பெண்களுக்கு பிரச்சனைகள் வரும் போதெல்லாம், அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரமாய் நமது அறிவுரைகள் பெருகத் தொடங்கும். அப்படி செய்யாதே, இப்படி நடக்காதே, இதை உடுத்தாதே, இதை பேசாதே என்று ஒழுக்க வகுப்புகளை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சொல்லித் தருகின்ற கலாச்சார காவலர்கள் நிறைய முளைத்து வருகிறார்கள்.
உண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பான உலகம் எப்படி இருக்கும்? பெண்களின் குனிந்த தலையிலும், இழுத்துப் போர்த்திய உடலிலும் தானா அவர்களின் பாதுகாப்பு ஒளிந்திருக்கிறது.?
நாம பேச வேண்டிய செய்திகள் பலவும் உள்ளது. இப்போது பொள்ளாச்சி விவகாரம் பெரியதாகி, அதைப்பற்றியே எல்லோரும் பேசும் நேரத்தில், இதை நாம் பேசிவிட வேண்டும். இப்போது கூட பேசாவிட்டால் எப்போது தான் பேசுவது?
பெண்ணின் பாதுகாப்பு என்பது பெண்ணிடம் இல்லை, அவள் வீட்டிலோ வெளியிலோ பாதுகாப்பாகவோ, பாதுகாப்பின்றியோ இருக்க ஒரு ஆண் காரணமாகிறானே அதைப்பற்றி நாம் ஏன் பேச மறுக்கிறோம்.! பெண்ணை ஒரு கெளரவப் பொருளாகப் பார்க்கும் நமது மனோநிலையில் மாற்றம் ஏற்படாமல் இதில் மாற்றம் வருமா? பெண்ணென்று பிறந்த நிமிடத்திலிருந்து இந்த சமூகம் அவளுக்கு என தனி ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கிவிடுகிறது. அவளது சுற்றமும் அதை அங்கீகரிக்கத் துவங்கிவிடுகின்றன. அப்படி ஏற்படுத்தப்படுகின்ற நடவடிக்கைகள் அவளை இறுக்கமான கட்டுப்பாடுகள் நிறைந்த உலகத்தில் வாழ நிர்பந்திக்கின்றன.
ஊடகங்களும், அவை கடைப்பரப்பும் வியாபார தந்திரங்களும் பெண்ணின் உடலை ஒரு போகப்பொருளாக அவளே கருதும் சூழலை ஏற்படுத்திவிட்டது. அழகும், நிறமும் தான் பெண்ணின் மிக முக்கியமான பெருமை என்ற எண்ணம் இன்று பெரும்பாலான பெண்களுக்குள் ஏற்பட்டிருப்பதன் பின்னால், இந்த ஊடகங்களும், விளம்பரங்களும் இருக்கின்றன. ஆணாதிக்க சிந்தனையில் ஊறிப்போன சமூகத்தின் பிற்போக்குத்தனமான, கசடுகள் நிறைந்த எண்ணங்கள் பெண்களின் வளர்ச்சியை சமூகத்தின் வளர்ச்சியாக முன்னெடுக்க முட்டுக்கட்டை போடுகின்றன.
பெண்கள் பல்துறைகளிலும் சிறந்து விளங்கும் இந்த காலச்சூழலில் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. பெண்ணின் திறமைகள் வளரும் அதே நேரத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளும், ஆண் உயர்ந்தவன் என்ற மனப்போகும் கூடவே வளர்வதையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. சமூகத்தில் பெண்ணின் இடம் என்பது இன்னமும் அலங்காரமானதாக, அடக்கத்துடன் இருக்க வேண்டுவதாக உள்ளது. படித்தவர்களும் கூட பெண்ணுக்கு என்றுள்ள ஒழுக்க வரையறைகளில் பெரிய மாற்றம் தேடாதவர்களாக உள்ளனர். பெண் அணியும் ஆடைகள் ஆணின் மனதை சலனப்படுத்துகிறது என்று கூறி, பெண்கள் உடையொழுக்கத்தை போதிக்கும் யாரும், பெண்ணின் உடைகளைக் கண்டு மனம் பேதலிக்கும் ஆண்களுக்கு எந்த வகுப்புகளும் எடுக்காமல் இருப்பதை ஆணாதிக்கத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணைக் காணும் போது, அவள் தனது இச்சைக்கான பொருள் என்ற எண்ணம் ஒரு ஆடவனுக்குத் தோன்றுமானால், அவன் தானே சரி செய்யப்பட வேண்டியவன்? ஆண்கள் சரியாக மாறும் போது, பெண் உடுத்தும் உடையை மீறி, வெளியில், வீட்டில் எல்லா இடங்களிலும் பாதுகாப்பாக உணர மாட்டாளா?
