தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தேர்தல் முடிவுகள் வெளியான சூட்டுடன் தேசிய கல்விக் கொள்கை வரைவும் வெளியாகியுள்ளது. சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளில் வெளிவருமா? என்ற கேள்விக்கு விடையில்லாத போது இந்த வரைவு பற்றிய கருத்துக்களை பொதுமக்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தர வேண்டும் என்பதனையும் அறிவித்துள்ளது. இது போதுமான கால அவகாசமா? என்ற கேள்விகளை எழும் போது தான். அடுத்தாக மும்மொழிக் கொள்கை வழியே இந்தி திணிப்பு பற்றிய விவாதங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக அரசும் வரைவை திருத்தம் செய்து வெளியிட்டது.

இந்நிலையில் தான் தமிழகத்தில், சில நண்பர்களின் முயற்சியால் தன்னார்வமாக இந்த வரைவை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளனர். இம்முயற்சியை எழுத்தாளர் விழியன் மற்றும் பாரதி புத்தாகலாயம் துவங்கி 50 தன்னார்வலர்களின் துணையோடு வெற்றிக்கரமாக செய்து முடித்துள்ளனர். இதனை செய்துமுடித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

தமிழில் வெளியானதும் பல விவாதங்களும், கூட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. நண்பர்கள் பலரும் தங்களது கருத்தினை பகிர்ந்து வருகின்றனர். இந்தக் கல்விக் கொள்கை பற்றிய கருத்துகளையும், விவாதங்களையும், உரையாடல்களையும் பஞ்சு மிட்டாய் இணையதளத்தில் தொகுக்க திட்டமிடுகிறோம். அதன் முதல் பதிவாக இந்தக் கல்விக் கொள்கை பற்றிய சில பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு.

எழுத்தாளர் விழியன் அவர்களின் பதிவு :

அன்புள்ள பெற்றோர்களே !

தேசிய கல்விக் கொள்கை (வரைவு) என்பது எதோ கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களுக்கான விஷயம் மட்டும் அல்ல. நம் மக்கள் மூன்று வயது முறை கல்லூரி முடித்து ஆராய்ச்சி செய்யும் வரையில் கல்வி எப்படி கொடுக்கப்படும் என்பதற்கான ஒரு கட்டமைப்பு. சரி ஒரு பெற்றோராக இதில் எங்கெல்லாம் பாதிக்கப்படுவோம். நமக்கான முக்கிய புள்ளிகள் என்ன?

1. இனி அரசு பள்ளிகளைப் போலவே தனியார் பள்ளிகளையும் சரிசமமாக அரசு ஊக்குவிக்கும். தனியார் பள்ளிகளெனில் அவர்கள் பள்ளிக் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நிர்ணயித்துக்கொள்ளலாம் ஆனால் வருடா வருடம் ஏற்றக்கூடாது (சும்மா அவங்களை கட்டுப்படுத்தறாங்கலாம்)

2. நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டு கல்லூரிக்கு இனி எளிதாக சென்றுவிட முடியாது. தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய முடியும்.

3. அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவை மூடப்பட்டு வேறு பள்ளிகளுடன் இணைக்கப்படும். (பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே நீலகிரியில் பத்து பள்ளிகள் மூடப்பட்டு இணைக்கப்பட்டன)

4.மாங்கு மாங்கு என விடியற்காலை எழுந்து டீ, காபி போட்டு படிக்க வைத்த மேல்நிலைச் சான்றிதழுக்கு இனி எந்த பயனும் இல்லை.

5. டியூசன் / கோச்சிங் செண்டருக்கு கட்ட இப்போதே வைப்பு நிதி, லோன் போட்டு வைக்கவும்.

6. கட்டாயம் இனி மூன்று மொழி உண்டு.

7. ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளில் அறிவியல் கணிதம் ஆகியவை இரண்டு மொழியில் கற்றுத்தரப்படும்.

8. சமஸ்கிரிதம் கட்டாயம் கற்றுத்தரப்படும், ஆகவே விரைவில் ஒரு மாதத்தில் சமஸ்கிருதம் புத்தகம் வாங்கவும்.

