பெரியவர்கள் ஏன் விளையாட வேண்டும்? – சம்பத் குமார்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மாலை நேரத்தில் உற்சாகமாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த எனது மகன் சைக்கிளை அப்படியே படுகிடையாக வீதியின் நடுவே விட்டுவிட்டு என்னிடம் ஓடி வந்தான். “ அப்பா, இந்த உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்சவங்க யாருன்னு தெரியுமா?” என்று கேட்டான். வீட்டில் அவன் செய்யும் எல்லாத் தகராறுகளையும் பொறுத்துக் கொண்டு அவனுக்கு எல்லா நேரங்களிலும் ஆதரவாக இருக்கும் ஒரே ஆள் நான்தான். ஆக அவன் விரும்பும் உலகத்துலேயே பிடிச்ச ஆள் நானாகத்தான் இருப்பேன் என ஒருகணம் நினைத்து ஏமாந்து போனேன். எனக்குக் கிடைத்தது நான்காவது இடமே. சில வாரங்களுக்கு முன்பு மட்டுமே பழகியிருந்த சைக்கிள் முதலிடத்திற்கு போயிருந்தது.இப்போது நான் சைக்கிளை பார்க்கும் போது அது ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருப்பது போல தோன்றியது எனக்கு.

ஏழு வருடம் நிரம்பிய குழந்தை மூன்று மாத சைக்கிள் பயிற்சியில் என்னை நான்காவது இடத்திற்கு தள்ளிக் கொண்டு போய் விடுகிறது என்றால் வரப்போகும் காலங்களில் அவன் அனுபவப்படப்போகும் பொருட்கள் எவ்வளவு! அதில் அவைகளோடு போட்டியிட்டு என்னை அவனுக்கு தெருக்கமானவனாக மாற்றிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? அதுபோலவே இத்தருணம் குழந்தைக்கும் எனக்கும் இடையே நிகழும் விலக்கத்தின் துவக்கம் என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமா? என்பது போன்ற எண்ணங்களைத் தோன்றுவித்தது.

குழந்தையின் சிறு மனப்பதிவை இவ்வளவு விமர்சனப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என நான் நம்பினாலும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவையும் இதில் இருக்கவே செய்கின்றன. பெற்றோர்களுடனான நெருக்கத்தை உணராத குழந்தைகளே பொதுவாக பொருட்களின் மீது நாட்டம் கொள்கின்றனர் என்பதே உளவியலாளர்களின் கூற்றாக உள்ளது. வீட்டிலோ வீதியிலோ அவர்களோடு விளையாடவும் உரையாடவும் யாரும் இல்லை எனும்போது அவர்கள் உடனடியாக கைபேசியிலும் கணினி விளையாட்டுகளிலும் மூழ்கி விடுகின்றனர்.

பொருளாதாரத் தேவையை ஒட்டியும் இன்னபிற காரணங்களினாலும் தம்மை இறுக்கமாக்கிக் கொள்ளும் பெற்றோர்கள், மாலை நேரங்களில் கிடைக்கும் சில மணிநேரங்களில் குழந்தைகளோடு இருந்தாலும் கூட அவர்கள் உண்மையில் குழந்தைகளோடு இருப்பதில்லை. இப்படியான நேரங்களில் பெற்றோர்களின் பள்ளி குறித்த கேள்வியாலும் வீட்டுப்பாடம் குறித்த அதட்டல்களிலும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கும் நேசிப்பை, அன்பை இழந்து தனித்து நிற்பதாய் உணர்கின்றனர். ஆகவே உண்மையில் குழந்தைகளால் அவர்களுக்குள் இருக்கும் பதட்டங்களையும் பயங்களையும் வெளிப்படுத்திப் பேச விரும்பும் நம்பிக்கைக்கு உரியவர்களாக பெற்றோர்களைப் பார்க்க முடிவதில்லை.

வழக்கமான மிரட்டல்களை, போதனைகளை, பயம் கூடிய ஆலோசனைகளை தவிர்த்து குழந்தைகளோடு நாம் இருக்கும் நேரங்களில் தங்களுக்குள் மகிழ்ச்சி உருவாவதை அவர்கள் உணரும்படியாகச் செய்ய வேண்டியது அவசியம். அது குழந்தை. அதனால் சரியாகச் சிந்திக்கத் தெரியாது; சரியானதை பேசத் தெரியாது என நாமாக கற்பிதம் செய்து கொண்டு வீட்டிலும், பள்ளியிலுமாக அதன் உரையாடலை தடைசெய்கிறோம். இப்படி தான் நுழையும் எல்லா இடங்களிலும் தடைகளையே சந்திக்கும் குழந்தை அவைகளுக்கு எதிராக செயல்பட முனைகிறது அல்லது அச்சூழலிலிருந்து முற்றிலும் விலகி நிற்கத் துவங்குகிறது. இரண்டுமே நிச்சயம் ஆபத்தானதுதான் இல்லையா?

