அழ. வள்ளியப்பாவின் மேதமை ததும்பும் பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று வயதுக்கு முன்னால் நடந்த எந்த நிகழ்வும் நம் நினைவுகளில் சேகரமாவதில்லை.
மூன்று வயதுக்கு முன்னால் அசைவுகளும், ஓசையும், தொடுகையுமே பிரதானமான புற உலகை அறிந்து கொள்வதற்கான கருவிகளாகச் செயல்படுகின்றன. ஒரு சிறு அசைவும் குழந்தையின் கண்களின் கவனத்தை ஈர்க்கின்றது.
அனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவது தான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடு இருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலடியோ ஈற்றடியோ எதுகை மோனையோடு இருக்க வேண்டும். இசைக்கு இசைவாக ஏகாரத்தில் முடிகிற சொற்களைத் தேர்வு செய்ய வேண்டும். பாடலாகப் பாடப்படுகிற இசைக்கோர்வை வேண்டும். குழந்தைகளுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தவோ, உலக நடைமுறைகளைப் பற்றிய சித்திரங்களையோ, இயற்கையைப் பற்றிய காட்சிகளையோ, அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளைப் பற்றியோ, வேடிக்கையாகவோ, மானுட அறம் குறித்தோ, கதையாகவோ, உறவுகளின் மேன்மை குறித்தோ, கருத்துகளும் பொதிந்திருக்க வேண்டும். மொழியை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளின் மொழியில் இருக்கவேண்டும்.
இவ்வளவு கடினமான கலைவடிவத்தை தன்னுடைய அர்ப்பணிப்பினாலும், கடும் உழைப்பினாலும் கைவரப்பெற்றவர்கள் தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசன், கவிமணி, அழ.வள்ளியப்பா, பெ.தூரன், ஆ.கணபதி, போன்ற மிகச்சிலரே. அவர்களுள் முதன்மையானவர் அழ.வள்ளியப்பா. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் குழந்தை இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். குழந்தை எழுத்தாளர் சங்கம் உருவாகக்காரணமானவர். அவருடைய பாடல்களிலிருந்து பதினைந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து பஞ்சு மிட்டாய் சிறார்குழு நூலாகக் கொண்டு வருகிறார்கள்.
வள்ளியப்பாவின் பாடல்களில் உள்ள சிறப்பு என்னவென்றால் எளிய வார்த்தைகளை இசையுடனும் பொருளுடனும் கோர்க்கும் திறமை. ஏனெனில் குழந்தைகள் பாடல்களை விளையாட்டாய் பாடும்போதே முதலில் தாய்மொழியை தெரிந்து கொள்கிறார்கள். மொழிவளம் அவர்களுடைய மனதில் உரமாகிறது. அவர்கள் அதன் வழியே உலகை அறிந்து கொள்கிறார்கள். அ, ஆ, என்ற பாடலில் உயிரெழுத்துகளை அறிமுகப்படுத்துகிறார். ஏழும் ஏழும் பதினாலு என்று எலியாரை அழைத்துவந்து கணக்கு சொல்லிக்கொடுக்கிறார். மரம் ஏறலாம் என்று குழந்தைகளை அழைத்து மரங்களைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறார். பறவைகள், நத்தை, மனிதன் வசிக்கும் வீடுகளைப் பற்றிச் சொல்கிறார். காய்கறிகளின் வகைகளையும் அவற்றை இன்பமாக உண்ணும் சமையல் பக்குவத்தையும் சொல்கிறார். ஒவ்வொரு மிருகமும் தூங்கும் விதம் பற்றிச் சொல்கிறார். மொழியின் வார்த்தை விளையாட்டாய் துட்டு தந்தால் லட்டு இருக்கிறது. நத்தைக்கு ஒரு பாடலைப் பாடுகிறார்.
எல்லாப்பாடல்களும் பாடும் இசையோடு, பொருளோடு இருப்பதைப் பாடிப்பார்த்தால் தெரியும். அழ.வள்ளியப்பா குழந்தைப்பாடல்களை எழுதி ஒரு மைல்கல்லை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய பாடல்கள் குழந்தைப்பாடல்கள் எழுத விரும்பும் எழுத்தாளர்களுக்கு சவாலாகவும் பாடமாகவும் இருக்கும். எக்காலமும் இந்தப்பாடல்கள் குழந்தைகளுக்குப் பாடிக்காட்ட பொருத்தமாக இருக்கும் என்பது தான் அழ.வள்ளியப்பாவின் மேதமையைக் காட்டுகிறது. மேதையைப் போற்றுவோம்!
பஞ்சு மிட்டாய் சிறார் குழுவுக்கு வாழ்த்துகள்!
அன்புடன்,
உதயசங்கர்.