர், பல இதழ்கள் வந்திருக்கிறது.
இந்த வரலாற்றையெல்லாம் திரும்பி பார்த்து நமது இன்றைய நிலையை அறிந்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக வரலாற்றிலிருந்து சில படைப்புகளை நமது பஞ்சு மிட்டாய் இணையத்தில் பகிர உள்ளோம். நெ.து.சு அவர்களின் “நினைவு அலைகள்” (சுயசரிதை) வழியே கல்வி வரலாற்றையும், அழ.வள்ளியப்பா அவர்களின் “வளர்ந்துவரும் குழந்தை இலக்கியம்” வழியே தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் வரலாற்றையும் அறியும் சிறிய முயற்சி தான் இந்தக் கட்டுரைகள். இந்த இரண்டு புத்தகங்களும் (“நினைவு அலைகள்” & “வளர்ந்துவரும் குழந்தை இலக்கியம்”) 1980களில் எழுதப்பட்டவை. 40 வருடங்கள் கடந்தும் இதை திரும்பி பார்க்க வேண்டிய அவசியம் இன்று நிறைய உருவாகியுள்ளது. இந்தக் கட்டுரைகள் நம்மை ஒரு நல் இடத்திற்கு நகர்த்திச் செல்லும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை துவங்குகிறோம்.
நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வார்த்தைகளில்
‘கல்வி வள்ளல்’ காமராஜர் அவர்களு டன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் தந்ததில் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு 1951-ம் ஆண்டுப் பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தபட்டவைகளே இலவசக் கல்வி, மதியஉணவு, சீருடைத் திட்டங் களாகும். அவற்றைச் செயல்படுத்த வேண்டிய நிதி ஒதுக்கீடு, நிர்வாகச் சிக்கல் போன்றவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? எவ்வளவு சிக்கலான சவாலாக இருந்தது என்பதைச் சுந்தர வடிவேலு துல்லியமாக இந்தப்புத்தகத் தில் விவரிக்கிறார்.
கல்வித்துறையோடுச் சேர்த்து பொது நூலக இயக்குநராகவும் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு பதவி வகித்தார். அந்தக் காலத்தில் மாவட்ட அளவில் மட்டுமே நூலகங்கள் செயல்பட்டுவந்தன. கிராமப்புறத்தில் கல்வி வளர்ச்சி பெற நூலகம் அமைக்கப் பட வேண்டும் என்று முடிவு செய்த இவர், தமிழகம் முழு வதும் 400-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை ஏற்படுத் தினார்.
பொதுமக்கள் செலுத் தும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலக வரியாகப் பெறப்படுகிற திட்டம் இவரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
‘நினைவு அலைகள்’ நூலில் பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு ஐ.ஐ.டி-க்காகக் கேட்டபோது காமராஜர் அனுமதிக்க மறுத்தது, கிராமப்புறங் களில் அரசுப் பள்ளி உருவாக எவ்வாறு போராடினார்கள்?
இலவச மதிய உணவு திட்டத்துக்கு எப்படி எல்லாம் எதிர்ப்பு உருவானது? காமராஜரின் நிர்வாகத் திறன் எப்படியானது எனப் பல்வேறு உண்மைகளை நேரடி சாட்சியமாகப் பதிவு செய்திருக்கிறார். நாட்டுடமையாக்கபட்ட இவரது நூல்கள் இணையத்திலும் தரவிறக்கம் செய்ய எளிதாகக் கிடைக்கின்றன.
கல்வி முற்றிலும் வணிக மயமாகி விட்ட இன்றையச் சூழலில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருமுறையாவது இந்த மூன்று தொகுதிகளையும் வாசிக்க வேண் டும். அப்போதுதான் இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தையும் முன்னோடிகளின் அர்ப்பணிப்பையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
“வளர்ந்துவரும் குழந்தை இலக்கியம்” நூலுக்காக பெ.தூரன் அவர்கள் எழுதிய அணிந்துரையிலிருந்து சிறு பகுதி :
[1980ல் எழுதியது]
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் தாம் முதலில் குழந்தைப் பாடல்கள் இயற்றி, அவற்றை நூல் வடிவாகக் கொண்டுவந்தவர். நாடோடிப் பாடல்கள் பழங்காலத்திலிருந்தே பாடப்பட்டு வந்த போதிலும், நூல் வடிவாகக் கொண்டுவந்தவர் கவிமணி அவர்களே ஆவார்கள். பிறகு, பாரதியார் “ஓடி விளையாடு பாப்பா” என்ற ஓர் அற்புதமான பாடலை இயற்றினார். அது, தம் குழந்தைக சகுந்தலாவுக்காக பாடப்பெற்று “ஞான பாநு”வில் வெளிவந்தது.
யோகி சுத்தானந்த பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் பலர் குழந்தைப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் பெரியவர்களுக்கு எழுதுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்கள்.இடையிடையே ஒருசில குழந்தைப் பாடல்களையும் இயற்றி நமக்கு அளித்துள்ளார்கள். ஆனால், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களோ, முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்காகவே பாடல்களும், சிறுகதைகளும், ஒருசில நீண்ட கதைகளும் எழுதுவதையே நோக்கமாகக் கொண்டவர். குழந்தைகளுக்கென்றே தம் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர்.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் வேறொரு தனிச் சிறப்பான பணியையும் செய்திருக்கிறார். அதாவது, குழந்தைகளுக்கு எழுதுவோர் பலரையும் ஒன்றுதிரட்டி, குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கியிருப்பதோடு, அதை நீண்ட காலமாகத் திறம்பட நடத்தியும் வருவது அவருடைய தனிச்சிறப்பாகும்.
பேராசிரியர் கல்கி அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சென்னைப் பல்கலைக் கலகச் சொற்பொழிவுக்கு, குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா அவர்களைத் தேர்ந்தெடுத்தது மிகமிகப் பொருத்தேமேயாகும். இவருடைய மூன்று நாள் சொற்பொழிவுகளைக் கேட்டிருந்தவர்கள், குழந்தை எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் இவர் எவ்வாறு புள்ளி விவரங்களைக் கொண்டு சுவையாகச் சொற்பொழிவாற்றினார் என்பதை அறிவார்கள். அச்ச்சொற்பொழிவுகளை மீண்டும் செப்பனிட்டு, நூல்வடிவில் தந்திருப்பதைக் குழந்தை எழுத்தாளர்கள் மிகவும் போற்றி வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்நூலிலிருந்து திரு. வள்ளியப்பா அவர்கள், குழந்தைக்களுக்கான இலக்கிய நற்பணியில் எவ்வாறு யூரிக் திளைத்திருக்கிறார் என்றும் அறியலாம். குழந்தைப் பத்திரிகைகள் எப்பொழுது தொடங்கப்பெற்றன. குழந்தைக்கான இந்த முயற்சிகளெல்லாம் எவ்வாறு நடைபெற்றன என்ற புள்ளி விவரங்களைப் பார்த்தாலே பெரும் வியப்பிற்கு ஆளாகாமல் இருக்க மாட்டார்கள்.
1 Comment
அருமை சகோ,
குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்களுக்கான தகவல்களைத் தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்களை வாசிக்கிறேன். நன்றி.
சிந்துஜா
திருப்பூர்