ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்புவரை நான் இரண்டு பள்ளிகளில் படித்தேன். ஒன்று ஊராட்சிமன்றத் தொடக்கப்பள்ளி. மற்றொன்று கோவிந்தையர் பள்ளி. இரண்டு பள்ளிகளிலும் எங்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் எங்கள் மீது மிகவும் பாசமுடன் நடந்துகொண்டார்கள். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நாங்கள் பள்ளிக்குச் செல்லவில்லையென்றால், எங்களைத் தேடி வீட்டுக்கே வந்து விசாரிப்பார்கள்.
ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பாடவேளையில் ஆசிரியர்கள் எங்களுக்குக் கதைகளும் பாடல்களும் சொல்வார்கள். அவை எல்லாமே அருமையாக மனத்துக்குப் பிடித்தவையாக இருக்கும். அவர் கதைசொல்லி முடித்த பிறகு எஞ்சியிருக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு கதைசொல்லும் வாய்ப்பை அளிப்பார்கள். ஒவ்வொரு முறையும் நான் எழுந்து கதை சொல்வேன். எல்லாமே கற்பனையான கட்டுக்கதைகள்.
ஒருநாள் எங்கள் கண்ணன் ஆசிரியரிடம் ‘பஞ்சதந்திரக்கதைகள்’ என்னும் புத்தகம் இருந்தது. அதைப் பிரித்துவைத்துக்கொண்டுதான் அன்று அவர் கதை சொன்னார். நான் அதைப் பார்த்துவிட்டு தெனாலிராமன் கதைகள் போல இதுவும் யாரோ ஒரு கோமாளி அல்லது அரசர் சொன்ன கதைகள் என்று நினைத்துக்கொண்டேன். அதனால் அவரிடம் “பஞ்சதந்திரம்ங்கறது யாருங்க ஐயா?” என்று கேட்டேன். அதைக் கேட்டு ஐயா சிரித்தார். பிறகு மெதுவாக “பஞ்சதந்திரம்ங்கறது ஆளோட பெயர் கிடையாது. அஞ்சுவிதமான விஷயங்கள்ன்னு அர்த்தம்” என்று சொன்னார். “அது என்ன விஷயங்கள் ஐயா?” என்று நான் மீண்டும் கேட்டேன். அதற்கு அவர் “ஒரு ஊருல ரெண்டு பேரு கூட்டாளியா ஒன்னா இருக்காங்கன்னு வை. அவுங்க காலம் முழுக்க ஒன்னாவே இருந்தா அடையக்கூடிய ஆதாயம் என்னன்னு சொல்றது ஒரு விஷயம். அப்படி ஒன்னா இல்லைன்னா அடையக்கூடிய இழப்பு என்னன்னு சொல்றது ரெண்டாவது விஷயம். ஒரு ஆள் இன்னொரு ஆள் மேல சந்தேகப்பட்டா அதனால உண்டாகிற விளைவுகளைச் சொல்றது மூணாவது விஷயம். சந்தேகம் முத்தி ஒரு ஆள் அடுத்த ஆளை பகைச்சிகிட்டா அதனால் உண்டாகிற விளைவுகளைச் சொல்றது நாலாவது விஷயம். ஒரு ஆள் திடீர்னு அடுத்த ஆள பிரிஞ்சி போயிட்டா என்னாகும்ன்னு சொல்றது அஞ்சாவது விஷயம். புரியுதா?” என்று மூடிக்கொண்ட கையைலிருந்து ஒவ்வொரு விரலாக பிரித்து உயர்த்தியபடி சொல்லிவிட்டு புன்னகைத்தார். அவர் அன்று சொன்ன சொற்கள் இன்னும் என் நினைவில் உள்ளது. அவர் சொல்லி முடித்ததுமே எனக்கு இன்னொரு ஐயம் எழுந்துவிட்டது. “புரிஞ்சிட்டுது ஐயா. ஆனாலும் இன்னும் ஒரு சந்தேகம்
ஐயா” என்றேன் நான். “இன்னுமா? அது என்னடா. சொல்லு சொல்லு” என்றார் ஐயா. “இப்ப ரெண்டு நண்பர்கள்னு மனிதர்களை முன்வச்சி சொன்னிங்க. ஆனா நீங்க சொன்ன கதையில சிங்கம் யானை நரின்னு எல்லாமே விலங்குகள்தானே இருக்குது. அது எப்படிங்க ஐயா?” என்று தயக்கத்துடன் கேட்டேன். “விலங்குகள் கதைன்னு சொன்னா, அத அப்படியே விலங்குகளைப்பற்றியதுன்னு நேரிடையா எடுத்துக்கக்கூடாது. ஒவ்வொன்னும் மனிதர்களைப்பற்றிய கதைதான். ஆனா நேருக்கு நேர் சுட்டிக் காட்டினா மனசு நோகும்ன்னு விலங்குகளைக் காட்டி சொல்றாங்க” என்றார். அந்தப் பதில் இளம்வயதில் பெரிய வெளிச்சத்தைக் கொடுப்பதாக இருந்தது.
