பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியானது. வெளியீட்டு விழா திருப்பூர் சிறுவர்களால் சிறப்பாக நடைப்பெற்றது. இதழ் குறித்து சிறுவர்கள் பேசியது அனைத்தும் அருமை. இதழை எவ்வாறு சிறுவர்கள் உள்வாங்குகிறார்கள் என்பதை அவர்களுடன் பயணித்து, உரையாடி, அறித்துக்கொள்வது என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
நிகழ்வை சிறப்புர நடைப்பெற செய்த திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி நண்பர்களுக்கும், தளிர் பதிப்பக நண்பர்களுக்கும், பஞ்சு மிட்டாயுடன் தொடர்ந்து பயணித்து வரும் சம்பத், சிந்துஜா, யோகி செந்தில் அவர்களுக்கும் எங்களது அன்பான நன்றிகள். அதேப் போல் வெளியீட்டு விழாவை முழுவதுமாக பதிவு செய்த அகரம் தொலைக்காட்சிக்கு எங்களது நன்றிகள்.
திருப்பூரில் தாய்த் தமிழ் பள்ளியில் பஞ்சு மிட்டாய் சார்பாக நிகழ்வை நடத்தி, சிறுவர்களுடன் உரையாடி அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் இதழ் வழங்கப்பட்டது. அவர்களுடன் பஞ்சு மிட்டாய் இதழ் வாசிப்பை நடத்தி 8ஆம் இதழ் வெளியானது. அதேப் போல் யாழினி எனும் சிறுமி பஞ்சு மிட்டாய் முந்தைய இதழைக் குறித்து நிகழ்வில் அழகாக பேசினார்.
இப்படி இதழ் வெளியீட்டு விழா சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து நண்பர்களுக்கும் , சந்தாதாரர்களுக்கும் இதழ் அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது இதழ் குறித்து நண்பர்கள் நிறைய பதிவு செய்துவருகின்றனர். அதில் சிலவற்றை இங்கு இணைய வாசகர்களின் பார்வைக்கு பதிவு செய்கிறோம்.
உதயசங்கர் :
பஞ்சு மிட்டாய் வந்திருச்சி! குழந்தைகளின் படைப்பூக்கத்தை வளர்த்தெடுப்பதில் முதன்மையான இதழாக பஞ்சுமிட்டாய் இருக்கிறது. குழந்தைக்ளின் ஓவியங்கள் சிறப்பு. பஞ்சுமிட்டாய். ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்! பஞ்சு மிட்டாய் அத்தனை இனிப்பு!
ச.மாடசாமி:
பஞ்சு மிட்டாய் பிப்ரவரி இதழ் புரட்டப் புரட்ட பிரமிப்புதான். பூவும் இலையும், சிங்கமும் சுண்டெலியும் – கதைகளில் வெளிப்படும் குழந்தைகளின் கற்பனை பெரும் ஆச்சர்யத்தைத் தந்தது. குழந்தைகள் மீதான நம் நம்பிக்கை பெருகுகிறது. அன்பென்பது நம்பிக்கைதானே என்று புரிய வைக்கிறது பஞ்சு மிட்டாய்.
உதயலட்சுமி :
இம்முறை இதழின் முதல் வாசிப்பாளர் நான்தான். பிறகுதான் என் பிள்ளைகளிடமும் பள்ளிப் பிள்ளைகளிடமும் தந்தேன். என் பிள்ளைகள் பிசாசு கதையை படித்துவிட்டு தடி ஒன்றை எடுத்துக்கொள்ளலாம் இனி இரவில் உச்சா போக எழுந்திருக்கும்போது என்று முடிவெடுத்துள்ளனர்.
எனக்கு பிடித்த கதை சிங்கமும் சுண்டெலியும். சிங்கத்துக்கு ஓட்டப்பந்தயத்தில் கால் தடுக்கி விழ அதற்கு சுண்டெலி உதவி செய்யன்னு நான்கு வயதே நிரம்பிய அமிர்தவ் சொன்ன கதையைப் படித்து, அந்தக் குழந்தையின் நட்புமனம் பிரமிக்க வைத்தது.
அழ.வள்ளியப்பாவின் பாடல், இட்லி பாடல் ,பூவும் இலையும் பேசிக் கொண்டால் படக்கதை இரண்டுமே ரசிக்க வைத்தது. எங்கள் பிள்ளைகள் அழ.வள்ளியப்பா பாடலை இசையோடு பாடியபடியே விளையாடிக் கொண்டிருந்தனர். ஒத்தையா இரட்டையா பம்பையா பரட்டையா விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விளையாடிப் பார்க்கணும். கன்னிக்கோயில்ராஜா அவர்களின் சாரோட சப்போட்டா கதை நெகிழ்ச்சியாய் இருந்தது.
