விளையாட்டுகள், கலைகள் போன்றவற்றிற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை – இனியன்

வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

கே: இனியன் யார்? 

இதுதான் இனியன் எனத் தேடிக்கொண்டிருக்கும் எளியவன். அன்பை விதைத்து பேரன்புகளை அறுவடை செய்ய விழைபவன். அப்பா ராமமூர்த்தி, அம்மா மைனாவதி, அக்கா மாங்கனி, அவரது இணையர் ராம் மற்றும் உறவுகள், நண்பர்கள், சந்திக்கும் அன்பின் மனிதர்கள், சமூக உறவுகள் என அனைவரையும் உள்ளடக்கியதே எனது குடும்பம்.

பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளப்படும் டிகிரிதான் கல்வி என்றால் கணினி அறிவியலில் பட்டயப்படிப்பு மற்றும் இடைநின்ற பட்டப்படிப்பு. ஆனால் இவையெதுவும் இல்லாமால்  வாசிப்பு, பயணங்கள், உரையாடல்கள், தேடல்கள், சமூகம் போன்றவைதான் உண்மையான வாழ்நாளுக்கான கல்வி என்று நான் கருதுகிறேன். அதையே தற்போதுவரை அனுதினமும் பயின்று வருகிறேன்.

கே: குழந்தைகள் நலச்செயல்பாட்டாளராக மாறியதற்குக் காரணம் என்ன?

குழந்தைகள் நலச்செயல்பாட்டாளர் என்ற நிலையெல்லாம் இல்லை. அம்மாதிரியான அடைமொழிகளை நான் விரும்புவதும் இல்லை. ஆனால் குழந்தைகளுடனான, குழந்தைகளுக்கான பயணத்தின் காரணமாக எதைச் சொல்வது, எதனை விடுவது எனப் பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியிருகிறது. சுருங்கச் சொல்வதாக இருந்தால் குழந்தைகளின் உலகம் உயிர்ப்போடு இருக்கக்கூடிய மாய எதார்த்த உலகம். நிகழ்காலத்தை கொண்டாடக்கூடிய உலகம். தங்களால் தங்களுக்கான தேக்கநிலையை உருவாக்கிக் கொள்ளாத உலகம். அவ்வுலகில் தொடர்ந்து பயணிக்கும்போது நம்முள் இருக்கிற குழந்தைமையும் உயிர்ப்போடிருக்கும்.

ஆனால், குழந்தைகளை நோக்கிய பயணம் என்பது நேரிடையாக அவர்களை நோக்கிய பயணமாகத் தொடங்கியதா என்றால், இல்லை என்பதே எனது பதில். வாழ்வில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள், இயலாமைகள், இல்லாமைகள் போன்றவற்றிலிருந்து மீண்டுவருவதற்கான போராட்டகாலங்களில் “எப்படி இவற்றைத் தாங்குகிறாய்?, எங்களுக்கு இதெல்லாம் இப்படியெல்லாம் நிகழ்ந்திருந்தா நிச்சயம் தாங்கியிருக்கமாட்டோம், உனக்குள் ஏதோவொன்று இருக்கிறது” என்று என்னிடம் கூறாதவர்களே இல்லை. அக்கேள்விக்கான விடை என்னவாக இருக்கும், அப்படியென்ன நமக்குள் இருக்கிறது, மெய்யாகவே இவ்வளவு வேதனைகளைக் கடக்க எது நமக்கு உதவிசெய்திருக்கிறது எனப் பல சிந்தனைகள் என் மனதினுள் ஓடியிருக்கின்றன. அப்படியான ஒரு நேரத்தில் உருவானதுதான் – நாம் விளையாடிய விளையாட்டுகளுக்கும் நமது பிரச்னைகளை எதிர்கொள்ளும் திடத்திற்கும் ஏதோவொரு தொடர்பு இருக்குமோ என்ற சிந்தனை.

விளையாட்டுகள்பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாமே, கூடுமான அளவிற்கு அவற்றை ஆவணப்படுத்தலாமே எனத் தொடங்கியது எனது பயணம். அப்போது நிகழ்ந்த உரையாடல்கள் வழியே விளையாட்டுகள், அவற்றின் வாழ்வியல், உடலியல், உளவியல், அரசியல் என ஆவணப்படுத்தளுக்கான ஒரு வடிவம் உருவானது. அவற்றில், விளையாட்டு சார்ந்த உளவியலை உணர ஒரு களம் தேவைப்பட்டது. அதேநேரம் நம் காலத்திய விளையாட்டுகள்கூட தற்போது விளையாடப்படுவது அரிதாகிவிட்டது என்ற உணர்வும் சேர்ந்தே ஏற்பட்டது. இவைதான் என்னை குழந்தைகள் உலகை நோக்கி நகரச்செய்தன. நாளடைவில் மேலே கூறிய அவர்களது உலகம் எனக்குப் புலப்படத் தொடங்கியது. அதுதான் குழந்தைமையோடும் உயிர்ப்போடும் தொடர்ந்து என்னைப் பயணிக்க வைக்கிறது.