நாம் குழந்தைகளோடு இருந்தாலும் கூட தம்மை அதிகாரம் செய்யும் ஆளாக நம்மை அவர்கள் உணர்ந்தால் நெருக்கடிகள் கூடுமே தவிர வேறு பலனேதும் இல்லை. மாறாக சிறிதுநேரமேனும் நாம் குழந்தைகளாகவே மாறி விடுவோமானால் அவர்களின் உலகம் அவ்வளவு ஆசையாய் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும். இது அவ்வளவு எளிதில் நடந்துவிடக் கூடிய சாத்தியம் உடையதா? இவ்வளவு காலம் நம்மீது நாம் ஏற்றி வைத்திருக்கும் அவ்வளவு இறுமாப்பான பிம்பங்களையும் உடைத்துக் கொண்டு எளிய உருவமாக மாற்றிக் கொள்ளும் மனம் நமக்கு வாய்க்கப் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும். கிட்டத்தட்ட சர்க்கஸ் கூடாரங்களில் உள்ள கோமாளியின் பங்களிப்பை பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் குடும்பங்களில் செய்வார்களேயானால் குழந்தைகளின் அகமலர்ச்சி உயர்வானதாக அமையும். இருதரப்பினருக்கும் இடையில் உள்ள பேச்சு இயல்பாகவும், மறைக்க வேண்டிய அவசியமற்றதாகவும் இருக்கும்.

குழந்தைகள் ஓய்வு நேரங்களில் சீப்பு பவுடர் சகிதம் நமக்கு ஒப்பனை செய்ய விரும்பும் போது அதற்கு நம்மை ஒப்புக் கொடுப்பதும், இரவு வேளைகளில் படுக்கையில் நடைபெறும் தலையணை சண்டையில் நாமும் ஒரு போர்வீரனாக மாறுவதும், வீட்டின் ஒருமூலையையே பாய், போர்வையால் சிறு கூடாரமாக மாற்றி சிறிது நேரம் குடியிருப்பதும் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தத்தைத் தரும். அவ்வேளைகளில் நாமும் அவர்களோடு இருப்பது எவ்வகையிலும் சர்வதேசக் குற்றமாக மாறிவிடாது. மாறாக அவ்வேளைகளில் நம்முடைய அழுத்தங்கள் குறைந்து மறந்திருந்த பால்யத்தின் சுவையை நாமும் கொஞ்சம் மீட்டிருப்போம். நம்முள்ளே இருக்கும் தன்முனைப்பை மட்டும் தளர்த்திக் கொண்டாலே போதும் இவையனைத்தும் சாத்தியமாகி விடும்.

குழந்தைகளுடன் விளையாடுவது என்பது நம்மை நாமே தளர்த்திக் கொண்டு நெகிழ்வாக மாற்றிக் கொள்வதே ஆகும். இந்த நெகிழ்வு தன்மையே பிறரை தம்முள் அனுமதிக்கும்.

எனது குழந்தைகளோடு இருக்கக் கிடைக்கும் தருணங்களில் அவர்களோடு வாகனத்தில் பக்கத்து கிராமங்களுக்குப் பயணிப்பது வழக்கம். சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் வேகத்தடைகள் நமக்கு சிரமத்தை தருவதாக இருந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருப்பதால் அவைகளுக்கு “ டொமுக்கு” (கடக்கும் போது டொமுக்கு டொமுக்கு என சத்தம் வருவதால்) எனப் பெயரிட்டு சந்தோசமாக எதிர்கொள்வது வழக்கம்.
இப்போது அவ்வார்த்தை எங்கள் வீட்டு பெரியவர்களிடம் கூட ஒட்டிக் கொண்டது. அதுபோல வீதியின் பிரதான சாலைக்கு அருகில் இரண்டு வீட்டுமனை அளவே உள்ள காலியிடத்தில் முழங்கால் உயரத்திற்கு மட்டுமே மண்டிக்கிடக்கும் புதரினூடே ஒற்றைப் பாதையில் பயணிக்கும் போது புலிகளும், யானைகளும், மான்களும் சூழ்ந்து வாழும் காட்டுப் பகுதியைக் கடப்பதாக எங்களுக்குள் பேசிக் கொண்டு பயணிப்பது உண்மையிலேயே வேடிக்கை நிறைந்தது. எதார்த்தம் அதுவல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் அந்த கற்பனையான உரையாடல் அவர்களுக்கு எவ்வளவோ நன்மைகளை நல்குவதாக உணர்கின்றனர்.