எனில், மாற்றம் ஆண்களிடம் இருந்து தானே வர வேண்டும்? நாம் ஏன் இதை நம் வீடுகளில் இருந்து துவங்கக்கூடாது.? எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள். நான் என் பிள்ளைகளை பெண்ணை மதிக்கிற, அவள் தன்னைப் போல இன்னொரு சக உயிரி என்று நம்புகிற பிள்ளைகளாகவே வளர்த்திருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் எந்த பெண்ணையும் அவள் உடுத்தியிருக்கும் உடையை வைத்து தவறாக பேசுவதில்லை. இந்த எண்ணத்தை நம் பிள்ளைகளில் இருந்து நாம் துவங்குவது தான் இப்போது மிகவும் அவசியமானது. அது போன்ற உரையாடல்களை வீடுகளில் துவக்க வேண்டும். மடித்துக் கட்டிய லுங்கியோடும், வெற்றுடம்போடும் நடக்கிற எந்த ஆணையும் பார்த்து பெண்கள் வரம்பு மீறுவதில்லையே, ஏன் பெண்களின் உடை மட்டும் ஆண்களை வரம்பு மீற வைக்க வேண்டும்? இது உடை சார்ந்த விஷயமல்ல. பெண்ணை அப்படிப் பார்க்க மட்டுமே இந்த சமூகம் ஆண்களைப் பழக்கி வைத்திருக்கிறது. அந்த பழக்கத்திலிருந்து அவர்கள் மீட்டெடுக்கப்பட வேண்டுமே தவிர, ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள் பெண்கள் தங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறுதப்பழசான அறிவுரைகள் வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பெண்ணின் உடல் என்பது அவளுக்கு உரிமையானது. அவளது உடலில் அத்துமீறவும், உடலை வைத்து அவளை அடக்கியாளவும் முயலுதல் என்பது மிகவும் அபத்தம் என்பதை ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஆண், பெண் பாலின சமத்துவம் என்பது இருபாலாரையும் எல்லா விதத்திலும் சமமாக நடத்துவதில் தானே இருக்கிறது.? அந்த சமத்துவத்தை குழந்தைகளாக அவர்கள் வளரும்போதே கொடுக்கத்துவங்கினால் மட்டுமே சமூக மாற்றம் ஏற்படும்.
பெண்ணைப்பார்க்கும் பார்வையில் மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது தான் இதற்கான தீர்வாக இருக்கும். அப்படி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால், பெண்ணைப் பெற்றவர்கள் அல்ல, ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் மனதில் இந்த மாற்றத்தை விதைக்க முயல வேண்டும். அவர்களிடம் பெண்ணை எப்படி புரிந்து கொள்வது, அவளுடன் எப்படி சக மனிதனாக நட்பு பாராட்டுவது, அவளது உணர்வுகளை சரியாக புரிந்து கொள்வது என்பது போன்ற உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலம் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஆணும் பெண்ணுமாய் குழந்தைகள் வளரும் வீடுகளில் இருவரும் எல்லா விதத்திலும் சமமாக நடத்தப்படுவதும், பெண்ணின் மாதவிடாய் போன்ற சங்கடங்களை ஆணுக்குப் புரிய வைத்து வளர்ப்பது போன்றவையும் இன்றைய காலத்தின் தேவையாகும். எல்லா குடும்பங்களும் இத்தகைய முயற்சிகளை எடுக்கத் துவங்கினால், நமது குழந்தைகள் சமூகத்தில் பயமின்றி வாழ முடியுமே.!

























2 Comments
ஆண்களின் பார்வை தான் தவறு. நல்ல கட்டுரை
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று பெண்ணை உச்சத்தில் வைத்த நாம் தான் சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடானோம்…