புதிய கல்விக் கொள்கை 2019: ஓர் விமர்சனப் பார்வை – கோமதி

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புத்திசாலிகளும் பலசாலிகளும் நாட்டை ஆள படைக்கப்பட்டவர்கள், ஏனையோர் அனைவரும் அவர்களுக்கு அடிமைகளாக பணியாற்ற படைக்கப்பட்டவர்கள் “-இக்கூற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019.

திட்ட வரைவு முழுவதும் “தரமும் தகுதியும் திறமையும்” பெற்ற சொல்லாடல் லாவகமாக புகுந்து விளையாடுகிறது. இது மீண்டும் நவீனமயமாக்கப்பட்ட வர்ணாசிரமத்தையும், குலக்கல்விமுறையும், இந்தி மொழி திணிப்பையும் ஏதோ நாட்டின் வளர்ச்சிக்கு என்ற  தொனியில் ஓரே இனம், ஒரே மொழி என்ற காவிஅரசியல் குரல் பரவலாக, பொறுப்பேற்ற உடனே இந்த வரைவுதிட்டத்தை வெளியிட்டுயிருக்கிறார்கள். குடிமக்கள் அனைவருக்கும் தரமான உணவு, தரமான குடிநீர், தரமான காற்று, தரமான பண்டங்கள் கிடைக்க வழிவகை செய்யாத அரசாங்கம் கல்வி மற்றும் வாய்ப்புகளை மட்டும் தரம் வாய்ந்தவர்களுக்கே கொடுப்போம் என்று இந்த திட்ட வரைவு மூலமாக கூறுவது நியாயமற்ற ஏற்றதாழ்வுகளை நிலைநிறுத்த முயற்சிக்கும் தன்மையாகும்.

தொழிற்கல்வி, பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் மற்ற பாடங்களோடு சேர்ந்து வழங்கப்படும் என்கிறது தேசிய கல்விக் கொள்கை 2019. தொழிற்கல்வி என்பது அந்தந்த ஊர்களில் நிலவும் தொழிலை மையப்படுத்தி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விவசாய நிலப்பகுதியில் வாழும் பிள்ளைகள் விவசாயம் கற்க வேண்டும் . தொழிற்சாலைகள் உள்ள பகுதி மாணவர்கள் அத்தொழிலை கற்க வேண்டும். பணக்கார மாணவர்கள் அவர்களுக்கேற்ற Robotics படிக்க வேண்டும் . விவசாயி மகன் விவசாயி, தொழிலாளியின் மகன் தொழிலாளி முதலாளியின் மகன் விஞ்ஞானி. இது தொழிற்கல்வியா? அல்லது குலக்கல்வியா? சமமற்ற சமூதாயத்தில் சமத்துவம் நிலவாதபடி பார்த்து கொள்ளும் ஒரு சொல் தான் தரம். தரம் என்ற பெயரில் சிலருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு பலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மறுப்பதே இந்த தொழிற்கல்வி முறையாகும்.

பிரதிநிதித்துவம் இல்லாத (under represented group) பிரிவினர்கள் என்ற புதிய சொல் பயன்படுத்தபட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து இப்பிரிவில் SC/OBC/ST மற்றும் பெண்கள் உள்ளதாககொள்ளப்படுகிறது. வரைவுத்திட்டம் முழுமையும் இவர்களுக்கான கல்வி வாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீடு குறித்து பேசப்படவே இல்லை. இது காலகாலமாக இந்துத்துவ அரசியல் முன்வைக்கும் கோரிக்கை. சமூகநீதியை நிலைநாட்ட குறைந்தப்பட்சமான இருந்துவந்த இடஒதுக்கீடு என்ற ஒன்றை ஒழித்துக்கட்டும் நோக்கம் என்பது வெளிப்படையாக பார்க்கமுடிகிறது. மேலும், இப்பிரிவினருக்கான “சிறப்பு கல்வி மண்டலம் தனிப்பள்ளிகள் துவங்குதல் என்பதும் இப்பிரிவினர் அதிகம்படிக்கும் பள்ளிகள் குறிப்பாக மலைவாழ் பகுதிகளில் அவர்கள் சமூதாயத்தில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அவர்களையே அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்தல் போன்ற அனைத்து திட்டங்களும் இப்பிரிவினரை தனிமைப்படுத்துவதும் ஒருங்கிணைந்து சமமாக வாழபோராடடிய மண்ணில் சாதிவாரியகவும் இனவாரியகவும் தனிமைப்படுத்த திட்மிட்டு உருவாக்காப்பட்டுள்ளதாக உணரசெய்திறது இந்த கல்வி திட்டவரைவு.

