ஆகஸ்ட் 23,2019 அன்று திருச்சியில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை முழுவதும் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கல்வி உரிமை மாநாட்டினை நடத்தியது. மாநாட்டில் ஆசிரியர் நண்பர்கள் பலர் கலந்துக்கொண்டனர். ஆசிரியர்களின் பார்வையில் இந்த மாநாடு எப்படி இருந்தது என்பதையும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை முன்னிட்டு மாநாட்டில் பேசப்பட்ட விசயங்களை இங்கு தொகுத்துள்ளோம் . தமுஎகச கல்வி உரிமை மாநாடு – கலகல வகுப்பறை சிவா தேசிய கல்விக் கொள்கை முன்வரைவை பலமுறை வாசித்திருந்தாலும் இந்த மாநாட்டில் உரையாற்றப்போகும் பலரின் உரைகளை ஏற்கனவே கேட்டிருந்தாலும் கல்விக் கொள்கை வரைவு குறித்து ஒரு நாள் முழுவதும் பலரும் பேசுவதைக் கேட்கவும் மாநிலமெங்கும் இருந்து ஆர்வமுடன் பங்கேற்க வந்திருப்பவர்களுடன் உரையாடவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். காலை முதல் மாலை வரை பல்வேறு பார்வைகளைக் கொண்ட ஏராளமான உரைகள், நூல் வெளியிடுகள், கலை நிகழ்வுகள் என்று விறுவிறுப்பான மாநாடு. தமுஎகச உறுப்பினர்கள், கல்வி ஆர்வலர்கள், இயக்கத் தோழர்கள் ஏராளமான ஆசிரியர்கள் குறிப்பாக மாணவர்கள் இம்மாநாட்டில் பங்கு கொண்டது முக்கியமானது. தொடர்ந்து உரைகள், ஏராளமான செய்திகள், பல்வேறு பார்வைகள். குறிப்பாக மேனாள் துணைவேந்தர் ஜவகர் பேசியது ஒரு மாற்றுப் பார்வை. வெறுமனே கல்விக் கொள்கையை எதிர்க்காமல் இதற்கு மாற்றாக என்ன செய்யப்போகிறோம்? என்று கேள்வி அவரால் எழுப்பப்பட்டது. இது வெறும் கேள்வியாக நின்றுவிடாமல் இந்த சமூகம் சார்ந்த ஒரு கல்வி முறையை, கல்வித்திட்டத்தை முன்மொழிய வேண்டும். அதற்கான முயற்சிகளில் இருக்கிறேன் விரைவில் அதுவும் வெளியிடப்படும் என்று கூறினார். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி குறித்து இயக்குனர் ரஞ்சித் பேச்சு மற்றும் வா.கீதா பேசியது கல்விக் கொள்கையைத் தாண்டி சமூக நீதி குறித்ததாக இருந்தது. “இந்த அரங்கில் பேசப்படும் அனைத்து செய்திகளும் மக்கள் முன்னிலையில் சொல்லப்படவேண்டும். வீதிகளுக்குச் செல்லவேண்டும். கலைவடிவங்கள் மூலமாக கல்விக் கொள்கை, கல்வி சார்ந்த செய்திகள் மக்களிடம் கொண்டு சொல்லப்படவேண்டும். இதுகுறித்து வீதி நாடகங்களை உருவாக்கினால் நானும் என்போன்ற கலைஞர்களும் நடிக்கத் தயாராக இருக்கிறோம்”.என்று திரைக் கலைஞர் ரோகிணி பேசியதையே இந்த மாநாட்டின் செய்தியாகக் கொள்ளலாம். கல்விக் கொள்கை முன்வரைவு நிறைவேற்றப்படலாம். இப்போதே அதனுடைய கூறுகள் பலவும் செயல்வடிவம் பெற்றுவிட்டன. இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? கல்வி குறித்து மக்களிடம் பேசவேண்டும்,ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செயல்படவேண்டும். அது ஒன்றே கல்வியில் மாற்றங்களை மலரச்செய்யும். தேசிய கல்வி கொள்கை வரைவு கல்வி குறித்த உரையாடல்களை உருவாக்கியிருக்கிறது. திருச்சி கல்வி உரிமை மாநாடு – உமா (பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்) இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு எதிர்வினையாக இந்த தேசியக் கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெறக் கூறி, வரைவுக் கொள்கையை எதிர்ப்பு தெரிவித்து இந்த மாநாடு ஆகஸ்ட் 23 ஏறக்குறைய 13 மணி நேரம் தொடர்ந்து நடந்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட , அரசியல் தலைவர்கள் , கல்வியாள்கள் , பேராசிரியர்கள் , திரைத்துறை கலைஞர்கள் என பல பிரிவுகளிலிருந்தும் பல கோணங்களில் இவ் வரைவு அறிக்கை எந்த வகையில் சரியல்ல என்பதை வலுவாகப் பதிவு செய்தனர். சில ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட நிகழ்வாக இது அமைந்தது. ஒரு ஆசிரியராக எனக்கு இக் கல்விக் கொள்கையில் தரப்பட்டுள்ள கனவுகளின் உறுதி மொழிகள் பிடித்திருந்தாலும் , அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான நிதியோ மற்ற பார்வைகளோ சிறு அளவும் இதில் இல்லை என்பதை இம் மாநாடு தெளிவுபடுத்தியது. தனியார்மயம் , மதவாதம் , அதிகாரமயம் என ஒற்றை அதிகாரக் குவிப்பில் எதிர் வரும் சமுதாயம் கல்வி பெறும் வாய்ப்புகளை இழந்து வெளியேற்றப்படுவர் என்பதை மாநாட்டு நிகழ்ச்சிகள் தெளிவாக விளக்கியது. அந்த வகையில் இந்த மாநாட்டை நடத்தி மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வைத் தந்த தமுஎகசங்கத்திற்கு நாம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஆகஸ்டு 23, கல்வி உரிமை மாநாடு – உதயலட்சுமி
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் பல போராட்டங்கள் துவங்கி நடைபெற்றது திருச்சி நகரில்தான். அதுபோலவே தற்போது வெளிவந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு, மக்களுக்கான பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்காத, சமமான கற்றல் வாய்ப்பை வழங்காத வரைவு எனவும் அத்தகைய கல்வி வரைவை புறக்கணித்து திரும்பப்பெற வேண்டுமெனவும் , திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்,ஆகஸ்டு 23 அன்று கல்வி உரிமை மாநாடு முன்னெடுக்கப்பட்டது.
தமுஎகச கௌரவத் தலைவர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் நிகழ்வை துவங்கி வைத்து, இந்தக் கல்வி முறையின் ஆபத்துகளை விரித்துரைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதி திரு.பி. சுதர்சன் ரெட்டி அவர்கள் வரைவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பாதிப்புகளை விளக்கியும், மும்மொழி திணிப்பை எதிர்த்தும் பேசினார்.
தமுஎகச இயக்கம் என்பதுஇலக்கியத்தை அடிப்படையாக கொண்டது. எனினும் கல்வி உரிமை பற்றி பேசவும் எதிர்க்கவும் செய்கிறது. கல்விக் கொள்கை வரைவு வெளியிட்டது முதற்கொண்டே வரைவை புறக்கணிக்கும் முதல் அறிக்கையை வெளியிட்டது தமுஎகச. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வரைவு முழுமையாக அவரவருடைய தாய் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை தமிழில் மட்டுமே முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது எனக் கூறி மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. விழியன் அவர்களையும் மொழிபெயர்ப்புக்கு உதவிய ஆசிரியர்களையும் மேடையில் அழைத்து கௌரவித்தது மரியாதைக்குரியதாயிற்று.
தமுஎகச தலைவர் திரு. சு. வெங்கடேசன் அவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர் திரு நாராயணசாமி அவர்களும் பேசும்போது இறுதிவரை தேசிய கல்வி கொள்கை வரைவு 2019 ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏற்றுக்கொள்ளக்கூடாத அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் அப்படியே அமுலுக்கு வந்தாலும் திரும்பப் பெறும் வரை தமுஎகச இறுதிவரை போராடும் எனவும் கூறியது, அரசுப்பள்ளிகளை நம்பியிருக்கும் ஏழைப் பெற்றோரின் வணக்கத்திற்குரிய அறிவிப்பாகும். புதுகை பூபாலன் கலை நிகழ்ச்சி மக்கள் மனதில் எளிதில் கருத்தை பதிப்பிக்கும் வண்ணம் சிறப்பாக இருந்தது . குடிநீர் எப்படி கிடைக்கிறதோ அதுபோல கல்வியும் அருகாமையிலும் எளிதாகவும் கிடைக்க வேண்டும் என்று தமுஎகச அருணன் அவர்கள் சொன்னது இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. தற்போது தமிழகத்தின் நம்பிக்கை திருச்சியில் நடந்த ஆகஸ்ட் 23 கல்வி உரிமை மாநாடு. |
தமுஎகச கல்வி உரிமை மாநாடு
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
1 Comment
Nice summary