முதல் நாள் பட்டறை நிகழ்வு: ரொம்ப வருடங்கள் கழித்து ஒரு நாள் முழுவதும் விழுந்து விழுந்து சிரித்த நாள். ஒரே நாளில் அன்னியர்கள் நண்பர்களாகவும், நண்பர்கள் குடும்பமாகவும் மாறிப்போன நாள். ரொம்ப நாள் நேர்ல பார்க்கனும்னு ஆசைபட்ட Energy Booster குழந்தைகள் செயற்பாட்டாளர் இனியனை சந்தித்த நாள். பறை இசையோடு (பறை இசை நரேஷ் & இனியாள்) ஒன்றி நீண்ட நாள் கழித்து நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடிய நாள்.
ரியா(எனது மகள்) நேத்து பள்ளியில் நண்பர்கள் தினத்தை மிஸ் பண்ணிட்டேனு புலம்பிட்டே வந்துட்டு, நிகழ்வில் ரமணி, இனியாள், தன்யஶ்ரீ என்று புதுப் புது நண்பர்களை பெற்ற தினம்.
இரண்டு குழந்தைகளையவே சமாளிக்க நாம படுகின்ற பாடு…அதை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. அப்படியிருக்க நிகழ்வில் உதிரி நாடக நிலம் விஜயகுமார் 4.5 வயதில் இருந்து 12 வயது வரை மொத்தம் 25 குழந்தைகளை ஒரு நாள் முழுவதும் சமாளித்தும் அவர் முகத்துல அப்படி ஒரு சாந்தம். அம்மாடியாய். அவருக்கு மிகப்பெரிய நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். இரவு 7 மணியாகியும் அங்க இருந்து குழம்ப மனசே இல்லாம கிளம்பினோம்
வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பஞ்சு மிட்டாய் குழுவினருக்கு நன்றி மட்டும் அல்ல ஒரு பெரிய ஓ போடலாம்.
பஞ்சு மிட்டாய் 100 வது நிகழ்வு:
உதிரி நாடக நிலம் விஜயகுமாரின் ‘எல்லாரும் சமம்’ சிறார் நாடகம்:
ரியாவின் முதல் நாடக அனுபவம். 2 மணியில் இருந்தே ஒப்பனைகள் ஆரம்பித்து, குழந்தைகள் அனைவரும் அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறிப்போனார்கள். ஒப்பனை செய்த விஜயகுமார், கோமாளி வேல்முருகன், மற்றும் அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி.
யானை, புலி, சிங்கம், எறும்பு, கிளி மற்றும் பூக்கள். ஒவ்வொரு குழந்தைகளும் நடிக்கவில்லை, இயல்பாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள்.
பாவனையிலும் நடிப்பிலும் தூக்கி சாப்பிட்டது புலிகளும் எறும்புகளும் தான், அதிலும் எறும்புகள் தூங்கியது போல் வரும் காட்சிகள் மிக அழகு.
4 மணி நேர பயிற்சியில் 4.5 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் துள்ளளோடும் செயல்பட வைத்து, ஒரு நாள் பழக்கத்தில் அனைத்து குழந்தைகளின் பெயரையும் மறக்காமல் அறிமுகம் செய்த விஜயகுமார் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றிகள். ஒரு கிளி கூண்ட விட்டு பறக்கலனு அறிமுகம் செய்தது செம.
மேடை என்றாலே வலைந்து நெளியும் ரியா அதை உடைத்தெரிந்து அவ்வளவு உற்சாகமாக நடித்தது இரட்டிப்பு மகிழ்சசி.
குழந்தைகளுக்கும் எங்களுக்கும் மறக்க முடியாத இந்த அனுபவத்தை கொடுத்த “பஞ்சு மிட்டாய்” குழுவுக்கும், உதிரி நாடக நிலம் விஜயகுமாருக்கும் அன்பும் நன்றியும்.
பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு முத்தங்கள்
அக்னி கலைக் குழுவின் பறை இசை:
எனக்கு, பறை இசையை நேரில் அனுபவிக்கும் முதல் அனுபவம் இது.குழுவினரின் வேகமும் உற்சாகமும் நம்மை தொற்றி கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. ஒரு ஒரு பறை இசை கலைஞர்களுக்கும் தனித்தனி திறமை.நரேஷ் அவர்களின் வேகம் இப்போது நினைத்தாலும் கூட உடம்பெல்லாம் புத்துணர்ச்சி. சிறுவர்கள் இனியாள் மற்றும் பவன் இருவரின் திறமைகளும் மெய் சிலிர்க்க வைத்தது. நடனம் ஆடிய மங்கை, சிரித்த முகத்துடன் பறை இசைத்த சர்மிளா, கொம்பு மற்றும் சங்கு இசைத்த கலைஞர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களும் 20 நிமிடங்கள் நம்மை மேடையை விட்டு கண் அகற்றவே விடவில்லை.