முரண்பாடுகளின் மூட்டையாக

இயல் 4 , “கலைத்திட்டம் மற்றும கற்பித்தல் “ என்ற தலைப்பில், பள்ளிக்கல்வியை 5+3+3+4 அதாவது 5 ஆண்டுகள் முன்மழலையர் மற்றும் அடிப்படைக்கல்வி 3 ஆண்டுகள் பின் தொடக்க நிலை 3 ஆண்டுகள் உயர் தொடக்கநிலைக் கல்வி 4 ஆண்டுகள் என கட்டமைத்துள்ளது. இதன் மூலம் 3 வயதில் பள்ளிக்கு வரும் குழந்தை 18 வயதுவரை பள்ளியில் பாதுகாப்பாக கல்வி கற்கும் என கூறப்பட்டுள்ளது.  இது உண்மையில் மாணவர்களை மேலும் மனஅழுத்தத்திற்கும் உண்டாக்ககூடிய மதிப்பீட்டு தேர்வுமுறையை  கொண்டுள்ளது. தேர்வே தேவையில்லை,மாணவர்கள் மகிழ்ச்சியோடு கற்கும் முறை நாட்டின் மேல்தட்டுவகுப்பனர்களுக்கு கிடைக்ககூடிய கல்விமுறை நாட்டில் நடைமுறையிலுள்ள போது, கல்விக்காக போராடும் எளியோருக்கு தேர்வு மதிப்பீடு என்று ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்த்துவது அவர்களை ஒதுக்குவதற்காக உருவாக்கப்படுகிறது.

மொழிக்கல்வியில் முரண்பட்டு நிற்கிறது இந்த இயல். தாய்மொழிவழிக்கல்வியே சிறந்தது என்ற வாதத்தை முன்வைத்து துவங்குகிறது. ஆங்கிலம் எதற்கு? ஆங்கிலம் தேவையில்லை என்று வந்து மும்மொழிக் கொள்கையில் இந்தி சமஸ்கிருதம் தினிப்பில் முடிகிறது.  முரண்பாடுகள் மற்றும் எதிர்ப்பு குரல்களுக்கு  ஏற்ப இந்தி என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்து மீண்டும் இந்தியை திணிப்பை நோக்கமாக கொண்டுள்ளது. எம் நாடு பண்மைதன்மை வாய்ந்த நாடு எனவே தேவை ஏற்படும் போது மொழியை உட்கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் நாங்கள். உங்கள் திணிப்பு வேலை இங்கே வேண்டாம். மூச்சுக்கு முன்னூறு முறை தாய்மொழியே புரிதலை கொண்டுவரும் என்று பேசும் திட்டவரையை பொதுமக்கள் படித்து புரிந்து கருத்து தெரிவிக்க ஏதுவாக அவரவர் தாய்மொழியில் வழங்கத் தவறியது வேதனையே!

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டிற்கு இரண்டு என்று 8 பருவத்தேர்வுகள் (semester exams)  நடத்தப்படும் இவற்றுள் சில பாடபிரிவுகள் பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும் மற்ற முக்கிய பாடங்களான அறிவியல், கணிதம், இந்திய வரலாறு, உலக வரலாறு, வணிகவியல் போன்ற பிரிவுகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். NEET மருத்துவத்திற்கு JEE பொறியளுக்கு மீதமுள்ள கல்லூரிகள், பல்கலைகழகங்களில் சேர National Testing Agency (NTA) தேர்வை 2020 ல் இருந்து கொண்டு வருகிறது. கல்லூரிகளில் சேர நாடு முழுவதும் தேசிய அளவில் இந்த NTA தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண்களே நம் மாணவர்களின் திறனை நிர்ணயிக்கின்றன என்பதை மேற்கண்ட தேர்வுகளின் மூலம் அறிவிக்கிறது நம் அரசாங்கம்.

