நான் வ கூச்சா (ரொட்டியும் முடுக்கும் சிறார் குறுந்திரைப்படம்) – சாளை பஷீர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரானிய திரைப்பட முன்னோடி ஆசான்களில் ஒருவரும் ஒளிப்படக்கலைஞரும் கவிஞருமாகிய அப்பாஸ் கியோரஸ்தமி ( 1940- 2016 ) 1970 ஆம் ஆண்டு இயக்கிய முதல் குறுந்திரைப்படம். ‘ நான் வ கூச்சா ‘(ரொட்டியும் முடுக்கும் ). இந்த மௌன கறுப்பு வெள்ளை குறும்படம் பத்து நிமிடங்கள் ஓடக்கூடியது. துரத்தும் தெரு நாயை சிறுவனொருவன் எதிர்கொள்ளும் கதையிது. மதிய உணவிற்கான ரொட்டியை கடையிலிருந்து வாங்கி வரும்
சிறுவன் வெற்று தகர குவளையை காலால் உதைத்துக் கொண்டே வீட்டை நோக்கி செல்லும் முடுக்கிற்குள் நுழைகின்றான். ஒரு திருப்பத்தில் நாயொன்று படுத்துக் கிடக்கின்றது. இவனைப்பார்த்தவுடன் குரைத்து விரட்டுகின்றது. வெருண்ட சிறுவன் தொலைவில் உள்ள முடுக்கு முனையில் தயங்கி நிற்கிறான். அவனைக்கடந்து கோவேறு கழுதைகளை விரட்டிக் கொண்டு ஒருவர் செல்கிறார். அடுத்ததாக மிதிவண்டிக்காரன் செல்கிறான். பின்னர் ஒரு பெண் விரைந்து செல்கிறார். இறுதியாக மெல்ல நடக்கும் ஒரு முதியவர் வருகிறார். அவருக்கு பின்னால் நடக்கத் தொடங்குகின்றான் சிறுவன்.

அந்த முதியவரோ இவன் செல்ல வேண்டிய திருப்பத்திற்கு முந்திய திருப்பத்தில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றார். மீண்டும் தயங்கி நிற்கின்றான் சிறுவன். இறுதியில் வேறு வழியின்றி மெல்ல முடுக்கின் ஓரம் பதுங்கி பதுங்கி செல்லும் சிறுவன் நாயை நெருங்கியவுடன் அது அவனைப்பார்த்து மீண்டும் குலைக்கிறது. முதலில் அந்த குரைப்புக்கு அஞ்சும் சிறுவன் தனது கையிலுள்ள ரொட்டியின் சிறு துண்டை பிய்த்து நாய்க்கு முன் எறிகின்றான். பாய்ந்து சென்று அந்த துண்டைத் தின்ற நாய் வாலை ஆட்டிக் கொண்டு நன்றியுணர்வுடன் அவனை அண்மித்தவாறும் அவனுக்கு பின்னாலும் நடக்கத்தொடங்குகிறது. அவன் தனது வீட்டினுள் நுழைந்தவுடன் நாயும் நுழைய முயற்சிக்கின்றது. சிறுவனின் அம்மா படீரென கதவை சாத்துகின்றார். வெளியில் நிற்கும் நாய் மீண்டும் முடுக்கோரம் போய் சுருண்டு படுத்துக் கொள்கிறது. அந்த முடுக்கின் வழியே வேறொரு சிறுவன் கைகளில் உணவுக்கலனுடனும் பொருட்களுடனும் வருகிறான். அவனை பார்த்து குலைக்கிறது நாய். குறும்படம்  நிறைவடைகின்றது.

நான் இந்த குறும்படத்தை பார்த்து புரிந்து கொண்டவை இரண்டு விஷயங்கள்:

1.வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒரு விலையுண்டு.

2. நமது சிக்கல்களை நாம்தான் தனித்து எதிர்கொண்டாக வேண்டும்.

அப்பாஸ் கியோரஸ்தமியின் திரைப்பட பாணியின் சிறப்புகளில் ஒன்று, திரைப்படத்தில் தனது முடிவாக கருத்தாக எதையும் திணிக்க மாட்டார். காட்சிகளையும் கதையின் ஓட்டத்தையும் காணும் சுவைஞர்களே அவற்றை அவரவர் புரிதலுக்கேற்ப தீர்மானிக்கும்படி விட்டுவிடுவார்.

அப்பாஸ் கியோரஸ்தமி விட்ட வெற்றிடத்தில் எனது புரிதல்களை பதிந்துவிட்டேன். இந்த பத்தியை வாசிக்கும் நீங்களும் உங்களுடைய மனவோட்டங்களை பதியலாமே.

அடிக்குறிப்பு:
சந்து என்பதற்கு முடுக்கு என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளேன். இது எங்களூரின் வட்டாரச்சொல் மட்டுமில்லை. நல்ல தமிழ் சொல்லும் கூட. ஒரே பொருளை தரும் பல பதங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் நமக்குள்  மொழி வளர உதவும்.

சான்று: 

முடுக்கு  2: Narrow, winding street;
கோணல்தெரு. முட்டு முடுக்கு மிட்டிடை கழியும் . . . வீதியும்
(பெருங். உஞ்சைக். 33, 16 (http://www.tamilvu.org/ta/library-lexicon-html-srchlxpg-161884)

நன்றி,
சாளை பஷீர்
shalai_basheer@yahoo.com ,
9962841761

திரைப்படம் :

Leave a comment