கே: நமது முதல் மூச்சில் இருந்தே மரணம் நம்மைப் பின்தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்றாலும், மரணத்தைத் தொட்டுத்திரும்புதல் சிலருக்கே வாய்க்கிறது. அது எப்படித் தங்கள் செயல்பாடுகளை நிர்ணயிக்கிறது?

சிறுவயதில் என்னைச்சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளாலும், நேரிடையாகக் கண்ட சில மரணங்கள் வழியேயும், வாசிப்பின் ஊடாகவும் மரணம்பற்றிய புரிதல் எனக்கு ஏற்பட்டிருந்தது. இருந்தாலும்கூட என்னளவில் எனது மரணமீட்சியும், மருத்துவமனையில் என்னைச்சுற்றி நடந்த மரணங்களும், வாழ்வினில் மரணத்திற்கு முன்பாக நாம் மரணித்திருத்தல் கூடாது என்பதை உணர்த்தின. அதனால் மரணத்தை தொட்டுத்திரும்புதல் என்னளவில் பேரதிசியமாகவோ, அதிர்ச்சியாகவோ இருக்கவில்லை. மாறாக, அது என்னைக் கடந்தகால நினைவுகள் மற்றும் அனுபவங்களின் ஊடாக நிகழ்காலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட வைக்கிறது. மேலும் வாழ்க்கையை அனுதினமும் கொண்டாட வைக்கிறது. அதேநேரம் நம் கொண்டாட்டம் என்பது சமூகத்திற்கான ஒன்று எனவும் உணர வைக்கிறது. இந்த உணர்வுகள் ஏற்பட்டு நான் செயல்படத் தொடங்குவதற்கு  மூன்றாண்டுகள் தேவைப்பட்டன. இவைதான் எனது இன்றைய செயல்பாடுகளை நிர்ணயம் செய்து, ஓட வைத்து இயக்கிக்கொண்டிருக்கின்றன.

கே: இன்று குழந்தைமை அதீதமாக முன்னிருத்தப்படுகிறதா?

கடந்தகாலத்தைச் சமகாலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் குழந்தைமை அதீதமாக முன்னிருத்தப்படுகிறதுதான். ஆனால் அவற்றில் அதீத விளம்பரத்தன்மை இருப்பதாகவே நினைக்கிறேன். அவை சமூகவலைத்தளங்கள் மற்றும் பகடிக்காணொளிகளுக்கான செயல்பாடுகளாக மட்டுமே இருப்பதாகவும் தோன்றுகிறது. மேலும் இவையனைத்தும் சமூகத்தின் ஒரு சாராருக்கு மட்டுமேயானதாகவும் இருக்கின்றன. இன்னொருபுறம், குழந்தைமை என்றால் என்னவென்றே அறியாமலும், குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அவர்களின் தேவைகள் கவனிக்கப்படாமலும், கொண்டாடப்படாமலும் போவது வேதனையளிக்கிறது.

கே: இன்றைய குழந்தைகளின் நிலை?

இன்றைய நிலையில் குழந்தைகளிடையே மிகப்பெரிய அளவிலான வித்தியாசங்களும் வேறுபாடுகளும் பிரிவினைகளும் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. கல்வியை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான பாடத்திட்டங்கள் நகர்புறங்களை மட்டுமே மையப்படுத்திக் கட்டமைக்கப்படுகின்றன. கிராமங்கள், மலைவாழ் பகுதிகள், கடற்புறப்பகுதிகள் (நெய்தல்) என்று வேறுபட்ட பல நிலப்பரப்புகளில் வாழும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களோ, பயிற்றுவிக்கும் முறைகளோ நம்மிடம் இல்லை. அதனால் இங்கு கல்வி கற்பது மற்றும் கற்பிப்பதில் நகர்ப்புறக் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

