என் வாழ்வில் புத்தகங்கள் (பதிவு – 01) –  பாவண்ணன்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சின்ன வயதில் படம் வரைவதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது.  ஏதேனும் ஒரு காகிதத்தில் அல்லது புத்தகத்தில் ஒரு படமிருந்தால், அதைப் பார்த்து உடனே வரையத் தொடங்கிவிடுவேன். என் வீட்டில் வெளியே சென்று விளையாட என் அம்மா என்னை அனுமதிக்கமாட்டார். “விளையாடப்போய் எங்கிருந்தாவது வம்புவழக்கைக் கொண்டுவந்துவிடாதே” என்று என்னை அடக்கிவிடுவார்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அக்கா இருந்தார். அவர் கல்கண்டு, குமுதம், ஆனந்தவிகடன், ராணி என்று வாரந்தோறும் பல பத்திரிகைகள் வாங்கிப் படிப்பார். அவர் வீட்டிலிருந்து பழைய புத்தகங்களை வாங்கிவந்து படம் பார்த்து வரைந்து பழகுவேன். அந்த அக்கா என் நோட்டை வாங்கி நான் வரைந்த படங்களையெல்லாம் பார்த்துவிட்டுப் பாராட்டுவார். நான் வரைவதற்காகவே சில படங்களையெல்லாம் கொடுத்து, அதேபோல வரைந்து தரச்சொல்வார். அந்தப் பழக்கத்தின் விளைவாக, அவருக்குத் தேவையான புத்தகங்களை கடைக்குச் சென்று வாங்கிவந்து கொடுக்கும் ஆளாக நான் மாறிவிட்டேன். படம் பார்ப்பதற்கு எனக்கும் ஏராளமான புத்தகங்கள் கிடைத்தன.

விகடன் இதழில் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு வரையப்பட்டிருக்கும் தொப்பை போலீஸ், குடுமிக்காரர், குரங்காட்டி, கூடைக்காரி போன்ற சித்திரங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றையெல்லாம் அப்படியே வரைந்து காட்டுவேன். சித்திரங்களைத் தொடர்ந்து நகைச்சுவைக் குறிப்புகளையும் விரும்பிப் படிக்கத் தொடங்கினேன். சிறுவர்களுக்காகவே சில பக்கங்களில் கதைகள் இருக்கும். அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்துவிடுவேன்.

வானொலியில் அப்போது ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல்வேளையில் பாப்பா மலர் என்றொரு பகுதியை ஒலிபரப்புவார்கள். பல சிறுவர்களும் சிறுமிகளும் அதில் கதைசொல்லி பாட்டு பாடுவார்கள். ஐயாசாமியும் கூத்தபிரானும் மாற்றிமாற்றி கதைசொல்வார்கள். அந்தக் கதைகளையும் பாடல்களையும் நான் தவறவிட்டதே இல்லை.

எங்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் வழியில் எம்.ஜி.ஆர்.மன்றம் இருந்தது. அங்கு பல பத்திரிகைகளை வைத்திருப்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் சென்று படிக்கலாம். தினத்தந்தி நாளேட்டில் வெளிவரும் கன்னித்தீவு படக்கதையைப் படிப்பதற்காகவே ஒவ்வொரு நாளும் நான் அங்கு செல்வேன். நான் போகும் நேரத்துக்குச் சரியாக ஒரு தாத்தாவும் அங்கு வந்துவிடுவார். அவரும் தினத்தந்தியைத்தான் படிப்பார். கன்னித்தீவு கதை வந்திருக்கும் பக்கத்தை எப்படியாவது திருப்பிப் படித்துவிடவேண்டும் என்று நான் துடியாய்த் துடிப்பேன். தாத்தா ஏதேதோ செய்தியைப் படிப்பதில் மூழ்கியிருப்பார். தாமதம் பொறுக்கமுடியாமல் ஒரு கட்டத்தில் வாய்விட்டே கேட்கத் தொடங்கினேன். பெரிய மனது வைத்து, அப்பக்கத்தைத் திருப்பி வேண்டாவெறுப்பாக என்னிடம் காட்டுவார். ஒரே நிமிடத்தில் அதைப் படித்துவிட்டு ஓட்டமாய் ஓடிவிடுவேன்.

