வண்ணுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
நீண்ட நாட்களாகவே எனக்கு வண்ணங்கள் பற்றிய‌ கதைகளை வாசிக்க வேண்டுமென்ற ஆசை. நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் வண்ணங்கள் பற்றிய கதைகளைத் தேடிக்கொண்டிருப்பேன். ஆனால் சரியான கதை இதுவரை கிடைக்கவேயில்லை. அந்தத் தேடலே என்னை வண்ணங்கள் குறித்து இந்தக் கதையை எழுதத் தூண்டியது.

வண்ணங்கள் என்பது இவ்வுலகில் மொழி,இனம்,ருசி,சாதி,மதம்,குணம்,பண்டிகை கொண்டாட்டங்கள் என பல விசயங்களின் குறியீடாகவும் அடையாளமாகவும் இருக்கிறது. அமைத்திக்கு வெந்நிறமும், எதிர்ப்புக்கு கருநிறமும், அபாயத்திற்கு சிவப்பு நிறமும், பசுமைக்கு பச்சை நிறமும், மங்களகரத்திற்கு மஞ்சள் நிறமும் என பட்டியல் நீள்கிறது.
“உனக்கு பிடிச்ச கலர் என்ன?” என்ற கேள்வியை சிறார்களிடம்  கேட்டுப்பாருங்கள். அவர்களின் பதிலில் கருப்பு நிறத்திற்கு எப்பொழுதும் குறைவான இடங்களே கிடைத்திருக்கும். நமது சமூகம் கரு நிறத்தை தெரிந்தோ தெரியாமலோ பயம்,அதிர்ஷ்டம்,தாழ்வுணர்ச்சி,அழகு போன்ற‌ தவறான பல காரியத்திற்கு தொடர்பு படுத்திவிட்டது. அதன் தாக்கம் சிறுவர்களின் மீது பெரிதும் இருக்கிறது. ஆனால் உண்மையில் கருப்பு நிறம் தான் உழைப்பிற்கும்,சுய சிந்தனைக்கும் அடையாளமாக இருக்கிறது.
இந்த எண்ணங்களையும், முதன்மை நிறங்கள் மற்றும் நிறங்களின் உருவாக்கம் பற்றியும், ஒளிச்சேர்க்கை(photosynthesis) பற்றியும் கதையின் போக்கில் சிறார்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.
வாசிப்பு மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய‌ எஸ்.ரா அவர்களுக்கும், பஞ்சுமிட்டாய் குழு நண்பர்களுக்கும், சமகால தமிழ் சிறார்களுக்காக‌ செயல்படும் அனைத்து நண்பர்களுக்கும், எனது ஒவ்வொரு முயற்சிக்கும் உறுதுணையாக இருக்கும்  எனது மனைவிக்கும், புத்தகத்தின் முதல் வாசகர்களான‌ அம்மா மலர்கொடி மற்றும் மகள் தன்யஸ்ரீக்கும், எனது மற்ற‌ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும்,கதைக்கு மேலும் பலம் சேர்த்த ஓவியர் அவர்களுக்கும் எனக்கு முதல் அங்கிகாரத்தை கொடுத்த அண்ணன் மணிகண்டன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
புத்தகம் : எனக்குப் பிடிச்ச கலரு, வெளியீடு : வானம் பதிப்பகம், விலை : 40ரூ, தொடர்புக்கு : 9731736363 இணையம் மூலம் வாங்க : Commonfolks.in 

Leave a comment