நம் கல்விமுறையில் விளையாட்டுகள், கலைகள் போன்றவற்றிற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. விளையாட்டு மூலம் கல்வி, கலைகளின் மூலம் கல்வி ஆகிய முறைகளை இங்கு அறிமுகப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன். இங்குள்ள விளையாட்டுகளும், கலைகளும் அவைபற்றிய அறிமுகம் மற்றும் ஒரு சில போட்டிகளை நடத்துவது என்பதோடு நிறைவுற்றுவிடுகின்றன. அவற்றைக் குழந்தைகளிடம் தொடர்ச்சியாகக் கொண்டுசேர்ப்பதற்கான அமைப்புகள் இங்கில்லை. அதன் அடிப்படையில் பார்த்தால், வாசிப்புக்கலையை அறிந்த குழந்தைகளின் எண்ணிக்கையே இங்கு மிகக்குறைவுதான். இதில் கிராமம், நகரம் என்றெல்லாம் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அணுகுமுறை, பயிற்சிகள் போன்றவற்றில்கூட வித்தியாசங்களை உணரமுடிகிறது. இன்றைய நிலையில் பல தனி நபர்களும், சில அமைப்புகளும்தான் பெற்றோர்கள், ஆசிரியர்கள் துணையோடு குழந்தைகளுக்கான கலை அறிமுகம், வாசிப்பு முகாம் போன்றவற்றை முன்னெடுக்கிறார்கள். ஆரோக்கியமானப் போக்கின் தொடக்கபுள்ளியாக இவற்றை நாம் பார்க்கலாம். ஆனால் அரசாங்கம் தன்னுடைய அமைப்புகள் வழியே இம்முயற்சிகளை முன்னெடுக்கும்போதுதான் கல்வி மற்றும் சமூக மாற்றங்களைப் பெருவாரியாக ஏற்படுத்திட முடியும்.

அதேபோல் குழந்தைகளைப் பொறுத்தவரை அரசியல் வயப்படுதல் என்பது பூஜ்யம் என்கிற நிலையில்தான் உள்ளது. அதில் கிராமம், நகரம் என்ற எவ்வித வேறுபாடும் இல்லை. மேலே சொன்னதுபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. அரசியல் அடிப்படையை அறிவதின் முதற்புள்ளி என்பது சமூகத்தில் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்துக்கொள்ளுதல் அல்லது அறிமுகப்படுத்துதல்தான். ஆனால் அதற்கான அமைப்பு இங்கு அறவேயில்லை. மேலும், குழந்தைகளுக்கு எதற்கு அரசியல்? என்ற கேள்வியோடுதான் இந்தச் சமூகமும் செயல்பட்டுவருகிறது. இக்காரணங்களால் அடிப்படைத்தேவை சார்ந்த அரசியல் புரிதல்கள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை.          

கே: பள்ளிக்கல்விக்கு வெளியில் கற்றல் இன்று எந்த நிலையில் உள்ளது?

நமது கல்வி அமைப்பில் பள்ளிக்கல்விக்கு வெளியே கற்றல் எக்காலத்திலும் பெரியளவில் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்ததாகக் கருதப்படுகின்ற விசயங்களும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து வந்திருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். தற்போது அவர்கள் பள்ளிக்கல்விக்கு வெளியே சில பொழுதுபோக்கிற்கான விசயங்களைக் கற்கின்றனர். மேலும் சமூகத்தில் நிகழும் அபத்தங்களில் இருந்தும் சில விசயங்களை கற்றுக்கொள்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. விதிவிலக்காக மலைவாழ் மற்றும் கடற்கரை நிலப்பரப்பில் உள்ள குழந்தைகள் தங்கள் வாழ்விடம் சார்ந்து வாழ்க்கைக்குத் தேவையான சில விசயங்களைப் பள்ளிக்கல்விக்கு வெளியே கற்றுக்கொள்கின்றனர் என்று சொல்லலாம்.

கே: அறம் குறித்து எதிர்மறைப் பார்வைகொண்ட பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் குழந்தைகள் மனதில் எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள்?

அவர்கள் குழந்தைகளிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது உறுதி. அத்தகைய நடவடிக்கைகள் குழந்தைகளின் இயல்புகளையே சிதைக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றிற்கு எதிராக இச்சிந்தனைப்போக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் காணமுடிகிறது.

கே: விழுமியங்களைப் போதிக்காமல் எழுதப்படும் இன்றைய சிறார் கதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விழுமியங்கள் போதிக்காமல் எழுதப்படும் சிறார் கதைகள் என ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் யாருக்கான, எதற்கான விழுமியங்கள் என்ற கேள்வி அதற்குள் தொக்கி நிற்கிறது. அங்குதான் மாற்றங்களுக்கான தேவை இருப்பதாக எண்ணுகிறேன். இன்றைய சிறார் கதைகளில் அதிபுனைவு, கற்பனை உலகம், உருவங்களில் சஞ்சரிப்பது ஆகியவற்றை உருவாக்குவதில் தொடங்கி கதைக்குள்ளும்கூட பொதுப்படையான ஒற்றைச்சார்பு கொண்ட விழுமியங்கள் திணிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. மாறாக இங்கிருக்கும் நில அமைப்பு சார்ந்தும், வாழ்வியல் முறைகளில் இருந்தும் மாய எதார்த்தங்கள், விழுமியங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் எதார்த்த அறிவியல் கதைகள், குழந்தைகள் மற்றும் சிறார்கள் தொடர்பான உரிமைகள் சார்ந்த கதைகள், மருத்துவக் கதைகள், சமூகநீதிக் கதைகள் போன்றவை அவற்றிற்கான விழுமியங்களோடு படைக்கப்பட வேண்டும்.

