கதையெனும் மந்திரக் கால்கள் – வித்தைக்காரச் சிறுமி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வித்தைக்காரச் சிறுமி – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல் (2017 ஆம் ஆண்டுக்கான) விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி பிள்ளை அவர்களின் ஓவியத்துடன் வானம் பதிப்பக வெளியீட்டாக வந்த வித்தைக்காரச் சிறுமி நூலிற்கு கிடைத்தது. நண்பர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு பஞ்சுமிட்டாய் சார்பாக வாழ்த்துக்கள்.

புத்தகம் குறித்து ஓர் அனுபவம் -தன்யா & பிரபு

பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. சுட்டிகளுக்கு பிடித்த அழகிய குட்டிக் கதைகளின் தொகுப்பு. எனது மகளுக்கு மிகவும் பிடித்த கதை “கொம்பு”. அதுவும் அந்த கொம்பு முளைத்த ஓவியத்தை பார்க்க பார்க்க அவளுக்குள் அவ்வளவு பெரிய மகிழ்ச்சி பொங்கும். அவளுக்கு நான்கு வயது இருக்கும் போது இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்தேன். அந்நாட்களில் தொடர்ந்து கொம்பு கதையை சொல்லச் சொல்லி கேட்பாள். கொம்பு முளைத்த அந்தச் சிறுவன் போல் நடித்துக் காட்டுவாள். கொம்பு வைத்துக்கொண்டு என்னென்ன செய்ய முடியும் என்னென்ன செய்வதில் சிரமம் இருக்கும் என்று இருவரும் பேசிக்கொள்வோம். இறுதியாக “ஆகா,இது கனவு தானே” என்று சொல்லி முடிப்பாள். ஓர் புத்தகம் வாசிக்க குழந்தைக்கு வாசிக்க தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நம்புவன் நான். அந்த நம்பிகையை எனக்கு விதைத்ததில் இந்தப் புத்தகத்திற்கு மிகப் பெரிய பங்குண்டு என சொல்ல வேண்டும். பிள்ளை அவர்களின் ஓவியமும் வானம் மணியின் வடிவமைப்பும் ஒரு குழந்தைக்கு புத்தகத்தை நெருக்கமாக உணரச் செய்துவிடுகிறது. இருவருக்கும் அன்பான நன்றிகள். கதைகள் தான் எங்களுக்குள் ஆயிரம் புதிய விசயங்களை பேச வைக்கிறது. அவ்வகையில் எங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு சுட்டி தன்யாவின் அன்பு வாழ்த்துக்கள்.

புத்தகம் குறித்து சுட்டி கதைச் சொல்லி ரியாவின் பகிர்வு :

குழந்தைகள் கலை இலக்கியக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் :

ஜவ்வாதுமலை, ஜமுனாமரத்தூரில் இனியனும் மகாலட்சுமியும் ஒருங்கிணைத்த குழந்தைகள் கலை இலக்கியக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் 8-ம் வகுப்பு படிக்கும் சதீஷ் நான் எழுதிய வித்தைக்காரச் சிறுமி நூலைப் பற்றி பேசினான். அவன் இடையில் மூன்றாண்டுகள் பள்ளியிலிருந்து விலகி, (இடைநிற்றல்) மீண்டும் படிக்க வந்தவன். தன்னிடம் இப்படி ஒரு புத்தக்த்தைக் கொடுத்து யாருமே படித்துவிட்டு கருத்து சொல் என்று கேட்டதே இல்லை என்று இனியனிடம் சொல்லியிருக்கிறான். ஆரம்பத்தில் ரொம்ப தயங்கியவன், பின் துணிவுடன் தயாராகியிருக்கிறான். ஆனபோதும் மேடையில் சிறு பதற்றத்துடன் இருந்தான். ( மேடை ஏறும் கடைசி நொடி வரை புத்தகத்தைப் படித்திக்கொண்டே இருப்பதைப் படங்களில் பார்க்க முடிகிறதா?) பேசும்போது அது இன்னும் கொஞ்சம் அதிகரித்தது. ஆனாலும், மிக மிக மிக அழகாக பட்டாம்பூச்சிகள் எங்கே என்ற கதையை அவன் உள்வாங்கிய விதத்தில் சொன்னான். அது அவ்வளவு இயல்பாக இருந்தது. பட்டாம்பூச்சிகள் உயிருடன் வந்ததைப் போன்றதோர் உணர்வு. நெகிழ்ந்தேன். தொகுப்பில் எனக்கு ரொம்ப பிடித்த கதை, மலைப்பகுதி சிறுவனுக்கும் அந்தக் கதை பிடித்ததாக இருந்தது பல மடங்கு மகிழ்ச்சி. மேடையில் தோளோடு இறுக்க அணைத்துக்கொண்டேன். அதை விட, கதை எழுதுபவருக்கு மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியுமா என்ன?

