வாசிப்பைத் தொடங்கிவைத்தல் – சரவணன் பார்த்தசாரதி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?’

நான் கலந்துகொள்ளும் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி இது. இதற்கு ஒற்றை வரிப் பதில் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன். அதற்குமுன் ஒரு குழந்தையிடம் படிப்படியாக வாசிப்பை அறிமுகம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

படப்புத்தகங்கள்:

குழந்தைக்கு இரண்டு வயதானதும் காகிதத்தாலான, படங்கள் அதிகமாக இடம்பெற்றிருக்கும் புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவற்றில் குறிப்பிடப்படும் சொற்கள் தாய்மொழியில் இருப்பது மிக மிக அவசியம். ஆங்கிலத்தில் பொருட்களையும் சொற்களையும் அறிமுகம் செய்தீர்கள் என்றால் குழந்தைக்கு சிந்தனைக் குழப்பம் ஏற்படும். தாயும், தகப்பனும், சுற்றிலும் உள்ள சமூகமும் ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசிக்கொண்டிருக்க, எனக்கு ஏன் இப்படியான ஒரு மொழியில் பொருட்களை அறிமுகம் செய்கிறார்கள் என்ற கேள்வி அவர்கள் ஆழ்மனதில் தோன்றுவதே இதற்குக் காரணம்.

ஆகவே, தாய்மொழியில் வெளிவரும் படப்புத்தகங்கள்தான் வாசிப்பின் முதற்படி.

பாடல்கள்:

‘ஒரு குழந்தைக்குப் பாடல்களைக் கற்பிப்பதன் மூலமாகவே மொழியைக் கற்பிக்க இயலும்’ – கன்பூசியஸ்.

இன்று உலகெங்கும் குழந்தைகளுக்குப் பாடல் வழியே மொழி கற்பிக்கப்படுவதற்கு கன்பூசியஸின் இந்தக் கருத்துதான் காரணம். மூன்று வயதானதும், படங்கள் மற்றும் எளிய சொற்கள் கொண்ட பாடல் புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம். அதிலும், பெற்றோர் அப்பாடல்களை இசையுடன் பாடுவதன் மூலம் பல ஒத்திசைவுச்சொற்கள் அக்குழந்தைக்கு பரிட்சயமாகும். இதைச் செய்ய அந்தப் பெற்றோருக்கு மேலான குரலோ, பயிற்சியோ தேவையில்லை. இதே காலக்கட்டத்தில் குழந்தைக்கு இரண்டாம் மொழியை அறிமுகம் செய்யமுடியும். அதற்கு இருமொழிக் கதைப்பாடல் புத்தகங்களைப் பயன்படுத்தலாம்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பா, தம்பி சீனிவாசன் ஆகியோரின் புத்தகங்கள் இதற்கு உதவக்கூடும். இவர்களின் பெரும்பாலான நூல்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

பாலர் பள்ளியில் சேர்த்ததும் அவர்கள் அளிக்கும் பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடல், கதைகள் ஆகியவற்றைப் வாசித்துப்பாருங்கள். அவற்றில் எது உங்கள் குழந்தையைக் கவர்கிறதோ அதே எழுத்தாளரின் புத்தகங்களை வாங்கிக் குழந்தைக்குக் கொடுங்கள். இவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால் புத்தகங்களை வாங்குவது சிரமமில்லை.

கதைகள், காமிக்ஸ்கள்:

ஏழு வயதானதும் குழந்தைகள் தங்களுக்கான புத்தகங்களைத் தாங்களே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். அப்போது அவரவர் விருப்பப்படி கதைகள், பாடல்கள், படக்கதைகள் ஆகியவற்றை முதன்மையாகக் கொள்கின்றனர். இத்தேர்வு தொடர்ந்து சிலகாலம் மாறிக்கொண்டேயிருக்கும். காமிக்ஸ்களை அறிமுகம் செய்ய இதுவே நல்ல தருணம். தமிழில் தொடர்ச்சியாக வெளிவரும் லயன் காமிக்ஸ் கடந்த சில ஆண்டுகளாக பதின்ம வயதினர் மற்றும் இளையோருக்கான காமிக்ஸ்களில் அதிகக் கவனம் செலுத்திவருகின்றனர். சமயங்களில் அவர்கள் வெளியிடும் சாகசங்கள் மற்றும் நகைச்சுவை சார்ந்த காமிக்ஸ் புத்தகங்களை ஏழு முதல் பன்னிரண்டு வயதினருக்கு அறிமுகம் செய்யலாம். காமிக்ஸ் புத்தகம் படிப்பது அவர்களது கற்பனையை வளர்ப்பதில் பெரும்பங்காற்றும்.

வாண்டுமாமா எழுதிய ‘மர்ம மாளிகையில் பலே பாலு’ இப்படியான புத்தகம். இது திருவரசு புத்தக நிலைய வெளியீடு. இது தவிர உயிரினங்கள், வரலாறு, அறிவியல், சோதனைகள் என்று பல தலைப்புகளில் அவர் எழுதிய புத்தகங்கள் கங்கை புத்தக நிலையம்,  வானதி பதிப்பகம் ஆகியவற்றில் கிடைக்கின்றன. அவற்றைத் தவறாமல் வாங்கி உங்கள் குழந்தையிடம் கொடுங்கள்.