திருக்குறள் கழகமும் இதேபோல ஒரு மன்றத்தை நடத்தியது. அங்கும் சில பத்திரிகைகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று அவற்றில் வெளிவந்திருக்கும் படங்களையெல்லாம் படிப்பேன். அங்கே தமிழ்ச்சிட்டு என்றொரு சிறுவர் இதழ் இருந்தது. அதில் பாட்டுகளும் கதைகளும் இருந்தன. அவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை ரசித்துப் படிப்பேன். ஒருநாள் அங்கிருந்த அண்ணன்கள் என்னிடம் “உனக்கு திருக்குறள் தெரியுமா?” என்று கேட்டார்கள். உடனே நான் எங்கள் புத்தகத்தில் செய்யுள் பகுதியில் படித்திருந்த திருக்குறள்களை அவர்களிடம் சொன்னேன். அதைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ”இதேபோல இன்னும் பத்து இருபது திருக்குறள்களை மனப்பாடம் செய்துவந்து சொன்னால் உனக்குப் பரிசு கிடைக்கும்” என்று சொன்னார்கள்.

ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். நான் அந்தக் கூட்டத்துக்குச் சென்று மனப்பாடம் செய்து வைத்திருந்த திருக்குறள்களைச் சொன்னேன். ஒரு முழு திருக்குறள் நூலும் ஓராண்டு பழைய தமிழ்ச்சிட்டு இதழ்களும். எனக்குப் பரிசாகக் கிடைத்தன. முதன்முதலாக எனக்கென கிடைத்த புத்தகங்கள் அவை. அவற்றை எனக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு அன்று இரவு தூங்கினேன். சொந்தமாக புத்தகங்கள் கைக்குக் கிடைத்ததும் மிகவும் பெருமையாக இருந்தது.  என் அம்மா மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். வீடு முழுக்க புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொள்வதுபோல அன்று இரவு கனவு கண்டேன்.

பள்ளிக்கூடத்தில் ஒருமுறை சுதந்திரத்திருநாளையொட்டி பேச்சுப்போட்டியும் கட்டுரைப்போட்டியும் வைத்தார்கள். நான் இரண்டிலும் கலந்துகொண்டேன். இரண்டுக்கும் தேசத்தலைவர்கள் என ஒரே தலைப்பு. நான் காந்தியைப்பற்றியும் நேருவைப்பற்றியும் எங்கள் பாடப்புத்தகத்தில் இருக்கும் தகவல்களோடு வானொலி நிகழ்ச்சிகளில் கேட்ட தகவல்களையும் சேர்த்து சமாளித்தேன். இரண்டு போட்டிகளிலும் எனக்குப் பரிசுகள் கிடைத்தன. அழ.வள்ளியப்பா எழுதிய புத்தகங்களைக் கொடுத்தார்கள். “எங்கள் கதையைக் கேளுங்கள்” என ஒவ்வொரு விலங்கும் தன் கதையைத் தானே சொல்வதுபோன்ற ஒரு புத்தகம். அப்புறம் பாடல்களைக் கொண்ட ஒரு புத்தகம். நான் மிகவும் ஆச்சரியத்தோடும் ஆர்வத்தோடும் அவற்றைப் படித்தேன். பேசாத விலங்குகளை எழுத்தால் பேசவைத்த வள்ளியப்பா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக மாறிவிட்டார். எனக்குக் கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் சேர்த்துவைக்கவேண்டும் என்று ஆசை பிறந்தது. என் வாழ்வில் முதன்முதலாக இப்படித்தான் புத்தகங்கள் இடம்பெறத்தொடங்கின.

குறிப்பு: எங்கள் கதையை கேளுங்க மின்-புத்தகம்.

Leave a comment