கே: குழந்தைகளுக்கான நீதிக்கதைகளின் தேவை இன்றும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் விளிம்புநிலை மனிதர்களான மூன்றாம் பாலினத்தவர், ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்தெல்லாம் குழந்தைகளிடம் பேசும் படைப்புகள் தமிழில் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

இங்கு அவை சார்ந்த ஒரு போதாமை இருக்கவே செய்கிறது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, குழந்தைகள் மற்றும் சிறார் இலக்கியங்களில் ஒரு வெற்றிடம் உருவாக்கப்பட்டிருந்தது. சமகாலத்தில் அவ்வெற்றிடம் உடைக்கப்பட்டு வருகிறது. இவ்வெற்றிடம் ஏற்படுவதற்கு முன்னர் சிறார் இலக்கியத்தில் இருந்த குழுவாத அரசியல் மற்றும் பதிப்பக அரசியல் போன்றவை தற்போது குறைந்துள்ளதால் சுதந்திரத்தன்மை நிலவுகிறது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் கேள்வியில் உள்ள அனைத்து விசயங்களும் மாய எதார்த்தக் கதைகளாக விரைவில் வரத்தொடங்கும்.

கே: தமிழின் குழந்தை இலக்கியச்சூழலில் உள்ளீடற்ற படைப்புகள் குவிந்து வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதன்மூலம் எழுத்தாளர்கள் குழந்தைகளைக் கீழ்மையாகக் கருதுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

நிச்சயம் அப்படியான போக்கு இருக்கவே செய்கிறது என நினைக்கிறேன். ஆனால் எழுத்தாளர்கள் குழந்தைகளைக் கீழ்மையாகக் கருதிக்கொண்டிருகிறார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. சிறார் எழுத்தாளர்கள் அவரவர்களுக்கு தெரிந்தநிலையில் ஏதோவொரு வகையில் தங்களால் இயன்ற அளவில் செயல்படுகிறார்கள். சமகாலத்தின் போக்கும் அதுவாகத்தான் இருக்கிறது. அதேநேரம் விருதுகளை மையப்படுத்திய எழுத்துகளும் அதற்கான குழு அரசியலும் அதிகளவு நிகழவே செய்கிறது. அங்கீகாரங்களை நோக்கி நகர்தலும், ஏற்கனவே கிடைத்த அங்கீகார போதையுமே அதற்குக் காரணம்.

அங்கீகாரங்களை நோக்கி நகர்வோர், ‘சிறார் தளங்களில் பரந்துபட்ட வாசிப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவர்களிடமிருந்து நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்’ என்று நினைக்கிறேன். அப்படியான அங்கீகாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் உள்ளீடற்ற படைப்புகளின் தாக்கம் குறையும் என நம்பலாம்.

கே: தமிழகத்தின் பதின்பருவத்து குழந்தைகளில் பெரும்பாலோர் அரசியலற்று இருக்கிறார்கள் அல்லது ஜாதி அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். இவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்களை இடதுசாரி மற்றும் திராவிடர் கழகங்கள் வழங்கத் தவறிவிட்டன என்று கருதுகிறீர்களா?

இது முற்றிலும் உண்மை. குழந்தைகளும் இளைஞர்களும் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அரசியல் பேசக்கூடாது என்ற வரையறை வகுக்கப்பட்டு, அவை தீவிரமாக நடைமுறைபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பதன் விளைவுகளில் ஒன்று இது. இரண்டு தலைமுறைகளாக, நமக்கெதற்கு அரசியல் என்ற கருத்து மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்படதால்தான் குழந்தைகள், சிறார்கள், பதின்பருவத்தினர் போன்றவர்கள் இன்று அரசியலற்று இருக்கிறார்கள்.

இப்படி அரசியலற்று இருக்கும்போது ஏற்படும் வெற்றிடத்தை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கிற மதவாதம், ஜாதியவாதம், அடிப்படைவாத அரசியல் வெகு இயல்பாய் நிறைக்கிறது. அடிப்படைவாதிகள் அதற்கு ஏற்றவாறு, புறக்காரணிகளையும், சூழ்நிலைகளையும் கட்டமைக்கும்போது அவர்கள் மிக எளிதாக ஜாதிய, மதவாத அரசியலுக்குள் சிக்கிவிடுகின்றனர்.

