உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மாற்றம் வரத் தான் போகிறது – கிரெட்டா துன்பெர்க்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐ.நா பொதுச் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு செப்டம்பர்(September 21-23, 2019, UN Headquarters, New Yorkஇறுதியில் நடந்தது. இதில் குறிப்பாக கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமியின் பேச்சும்,உலகத் தலைவர்களிடம் அவர் எழுப்பிய கேள்வியும் செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றது. அவரது உரையை தமிழில் மொழிபெயர்த்து உங்களுடன் பகிர்கிறோம்.

நாங்கள் உங்களை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கு நடப்பது எல்லாம் மிகவும் தவறாக இருக்கின்றது. இவ்விஷயத்தில் எந்த தைரியத்தில் எங்களின் நம்பிக்கையை‌ கோருகிறீர்கள்? நான் இங்கிருக்க வேண்டியவள் அல்ல, மாறாக பள்ளியில் இருந்திருக்க வேண்டும்.

என்னுடைய கனவையும் குழந்தைப் பருவத்தையும் உங்களின் வெற்று வார்த்தைகளால் இப்படி திருடிவிட்டீர்களே! எனினும் ‌எஞ்சியிருக்கும் அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவர். இங்கு மக்கள் கஷ்டப்படுகிறார்கள், பலர் இறக்கிறார்கள். ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் உருக்குலைந்து கொண்டிருக்கின்றது. நாம் ஓர் பேரழிவின் ஆரம்பத்தில் நின்று கொண்டிருக்கறோம். ஆனால் நீங்களோ பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்த மாயமந்திர கதைகளை பற்றியும் மட்டுமே பேசுகிறீர்கள். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு?

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அறிவியல் ஆய்வுகள் இந்த காலநிலை அவலம் குறித்து தெளிவாக விளக்குகின்றன. ஆயினும் அதை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, அதற்கான நடவடிக்கைகள் ஏதுமின்றி, நீங்கள் போதுமானவற்றை செய்கிறீர்கள் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு?

நீங்கள் இந்த அவசர நிலையையும் அது சார்ந்த எங்களின் பரிதவிப்பையும் புரிந்துள்ளீர்கள் என்று சொல்வதை என் மனம் ஏற்க மறுக்கிறது. உண்மையாகவே இந்த சூழ்நிலையைப் பற்றிய புரிதல் இருந்து, அதன்படி ஏதும் நடவடிக்கை எடுக்காமலிருக்கும் உங்களின் தீய எண்ணத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. இது கோபத்தினாலோ அல்லது வருத்தத்தினாலோ நான் சொல்வதல்ல, உங்களது மனதை புரிந்ததால் சொல்கிறேன்.

மாசு வெளியேற்றத்தை அடுத்த 10 ஆண்டுகளில் பாதியாக(50%) குறைக்கும் உங்களது (பிரசித்தி பெற்ற) யோசனை, புவி வெப்பமயமாதலை வெறும் 1.5 டிகிரி‌ கட்டுக்குள் மட்டுமே வைக்கும். அது குறைந்தபட்ச பலனையே தரும். ஆனால், இதனால் ஏற்படக்கூடிய மாற்றவே முடியாத எதிர்வினை என்பது மனித சக்தியின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதே உண்மை.

இந்த 50% என்பது உங்களுக்கு வேண்டுமானால் பெரிய சாதனையாக இருக்கலாம்; ஆனால் திடீர் பருவ மாற்றம், நம் நடப்பு செயல்களால் கால நிலை பின் விளைவுகள், நச்சு வாயுக்களால் ஏற்படும் காற்று மாசு என எந்த விசயங்களும் இந்த 50%யில் அடங்கவில்லை என்பதே உண்மை. இதனால், நீங்கள் விட்டுச் செல்லும் மாசுக்களை, எல்லை மீரிய கட்டுக்குள் அடங்காத கரியமில வாயுவை(CO2 – carbon dioxide) எந்தன் தலைமுறையை சுவாசிக்கச் செய்யும்.

ஆகையால் உங்களது 50% ஆபத்து/அபாய நிலை(risk) என்பது ஏற்புடையதல்ல – ஏனென்றால் இந்த விளைவுகளை சந்திக்க போகிறவர்கள் நாங்கள் தான்.

1.5 டிகிரிக்குக் கீழ் உலக வெப்பமாதலை 67% கட்டுக்குள் வைப்பதற்கு பன்நாட்டு அரசாங்கங்களுக்கான காலநிலைக்குழு அறிக்கை கூறுவது யாதெனில், நமது புவிக்கு 2018ஆம் ஆண்டின் முதற் தேதிப்படி 420 ஜிகா டன்(gigatons) அளவு கரியமில வாயுவை வெளியிட நமக்கு வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இன்றோ அந்த அளவு 350 ஜிகா டன்னுக்கு குறைந்து விட்டது.

