குமப்கோணம் தீ விபத்து – சில நினைவுகள் : தியாக சேகர், புதுகை செல்வா, மு.சிவகுருநாதன், ப்ரீத்தி

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஜூலை மாதம் வந்தாலே கும்பகோணம் தீ விபத்து நினைவுகள் மனதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் கடக்க முடியாத நாளாகவே ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. நினைவுகள் அவ்வபோது மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது வெறும் விபத்தா? இல்லை இல்லை என்றே ஒவ்வொரு முறையும் நமக்கு கிடைக்கும் செய்திகள் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீண்ட நாட்களாகவே கும்பகோணம் தீ விபத்துக் குறித்த ஆவணங்களை தேடிக் கொண்டிருக்கிருந்தேன். இன்னும் முழுதாக ஏதும் பொதுவெளியில் கிடைக்காத நிலையில் தான் நேற்று கும்பகோணம் சார்ந்து வசிக்கும் நண்பர்களிடம் தீ விபத்து குறித்து அவர்களது நினைவுகளையும் உணர்வுகளையும் பற்றி கேட்டிருந்தேன். அப்படி நண்பர்கள் பகிர்ந்த விசயங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்தப் பதிவுகள் மூலம் “என்று தணியும்” என்ற ஆவணப் படத்தின் அறிமுகம் கிடைத்தது. அதனுடன் அந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்த நண்பர் புதுகை செல்வா அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. இந்த ஆவணப் படத்தின் மூலம் தன்னுள் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி நிறைய பேசினார் (தொலைபேசியில்). அதில் அவர் சொன்ன முக்கியமான வார்த்தைகள் “அந்த ஆவணப் படத்திற்கு பிறகு, எனது குழந்தை என்னை ஆசையாக கட்டிப்பிடித்தால் கூட தீ விபத்தில் இறந்த‌(கருகிய நிலையில்) குழந்தையை அந்த தந்தை கட்டிப் பிடிப்பதுப் போல் இருக்கும் காட்சி தான் மனதில் ஓடும், என்னால் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை” என்று சொல்லி சில நிமிடத் துளிகள் மெளனத்தில் இருந்தார். அவரது நினைவுகளையும் அந்த ஆவணப் படம் பற்றின அறிமுகத்தையும் தனியாக எழுதிட வேண்டும். தற்போது அவரது நினைவுகளுடன் இந்தப் பதிவுகளை துவங்குகிறேன்.

ஆம் அன்றிலிருந்துதான் தீர்மானித்தேன் எனலாம் – புதுகை செல்வா

மதுரை சரஸ்வதி பள்ளிக்கூட விபத்திற்கு பிறகு தமிழகம் சந்தித்த பல்வேறு குழந்தைகள் மரணத்தில் மக்கள் உணர்ந்த தீ விபத்து அது…எரிந்த குழந்தைகளின் உடலை… அந்த உடலை ஏந்திய பெற்றோர்களின் கண்ணீரை… தனியார் பள்ளிக்கூடத்தின் கல்வி ஊழலை மறைத்து கூரை மீது ஏவிய அரச குரலை… மக்களின் அஞ்சலிகளை… அக்குழந்தைகளில் உயிர்தப்பிய தீ வெந்த காயங்களோடு இன்னமும் துடிக்கும் விஜய்… வலிகளோடு வாழும் பெற்றோர்கள்….

என் காமிராவில் பதிவு செய்த காலம் அது… நடுங்கும் கரத்திலும் விழி மறைத்த கண்ணீரிலும் பதிவு செய்த காலம் அது… க்களும் பார்த்தார்கள்…. அஞ்சலிகளால் மட்டுமே கடந்தார்கள்…ஆனால் மாறிவிடவில்லை எதுவும்

நான் மாறினேன்… கல்வி காசுக்கு வாங்குவதல்ல… அது வாழும் உரிமை… அதனை வழங்குவது அரசின் கடமை

அரசுப்பள்ளிகளை என் மனைவியோடும் என் குழந்தைகளோடும்…. ஏற்றுக்கொண்டேன்…

பயணிக்கிறேன். இறந்த எங்கள் குழந்தைகளுக்கு அஞ்சலி மட்டும் போதுமா என்ன….?

கும்பகோணம் தீ விபத்து 2014 ஜூலை 16 – தியாக சேகர்

இந்த துயரமான கொடூரமான சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன இன்று நினைத்தாலும் நெஞ்சை பதறவக்கிறது.