இந்நிலையைக் கட்டுடைக்கவோ அல்லது கலைக்கவோ பெரிய அளவிலான தீவிரமான முயற்சிகள் இயக்கங்களோ கழகங்களோ முன்னெடுக்கவில்லை எனும் உண்மையை ஒப்புகொள்ளத்தான் வேண்டும். காரணம் அவர்கள் பெரியவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும், புரிய வைக்கவும், சமூகத்தை முழுதாக அபகரிக்கத் துடிக்கும் அடிப்படைவாதிகளிடம் போராடவும் தங்களுக்கான நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தனர்.  ஆனால் தற்போது அவர்கள் அதனை உணர்ந்து குழந்தைகள் மற்றும் சிறார் தளத்தில் இயங்குவதற்கான முன்னெடுப்புகளைச் செய்கின்றனர்.

கே: இவ்வியக்கங்களின் செயற்பாடுகள் இனி எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தற்போதும்கூட அவர்கள் தங்கள் கொள்கைசார்ந்த, ஒருவித வரட்டுத்தனத்துடனே குழந்தைகளை அணுகிவருகின்றனர். இப்போக்கில் சில மாற்றங்கள் நிகழவேண்டும். முதலில் இவ்வியக்கங்கள் வரட்டுத்தன்மையற்ற, குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடிய கலை சார்ந்த விசயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, குழந்தைகளுக்கான அங்கீகாரங்களை உருவாக்குதல் போன்ற முன்னெடுப்புகளைச் செய்யவேண்டும். குழந்தைகள் விரும்புகிற வகையில் எம்மாதிரியான வடிவங்கள், ஊடகங்கள் கிடைக்கின்றனவோ அந்தந்த வகைகளில் எல்லாம் செயல்வடிவங்களைக் கட்டமைத்தல் வேண்டும். சுயசிந்தனை சார்ந்த உரையாடல்களை நிகழ்த்த அனுமதிப்பதோடு, அவற்றிற்கு செவிமடுத்துச் செயல்படவும் வேண்டும். இவற்றிக்கெல்லாம் முன்பாக குழந்தைகள், சிறார்கள் தளத்திலாவது அவர்கள் தங்களுக்குள் இருக்கிற நட்பு முரண்களோடு சமரசம் செய்துகொள்ளவேண்டியது அவசியம். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து அவரவர் இயல்போடு பிறரின் கரம்பற்றி நடை பழகிடவும், பழக்கிக்கிடவும் வேண்டும்.

கே: வீட்டுக்குள் முடங்கி குழந்தைகளை மீண்டும் விளையாட்டுக்களத்திற்குக் கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் நீங்கள். தமிழகத்தில் வேறு யாரெல்லாம் குழந்தைகளுக்கான விளையாட்டுக்களை முன்னெடுக்கிறார்கள்?

வீட்டுக்குள் முடங்கிய குழந்தைகளை மீண்டும் விளையாட்டுக்களத்திற்குக் கொண்டுவந்தவர்களில் என்பதெல்லாம் மிகப்பெருஞ்சொல்லாடல்கள். அவ்வாறு செயல்பட முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதேபோல் இதில் விளையாட்டை மட்டும் மையப்படுத்துதல் என்பதும் ஏற்புடையதல்ல. கலைகளையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.  இன்று பல தனிப்பட்ட நபர்களும், அமைப்புகளும் அப்படிச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேலு சரவணன், விஷ்ணுபுரம் சரவணன், விழியன், கதைசொல்லி சதீஷ், குமார் ஷா, வனிதாமணி, அறிவரசன், எழிலன், தியாக சேகர், உதிரி நாடக நிலம் விஜயகுமார், பஞ்சுமிட்டாய் குழுமம் பிரபு, ஜெயக்குமார், சர்மிளா, அருண், குட்டி ஆகாயம் வெங்கட் மற்றும் பலரும் திருப்பூர் பண்பாட்டு மையம் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற அமைப்புகளும் இத்தளத்தில் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகிறார்கள்.