இந்தத் தருணத்தை எழுத்தாளர்களுக்கு அளிக்கும் இனியனுக்கும் உடன்நின்ற மகாலட்சுமிக்கும் நன்றியும்

– விஷ்ணுபுரம் சரவணன்

புத்தகம் குறித்து விஷ்ணுபுரம் சரவணன் :

‘வித்தைக்காரச் சிறுமி’ இதுதான் நான் சிறுவர்களுக்காக எழுதிய முதல் கதை. அதைப் படித்த அண்ணன் யூமா வாசுகி பாராட்டி, அப்போது அவர் பணிபுரிந்த தினமணி – சிறுவர் மணியில் வெளியிட்டார். அந்த வகையில் எனக்கு மிக முக்கியமான கதை. அதோடு இன்னும் சில கதைகளின் தொகுப்பே வித்தைக்காரச் சிறுமி நூல்.

சிறுவர்களுக்கான கதைகளில் நீதியை வலியுறுத்தும் அல்லது நீதியை வலியுறுத்த மட்டுமே கதைகள் எழுதுவது எனும் வகைமை எனக்கு சோர்வூட்டியது. அதனால், என் கதைகளில் அவற்றைத் தவிர்க்க விரும்பினேன். சிறுவர்கள் தம்மைச் சுற்றி வாழும் உலகோடு தொடர்பிலிருக்க வேண்டும். அதற்கு, புறச் சூழலைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். சக மனிதர், உயிரினம், இயற்கை மீதான நேசத்தை வளர்ந்தெடுத்துகொள்வதை இயல்பாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு நான் என்ன செய்யலாம் என்று நினைத்ததன் விளைவுகளே என் கதைகள். சக உயிரினத்துடன் இயைந்து வாழும் மனப்பான்மையை உருவாக்கிக்கொள்வதற்குக் குழந்தைகளைப்பழக்குவது அவசியம். சமூகத்தின் நிலவும் சாதிய, மத, பாலின, நிற, மொழி, இன, பிராந்திய வேறுபாடுகளை உணர்ந்து அவற்றிலிருந்து விலகி நின்று சக உயிரியை நேசித்து வாழ்வதற்கான பணிகளை எழுத்தாளர்கள் செய்ய வேண்டும். அதற்கு என் கதைகள் உதவினால் மகிழ்ச்சி.

‘வித்தைக்காரச் சிறுமி’ தொகுப்பில், ‘வண்ணத்துப்பூச்சிகள் எங்கே?’ என்ற கதை பலராலும் பாராட்டைப் பெற்றது. ஒரு நண்பர் அதைக் குறும்படமாக்கவும் விரும்பினார். சில காரணங்களால் அது கைகூடவில்லை. இந்தக் கதையிலும் சரி, வித்தைக்காரச் சிறுமியிலும் சரி, கதை நடக்கும் நிலத்தை, எழுத்துகளால் வரைபடமாக்க முயன்றிருப்பேன். அது என்னுடைய ஊரில் சில அடையாளங்கள்தாம். கதை வழியே, சிறுவர்கள் தாங்களே ஒரு நிலவியல் வரைபடத்தை உருவாக்கிக்கொள்ளத்தக்க வாய்ப்பை அளிக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன். ஏனெனில், அது நல்லதொரு மனப்பயிற்சி. தம் வாழும் ஊரின் வரைபடத்தை அவர்கள் அறியாமலே மனத்திற்குள் உருவாக்கிக்கொள்ள ஏதேனும் ஒரு கதை வாய்ப்பளிக்கும். அதன் வழியே, அங்கு வாழும் மனிதர்கள், வயல்கள், விலங்குகள், மரங்கள், பூச்சிகள், கட்டடங்கள், நீர் நிலைகள்… என அவர்களின் மனத்தில் ஆழப் பதியும். இவை எனக்கானவை எனும் பெருமிதமும், நம்பிக்கையையும் அளிக்கும். நாளை, அவற்றை யாரேனும் சீர் குலைக்க வருவாராயின், எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கான மனநிலையையும் தரக்கூடும்.

பெரியவர்களுக்காக எழுதப்படும் புதிய ‘கரு’ கொண்ட கதைகளைப் போலவே, சிறுவர்களுக்கும் உருவாக்க முயல்கிறேன். சில அங்கீகாரங்கள், பாராட்டுகள், கவனிப்புகள், கைக்குலுக்கல்கள், சிநேகம் கசியும் புன்னகைகள் என் பயணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுகின்றன.

Leave a comment