என்று தணியும் (கும்பகோணம் தீ விபத்து குறித்த) ஆவணப்படம் – கணேஷ் பாலவெங்கட்ராம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கும்பகோணம் தீ விபத்து நடந்தபொழுது நாளிதழ்களின் மூலமாகவே தெரிந்து கொண்டேன். இச்சம்பவத்திற்கு முழுபொறுப்பும் அக்கல்வி நிர்வாகமே என்ற ஒரு பொது புத்தி தான் என் மனதில் நிலவியது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த பின்பே பல விஷயங்கள் என் அறிவுக்கு எட்டியது. குறும்படத்தில் பலதரப்பட்டவர்களின் பார்வை பதிவு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் தன் குழந்தைகளை இழந்தவர்கள் சம்பவம் நடக்கும் போது அப்பள்ளியிள் இருந்த பிள்ளைகள், ஆசிரியர்கள், இச்சம்பவத்தை வெளியில் இருந்து பார்த்தவர்கள், சமூக ஆர்வலர்களின் பார்வை என பலதரப்பட்டவர்களின் குரல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறும்படம் பார்த்த பின்பு என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

  1. இச்சம்பவத்திற்கு கல்வியின் நிர்வாகம் மட்டும் பொறுப்பா?
  2. ஒரே கட்டிடத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி இயங்க அனுமதி அளித்த அதிகாரிகளின் பொறுப்பா?
  3. கல்வி அதிகாரிகள் பார்வையிட வருகிறார்கள் என்று தனியார் மற்றும் அரசு மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைத்த கல்வி நிர்வாகம் பொறுப்பா?

போன்ற பல கேள்விகள் நெஞ்சில் எழுந்தது.

அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவர்களை தீயிலிருந்து காப்பாற்றினார்கள் அல்லது காப்பாற்ற முயற்சி செய்தார்கள் என்றால் ஏன் ஒரு ஆசிரியருக்கும் கூட சிறு காயங்கள் ஏற்பட வில்லை என்ற ஒரு பெற்றோரின் குமுறல் என் நெஞ்சத்தை உறுத்தியது.

தற்பொழுது தெருவுக்குத் தெரு நர்சரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு விட்டன.  Chain of schools என்ற business modelலில் இந்தியா முழுவதும் பல பெரிய நிறுவனங்கள் நர்சரி ஸ்கூல் நடத்துகின்றன. வீட்டை வாடகைக்கு எடுத்து விட்டு அதில் நர்சரி ஸ்கூல் நடத்துகிறார்கள். என் குழந்தையை சேர்க்க வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் தேடத் தொடங்கிய பொழுது பல பள்ளிகள் வீட்டில்தான் நடத்தப்படுகின்றன என தெரிந்துகொண்டோம். அவ்வாறு நடத்தப்படும் பள்ளிகளில் அறையின் நடுவே டிவி வைத்துவிட்டு அதில் சில மணி நேரங்கள் cartoon படங்களையும் rhymesயையும் போடுகிறார்கள்.

இந்த விஷயம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால் என் பிள்ளையை டிவி இல்லாத பள்ளியில் சேர்த்தோம். அவ்வாறு சேர்க்கும் பொழுது விளையாடுவதற்கு இடம் இருக்கிறதா என்று பார்த்து அவளை சேர்த்தோம். ஆறு மாதங்கள் கழித்து அவள் வகுப்பு ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது பிள்ளைகள் விளையாட இருந்த இடத்தில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு இருந்தன. நம் பிள்ளைகளுக்கு விளையாடும் இடம் இல்லாமல் சுருங்கி விட்டது என்று எங்களுக்கு வருத்தம் ஏற்பட்டது.

நம் சமூகம் கும்பகோணம் தீ விபத்து போன்ற ஒரு பெரும் அசம்பாவிதத்தில் இருந்து எவ்வித படிப்பினையும் கற்றுக் கொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இது ஏதோ பள்ளி நிர்வாகம் கல்வித்துறை அரசு பொறுப்பு அன்று இது அனைவரின் சமுதாய பொறுப்பாக உணர்கிறேன்.

பெற்றோர்களும் அவ்வப்போது பள்ளிக்குச் சென்று தம் குழந்தைகளின் வகுப்புகளை பார்வையிட வேண்டும், நல்ல காற்றோட்டம், சூரிய வெளிச்சம் இருக்கிறதா, குழந்தைகள் ஏற்றார்போல் கழிவறை வசதிகள் இருக்கின்றனவா என்று. ஏதேனும் கேள்விகள் இருந்தால் ஆசிரியரிடமும் அல்லது பள்ளி நிர்வாகத்திடம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இன்னும் நம் குழந்தைகளுக்கு முறையான பாதுகாப்பான கல்வியை கொடுக்க நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

பஞ்சு மிட்டாய் ஆசிரியர் குழு குறிப்பு : என்று தணியும் – கும்பகோணம் தீ விபத்து குறித்த ஆவணத் திரைப்படம் பாரதி கிருஷணகுமார் அவர்களால் இயக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை புதுகை செல்வா அவர்கள் செய்திருக்கிறார். புதுகை செல்வா அவர்கள் மூலம் பஞ்சு மிட்டாய் குழுவிற்கு இந்தத் திரைப்படம் அறிமுகமானது. புதுகை செல்வா அவர்களுடன் உரையாடிய போது, இந்தத் திரைப்படம் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அரசு பள்ளிகள் சார்ந்து வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார். பொதுமக்களுக்கு இந்தத் திரைப்படத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தைப் பற்றியும் நிறைய உரையாடினார். அதன் ஒரு முயற்சியாக சென்ற பஞ்சு மிட்டாய் நிகழ்வில் இத்திரைப்படம் பெற்றோர்களுக்கு ஒளிப்பரப்பட்டது. அதன் வழியே கணேஷ் அவர்கள் தனது பார்வையை தற்போது நம்முடன் பகிர்ந்துள்ளார். வாருங்கள் நண்பர்களே தொடர்ந்து உரையாடுவோம்.

Leave a comment