கே: விளையாட்டை முன்னிருந்திய செயற்பாடுகளைச் செய்வதற்கு இங்கே ஆளில்லாத நிலையில், கதைசொல்லியாக அரங்கத்திற்குள் மீண்டும் குழந்தைகளை முடக்கும் பணியை நீங்களும் செய்வது சரியா? இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

முதலில் என்னை நான் எப்போதும் கதைசொல்லியாக உணர்ந்துகொண்டது கிடையாது. இரண்டாவது விளையாட்டுகளில் வெளி விளையாட்டுகள், உள் விளையாட்டுகள் என்று வகைகள் உள்ளன. பெரும்பாலும் நானும், குழந்தைகளும் விரும்புவது – வெளி விளையாட்டுகளைதான். அதற்கான களங்கள் அமைகிற எல்லா இடங்களிலும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். அதேநேரம் தொடர்ந்து விளையாடிக்கொண்டும் இருக்க முடியாது என்பதுதான் இங்கு கிடைக்கக் கூடிய களங்களின் எதார்த்த சூழல். அப்படியான சூழலில் இடைவெளிகளை இட்டுநிரப்புவதற்குக் கதைகள் தேவைப்படுகின்றன. அது எனக்கும், உரையாட நினைக்கிற குழந்தைகளுக்கும் இடையே ஓர் ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் முடக்கம் என்றெல்லாம் அதை நாம் வரையறை செய்திடவும் முடியாது. ஏனென்றால் இங்கு போதாமைகளின் எண்ணிக்கை அபரிமிதமானது. அதனால் கிடைக்கிற களத்தில் அது – அரங்கமாக இருந்தாலும்கூட – செயல்படவேண்டிய தேவை இருக்கிறது எனத் திடமாக நான் நம்புகிறேன். அரங்கிற்குள் செல்லமாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தால், அங்கு நிகழ்த்தப்படும் உரையாடல்கள் மட்டுமல்ல அரங்கினுள் விளையாடப்படும் விளையாட்டுகளும்கூட தடைபட்டுவிடும். ஆகையினால் இதனை குழந்தைகளை முடக்குவதாகவெல்லாம் எண்ணிவிட முடியாது. அதேபோல் அரங்கமோ, மைதானமோ அவற்றை ஒன்றுபோல் பாவித்து, கூடுமான அளவிற்கு விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சிறுசிறு மாற்றங்களைத் தவிர வேறெதையும் பெரிதாக உணர்வதில்லை. சொல்லப்போனால் இரண்டையும் ஒன்று போலதான் உணர்கிறேன்.

கே: குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்ட நிகழ்வு பற்றி?

தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதும் புறக்கணிப்பிற்கு உள்ளாவது சிறார் இலக்கியம்தான். சமகாலத்தில் புத்தெழுச்சி பெற்றுவருகின்ற மற்ற இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கிற மேடைகளைப்போல் சிறார் இலக்கியத்திற்கான மேடைகள் கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக அப்படைப்புகள் யாருக்காக எழுதப்படுகின்றனவோ அவர்களிடமிருந்து அவை குறித்த விமர்சனங்களோ, கொண்டாட்டங்களோ அல்லது குறைந்தபட்சம் அவற்றில் இருக்கும் கதைகள்பற்றிக்கூட யாரும் பேசவதில்லையே. அது ஏன்? என்ற கேள்வியிலிருந்து உருவானதுதான் ‘குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்ட’ நிகழ்வுகள்.

சிறார் படைப்புகளைச் சிறார்களே வாசித்து, தங்கள் அனுபவங்களை அவர்களுக்கான மேடையில், சக சிறார்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்குகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் நடத்துவதற்குக் குறைந்தது ஒரு மாதம் முன்னதாகவே படைப்புகளைக் குழந்தைகளிடம் ஒப்படைத்துவிடுகிறோம். அப்படைப்புகளை அவர்கள் வாசித்த பிறகு, அவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறோம். இதன்மூலம் படைப்பு தந்த வாசிப்பனுபவத்தை அவர்களே தங்கள் சொற்களில் தனித்தன்மையுடன் பகிர்ந்துகொள்வதற்குத் தயார்செய்கிறோம். இறுதியாக அவர்கள் தன்னூக்கத்துடன் மேடையேறுகிறார்கள்.

அவர்களுக்கு மட்டுமேயான – வாசிப்பு என்னும் கலை – மேடையில் அனுபவங்கள் பகிரப்படுவதோடு இந்நிகழ்வு முடிந்துவிடுவதில்லை. இசை, நாடகம் போன்ற கலைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்ற வகையில், திறன்வாய்ந்த கலைஞர்களால் மேலும் கலை நிகழ்வுகள் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. அதேநேரம் எழுத்தாளர்களும், குழந்தைகளும் படைப்பு சார்ந்து உரையாடுவதற்கான ஒரு களமாகவும், தங்கள் படைப்புகளைக் குழந்தைகள் எவ்வாறு உள்வாங்கிக்கொண்டிருகின்றனர் என்பதை எழுத்தாளர்கள் உணர்ந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாய் இந்நிகழ்வு அமைந்திருக்கிறது.

