சமூகத்தின் அழுக்குகளை, குப்பைகளைச் சுத்தம் செய்பவர்களையும் குப்பையாகத்தான் இச்சமூகம் பார்க்கிறது. நமது நுகர்வின் குப்பைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய குறும்படம் தேசிய பறவை. குப்பைக்கிடங்கில் குழந்தைகள் விளையாடுவதாகத் தொடங்குகிறது படம். பீ அள்ளும் தொழில் செய்யும் தாய்.கணவனை இழந்தவள். ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள். படிப்பு அவர்களின் வாழ்வை மாற்றும் என்ற கனவோடும் கடனோடும் வாழ்வை நகர்த்திச் கொண்டிருக்கிறாள். தவணை தரமுடியாமல் அவள் கூசி அழுது நிற்பதைப் பார்த்த மகன் அதே வேலைக்குச் செல்கிறான். தான் பட்ட சிரமங்களைப் பிள்ளைகள் படக்கூடாது என்று எவ்வளவுதான் ஆசைப்பட்டாலும் வாழ்வு அவனையும் அதே வேலையைச் செய்ய வைத்துவிட்டதே! என்று கதறுகிறாள் அந்தத்தாய். குப்பையிலிருந்தே பொம்மையை எடுத்து வைத்திருக்கும் சிறுமியின் மகிழ்ச்சியோடு தொடங்கும் படம் தாயின் கதறலோடு முடிகிறது.
கக்கூஸ் ஆவணப்படம், தோட்டி மகன் நாவல் ஆகியன நினைவுக்கு வந்து சுமை கூட்டின. கல்வி மட்டுமே தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் அடித்தட்டு மக்கள் இருக்கிறார்கள். அறிவு, தரம் என்றெல்லாம் சொல்லி அவர்களின் உயிரிலும் கனவிலுமே நமது ஆடம்பரங்களைக் கட்டியெழுப்புகிறோம். அடிப்படைகளையும் ஆடம்பரமாக்கும் நாம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வுக்கு என்ன செய்யப்போகிறோம்?
அவர்களின் ஒரே நம்பிக்கையான கல்வியை எப்படித் தரப்போகிறோம்? கல்வியைத் தவிர வேறெந்தக் கயிறைப் பிடித்து இவர்கள் மேலேற முடியும்? அதை அவர்களின் கழுத்துக்கல்லவா அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
எத்தனை எத்தனை மார்தட்டல்கள், பெருமிதக் கிரீடங்கள், புதிய புதிய வித்தைகள்! வாழ்வைப் பழக்காத எந்தக் கல்வி முறையும் வீண். ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல் பிதற்றும் அனைவரும் ஒருநாள் இவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். இப்படித்தான் இந்தியத் திருநாட்டின் பெரும்பான்மையான மக்கள் வாழ்வோடும் வறுமையோடும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்களாவது அறிந்திருக்கிறோமா?
தேசிய பறவை நமது முகத்தில் எறிந்திருக்கும் கேள்விகளால் நமது கண்கள் திறக்கட்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வியையே உருவாக்கவேண்டும் என்ற குரல்கள் எழட்டும். அதுதான் உண்மையான கல்வி.
திரைப்படம் :