ஜூலை16 மதியவேலை ஆடிமாதம் நன்கு காற்று வீசும் காலம் தொலைக்காட்சியில் குடந்தை பள்ளியில் தீவிபத்து பல குழந்தைகள் உயிரிழப்பு என்று flash news ,பள்ளின் பெயர் அறிவிக்கப்படவில்லை, செய்தி அறிந்து நான் கபி்ஷ்தளத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டு கும்பகோணம் டவுன் மேனிலைப்பள்ளியில் இறங்கினேன், குடந்தை நகரம் முழுவதும், பெற்றோர்களின் அழுகுரல்கள்,குழந்தைகளின் அழுகுரல்கள் என பதட்டமான சூழல், அனைத்து பள்ளிகளுக்கு முன்பு பெற்றோர்கள் பதற்றத்துடன் குவியத்தொடங்கிவிட்டனர் ,எந்த பள்ளி என்று பெற்றோர்களுக்கு குழப்பம்,பல ஆண்கள் மேலாடையின்றி,வெறும் லுங்கியோடு பதற்றத்தோடு வாகணங்களில் அலைந்தார்கள்,கடைசியக மடத்துதெருவில் உள்ள பள்ளி என்று தெரிந்து கொண்டு குருக்குப்பாதையில் ஓடினேன் பள்ளியை நெருங்கியவுடன், ஒரே மக்கள் கூட்டம் ,எல்லாம் முடிந்திருந்த்து, நர்சிங் கல்லூரி மாண‌வர்கள்,பொதுமக்கள், நெருப்பு விழுங்கிய குழந்தைகளின் உடல்களை, வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் ,பல குழந்தைகளின் உயிர் பள்ளிகூடத்திலேயே பிறிந்துவிட்டது, பல குழந்தைகளின் உடல் பாதி எரிந்து,பாதிஉயிரோடு போராடிக்கொண்டிருந்தார்கள்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதி இல்லை, தனியார் மருத்துவமனை,மருத்துவர்கள், மருத்துவகல்லூரி மானவர்கள்,மக்கள் அனைவரும் அவரவால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தார்கள், அவசரசிகிச்சைக்கு,தற்காலிகமாக தயார் செய்து சிகிச்சை கொடுக்கப்பட்டது,5 நிமிடத்திற்கு ஒருமுறை குழந்தைகளின் உயிர் பிரியும் செய்தி கேட்டுக்கொண்டே இருந்த்து,பெற்றோர்களின் கதறல்கள் நெஞ்சை பிளந்தது ,பல பெற்றோர்கள் மயக்கம் பொட்டு விழுந்து அவர்களுக்கும் சிகிச்சை, அப்போதைய மாவட்ட ஆட்சியர் மாணவர்களோடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார், சில குழந்தைகளை அடையாளம் காணமுடியாமல் பெற்றோர்கள் பரிதவித்தார்கள்,

அதில் ஒரு குழந்தையின் தாய் ,எம்புள்ள இன்னைக்கி பட்டீஷ்வரம் கோயிலுக்கு எங்களோடு வரேன்னு அடம்பிடிச்சுதே, பள்ளிகூடத்துக்கு போன்னு சொல்லி என் பிள்ளைய நானே எமங்கிட்ட கொடுத்துட்டனே என்று கதறிய கதறல்கள் , என்னால் பல நாட்கள் சரியாக தூங்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை
நினைவில் வரும்போதெல்லாம் கண்களில் கண்ணீர் ஊறும் பெருந்துயரம். மனிதனாக பிறந்தால்,எதிர் பாராத,துயரத்தையும்,வலியையும் கடந்து செல்லவேண்டுயுள்ளது. அதன்பிறகு பல கட்டுபாடுகள்,சட்ட விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் பிறர் மீதான அன்பு ,தனிமனித ஒழுக்கமுமே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க ஒரே வழி.

இன்னும் பாடம் கற்க இயலாத பேரிடர்- மு.சிவகுருநாதன்

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 உயிர்கள் கருகி 15 ஆண்டாகிறது. இதிலிருந்து நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீ விபத்திற்கு கீற்றுக் கொட்டகைதான் காரணம் என்ற அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்ததாயிற்று. நீதிபதி சம்பத் ஆணையம் வந்தது; ஏதோ அறிக்கை தந்தது. எல்லாம் கண்துடைப்பாக முடிந்துபோனது. தென்னங்கீற்றின் இடத்தை ஆஸ்பெட்டாஸ் பிடித்தது. புற்றுநோய் உள்ளிட்ட பல தீமைகளால் உலக நாடுகள் தடைசெய்தது குறித்த கவலையெல்லாம் நமக்கு இல்லை. இன்றும் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை தீப்பிடிக்காத பொருளா என்ன? இப்போது மாடிக்கட்டட வகுப்பறைகள் ஊழலால் மோசமான தரத்தில் கட்டப்படுகின்றன. ஒருநாள் இவையும் இடிந்து விழக்கூடும். அப்போது மாடிக்கட்டடங்களும் லாயக்கற்றவை என்று சொல்லப்படுமா? பிறகு வேறு எதை நாடுவது? இந்த மனிதப் பேரிடர் வெறும் நிர்வாகப் பேரிடர் மட்டுமல்ல; மதப்பேரிடரும் கூட. இரண்டு முதன்மைக் காரணங்களைச் சுட்ட முடியும்.