அவற்றையெல்லாம்விட, வெவ்வேறு நிலப்பரப்புகளில் இதுவரை நடந்து முடித்த நான்கு நிகழ்வுகளிலும் புத்தம்புதிதாக வாசிப்பு எனும் கலையை அறிந்த பல குழந்தைகள் தொடர்வாசிப்பிற்குள் வந்திருகின்றனர். அப்படித் தொடர்வாசிப்பில் நுழைந்திருப்பவர்களை வைத்து நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது நானும், நண்பர்களும் ஈடுபட்டிருக்கிறோம்.

கே: குழந்தைகளை முன்னிருந்திச் செயல்படும் பலரைப் பார்க்க முடிகிறது. பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை முன்னிறுத்திய முன்னெடுப்புகள் எதையும் நம்மால் பார்க்க முடிவதில்லை. ஏன் இந்த நிலை?

இத்தேக்கநிலையைச் சமூகத்தின் வெகுஜன உளவியலில் இருந்து புரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என நினைக்கிறன். கலை மற்றும் கலையாக்கம் சார்ந்த ஈடுபாடுகள் அவசியமற்றவை என்று நமது சமூகம் கருதுகிறது. இச்சூழலில் இருக்கும் குழந்தைகள் வளர வளர அவர்களின் சிந்தனையும், திறனும் இயல்பூக்கமாக வளர்ச்சி பெருகின்றன. ஆனால் இவற்றை நெறிப்படுத்துவதற்கான அமைப்பு ஏதும் இங்கில்லை. இன்னொருபுறம் பொருளாதாரத் தேடுதல் மட்டுமே தனிமனித வளர்ச்சிக்கான புள்ளி எனும் கருத்தாக்கம் எல்லோர் மனதிலும் ஊசி மருந்துபோல் ஏற்றப்பட்டுள்ளது. இன்றும் ஏற்றப்படுகிறது. அதனால் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொருளாதாரத்தேடலை மையமாக வைத்து அதற்கான அடிப்படைகளும், மதிப்பெண் மற்றும் மதிப்பீடுகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் கட்டமைக்கப்படுகின்றன. ஏனைய யாவும் அவசியமற்றவை என்று கருதும் போக்கு அக்குழந்தைகளிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் பதின்பருவம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட்டாக வேண்டும்.

சமூக மாற்றத்தை முன்னிறுத்திய குழந்தைகளுக்கான செயல்பாடுகள் எந்த அளவிற்குத் தற்காலத்தில் விரிவடையத் தொடங்கியிருகிறதோ அதே அளவிற்குப் பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான செயல்பாடுகளும் அதிகரிக்க வேண்டும்.

கே: தாய்மொழிவழிக் கல்வியைப் பெரும்பான்மைத் தமிழர்கள் கைவிட்டுவரும் இன்றையநிலையில், எதிர்காலத்தில் குழந்தை இலக்கியச் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

நல்ல ஆரோக்கியமான நிலையை எட்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. காரணம் இலக்கியச் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருப்பது பதிப்புத்துறை.  அத்துறையின் தொழிநுட்ப வளர்ச்சி. தற்போது புதிய சில முயற்சிகளுக்கான சாத்தியகூறுகள் இங்கு ஏற்பட்டுள்ளன. அவற்றை முழுவீச்சில் பயன்படுத்தி உலக அளவில் இருப்பதுபோல் 0-1, 1-3, 3-6, 6-9, 9-14, 14-16, 16+ வயதினருக்கு என்கிற வடிவமைப்புகளில், இங்கிருக்கும் சமூக எதார்த்தங்களை மையப்படுத்தி, மாய எதார்த்தப் புனைவுகள் வரத்தொடங்குமானால் அது நிச்சயம் ஆரோக்கியமான போக்காக இருக்கும். அதேபோல் சமீபகாலமாக, சிறார் இலக்கியச் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

கே: பெண் குழந்தைகள் மீது செலுத்தப்படுகிற பாலியல் வன்முறைகள் மற்றும் கொலைகள் பற்றிய உங்கள் பார்வை மற்றும் அவற்றிற்கான தீர்வாக நீங்கள் முன் வைப்பது?

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என்பது பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்றெல்லாம் தனித்தனியாக பிரித்தெல்லாம் பார்த்திட இயலாது. அனைத்து பாலினக் குழந்தைகளுமே பாலியல் வன்முறைகளுக்கும் சீண்டல்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இதில் அதிகளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாவது பெண் குழந்தைகள் என்பதால் அது சார்ந்த பாலியல் வன்முறைகள் பேசுபொருளாக மாற்றம் பெறுகின்றன. மற்றபடி பாலியல் வன்முறைகள், அவை சார்ந்த கொலைகள் அனைத்தும் ஆதிக்கவெறியின் வெளிப்பாடுகள்தான். அனைத்து விதமான ஆதிக்கத் திமிர்களும் புரையோடிக் கொண்டிருக்கும் இச்சமூகத்தில் அவற்றை களைத்தெடுத்து அனைத்து உயிர்களும் சமம், அனைத்து உயிர்களுக்கும் சம உரிமைகள் உள்ளன, யாரோருவரும் இன்னோர் உயிரைத் தொந்தரவு செய்திடல் கூடாது போன்ற கற்பிதங்கள் ஆழ்மனதில் உருவாகாதவரையில் இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்கதையாகிக் கொண்டுதான் இருக்கும்.

