கல்வியினாலாய பயனென்கொல்? – கலகல வகுப்பறை சிவா

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு குழு நடனப் போட்டி. பள்ளி அளவில், வட்டார அளவில் மாவட்ட அளவில் என்று பல படிநிலைகளைக் கடந்து இறுதிப்போட்டி நடைபறுகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மூன்று குழுக்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். மிகக்கடுமையான போட்டி. மூன்று குழுக்களும் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்தி ஆடியிருக்கிறார்கள்.

முடிவுகளை அறிவிக்கும் நேரம் நடுவர்கள் வந்து வழக்கம்போல, போட்டிகளில் வெற்றி பெறுவதுதான் நோக்கம் என்றாலும் எல்லோரும் முதல் பரிசு பெறுவது என்பது இயலாது. எல்லோரும் திறமையாக ஆடினீர்கள். யாருக்குப் பரிசு தருவது என்று தேர்ந்தெடுப்பது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. உங்கள் நடனத்தில் மிகக் குறைவாக ஆங்காங்கே இருந்த ஒரு சில சின்னச் சின்ன வித்தியாசத்தை வைத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. பரிசை விட இந்த மேடையில் பங்குபெற்றதே உங்கள் திறமைக்குச் சான்று என்று விளக்கமான முன்னுரையைச் சொல்லிவிட்டுப் பரிசுகளை அறிவிக்கத் தொடங்கினர்.

மூன்றாம் பரிசுக்கான அணி அறிவிக்கப்பட்டதும் அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வெற்றிச்சத்தம் பீறிட்டு எழுந்தது. மற்றவர்கள் முகத்தில் ஒரு பரப்ரப்பு, அடுத்ததாக முதல் பரிசை அறிவிக்கிறோம் என்று நடுவர்கள் பரிசு பெற்ற பள்ளியின் பெயரைச் சொன்னதும் அந்தப்பள்ளியைச் சார்ந்த அனைவரின் கூக்குரல் விண்ணைப் பிளந்தது. வெற்றி பெற்ற குழந்தைகள் ஆடிக்கொண்டே மேடையை நோக்கி ஓடினார்கள். உடன்வந்திருந்த ஆசிரிய, ஆசிரியைகளும் ஓடினார்கள். ஆரவாரம் அடங்கச் சிறிது நேரம் ஆனது. இரண்டாம் பரிசுக்கான குழு இறுதியாக அறிவிக்கப்பட்டது. குறைந்த அளவே ஆரவாரம் சில குழந்தைகள் மெதுவாக நடந்து மேடையேறினர். சிலருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் சொல்லிக்கொண்டே மேடையை நோக்கி அழைத்துச்சென்றனர். அந்தக் குழந்தைகளின் கண்களில் கண்ணீர்.

எனக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பல்வேறு நிலைகளில் பரிசு பெற்றவர்கள் இப்போது இரண்டாம் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். பரிசு பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடாமல் முதல் பரிசு கிடைக்கவில்லையே என்று குழந்தைகளை அழ வைத்தது எது? இப்படித்தானே கல்வியும் குழந்தைகளைப் பந்தயக் குதிரையாக ஆக்கிவைத்திருக்கிறது. அதிக மதிப்பெண் பெறுபவர்களே வாழ முடியும். இப்போது கஷ்டப்படு பிறகு சுகமாக வாழலாம் என்று குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் அழுத்தப்படுகிறார்கள். குறைந்த மதிப்பெண் பெறும் குழந்தைகள் நம்மால் முடியாது என்று படிப்பின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.

ஏன் படிக்க வேண்டும்?என்று கேட்டால்.,

நல்ல வேலைக்குப் போகலாம்.

நல்லாப் படிச்சா நெறையா சம்பாதிக்கலாம்.

என்பதே பெரும்பாலான குழந்தைகளின் பதிலாக இருக்கின்றது. படிப்பின் பயன் பணம் என்றே பெரியவர்களும் நம்புகிறார்கள். ஆங்கில வழியில் படித்த அவர் பையன் அமெரிக்காவில் இலட்சங்களில் சம்பாதிக்கிறான் என்பதே இன்றைய நடுத்தரக் குடும்பங்களின் கனவு. உழைக்கும் மக்களின் எளிய கனவு நம்மைப்போல் கஷ்டப்படாமல் நம் பிள்ளைகள் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். உழைப்பே உயர்வு என்று ஒருபுறம் சொன்னாலும் அன்றாடத் தேவைகளுக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் மக்கள் தங்களுக்கான நியாயமான ஊதியத்திற்கானப் போராட்டங்கள் என்று நகரும் வாழ்வின் மீது கொண்ட விரக்தியையும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

கல்வி முதலீடாகப் பார்க்கப்படுகிறது அதனாலேயே எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை கடன் பட்டாவது பிள்ளைகளைப் படிக்கவைத்துவிட வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அந்த அழுத்தம் குழந்தைகள் மீதே விழுகிறது. குழந்தைகள் மீதான மதிப்பெண் அழுத்தமே வகுப்பறை வன்முறைகளுக்குக் காரணமாக அமைகிறது.