கூட்டத்தில் விசில் அடித்த நித்யாவை பார்த்து எங்க வீட்டு 4 வயது கிருஷீம் இரண்டு விரல்களையும் வாயில் விட்டு விசில் அடிக்க முயற்சி செய்தது உற்சாகத்தின் உச்சம். நிகழ்வு முடிந்ததும் ரியா தனக்கும் பறை இசை கற்றுக் கொள்ள ஆசை என்றாள். இதுப் போன்ற வார்த்தைகள் தானே இந்த நிகழ்வின் வெற்றி! வாழ்த்துக்கள் அக்னி கலைக் குழு.
கோமாளி வேல்முருகன்:
ஆரம்ப பாடலே அட்டகாசம், மேடையில் தோன்றிய மூணு தடவையும் வேறு வேறு தோற்றம். உடம்பு முழுவதும் பலுான் அடைத்து கொண்டு குழந்தைகளை உடைக்க வைத்த அழகு. தன் உடல் அசைவின் மூலம் மற்றவர்களை மகிழ்வித்து மகிழும் கோமாளி. ரியாவுக்கு இரண்டாம் கோமாளி அறிமுகம். முதல் கோமாளி கதை சொல்லி சதீஸ். அந்த அறிமுகமும் சென்ற வருடம் பஞ்சு மிட்டாய் நிகழ்வில் தான்.
கிருஷ்க்கு முதல் கோமாளி அறிமுகம். அவன் முகத்தில் விதவிதமான பாவனைகள். அப்படியே வேல்முருகனின் ஒவ்வொரு அசைவையும் ரொம்ப ஆழமாக உள்வாங்கினான்.
கதை சொல்லிகள் அனிதா மற்றும் ராம் ப்ரியா
1. ரயில் வண்டி அனிதா கதை சொல்லி ஏற்கனவே கேட்ருக்கேன். கடந்த வருடம் நவம்பர் மாதம் சென்னை போரூரில் ஒரு பள்ளியில் வாசிப்பு முகாமில் அனிதா, வித்யா, பூங்கொடி, நான், ரியா எல்லாரும் கதை சொன்னோம். தொடர்ச்சியாக நிறைய இடங்களில் அவர் கதை சொல்லி வருகிறார். ரயில் வண்டி என்று குழந்தைகள் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். இம்முறை கூடுதலாக தன் உடல் பாவனையில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களையும் அய்யாசாமி தாத்தாவின் கதை மழையில் நனையை வைத்தார். அவரின் கதை சொல்லி பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
(அனிதா சொன்ன கதை இடம் பெற்ற புத்தகம்: அய்யாசாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் மலையாளத்தில்: மாலி, தமிழில்:உதயசங்கர் , வானம் பதிப்பகம் ,விலை: Rs. 80)
2. ராம்பிரியா – கதை சொல்ல ஒரு வரைபடத்தோடு வந்திருந்தார். Brown கலருக்கு தமிழில் என்னனு கேட்டதுக்கு பலருக்கும் பதில் தெரியல. அவர் மொழி, பாவனை எல்லாம் அப்படி ஒரு குழந்தைதனம். அவரின் கேள்விகளுக்கு குழந்தைகள் பதில் அளித்த விதமே பழுப்பு மரத்தில் ஏறிய புப்பா கதை குழந்தைகளை எவ்வளவு கவர்ந்ததுனு சொல்லிரும். ராம்பிரியாவின் கதை சொல்லி பயணத்திற்கு வாழ்த்துக்கள். இவரை கதை சொல்ல உற்சாகப்படுத்துவதே இவரது மகள் தானாம்.
(ராம்பிரியா சொன்ன பழுப்பு மரத்தில் ஏறிய புப்பா கதையை எழுதியது எழுத்தாளர் விழியன் அவர்கள்.)
பாடல்கள் & விளையாட்டு:
1& 2 தின வாழ்க்கையில் மிகவும் தேவையான பாடல்கள். குழந்தைகளை தூக்கத்தில் இருந்து எழுப்ப ஒன்று. குழந்தைகளை தூங்க வைக்க ஒன்று. இரண்டுமே நண்பர் ராஜேஷ் எழுதியது. செம ஜாலியான ரகளையான பாட்டுக்கள். ஆனால் பாட்ட கேட்டுட்டு தூங்குவாங்களானு சந்தேகம் தான். அவ்ளோ ஜாலியா இருக்கு பாட்டு. ராஜேஷ் பாட பஞ்சு மிட்டாய் பிரபு ஆட நிகழ்ச்சி துவக்கமே அமர்க்களம். பாட்டு நாடக ஒத்திகை அப்போ சொல்லிக்குடுத்ததால ரியா தான் ரொம்ப வருத்தப்பட்டா.