கல்வி தனியார் மயமாக்கள் :

இயல் 8 ல் கல்வி தனியாரிடம் ஒப்படைக்கும் பொது தனியார் துறை கூட்டு  (public private partnership) செயல்பாட்டை முன்வைகிறது. தனியார் பள்ளிகள் என்று குறிப்பிடும் போது தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள் மற்றும் பணம் ஈட்டுவதற்காக வணிக நோக்கோடு நிறுவப்பட்ட பள்ளிகள் இவைகளை பற்றிய விளக்கமோ வரையறையோ இல்லை. “லாப நோக்கம்” இல்லாத தனியார் பள்ளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்களம் நடத்தும் பள்ளிகளைத் தவிர பெரு முதலாளிகள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கவும் மக்களை சுரண்டி பணம் பார்க்கவுமே உள்ளன என்பதை அரசாங்கம் மறக்கிறதா? அல்லது மறைக்கிறதா?

அப்படிப்பட்ட தனியார் பள்ளிகளை அரசாங்கம் விதித்த விதிமுறைகளுக்குள் கட்டுப்பட்டு இயங்குகிறதா? என்பதை கண்காணித்து அவைகளை முறைப்படுத்துதல் அங்கீகாரம் வழங்கும் முறையை இத்திட்ட வரைவில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் பொறுப்பை பெற்றோரிடம் ஒப்படைகிறது. நம் நாட்டில் பெற்றோர்கள் மூன்று வகையினர். பணம் படைத்த பெற்றோர் பள்ளி நிர்வாகம் கேட்கும் பணத்தை வாரி வழங்குவர். இரண்டாவது வகை பள்ளி கட்டணத்திற்காக கடன்வாங்குவோர். மூன்றாவது இவர்கள் மொழியில் சொல்லபோனால் பிரதிநிதித்துவம் இல்லாத பரிவினர். இதில் யார் தனியார் பள்ளிகளை கண்காணித்து முறைப்படுத்துவர் என்பது கேள்விக்குறி?

தனியாரை ஊக்குவிக்கும் விதமாக தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முழு சுதந்திரம் வழங்குவதாக திட்ட வரைவு கூறுகிறது. இது கேலிக்கூத்து.  பள்ளிக்கல்வி மேம்பாடு என்ற அடிப்படையில் யார்வேண்டுமானலும் பள்ளியில் நுழையலாம் என்பதையும் வலியுறுத்துகிறது. ஏற்கனவே பல மாநிலங்களில் மதிய உணவு திட்டம் தனியாருக்கு கொடுத்துவிட்டது அதே போல் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மாநில கல்வியில் நுழைத்துள்ளது இப்போது அதை சிகப்புகம்பளம் போட்டு வரவேற்கிறது. நாடு தனியார் கையில் இருக்கறது ஆகைகயால்  இனிபள்ளியும் தனியார் கையில் போகிறது எனவே அடுத்த தலைமுறைக்கு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக போகிறது.

பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் வளங்களை பற்றி பேசுகிறது இயல் 7. தரமானகல்வி மாணவர்களுக்கும் என்று பல தேர்வுகள் நடத்தும் அரசு தரமான கல்வி வழங்க வளங்களை ஒரு பள்ளிக்கு மட்டும் வழங்குமாம் அதை சுற்றியுள்ள பள்ளிகள் அனைத்தும் அவ்வளங்களை திறமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாம். இது என்ன நியாயம்.  நம் நாட்டில் ஒரேயொரு வகுப்பறை மட்டுமே கொண்ட குடிநீர் வசதிகளும், கழிவறை வசதிகளும் அற்ற பல்லாயிரம் பள்ளிகள் உள்ளன. அதே சமயம் அதிநவீன தொழிநுட்ப வசதியோடு இயங்கும் சில பள்ளிகளும் உள்ளன. எனவே இத்திட்ட வரைவு ஒரு பள்ளிக்கான குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகள் என்ன இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்ய வேண்டும் இது குறித்த தகவல்கள் இத்திட்ட வரைவில் இல்லை. மேலும் கழிவறையோ, குடிநீரோ இல்லாத பள்ளிகளில் நாங்கள் விளையாட்டு கற்றுத்தருகிறோம், பாடல், நடனம் , யோகா , சமஸ்கிருதம் கற்றுத் தருகிறோம் என்பதெல்லாம்  அர்த்தமற்ற பேச்சாகும் .  இது பார்ப்பனியத்தை தூக்கிப்பிடிக்கும் கலைவடிவங்களை பாடதிட்டத்திலும் மாணவர்களிடத்தில் கொண்டு செல்வதே நோக்கமாக கொண்டுள்ள இந்த இந்துத்துவ அரசின் செயலின் வெளிபாடு.

வளங்களை பகிந்துகொள்ளுதல் என்பது கணிப்பொறி , விளையாட்டு பொருட்கள், விளையாட்டு மைதானம் மட்டுமின்றி ஆசிரிய வளத்தையும் உள்ளடக்கியதே. பள்ளிக்கு பாடவாரியாக ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் என்று கல்வி மாற்றங்களை கொண்டுவர போகிறது இந்த தேசிய கல்விக் கொள்ளை 2019?

ஆசிரியர்கள்:

ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி இனி D.T.Ed கிடையாது. 4 ஆண்டுகள் பட்ட படிப்பு அதாவது இளநிலை பாடப்பிரிவோடு சேர்ந்த B.Ed எனபதை முன்மொழிகிறது. ஆசிரியர் தேர்வு முறை மற்றும் நியமனங்களில் முறைகேடுகளுக்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு படிநிலைகள் கடந்தே வரவேண்டும்.  1) TET Exam 2) NTA Exam 3) நேர்காணல் 4) மாதிரி வகுப்பு எடுக்க வேண்டும். மேலும் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு , பணி உயர்வு போன்ற அனைத்தும் இனி பணிதரத்தை பொருத்தே வழங்கப்படும். தரம் என்பது அவர்களுக்கு போடும் தாளத்தையும் உள்ள‌டக்கியது. தாளம் போடுவர்கள் தரமானவர்கள் என்று அடிமைகளை உருவாக்கும் முறை. பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் இவர்களை தவிர்த்து “Leadership position”,  என்பது பேசப்படுகிறது. இவர்கள் “school complex “ என்று சொல்லப்பபடுகின்ற கூட்டுபள்ளி வளாகததின் தலைவர்களாக செயல்படுவர். இவர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தடுக்கப்படுவர்.

இதுவரை நான் கூறியவை பள்ளிக்கல்வி குறித்த கருத்துகள் மட்டுமே இந்த கொடுரங்கள் இன்னும் நீளுகிறது உயர்கல்வி குறித்து இந்த வரைவுதிட்டத்தில். ஆசிரிய பெருமக்களே நம் எதிர்கால இந்திய தலைமுறையினரின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யவிருக்கும் இந்த ஆவணத்தை படித்து தங்கள் மேலான கருத்துகளை அரசிற்கு சமர்ப்பியுங்கள் வளமான மாணவ சமுதாயம் வளர வழிகாட்டுங்கள். இல்லையெனில் நாளைய தலைமுறை நம்மை கேள்விகேட்கும் அதற்கு மெளனம் பதிலாகயில்லாமல் , போராடும். போராட்டம் என்பது நம் வாழ்க்கை அதுவே நம் மகிழ்ச்சி. நாளைய தலைமுறையில் மகிழ்ச்சியும் நம் போராட்டத்தில் தான் உள்ளது.

கோமதி,
ஆசிரியர்,
சவராயலு நாயகர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி,
புதுச்சேரி

நன்றி : தீக்கதிர் (http://www.theekkathir.in)

Leave a comment