பள்ளிப்பிள்ளைகள் இந்தப் புத்தகத்தை கூட்டாக கூடி கூடிப் படித்தனர். ஏனெனில் எல்லாப் பகுதிகளும் ஆர்வமூட்டும் வகையில் இருந்தது. பஞ்சுமிட்டாய் புத்தகம் இப்படி வாசிக்கும்போதே இனிப்பை தரும் அளவு உழைக்கும் பஞ்சுமிட்டாய் குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பூங்கொடி :
எந்த ஒரு மனிதனுக்கும் அங்கீகாரம் கிடைத்துக் கொண்டு இருந்தால் அவன் வைக்கின்ற அடிகள் பலமாகவே இருக்கும். இதே மாதிரி நம் குந்தைகளுக்கு அங்கீகாரம் கொடுத்து பாருங்கள்; அவர்களின் கற்பனைத் திறனும் , திறமைகளும் தெள்ளென வெளிப்படும். அப்படி குழந்தைகளின் திறமைகளை , கற்பனைகளை வெளிப்படுத்த பேருதவி புரிகிறது சிறுவர் இதழான பஞ்சுமிட்டாய். குழந்தைகளின் கதைகளும் , ஓவியங்களும்தான் புத்தகம் முழுவதும் இடம்பெற்று இருக்கும்.
இந்தக் காலாண்டு இதழின் சிறப்பு என்னவென்றால் பல ஊர்களில் வைக்கப்பட்ட கதைப்பெட்டியில் இருந்த சிறார் படைப்புகள் தான் இந்த இதழை அலங்கரித்து உள்ளது. அதனுடன் அழ.வள்ளியப்பா அவர்களின் பாடலும், கன்னிகோவில் ராஜா அவர்களின் சப்போட்டா கதையும் இடம்பெற்றுள்ளது.
வானம் பதிப்பகத்தார் இந்த இதழ்களின் அட்டை வடிவமைப்பை திறம்பட செய்கிறார்கள்.
லலிதாஸ்ரீ என்ற ஆறுவயது குழந்தை எப்படி இலைகளில் உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை கேள்வியாக கேட்க , அதற்கு பிள்ளைகள் புரிந்து கொள்ளும் வகையில் உரையாடல் கதை மூலம் விளக்கியுள்ளார் லலிதா என்பவர்.
“இந்த போட்டி உலகில் ஜெயிக்க ஓடு ஓடு . எவன் விழுந்தாலும் கண்டுக்காம நீ ஓடிக்கிட்டே இரு” என்பதை தாரக மந்திரமாய் பிள்ளைகளுக்கு கத்துக் கொடுக்கிறோம். ஆனால் நாலு வயது பிள்ளை சிங்கமும் சுண்டெலியும் கதையில் அந்த மந்திரத்தை உடைச்சு வெற்றியைக் காட்டிலும் சக உயிர்களின் மேல் அன்புதான் முக்கியம் அப்படின்னு ஒரு சின்ன கதையின் மூலம் அழகாக சொல்கிறான். அப்படி இருக்கற குழந்தமையைத் தானே நாம் நசுக்கி விடுகிறோம்.
இந்த புத்தகத்தைப் பத்தி எழுதுவதே நல்ல புத்தகங்கள் குழந்தைகள் கையில் கிடைக்கணும் அப்படிங்கிற நோக்கத்தில் தான். என் நட்புகள் சில பேர் பதிவுகளைப் படிச்சு குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்கள் வாங்கி தந்துட்டு இருக்காங்க. சில பேர் பல பேரா மாறணும். புத்தக வாசிப்பை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தவும் , அவர்களின் கற்பனையை அதிகப்படுத்தவும் இந்த சிறார் இதழ்கள் கண்டிப்பாக உதவும்.
வனிதாமணி:
செய்தித்தாள் படிக்கும் அப்பா …காய்கறி நறுக்கும் அம்மா எனப் பாடப்புத்தகமே காட்சிப்படுத்தினால் என்ன செய்வது நாம் புலம்பினோமே……
இன்று பஞ்சுமிட்டாய் சிறார் இதழில் ராஜேஸ் அவர்கள் ஓர் அழகிய பாடலை குழந்தைகள் மனதில் ஆண் பெண் சமத்துவம் இயல்பாய் பதியுமாறு எழுதியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பிரபு (பஞ்சுமிட்டாய் இதழின் ஆசிரியர்) உங்களின் அத்துனை சிறார் செயல்பாடுகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள். உள்ளபடியே உள்ளத்திலிருந்து சொல்கிறேன் பஞ்சு மிட்டாய் மிகப் பெரிய விசயம். தொடருங்கள்.
எங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் பஞ்சு மிட்டாய் வந்துவிட்டால் அந்த வாரம் முழுக்க கொண்டாட்டமே…..