ஒன்று, 15 ஆண்டுகளுக்கு முன்பு அன்று ஆடிவெள்ளி. எனவே பல ஆசிரியர்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்ற பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர். கல்விக் கடமையைவிட இது பெரிதாகப் போய்விட்டது. இவர்கள் வளாகத்தில் இருந்திருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும். கடவுள் மீது பழியைபோட ஊடகங்கள் உள்பட யாரும் முன்வரவில்லை. இன்று அத்திவரதருக்கு ஊடகங்கள் எவ்வளவு பாடுபடுகின்றன என்று பார்க்கிறோமல்லவா!

இரண்டு, உதவிபெறும் பள்ளிக்குள்ளாகவே அவர்களது நிர்வாகத்தில் ஒரு சுயநிதிப்பள்ளி செயல்பட அனுமதித்த அரசின் குற்றம்.

இந்தக் குற்றச்செயல் இன்னும் கூடுதலாக ஒவ்வொரு உதவிபெறும் பள்ளியிலும் கல்வி வணிகம் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. உதவிபெறும் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சென்னையின் பூர்வகுடிகளைப் போல விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களது வசதிகளை சுயநிதிப்பிரிவு மாணவர்களிடம் இழந்து நிற்கக்கூடிய சூழல் உள்ளது. கல்வி வணிகமயமாகும் பேரபாயம் ஒருபுறமிருக்க, அரசு உதவிபெறும் பள்ளிகள் தங்களது வளாகத்தில் சுயநிதி வணிக்கத்தை அனுமதிக்காமல் இருந்தால் இந்த உயிரிழப்புகளையாவது தடுத்திருக்கலாம்.

கடந்த 15 ஆண்டுகளில் இன்று இந்த வணிகம் மிகக் கடுமையாக வளர்ந்துள்ளது. இன்றும்கூட பலர் கண்டுகொள்ள மறுக்கும் செய்தியாகவே இது இருக்கிறது. எனவேதான் நாம் பாடம் கற்கவேப் போவதில்லை என்று உறுதிபடச் சொல்லமுடிகிறது. இதைவிட மெழுகுவர்த்தி ஏந்துவதும் அஞ்சலிப் பதாகைகள் வைப்பதும் மிக எளிதாக இருப்பது நமது இயலாமையை அடையாளப்படுத்துகிறது.

புகைகளினூடே வாழ்வைத் தொலைத்த அந்தக் குழந்தைகளின் முகங்கள் நினைவில் வந்துபோகின்றன. – ப்ரீத்தி