தன்னுடல் முதல் எதிர்பாலினம் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் உடல் மற்றும் இயற்கையின் இயல்பான உணர்வுகள், உணர்ச்சிகள் போன்றவற்றைப் பகுப்பாய்வுகள் செய்து அறிந்துகொள்வது அவசியம். அதற்கான பாலியல் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு, அந்தந்த வயதுக்கேற்ற வகையில் தொடர்ந்து கற்பிக்கப்படுமாயின் இதுபோன்ற வன்முறைகளில் பெருவாரியானவை குறைய வாய்ப்புள்ளது.

கே: பணத்தை அல்லாமல் இலக்கை முன்வைத்துச் செயல்படுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?

தனிப்பட்ட முறையில் எவ்வித நிபந்தனைகளும், நிர்பந்தங்களும் இல்லாத சூழலில், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே போதுமானது என்று நம்புகிறேன். மேலும் எளிமையாயிருத்தல் மூலம் பெரிய சிக்கல்கள் ஏதுமில்லாமல் பயணமாகிறது எனது வாழ்க்கை. அதேநேரம் இது அனைவருக்கும் பொருந்துமா என்றால், நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் இப்படிச் செயல்படுவது சிக்கல்கள் ஏதுமில்லாமல் சுதந்திரமாக உணரவைக்கிறது. பணத்தைக் காரணம் காட்டி நமது செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது கிட்டத்தட்ட அறவே இல்லை என்ற நிலையிருக்கிறபோது கிடைக்கிற சுதந்திரத்தினால் தெளிவான சிந்தனையுடன் தொடர்ந்து என்னால் செயல்பட முடிகிறது. நண்பர்கள் பலரது கூட்டு உழைப்பும், உதவிகளும் இதற்குக் கைகொடுக்கின்றன. அவர்கள் இல்லையேல் இலக்கை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவது சிக்கல்தான்.

கே: தற்போது எம்மாதிரியான முன்னெடுப்புகளைச் செய்துவருகிறீர்கள்?

குழந்தைகளுடனான விளையாட்டுகள், கதைகள் சார்ந்த பயணங்கள், உரையாடல்கள் மற்றும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்ட நிகழ்வுகள் போன்றவைகள்தான்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?

எதிர்காலத் திட்டங்கள் இவைதான் என வரையறை செய்ததில்லை. காலம், சூழ்நிலை மற்றும் சமூகத்தேவைகளின் அடிப்படையில் எனது பயணம் தொடரும்.

குறிப்பு : சிறார் உலகில் தற்காலத்தில் இயங்கும் நண்பர்களை அறிமுகம் செய்யும் நோக்கத்திலே நேர்காணல் பதிவுகளை பஞ்சு மிட்டாய் இணையதளம் கொண்டு வருகிறது.

3 Comments

  • சிவகுருநாதன் சிபா says:

    அருமையான முன்னெடுப்பு பிரபு
    இனியனின் எதார்ததமான கருத்துக்கள் நெடிய உரையாடல்கள் வாசிப்புகள் பயணங்கள் குழந்தைகளுக்கான நிகழ்வுகளின் அனுபவமாக. கேள்விகள் வேறு வடிவத்தில் இருந்தாலும் இனியன் பதில்களால் நேர்காணலைச் சீராக்கிச் செல்கிறான் .பேரன்பும் பெருமுத்தங்களும் இனியா. நன்றிகள் சரவணன் பார்த்தசாரதி மற்றும் பிரபு பஞ்சுமிட்டாய்

  • Udhayasankar says:

    அருமையான நேர்காணல். மிக முக்கியமான கருத்துகளை மிக இயல்பாகச் சொல்லிக்கொண்டு போகும் இனியனுக்கு வாழ்த்துக்கள். நம்பிக்கை கூடுகிறது. குழந்தை இலக்கியத்தின் அடுத்த காலகட்டம் துவங்குகிறது என நம்புகிறேன்.

  • ரமேஷ் says:

    எவ்வளவு நீண்ட உரையாடல்.

    அண்ணே எங்கள் ஊர் குழந்தைகளுக்கும் கதைச்சொல்லி விளையாட உங்கள கூட்டிட்டு போகனும்.

Leave a comment Cancel reply