9. பத்து ஆண்டுகளுக்குள் தானாக டிகிரி வழங்காத கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுட்ன இணைக்கப்பட்டுவிடும். அந்த கல்லூரிகள் நூலகக வளாகமாகோ தொழில் பயிற்சி வளாகமாகவோ மாற்றப்படும் (நீங்க படித்த கல்லூரிகளை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுவது நல்லது)

10. தற்சமயம் ஆசிரியர் பணிக்கு ஏராளமான காலியிடம் இருந்தாலும் அரசு பணியிடங்களை நிரப்பவில்லை. இந்த கல்விக் கொள்கையின்படி இன்னும் நிறைய ஆசிரியர்கள் தேவை. அப்ப உங்க பிள்ளை படிக்கும் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் இருப்பாங்க?

11. தமிழ் நாடு அரசு பின்பற்றும் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

12. பத்தாம் வகுப்பு – 12ஆம் வகுப்பு இடைநிற்றல் அதிகம். 12ஆம் வகுப்பு – கல்லூரிகள் இன்னும் அதிகம். இந்த கல்லூரியில் சேரும் Procedureகள் இன்னும் இடைநிற்றலை அதிகரிக்கும்.

13. எட்டாம் வகுப்பு முதலே துணைப்பாடமாக (விருப்பப்பாடம்) தொழில்சார் கல்வி வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவன் கூட இதனால் படிக்கமாட்டான். வேறு மொழியில் கிராமப்புற மாணவனுக்கு இந்த எலக்ட்ரிக்கல், நகரப்புற மாணவனுக்கு ரொபோட்டிக்ஸ்.

14. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான‌ தேர்வுகள் நடத்தப்படும்.

15. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலை கல்வியாக கருதப்பட்டு எட்டு பருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும். அரொ ஓ சம்போ !

16. தாய்மொழிக்கல்வியே சிறந்தது ஆனால் ஆங்கில வழிக் கல்வியை மட்டும் ஊக்குவிக்கப்படும்

17. பள்ளிகளுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம், ஆசிரியர்களுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம்னு ஆயிரத்து நானூத்தி முப்பத்தி எட்டு வாக்குகள். ஆனால் இதற்கு தேவையான நிதி எங்கிருந்து வரும்னா பெப்பே !

18. 10+2 என்று இருந்த பள்ளி கல்வி முறை 5+3+3+4 என்று மாற்றி அமைக்கப்படும்

19.கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இனி மாநில அரசுக்கு இல்லை! அதுமட்டுமல்ல, அதன் பாடத்திட்டத்திலும் மாநில அரசு தலையிட முடியாது. அதற்கென்று “பொதுக் கல்விக் குழு” (General Education Council) என்ற ஒன்று நிறுவப்படும்.

20. இது தான் முக்கியமான பாயிண்ட். இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் இந்த கல்விக் கொள்கையில் இருக்கு. இதனை சாம்ன்ய மனிதர்களாகிய நாம் எதுவும் செய்திட முடியாது கருத்து கேட்கவும் இன்னும் ஒரு வாரமே மீதம் இருக்கு (ஜூன் 30). ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கல்வி பற்றிய புரிதலை நமக்குள் விதைக்க வைக்க வேண்டும். இது கட்டாயம் நிறைவேறும், அப்படி நிறைவேறினால் மினிமம் டேமேஜிற்கு என்ன செய்ய முடியும் என்றும் பேச வேண்டும்.

*மிக முக்கியமாக இது சமமற்ற ஒரு களத்தினை உருவாக்கும் முயற்சி. சிலர் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கலாம், சிலர் இன்னும் எழ கூட முடியாமல் இருக்கலாம். இந்த கொள்கை இந்த பிளவினை மேலும் மேலும் அதிகரிக்கச்செய்யும். அதற்காகவேனும் கை கேர்க்க வேண்டும்.*

*வாசிப்போம். விவாதிப்போம். புரிந்துகொள்வோம். ஒன்றாய் கைகோர்த்து பயணிப்போம்*

பெற்றோர்கள் சார்பாக
விழியன்

ஏன் தேசியக் கல்விக் கொள்கையை வாசிக்க வேண்டும்?  – ஆசிரியர் உமா

தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு 2019 நம் தமிழகத்தில் அதிகமான எதிர்ப்பு அலைகளை வீசக் காரணமாக பல அபத்தங்களும் ஏமாற்று சித்து வேலைகளும் உடையதாக இருக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே 484 பக்கங்களில் கொடுத்து எந்த ஒரு மாநிலப் பிராந்திய மொழியிலும் மொழி பெயர்க்காது மத்திய அரசு வஞ்சித்துள்ள வேளையில், மாநில அரசு செய்திருக்க வேண்டிய மொழிபெயர்ப்பு பணியை நம் தமிழகத்தில் ஒரு வாட்ஸ் அப் குழு வழியாக தன்னார்வலர்களைக் கொண்டு சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் எழுத்தாளர் விழியன் &  பாரதி புத்தகாலயம்  தோழர் நாகராஜன் இருவரும் .