வீடுகளுக்குள் விளையாட்டிற்கான இடத்தை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே குழந்தைகளால் வீதியில் பிற குழந்தைகளோடு தயக்கமின்றி விளையாடவும், பேசவும் முடியும் என உணர்கின்றேன். இப்போதைய குழந்தைகள் கோடைவிடுமுறை போன்ற காலங்களில் விளையாட வாய்ப்பிருந்தும் என்ன விளையாடுவது? எப்படி விளையாடுவது? என திகைத்து நிற்பதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் வேறு வழியின்றி மீண்டும் சைக்கிளுக்கே திரும்பி விடுவதையும் பார்க்க முடிகிறது. வீதி விளையாட்டு, பல்லாங்குழி, பன்னாங்கல் போன்ற குழு விளையாட்டுகளை வெகுவாக அறிந்திருந்த பெரியவர்கள் தொலைகாட்சி தொடர்களில் மூழ்கி விடுவதால் ஒருங்கே கூடி விளையாடும் வாய்ப்பையும், உரையாடல் வழியே மனம் விரும்பும் வகையில் கதைகள் பேசிக் களிக்கும் வாய்ப்பையும் இன்றைய குழந்தைகள் இழந்து விடுகின்றனர். தாத்தா, பாட்டி போன்ற வயதிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளிடம் பரிவு உள்ளவர்கள்; செல்லங் கொஞ்சி சிரிப்பூட்டுவார்கள் என்பதெல்லாம் பொய்த் தோற்றம் போலும். அவர்களும் குழந்தைகளின் கூச்சல்களை சகித்துக் கொள்ளாதவர்களாகவே மாறிப் போய் இருக்கின்றனர். வீதியில் குழந்தைகள் விளையாடத் தொடங்கும் போது அங்கே இங்கே என எங்கிருந்தும் எதிர்ப்புகள் எழுகின்றன. இப்படி ஒட்டுமொத்தமாக குழந்தைகள் வெறுப்புக்கு ஆளாகிறார்கள் என்றால் உண்மையில் இவர்களுக்கான இடம் எங்கே? பெற்றோர்கள் சிறிது நேரம் திட்டமிட்டு அவர்களோடே விளையாடவும் மரபான விளையாட்டுகளை அறிமுகப்படுத்தவும் செய்தால் குழந்தைகளுக்கான நெருக்கடி குறையும்.

ஒருமுறை பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சுட்டி ஏதேனும் கேள்விகளை கேட்க விரும்பினால் என்ன கேட்பீர்கள்? என ஒரு வாய்ப்பினை எனது மாணவர்களுக்கு வழங்கிய போது கிடைத்த கேள்விகளில்
1. அப்பா, நீங்கள் ஏன் என்னுடன் விளையாடுவதில்லை?
2. அம்மா, பள்ளி முடிந்து வந்தவுடனேயே என்னை ஏன் வேலை செய்யச் சொல்கிறீர்கள்?
என்ற இந்த இருகேள்வியும் முக்கியமாகப்பட்டது. இதில் முதல் கேள்வி ஒரு மாணவனால் எழுப்பப்பட்டது. இரண்டாவது கேள்வி ஒரு மாணவியால் கேட்கப்பட்டது. முதல் கேள்வியில் மாணவன் நேரடியாக “என்னுடன் விளையாட வாங்க” என அவனுடைய அப்பாவைக் கேட்க முடிகிறது. இரண்டாவது கேள்வியை எழுப்பிய பெண் குழந்தையாகிய ஆறாம் வகுப்பு மாணவியால் மறைமுகமாகவே விளையாடுவதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்த முடிகிறது. இது நமது சமூகம் ஆண் பெண் குழந்தைகளிடம் எவ்வளவு பாரதூரமான வேறுபாடுகளை கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. விளையாட்டு விசயத்தில் கூட சிறு பெண் குழந்தைகளை விலக்கி வைக்கின்றவர்களான நாம் எப்படி அறிவு பெற்ற சமூகத்தினர் என்பதாகக் கூறிக் கொள்ள முடியும்? இவ்வளவு நவீனம் பேசுகின்ற காலத்திலும் சில விசயங்களில் இன்னும் நாம் பழமையில் ஊறிக் தானே கிடக்கின்றோம்.

இப்படி நிறைவடையா எதிர்பார்ப்புகளும், கண்காணிப்பின் வளையங்களுக்குள்ளுமே வாழப் பழகிக் கொள்ளும் குழந்தைகளின் மனம் பிற்காலங்களில் மூர்க்கமும், வேகமும் கொண்டவைகளாக மாறிவிடுகின்றன. தோழமையும், இணக்கமான உணர்வும், எதையும் எளிதாக அணுகக்கூடிய தன்னம்பிக்கையும் உடையவர்களாக மாற வேண்டியவர்கள் நம்பிக்கை குறைபாடு கொண்டு வாழ்க்கையை புதிதாக பார்க்கும் திறனற்றவர்களாகி விடுகின்றனர்.

ஆக நாம் புரிந்து கொள்ள வேண்டியது விளையாட்டு என்பது சட்டங்களுக்கு உட்பட்டு வரையப்பட்ட கட்டங்களுக்குள் நின்று ஆடுவது அன்று. தன்னை சுற்றி எழுப்பப்படும் கட்டங்களை அழித்து விட்டு சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிவது தான். மகிழ்வாக வாழ்வதற்குரிய ஆற்றலை சூழலிடமிருந்து பெற்றுக் கொண்டு் விளையாட்டுத்தனத்தோடும் சுதந்திரமாகவும் வாழும்படி குழந்தைகளை நாம் வழிநடத்துவோம்.

நன்றி : சிலேட்டு இதழ்

புகைப்படம் : நிழல்

Leave a comment