வளவனூர் நூலகம் (என் வாழ்வில் புத்தகங்கள் – பகுதி : 03) – பாவண்ணன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

புத்தகம் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கவனித்த எங்கள் ஆசிரியர் விடுமுறை நாட்களில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படிக்கும்படி ஆலோசனை வழங்கினார். எங்கள் கிராமத்துக் கிளை நூலகம் கடைத்தெருவில் இருந்தது. அங்கு எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன் நூலக உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு விடுமுறை நாளில்தான் நான் நூலகத்துக்குச் சென்றேன். என்னை அங்கே பார்த்ததும் முதலில் அவருக்கு ஏதோ செய்தி சொல்ல
வந்ததாக நினைத்துக்கொண்டார்.

“என்னடா?” என்பதுபோல என்னைப் பார்த்து புருவத்தை உயர்த்திக் கேட்டார். “கதைப்புத்தகம் படிக்கணும். அதுக்காக வந்தேன்” என்றேன். அவருக்கு நான் சொன்னதில் நம்பிக்கை வரவில்லை. “படிக்கணுமா, படம் பார்க்கணுமா?” என்று புன்னகையோடு கேட்டபடி என் தோள்களைத்  தொட்டார். நான் உறுதியான குரலில் “படிக்கறதுக்குத்தான்” என்றேன். மேலும் தொடர்ந்து “இங்கயே உக்கார்ந்து படிச்சிட்டு கொடுத்துடுவேன்” என்றேன். அவர் என்னை புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அழைத்துச் சென்று காட்டினார். ஏறத்தாழ இருபது தாங்கிகள். எல்லாமே எட்டடி உயரமுள்ளவை. ஒவ்வொன்றிலும் ஐந்தாறு அடுக்குகள். வரலாறு, சமயம், நாவல்கள், சிறுகதைகள், அறிவியல், சிறுவர் நூல்கள் என ஒவ்வொரு தாங்கியின்  மேல்விளிம்பிலும் அட்டையில் எழுதி ஒட்டியிருந்தார்கள். ஆசையோடு அவற்றை  ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒருகணம் அவை அனைத்தும் என் மீது சரிந்து விழுந்து என்னை மூடிவிடுவதுபோலத் தோன்றியது.

“நான் ஒரு புத்தகம் எடுத்துக்கலாமா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டபடி சிறுவர்நூல்கள் இருந்த தாங்கியின் பக்கம் நகரத் தொடங்கினேன். “இருடா, இரு இரு. அதுக்கெல்லாம் ஒரு முறை இருக்குது” என்று சொல்லி என்னைத் தடுத்தார். பிறகு என்னை அழைத்துச் சென்று அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமரவைத்து அம்புலிமாமா பத்திரிகையை எடுத்துக்கொடுத்து “மொதல்ல இதப் படி” என்று சொன்னார். ஒருகணம் ஏமாற்றமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அம்புலிமாமாவை வாங்கி உடனே படிக்கத் தொடங்கினேன். சற்றும் மனம் தளராமல் வேதாளத்தைத் தூக்கித் திரியும் விக்கிரமாதித்தன் கதை சுவாரசியமாக இருந்தது. அதற்கப்புறம் ஆறேழு கதைகள். ஒன்று புராணக்கதை. இன்னொன்று நாட்டுப்புறக்கதை. மற்றொன்று நீதிக்கதை. இப்படி வகைக்கொன்றாக நிறைந்திருந்தது. ஒவ்வொரு கதைக்கும் இரண்டு மூன்று ஓவியங்கள். அழகான வண்ணங்கள். கதைக்காக ஓவியங்கள் வரையப்பட்டனவா அல்லது வரையப்பட்ட ஓவியங்களுக்காக எழுதப்பட்ட கதைகளா என்று பிரித்தறிய முடியாதபடி சுவாரசியமாக இருந்தன.

ஒருமணி நேரத்தில் அந்தப் புத்தகத்தைப் படித்துமுடித்துவிட்டு அந்த அண்ணனிடம் சொன்னேன். அண்ணனுக்கு ஆச்சரியம். ஆனால் ஒரு பதிலும் சொல்லாமல் அறைக்குள் சென்று போன மாதத்து அம்புலிமாமா புத்தகத்தை எடுத்துவந்து கொடுத்துவிட்டுச் சென்றார். அதையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்துமுடித்தேன். அதற்குள் மதிய உணவு இடைவேளை நேரம்  நெருங்கிவிட்டதால் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். என்னைப் பரிசோதிப்பதற்காகவோ என்னமோ, நான்கு வாரங்கள் வரைக்கும் அந்த அண்ணன் எனக்கு அம்புலிமாமா புத்தகங்களை மட்டுமே படிப்பதற்குக் கொடுத்தார். நானும் மறுகேள்விக்கே இடமில்லாமல் அவர் கொடுத்ததை மெளனமாகப் படித்துவிட்டுத் திரும்பினேன். ஐந்தாவது வாரம் அவர் என்னை புத்தகத் தாங்கிக்கு அருகில் அழைத்துச் சென்று ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் குனிந்து ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு மேசைக்குத் திரும்பினேன். உணவு இடைவேளை வரைக்கும் எழுந்திருக்கவே இல்லை. ஒரே அமர்வில் படித்துமுடித்தேன். ஐந்தாறு பேர் கொண்ட குழுவொன்று காட்டுக்குள் புதையலைத் தேடிச் செல்கிறது. வழியில் ஒரு யானையைக் கண்டு மிரண்டு ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடிவிடுகிறார்கள். உயிர் பிழைத்த பிறகு ஒவ்வொருவரும் மற்றவர்களைத் தேடி அலைந்து, இறுதியில் கண்டடைகிறார்கள். இப்படிப் போகும் அந்தக் கதை.

வாரத்துக்கு ஒரு புத்தகம் என்று கணக்குவைத்துக்கொண்டு, ஞாயிறு தோறும் நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். ஒரு புத்தகத்தைப் பிரித்து தொடங்கிய வேகத்தில் படித்துமுடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நூலகத்தில் நம்மையறியாமலேயே அந்த ஒழுங்கும் வரையறையும் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. கால ஓட்டத்தில் அந்த அண்ணன் எனக்கு மிகவும் நெருக்கமானவராக மாறிவிட்டார். நான் எந்தப் புத்தகத்தைக் கேட்டாலும் வள்ளல்போல எடுத்துக்கொடுப்பவராக இருந்தார்.

க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தை இந்த நூலகத்தில்தான் நான் படித்தேன். அவர் சுட்டிக்காட்டியிருக்கும் புத்தகங்களின் பெயர்களையெல்லாம் குறித்துவைத்துக்கொண்டு, இங்கிருந்துதான் ஒவ்வொன்றாகத் தேடத் தொடங்கினேன். க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் பசி, தபால்காரர் போன்ற நாவல்களை இங்குதான் படித்தேன். புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா என பல ஆளுமைகளின் அறிமுகம் இந்த  நூலகத்திலிருந்துதான் தொடங்கியது.

வளவனூர் நூலகம் என் வாழ்வில் ஒரு திசைகாட்டியாக இருந்தது. என் ரசனையுணர்வை வடிவமைப்பதிலும் இலக்கியப்பயணத்தில் நான் செல்லவேண்டிய திசைகளை அடையாளப்படுத்தியதிலும் அந்த நூலகம் ஆற்றிய பங்கை நான் ஒருபோதும் மறக்கமுடியாது.

Leave a comment