குழந்தைக்குப் பத்து வயதானதும், அழ.வள்ளியப்பா, பூவண்ணன், கிரா, முல்லை தங்கராசன், தமிழ்வாணன், யூமா வாசுகி, உதயசங்கர், யெஸ்.பாலபாரதி ஆகியோரின் கதைகளையும், பெரியசாமி தூரன், ரேவதி, ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன், ஆயிஷா நடராஜன், ஆதி வள்ளியப்பன் ஆகியோரின் கட்டுரை நூல்களையும் அறிமுகம் செய்யலாம்.

கடந்த சில ஆண்டுகளாக பாரதி புத்தகாலயம் – புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் பல சோவியத் சிறார் நூல்களை வெளியிட்டு வருகிறது. மேலும் நேஷனல் புக் டிரஸ்ட், சில்ரன் புக் டிரஸ்ட் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான தலைப்புகளில் கதை, கட்டுரை நூல்கள் கிடைக்கின்றன. ஒரே புத்தகம் பல மொழிகளில் கிடைப்பது இவற்றின் சிறப்பு. வானம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கும் உலக கிளாசிக்குகளின் சுருக்க வடிவம், குழந்தைகள் உலக இலக்கியத்திற்குள் நுழைய நல்லதொரு தொடக்கமாக அமையும்.

பதின்ம வயதினருக்கு

பதின்ம வயதினருக்கான புத்தகங்கள் தமிழில் மிகக்குறைவு. தமிழில் தமிழ்வாணன் செய்த மிகப்பெரிய சாதனை என்று அவரது துப்பறியும் கதைகளைச் சொல்லலாம். ஆங்கிலத் துப்பறியும் கதைகளில் இருந்து ஊக்கம் பெற்றே அவர் இக்கதைகளை எழுதி இருக்கிறார். ஆனாலும் நிலம் சார்ந்த கதைக்களம், காட்சிகள், கதைமாந்தர், சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பதித்துச் சென்றுள்ளார். மணிமேகலை பிரசுரம் சங்கர்லால் துப்பறிகிறார் புத்தகங்களைத் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளது. வாசிப்பின் மீதான நேசத்தைக் கூட்டும் இந்நூல்களை பதின்ம வயதினர் தவறவிடக்கூடாது.

கல்கியின் பொன்னியின் செல்வன், ஜெயமோகனின்  பனிமனிதன், பொம்மலாட்டக்கலைஞர் கலைவாணன் எழுதி வெளியிட்டிருக்கும் சின்னச்சின்னக் கதைகள் தொகுப்பு, யூமா வாசுகியின் சிறார்களுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் (அனைத்தும்) ஆகியவற்றை அறிமுகம் செய்யலாம்.

பிலோ இருதயநாத் (வானதி பதிப்பகம்), ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சலீம் அலி (NBT), வட்டமிடும் கழுகு – முகமது அலி (தடாகம்),  பறவைகளும் வேடந்தாங்கலும்- மா.கிருஷ்ணன்  ( காலச்சுவடு), தியடோர் பாஸ்கரனின் சூழலியல் நூல்கள் (உயிர்மை, காலச்சுவடு), கிருஷ்ணா டாவின்சியின் சூழலியல் நூல்கள், குமாவும் புலிகள் – ஜிம் கார்பெட் (காலச்சுவடு), எனது இந்தியா – ஜிம் கார்பெட் (காலச்சுவடு), ஏலகிரியில் சிறுத்தைவேட்டை – ஆண்டர்சன் – (பாரதி புத்தகாலயம்), ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் (NBT) – கேடம்பாடி ஜட்டப்ப ராய், தமிழகத்துப் பறவைகள் – ரத்னம், எனது கணவரும் ஏனைய விலங்குகளும் – ஜானகி லெனின் (பாரதி புத்தகாலயம்) ஆகிய நூல்கள் மானுடவியல், சுற்றுச்சூழல் சார்ந்த ஓர் அடிப்படைப் பார்வையைத் தரக்கூடும். இவற்றைப் படித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் குழந்தைகள் தங்களுக்கான வாசிப்பின் வழியைக் கண்டறிவார்கள்; சில சமயம் அவர்கள் வாழ்க்கைக்கான வழிகளையும். அப்போது பெற்றோராகிய நீங்கள் புத்தகம் வாங்கிக்கொடுப்பதுடன் நின்றுவிடாமல், அவர்களுடன் விவாதிக்கத் தொடங்குங்கள்.

சரி. இப்போது இக்கட்டுரையின் முதல் வரிக்கு வருவோம். குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த மிக எளிதான வழி ஒன்று உண்டு – அது – பெற்றோராகிய நீங்கள் புத்தகம் வாசிப்பது. அவ்வளவுதான்.

வாருங்கள்! குழந்தைகளோடு சேர்ந்து நாமும் வாசிப்போம்.

2 Comments

  • Murali says:

    Very well written article. Being a doctor, I can appreciate the Efforts are taken by author to write this. Must read. I will share it with my friends, family and colleagues.

  • Porkodi Karnan says:

    கடைசி வரியை தான் முதலிலேயே யோசித்தேன். நாம தான் நிறைய படிக்கணும். நம்மை பார்த்து குழந்தைகளும் படிப்பாங்க.

Leave a comment