தமிழக ஆசிரியர்கள் அனைவர் சார்பாகவும் அன்பும் நன்றியும் அனைத்து மொழிபெயர்ப்பு உழைப்பாளர் தோழர்களுக்கும் தெரிவிப்பதோடு ….

ஏன் இது ஏற்புடையதாக இல்லை , ஒரு பக்கம் தமுஎகச இதை திருப்பி எடுத்துக் கொள் என கண்டனம் தெரிவிக்கிறது ,
மாணவர் அமைப்பு  தலைவர் தங்கள் குழு சார்பாக இந்தக் கல்விக் கொள்கையை எரிக்கப் போகிறோம் என்கிறார்.
இவர்களெல்லாம் ஏன் எதிர்க்கின்றனர், என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் 484 பக்க தேசியக் கல்விக் கொள்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை வாசித்து விவாதிப்போம் , குறிப்பாக ஆசிரியர்கள்

வாசிக்கவில்லை எனில் நாளை நாம் இருண்ட காலத்திற்குள் நிலையாக மாட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே ….. உடனே பதிவிறக்கம் செய்வோம் வாசிப்போம்.

– உமா

புதிய கல்விக் கொள்கை 2019. விவாதித்து, நீக்கம் செய்யப்பட வேண்டியவை. – ஆசிரியர் மதுரை சரவணன்

1. முன்பருவக் கல்வி முறை – முற்றிலும் பொருத்தமில்லா ஒன்று.

நல்ல வேளை அபிமன்யு கல்வி முறை எனக் குழந்தை வயிற்றில் வளரும் போதே கல்வி கற்பிக்கும் திட்டத்தை முன்மொழியவில்லை .

2. 3 5,8 ஆம் வகுப்புகளில் கற்றல் திறன் அடிப்படையிலானத் தேர்வு – இது இடைநிற்றலை அதிகரிக்கும் ( 1-8 தேர்வு தேவையில்லை என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். )

3. கல்லூரி சேர வேண்டுமா? – தேசிய தகுதித் தேர்வில் பாஸ் செய்ய வேண்டும் என புககொ வலியுறுத்துகிறது. ஆக, டியூசன், கோச்சிங் என சென்று படிக்கும் வசதியானவருக்கே கல்லூரி.

கல்லூரி கல்வி என்பதில் மருத்துவம், இன்ஞினியரிங், சட்டம் போன்ற புரபெசனல் படிப்புகளும் அடங்கும். 4 வருடம் படிப்பு. எம.பில் படிப்பு இனி இல்லை. பட்ட மேற்படிப்பில் 4 வருடம் அதில் ஆராய்ச்சி படிப்பு சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது.

4. ஆறுவயதிலிருந்து மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இந்தி மறைமுகமாக படிக்க தூண்டப்படுகிறது.

5. சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

6. எட்டாம் வகுப்பு முதல் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தொழிற்கல்விக்கு தள்ளப்படுகிறார்கள் .

இன்னும் நிறைய இருக்கிறது. தொடர்ந்து எழுதி பதிவு செய்வோம்.

– சரவணன்

பாரதிபுத்தகாலயம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், புதியக் கல்விக் கொள்கை குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு, கி.வீரமணி மற்றும் வசந்தி தேவி அவர்களின் கருத்துக்கள்..வீடியோ வடிவில்…

தேசியக் கல்விக் கொள்கை விரைவு கோப்புகள் (Documents)

  1. அரசு வெளியிட்ட கோப்புகள் : https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN_Revised.pdf
  2. தமிழில் தன்னார்வலர்கள் மொழிப்பெயர்த்தது.https://bookday.co.in/nep_tamil/
  3. பெங்களூரை சேர்ந்த அமைப்பு வெளியிட்ட சுருக்கிய வடிவம் (ஆங்கிலத்தில்) https://drive.google.com/file/d/0B9ViCjE8CcjnbVlvS1pocS01djQ2aWZ6cUF6eGN6SEtubnZr/view?usp=sharing
  4. தமிழில் அச்சு புத்தகமாக பெற‌ : பாரதி புத்தகாலயம் 044 – 24332924

Leave a comment