(பாட்டு 1: எந்திரிக்க நேரமாச்சு
பட்டப் பகல் ஆயிடுச்சு
உச்சி வெயில் ஏறிடிச்சு
காக்கா குருவி குளிச்சிடுச்சு
காலை சாப்பாட்டை முடிச்சிடுச்சு
பட்டுக் குட்டி தூங்குது
போர்த்திக்கிட்டு புரளுது
பத்து நானும் எண்ணுவேன்
எழுந்திரிச்சா கொஞ்சுவேன்
1 2 3 4 5
6 7 8 9 10)
( பாடல் 2: படுக்கற நேரம் ஆயிடுச்சு
படுக்கற நேரம் ஆயிடுச்சு
வட்ட நிலவும் வந்துருச்சு
காக்கா குருவி தூங்கிருச்சு
வெளவால் ஆந்தை முழிச்சிடுச்சு
குட்டி தங்கம் தூங்கல
குறட்டை சத்தம் கேட்கல
பத்து நானும் எண்ணுவேன்
தூங்கலைன்னா கிள்ளுவேன்
1 2 3 4 5
6 7 8 9 10)
பாடல் 3: எழுத்தாளர் பாவண்ணன் அயா எழுதிய குர்.. குர்… பாட்டு. ஜெயக்குமார் பாட பஞ்சு மிட்டாய் பிரபு ஆட குழந்தைகள் பெரியோர்னு எல்லாரும் பாட்டோட ஒன்றிட்டோம்.
எண் & குடு குடு ராசா விளையாட்டு – பிரபு & சர்மிளா அவர்கள் அழகாக அனைவரையும் விளையாட வைத்தனர். குறிப்பாக குடு குடு ராசா விளையாட்டில் என்னோட ஜோடி, ஆனால் இரண்டு நபர்களோடு (ரியா & க்ரிஷ் ) ஜோடிப் போட்டது சுட்டி ரமணியாதான் இருக்கும்.
சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் பாவண்ணன் ஐயா அவர்கள்:
பாவண்ணன் அயா அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். சிறுவர்களுக்காக நிறைய கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். நிகழ்வில் நரி கதை சொல்லி சிறுவர்களின் சிந்தனையை தூண்டினார். நிகழ்வில் பாடப்பட்ட குர்..குர்…பாடலை எழுதியவரும் ஐயா தான்.
சிறுவர் பாடல் நூல் வெளியீடு:
புத்தகம்: ஏழும் ஏழும் பதினாலாம் (அழ.வள்ளியப்பாவின் பாடல்கள் தொகுப்பு)
பதிப்பகம்: பஞ்சு மிட்டாய்
விலை: Rs. 40
வானம் பதிப்பகம் மணிகண்டன் வெளியிட எழுத்தாளர் பாவண்ணன் ஐயா & குழந்தைகள் செயற்பாட்டாளர் இனியன் (பல்லாங்குழி அமைப்பு) அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
குழந்தைகளுக்கு பரிசு:
” Hand made காத்தாடி” அதை வாங்க வந்த குட்டிஸ் முகத்தை பார்க்கணு . ஹப்பா என்ன ஒரு excitement. நிறைய குழந்தைகள் அதில் மாட்டின pin கலர் கூட செலக்ட் பண்ணாங்க. இதுல post gift service மாதிரி சில குட்டிஸ் வந்து ‘aunty இந்த காத்தாடி சுத்தவே இல்லனு’ complaint வேற. செம க்யூட். சில பெற்றோர் கூட வாங்கிட்டு போய் சுத்திட்டு இருந்தாங்க.
புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை:
ரியா கிட்ட புத்தகத்தை அதிகமா திணிக்கிறேனு சில நேரம் நினைப்பேன். அதனால இப்ப கொஞ்ச நாள் அவளாக கேட்கும் வரை வாசிப்பு பற்றி பேசுவதில்லை. சில மாதங்களாக உடல் நிலை காரணமாக வீட்டில் வாசிப்பு குறைந்துவிட்டது . ஆனால் இந்த இரண்டு நாளில் மீண்டும் ரியாவுக்கு வாசிக்க வேண்டும் என்ற உணர்வு புத்துணர்வு பெற்றுள்ளதாக உணர்ந்தேன். தானாக புத்தகங்களை அலமாரியில் சரி செய்வதும், அம்மா இன்னைக்கும் கொஞ்சம் புக் வாங்கிக்கலாமா? என்று அவளாகவே கேட்டதும் மனதிற்கு மகிழ்வாக இருந்தது. புத்தகத்த்தின் மீதான அவளது ஆர்வம் தொடரும் என்று நம்புகிறேன்.
இந்த நிகழ்வு கொடுத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்வதிலும் மகிழ்கிறேன். இதே மாதிரி சிறுவர்களுக்காகவும் பெற்றோருக்காகவும் மேலும் பயணிக்க பஞ்சு மிட்டாய் குழுவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன்.