மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த குழந்தைகளை உருவாக்குபவையாக நம் பள்ளிகள் இருக்கின்றனவா? கடுமையான விதிமுறைகள் இல்லாமல் சுதந்திரமான பாதையில் சாத்தியமா? அதுவும் அனைத்து குழந்தைகளையும்? நம் பெற்றோர்கள் குழந்தைகளின் சுதந்திரம் – மகிழ்ச்சி – அன்பு பற்றி என்ன முடிவை வைத்திருக்கிறார்கள்? குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பது பற்றி பள்ளிக்கும் வீட்டிற்கும் ஒருவித அச்சமும் பதட்டமும் உண்டு.
ஆனால் குழந்தைகளின் சுதந்திரத்தின் மேல் முழுமையான நம்பிக்கையும் நேசமும் கொண்ட ஒரு தலைமை ஆசிரியர் இருந்திருக்கிறார். ஜப்பானில் பழைய ரயில் பெட்டிகளைக் கொண்டு அவர் நடத்திய பள்ளிக்கூடம் இன்று உலகத்திற்கே குழந்தைகளின் சுதந்திரத்துக்கும் மனஆற்றலுக்கும் உள்ள தொடர்பை சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அந்த ரயில் பள்ளியின் ஆசிரியர் கோபயாஷி சொல்லும் வார்த்தைகளை உணர்ந்துகொள்ளும் முயற்சிதான் இந்த உரையாடல் நிகழ்வு.
கோபயாஷியின் வார்த்தைகள் :
*ஏற்கனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளை பொறுத்தாதீர்கள். இயற்கையாக அவர்களை வளரவிட்டுவிடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவைகளைவிடப் பெரியவைகளாக இருக்கலாம்*
தன் குறும்புகளால் வழக்கமான பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டு ரயில்பள்ளியில் சேர்ந்த டோட்டோசான் எனும் சிறுமி தனது பள்ளியைப் பற்றி எழுதிய புத்தகம்தான் ஜன்னலில் ஒரு சிறுமி. குறும்புக்காரர்கள் எப்படி உலகின் கவனம் பெரும் மனிதர்கள் ஆகிறார்கள் என்பது பற்றிய கதை. தலைமை ஆசிரியர் மட்டுமல்ல டோட்டோசானின் அம்மாவும் குழந்தை உளவியலை எப்படி புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை விளக்குகிறது ஜன்னலில் ஒரு சிறுமி புத்தகம்.
இந்த புத்தகத்தைப் பற்றி நம்மோடு உரையாடுபவர் கலகல வகுப்பறை சிவா. வகுப்பறைகளின் இறுக்கம் நீங்கி கலகலப்பாக மாற ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி முகாம் நடத்துபவரின் பகிர்தல்கள் நமக்கு பள்ளி குறித்த புது பார்வையை வழங்கும்.
பள்ளிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு இணையான முக்கியத்துவம் உடையது கதைகளையும் சிறார் உடல்நலத்தையும் நாம் அறிவது.
கதை சொல்வதோடு கதைகளைப் பற்றியும் நம்மோடு நிறைய பகிர்ந்துகொள்ள இருக்கிறார் கதைசொல்லி சங்கர் ராம். நிறைந்த ஆர்வத்தோடு தாய்த்தமிழ் பள்ளியை நடத்திவரும் இவர் குழந்தைகளை மலரவைக்கும் கோமாளியாகவும் சிரித்துக்கொண்டிருப்பவர்.
சிறார் உடல்நலனை விரும்புபவர்கள் இன்று இயற்கையையும் உடலையும் அதற்கிடையிலான தொடர்புகளையும் புரிந்து கொள்ளும் தேவை உள்ளது. மருத்துவம் பற்றிய பகிர்தலோடு பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல இருக்கிறார் தொடுசிகிச்சை மருத்துவர் பார்த்தசாரதி.
சிறார் உடல்நலம், கதைகள், விளையாட்டுகளுடன் மதுரையில் முதல் உரையாடல் நிகழ்வு. அனைவரும் வருக.
முன்பதிவு அவசியம்.
இடம் : காந்தி மியூசியம், மதுரை
நாள் : 12/05/2019 ஞாயிறு
நேரம் : காலை 10 மணிமுதல்
மாலை 5 மணிவரை
(நிகழ்வின் செலவுகளை பகிர்ந்துகொள்ளலாம்)
வருகையை பதிவு செய்ய
98434 72092 / 98422 02730