இந்த அசாத்திய பிரச்சினைக்கு எந்தவொரு நிரந்தர தீர்வும் சொல்லாமல், வெறும் வியாபார ரீதியான அல்லது தொழில்நுட்பங்கள் ரீதியான தீர்வுகளை மட்டும் சொல்லிவிட்டு எளிதில் கடந்து சென்று விடலாமென்று எப்படி உங்களால் பாசாங்கு செய்ய முடிகிறது? எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு? இன்றைய கரியமில வாய்வின் உமிழ்வு தொடருமெனில், மீதமிருக்கும் 350 ஜிகா டன் அளவு என்பது இன்னும் 8.5 ஆண்டுகளில் முடிந்து விடக்கூடியது.

( பஞ்சுமிட்டாயின் விளக்கம் : வெப்ப நிலை மாற்றத்தை 1.5 டிகரிக்குள் வைத்திட world’s carbon budget என்ற ஓர் அளவிடு உள்ளது. அது இந்த உலகம் எவ்வளவு கரியமில வாயுவை நாம் வெளியிடலாம் என்று சொல்கிறது. அந்த அளவின் படி 01/01/2018ல் 420 ஜிகா டன்(gigatons) ஆக இருந்தது. ஆனால் இன்றைக்கு அது வெறும் 350 ஜிகா டன் என்ற அளவில் இருக்கிறது. அதாவது நாம் இன்னும் 350 ஜிகா டன் அளவிற்கு வெளியிடலாம். இந்த நிலை தொடர்ந்தால் வெறும் 8.5 வருடங்களிலே நமது வெட்பநிலை 1.5டிகரி மாறிவிடும். உதாரணமாக இன்றைக்கு 37டிகிரி என்றால் இன்னும் 8.5 வருடத்தில் அது 38.5 டிகிரியாக இருக்கும்.)

இன்றைய கரியமில வாய்வின் உமிழ்வு தொடருமெனில், மீதமிருக்கும் 350 ஜிகா டன் தாங்குதிறன் இன்னும் 8.5 ஆண்டுகளில் முடிந்து விடக்கூடிய அபாய நிலை உள்ளது. இந்த எண்கள் சங்கடத்தை தருகிறது. இந்த எண்களை பார்க்கும் போது இந்த பிரச்சனைகளுக்கு எந்தவித தீர்வோ திட்டமோ இல்லை என்பதை உறுதியாக உணர முடிகிறது. ஆனால் நீங்கள் இன்னும் உள்ளதை உள்ளபடி உரைக்கும் அளவிற்கு கூட முதிர்ச்சி பெறவில்லை.

எங்களைத் தோல்வியுரச் செய்கிறீர்கள். ஆனால் இளைய சமுதாயத்தினருக்கு உங்களின் துரோகத்தைப் பற்றிய புரிதல் உள்ளது. எங்களது பார்வை உங்களின் மேல் பதிந்திருக்கிறது. நீங்கள் மென்மேலும் இந்த தோல்வியுரச் செய்யும் செயலை தொடர்வீர்கள் என்றால், நாங்கள் உங்களை கண்டிப்பாக மன்னிக்கவே மாட்டோம்.

இன்றே இப்பொழுதே எல்லை வகுத்தாகிவிட்டது; இந்தக் குற்றத்துடன் உங்களை நாங்கள் தப்ப விடமாட்டோம். உலக மக்கள் விழித்துக் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மாற்றம் வரத் தான் போகிறது.

மொழிப்பெயர்ப்பு குறிப்பு : ஓர் சிறுமியின் இயற்கை மீதான அக்கறையை அதுவும் அதிகாரத்திற்கு எதிரான துணிச்சலை தமிழில் பதிவு செய்யும் நோக்கத்திலே இதை மொழிப்பெயர்ப்பு செய்த்தோம். வார்த்தைக்கு வார்த்தைக்கு அப்படியே மொழிப்பெயர்ப்பு செய்யாமல் உரையின் கருத்தியலை மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறோம். விளக்கம் & மொழிப்பெயர்ப்பிற்கு உதவிய ஹரீஷ் குமார், விஜய், திவ்யா ஆகிய நண்பர்களுக்கு நன்றிகள்.

இணைப்புகள்:

வீடியோ இணைப்பு :

ஐ.நா மாநாடு இணைப்பு

உரை ஆங்கிலத்தில் 

The Intergovernmental Panel on Climate Change Report

World’s Carbon Budget

Leave a comment