சிறுவர்களுக்கான புத்தகங்களை தனியாக வாசிப்பதை விட, அவர்களுடன் சேர்ந்து வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கின்றது. ஒரு படைப்பை வாசித்துக் காட்டும் போது அதிலுள்ள உணர்வுகளை சிறுவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை நேரடியாக உணரமுடிகிறது. சமீபத்தில் சுட்டிகள் ரமணா(வயது 4) , ரமணி(வயது 10) இருவருக்கும் குட்டி ஆகாயத்தின் வெளியீட்டான பறவைகளின் வீடுகள் என்ற புத்தகத்தினை வாசித்துக் காட்டினேன். “அது ஒரு வசந்த காலம்” புத்தகம் இப்படியாக துவங்கியது. இதை வாசித்ததும் இரண்டு சுட்டிகளுமே ஒரே மூச்சாக “அந்த காலம் அது வசந்த&கோ காலம்” என்ற விளம்பர பாடலினை பாட துவங்கிவிட்டனர்.
வீட்டில் இருந்த நண்பரும் நானும் நீண்ட நேரம் அதை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தோம். நான்கு வயது சிறுவனுக்கு வசந்த காலம் என்ற சொற்கள் அறிமுகம் ஆகாமல் இருக்க தொலைகாட்சிகள் மூலம் வசந்த்&கோ அறிமுகம் ஆகியிருந்தது. இப்படியாக எங்களது வாசிப்பு முதல் வரியில் தற்காலிகமாக நின்றுவிட சிறிது நேரம் கழித்து மீண்டும் உற்சாகமாக துவங்கியது. பறவைகளின் உலகைப் பற்றி அழகாக பேசியது அந்தப் புத்தகம். ரமணா பறவைகள் என்றது உற்சாகமாகிவிட்டான். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பறவைக்கும் விதவிதமாக வீடுகள்(கூடுகள்) இருப்பதை நினைத்து. கூடுகள் சார்ந்து பகுதிகளை மட்டும் என்னை வாசிக்க வைத்துவிட்டு பின்னர்..நீங்க நல்லாவே கதை சொல்ல மாட்றீங்க என்று சொல்லிவிட்டு அவனது காலை விளையாட்டுக்கு சென்றுவிட்டான்.
அன்று மாலை சென்னை புத்தகத் திருவிழாவில் அந்தப் புத்தகம் வெளியாக இருப்பதற்காகவே அவனுக்கு வாசித்துக் காட்டினேன். அவன் புத்தகம் பற்றி பேசுவதாக சொல்லியிருந்தான். மாலையில் அவன் அனைவரது முன்பு பேசுவான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. கூட்டத்தை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவனுக்கு எதுவரை வாசித்துக்காட்டப்பட்டதோ அதுவரை மட்டுமே பேசி…அவ்வளவு தான் எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு தனது அழகான நேர்த்தியான உரையை முடித்துக்கொண்டான்.
அவனைத் தொடர்ந்து சுட்டி ரமணி,இசை மற்றும் இஷானி(வயது 10) அந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாக பேசினார்கள். இவர்கள் அனைவருமே புத்தகத்தை ஆர்வத்துடன் எந்தவித வற்புறுத்தல்களும் இன்றி வாசித்து அவர்கள் வாசித்த அனுபவங்கள் குறித்து இயல்பாக பேசியது மிகவும் மன நிறைவாக இருந்தது.
இவர்களின் அந்தப் பேச்சை கேட்டதிலிருந்து இதைவிட அழகாக இலக்கியத்திற்கு மரியாதை செய்திட முடியுமா என்ற எண்ணம் தான் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
இந்தப் புத்தகத்துடன் குட்டி ஆகாயம் 7ஆம் இதழும் , ஒரு சின்ன விதையின் கதை (சிறார் கதை வரிசை-01) புத்தகங்களும் வெளியானது. இசை & இஷானி இருவரும் குட்டி ஆகாயம் இதழில் வெளியான பாடலை அழகாக சேர்ந்து பாடினர். அதுப்போல் சின்ன விதையின் கதையைப் பற்றியும் இசை பேசினார். தீக்சிதா குட்டி ஆகாயம் இதழை குறித்து பேசினார்.
ஒவ்வொரு முறையும் சிறார் இலக்கிய உலகில் புதிய முயற்சிகளை எடுக்கும் குட்டி ஆகாயம் இதழ் இம்முறையும் கதைகளில் புதிய முயற்சியை செய்திருக்கிறது. கதை ஒன்றை துவங்கி அதனை மெல்லமாக வளரச் செய்து பின்னர் அந்தக் கதையை ஆறு சிறார் குழுக்களிடம் கொடுத்து வெவ்வேறு முடிவுகளை தேடி இருக்கிறது. அவர்கள் சொன்ன மீதிக் கதைக்கான ஓவியங்களை அவர்களிடம் பெற்றிருக்கிறது. மிகவும் நேர்த்தியாக வந்திருக்கிறது அந்தப் படைப்புகள். ஓவியங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் மன உலகை படம் பிடித்துக் காட்டுகிறது.
நமது சமூகத்தில் குழந்தைகளின் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் அவ்வளவாக தரப்படுவதில்லை என்பது எனது எண்ணம். வெளிநாடுகளில் குழந்தைகளின் ஓவியங்கள் புகழப்படுவதை சுட்டிகாட்டும் பல செயற்பாட்டளர்கள் கூட இங்குள்ள நமது அருகாமையில் உள்ள சிறார்களின் ஓவியங்களைப் பற்றி பேசுவதே இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் குட்டி ஆகாயம் அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்துவருகிறது. குழந்தைகளின் படைப்புகளுக்கு தளம் அமைப்பதின் அவசியத்தினை குட்டி ஆகாயம் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

குட்டி ஆகாயம் இதழின் இந்த ஓவியம் மிக முக்கியமானதாக கருதுகிறேன். ஊஞ்சலின் கனவில் ஒரு சிறுவன் , அவனது கனவில் ஓர் காட்சி . அதில் ஆல மரம் . அதன் விழுதில் ஒரு ஓணான் . அது ஏறும் திசையை அப்படியே வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியத்திற்கான சூழலை சிறார்களுக்கு வழங்கிய குட்டி ஆகாயம் நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
நிகழ்வில் சிறார் உலகில் ஆர்வமாக இயங்கும் பல நண்பர்கள் பங்கெடுத்துக்கொண்டனர். காக்கைக் கூடு அரங்கில் நண்பர்களுடன் சேர்ந்து குட்டி ஆகாயம் பதிப்பக புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
குட்டி ஆகாயம் பதிப்பக வெளியீடுகள் :
• குட்டி ஆகாயம் சிறார் இதழ்
• சிவப்பு மழைக்கோட்
• குட்டி யானை வீட்டுக்குப்போகுது
• யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்…
• குழந்தை அவள் செய்த முதல் தப்பு
• ஒரு சின்ன விதை
• பறவைகளின் வீடுகள்
வீடியோ பதிவு :
