ஆறாம் வகுப்பு படிப்பதற்கு உயர்நிலைப்பள்ளிக்கு வந்துவிட்டேன். அங்கு வாரத்துக்கு ஒருமுறை நூலகவாசிப்பு என்னும் வகுப்பு இருந்தது. வகுப்பு தொடங்கியதும் சட்டாம்பிள்ளை பெரியதொரு அட்டைப்பெட்டி நிறைய கதைப்புத்தகங்களைச் சுமந்து வகுப்புக்குள் வந்து ஆளுக்கொரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வார். நாங்கள் அதை வேகவேகமாகப் படிப்போம். ஒரு பாதி நேரம் அப்படிப் போகும். மறுபாதி நேரத்தில் யாராவது ஒருவரை கையிலிருக்கும் புத்தகத்திலிருந்து ஒரு கதையை உரத்த குரலில் படிக்கச் சொல்வார். ஒரு வாரம் சட்டாம்பிள்ளை வரவில்லை. என்னையும் இன்னொரு பையனையும் அலுவலகத்துக்குச் சென்று புத்தகங்களை எடுத்துவரும்படி அனுப்பிவைத்தார். நாங்கள் ஓட்டமாக ஓடிச் சென்று நின்றோம். அந்த அறைக்குள் நான்கு அலமாரிகள் நிறைய புத்தகங்களை அடுக்கிவைத்திருந்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு புத்தகங்களா என்று திறந்த வாயை மூடத் தெரியாமல் கண்களை இமைக்க மறந்து பரவசத்தோடு பார்த்தபடியே நின்றேன். இவற்றையெல்லாம் நாம் எப்போது எப்படி படித்துமுடிப்போம் என்று ஒருகணம் நினைத்துக்கொண்டேன். அலுவலர் புத்தகங்களை அடுக்கிக் கொடுத்த அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வகுப்புக்குத் திரும்பினோம். எங்கள் பள்ளிக்கூட நூலகம் பெரியதொரு சுரங்கம். எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். ஆசிரியர் பரிந்துரையால் புத்தகங்களை எடுத்துப் படிக்க சிறப்பு அனுமதி கிடைத்தது. அறையிலேயே உட்கார்ந்து படித்துவிட்டு கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான புத்தகங்களைப் படித்தோம்.
ஒன்பதாம் வகுப்புக்கு வந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் வெளியிட்ட இரும்புக்கை மாயாவி என்னும் படக்கதைப் புத்தகம் வந்திருந்தது. எங்கள் வகுப்பிலிருந்த ராஜசேகர் அதை வாங்கிவந்து காட்டினான். படிப்பதற்குக் கட்டணமாக ஒவ்வொருவரும் ஐந்து பைசா கொடுத்தால் படிப்பதற்குப் புத்தகத்தைக் கொடுப்பதாகச் சொன்னான். அந்த மாதம் முழுக்க அவனிடம் கட்டணம் கொடுத்துவிட்டு ஒவ்வொருவரும் ஐந்தாறுமுறை அதை வாங்கிப் படித்தோம். மின்சாரம் பாய்ந்ததும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைந்துபோகும் விந்தையைப் படித்தபோது எழுந்த மனக்கிளர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. அதை இப்போது நினைத்தாலும் ஆனந்தத்தில் மிதப்பதுபோல இருக்கிறது.