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தினமும் பள்ளிக்கு அந்த வழியாகத்தான் செல்வேன். மெயின் ரோட்டிலேயே ஸ்ரீ கிருஷ்ணா பள்ளிக் கட்டடம். கார் ஷெட்டின் கதவு போல ஒரு கதவு. எப்போதுமே பிள்ளைகளை உள்ளே தள்ளி மூடிக்கொண்டே இருப்பார்கள். எப்போதாவது லேசாகத் திறந்து வைத்திருப்பார்கள். அப்போது அந்த இடுக்கின் வழியே நான்கைந்து படிக்கட்டுகள் தெரியும். மன்னர் காலத்தில் கோயில் கோபுரத்தின் உட்பகுதியில் ஏறிச் செல்ல குறுகிய ரகசிய படிக்கட்டுகள் இருக்குமே. அதனையொத்த படிக்கட்டுகள் அவை. மூடி வைத்திருக்கிற குகை மாதிரியே இருப்பதால், அந்தக் கட்டடத்தின் உள்ளே எப்படி இருக்கும் என அறிகிற ஆவல் இருந்தது. அந்தக் கறுப்பு நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. உடல்நிலை சரியில்லாததால் நான் அன்று என் பள்ளிக்குச் செல்லவில்லை. “கிருஷ்ணா ஸ்கூல்ல தீ புடிச்சுக்கிச்சாம் ப்பா… எங்கத் தெரு பிள்ளையெல்லாம் படிக்குதுப்பா” என்றபடி சைக்கிளில் சென்ற ஒருவர் ஓலமிட்டபடியே சென்றார். “அந்தத்தெரு முழுக்கப் புகை, உள்ளேயே போக முடியல. எல்லாம் வாழை இலை அறுத்து எடுத்துக்கிட்டு பெரியாஸ்பத்திரிக்கு ஓடுங்க” என்று ஆளுக்கொரு பொருளோடு ஓடுகின்றனர். ஈர சாக்கு, துணி என கிடைத்ததெல்லாம் எடுத்துக்கொடுத்து அனுப்புகிறோம். எங்கள் ஊர் முழுக்க மரண ரேகை படர்ந்தது. எனக்குத் தெரிந்து அங்கு படித்த அத்தனை பிள்ளைகளும் கருகித்தான் போனார்கள். எல்லா சடலங்களையும் வெளியே எடுத்தாச்சு. மளிகைக் கடை பாய் அண்ணனின் மகளைத் தேடுகிறார்கள். மருத்துவமனையிலும் இல்லை; பள்ளியிலும் இல்லை. எங்கேயும் பயந்து ஒதுங்கியிருப்பார்கள் என இரவு வரை தேடுகிறார்கள். மீண்டும் அடுக்கி வைக்கப்பட்ட சடலங்களைப் பார்க்கிறார்கள். அடையாளம் தெரியவில்லை. முதல் நாள் புதிதாக வாங்கிப் போட்டுவிட்ட கால் கொலுசை கருகிய எலும்புக்கூட்டின் கால்களில் காண்கிறாள அந்த அம்மா. மயங்கி விழுகிறாள். வெடித்து அழுகிறாள். பித்துப்பிடித்தவள் போலப் பேசிக்கொண்டே இருந்தாள். இப்படி ஒவ்வொரு தாய்க்கும் ஒவ்வொரு வலி. எங்கள் ஊரின் இருண்ட நாளிலிருந்து நாங்கள் மீள்வது அத்தனை சுலபமாயனதாய் இல்லை. அடுத்த நாள் அந்தப் பள்ளி வழியாய் பள்ளிக்குச் செல்கையில் என் உடல் நடுங்கியது. உடைந்த சன்னல் கம்பிகளின் வழியாக அணில் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த ஏதோ ஒரு சிறுமியின் புன்னகை தெரிந்துவிடாத என்கிற ஏக்கம் அது. இன்றும் அந்தச் சன்னலை அதே நம்பிக்கையோடு கடக்கிறேன். புகைகளினூடே வாழ்வைத் தொலைத்த அந்தக் குழந்தைகளின் முகங்கள் நினைவில் வந்துபோகின்றன.

யார் காரணம்? [ பெயர் தெரிவிக்க விரும்பாத நண்பர்]

அப்போது ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தோம் தேர்விற்கான படிக்கும் விடுமுறை( Study Holidays) வாடகை வீட்டில் புதுக்கோட்டையில் மாணவர்கள் 40 பேரும் ஒரே வீட்டில் தங்கி தேர்விற்கு படித்து வந்தோம். அவசர அவசரமாக என்னையும்( திருவாரூர்), எனது நண்பன் மதுவையும் ( கும்பகோணம் – சோழபுரம்) இருவரையும் தேடிய வீட்டின் உரிமையாளர் எங்களிடம் கோர செய்தியைக் கூற கீழிறங்கி 40 ஆசிரியப்பயிற்சி மாணவர்களும் தொலைக்காட்சி பெட்டியில் தஞ்சமானோம். பரபரப்புடன் இருந்தது. சாலையில் அதிக கூட்டம். புதுக்கோட்டை தனியார்/ அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைக் காண பெற்றோர்கள் பள்ளியை நோக்கி விரைந்தனர்.

இருவரும் கிளம்பி மறுநாள் அப்பள்ளிக்குச் சென்றும், காயம்பட்ட அக்குழந்தைகளை காணவும் சென்றோம். மனம் பதபதைத்தது. 10 ஆண்டுகள் கழித்து ஆவணப்படம் எடுத்திடும் ஒளிப்பதிவாளர் அண்ணன் கூறியது எனது மனதை மேலும் மோசமாக்கியது. அந்த ஆண்டில் அன்று (16/07/2004) ஆடி விசேசமான நாள் என்பதனால் ஆசிரியர்களில் சிலர் அருகில் இருந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர் என்பதும், தீ பற்றிய உடன் அக்குழந்தைகளை சரியாக அப்புறப்படுத்த ஆசிரியர்கள் இல்லை என்பதனையும் அறிந்து வேதனை அடைந்தேன். தன் மாணவர்களை காப்பாற்றிட தனது உயிரையே கொடுத்த நாகக்குடையான் பள்ளி ஆசிரியை சுகந்தியின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பிரிவினையும், அரசு உதவி பெறும் பிரிவினையும் ஒரே நிறுவனம் வைத்துக் கொண்டு அரசினை ஏமாற்றி விதிகளை மீறுவதனையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சம்பவமாகவும் – இதனை நோக்கிடலாம்.

நன்றி,
பிரபு
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

Leave a comment