மூளை வேலை செய்கிறது என்று அறிவே அதிகப்பணம் தரும் என்ற ஒரு வர்க்கம் உருவாகிவிட்டது. தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு வேலைகளில் மிக அதிக வேலையும் பணமும் தந்த ஆடம்பர வாழ்வு கவனிக்கத்தக்கது. இத்தகைய திடீர்ப் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்வே அனைவரையும் அத்தகைய வேலைகளைக் கனவுகாண வைத்தது. மறுபுறம் இவர்களில் பலர் அளவுக்கதிகமான ஆடம்பர நுகர்வினால் சலிப்படைந்து தத்துவங்களுக்காக தஞ்சம் புகுந்தார்கள். தங்கள் வேலைகளைத்துறந்து வெளியேறினார்கள். இவர்களாலேயே கார்ப்பரேட் சாமியார்கள் வளர்ந்தார்கள். சிலர் இயற்கை விவசாயம் என்பதுபோன்ற மரபு வழிகளின் மீது ஆர்வம்காட்டத் தொடங்கினர்.

வீடு, நாடு, உலகம் என்று எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் நுகர்வுக்கலாச்சாரமே மகிழ்ச்சியான வாழ்வு என்று பெரும்பாலானோர் நம்புகிறோம். இன்றைய கலைவடிவங்கள் பெரும்பாலும் ஆடம்பரத்தையே காட்டுகின்றன. ‘பிராண்டட்’ பொருட்களை கார்ப்பரேட்கள் உருவாக்கினார்கள். பொருளுக்கேற்ற விலை என்ற நிலை மாறித் தயாரிக்கும் நிறுவனப் பெயருக்கேற்ற விலை என்றானது.

எல்லோரின் பேச்சிலும் நேர்மை தவறாமல் இடம்பெறுகிறது. உலகம், இயற்கை என்று அனைத்து மாற்றங்களையும் குறித்துப் பேசுவதே போதும் என்ற மனநிலையும் வளர்ந்து வருகிறது. பேச்சில் இருக்கும் அறமும் மனிதமும் வாழ்வில் பயிலப்படாமல் கவனமாகத் தவிர்த்து வருகிறோம். இப்படியான பெரியவர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது குதிரைக்கொம்பு. குழந்தைகளே வருங்கால உலகை நிர்மாணிக்கப்போகும் புதிய தலைமுறை. அவர்களின் மனங்களில் நமது செயல்பாடுகள் கேள்விகளை எழுப்புகின்றன. அத்தகைய கேள்விகளை உரையாடலாக மாற்றும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். காலம் காலமாக நாம் சொல்லி வந்த அனைத்து அறங்களின் மீதும் இயல்பாய் எழும் குழந்தைகளின் கேள்விகளை எழுப்புகின்றன, அத்தகைய கேள்விகளை இருந்தே புதிய உலகிற்கான அறம் பிறக்கும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தந்து அவர்களைத் தொடங்கலாம்.

பள்ளியும் சமூகமும் இணைந்து கல்வி குறித்த உரையாடல்களைத் தொடங்கவேண்டும். அரசுப்பள்ளிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள் போன்ற பள்ளிகளிருந்தே இத்தகைய உரையாடல்கள் எழமுடியும்.  மனிதப்பண்புகளையும் இயற்கையையும் போற்றிப்பாதுகாக்கும் புதிய கல்வியை வளர்த்தெடுக்க வேண்டியது இத்தகைய களங்ளை, மாதிரிகளை உருவாக்குவதே இன்றைய முக்கியத்தேவை.

நன்றி : தாய்மொழிக் கல்விச் சிறப்பு மலர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருப்பூர். தங்களது கல்விச் சிறப்பு மலர் கட்டுரையை இணையத்தில் வெளியிட அனுமதி தந்த திரு.தங்கராசு அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a comment