கேரளா மற்றும் சென்னை வெள்ளத்தின் போது நிறைய நண்பர்கள் உதவினார்கள். டெல்டா பகுதிகளுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்ற பதிவுகள் நிறைய இணையத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து தஞ்சை சுற்று வட்டாரத்தில் உதவிகள் செய்த போது கவனித்ததில் தஞ்சை அல்லாத நண்பர்களின் உதவி மிக முக்கியமானது.
கேரளத்திலுள்ள இரண்டு தமிழ் நண்பர்கள் 10 நாட்கள் விடுமுறை எடுத்து இங்கு வந்திருந்து களத்தில் பணியாற்றியதை நேரடியாக பார்த்தேன். அதேப் போல் சென்னை, பெங்களூர் திருப்பூர் என பல்வேறு பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த நண்பர்கள் பலரையும் நேரடியாக பார்க்க முடிந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சூரிலிருந்து ஒருவர் நண்பர்கள் வழியே நேரடியாக தஞ்சை வந்திருந்து பொருட்களை வாங்கிக்கொடுத்து ஊருக்கு திரும்பி இருக்கிறார்.
இரண்டு நாட்கள் விடுமுறையில் நகரங்களிலிருந்து தங்களது சொந்த கிராமங்களுக்கு வந்திருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு உதவிகளை செய்திருந்தவர்களையும் ரயில் பயணத்தில் சந்திக்க முடிந்தது. இது இல்லாமல் டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்டத்தைப் பற்றி நண்பர்கள் (வெளி மாநில நண்பர்களையும் சேர்த்து) சொன்னதும் நண்பர்கள் மூலம் பணமாக ரூ.68,300/- சேர்ந்தது. அதில் முதல்கட்டமாக ரூ.65,000/- க்கான வேலைகளை செய்திருக்கிறோம்.
நேரடியாக ரூ.45,000/- மதிப்பிலான பொருட்களை (அரிசி மற்றும் இதர பொருட்கள்) வாங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கினோம். அதே நேரத்தில் நண்பர்கள் காந்தி, பாஸ்கர் ஆறுமுகம், ப்ரீத்தி மூலம் ரூ.15,000/- மதிப்பிலான போர்வைகள், தார் பாலின் வழங்கப்பட்டது. மற்றும் புதுக்கோட்டை பெருஞ்சுனை தாய்த்தமிழ்ப்பள்ளி சீரமைப்பு பணிக்கு ரூ.5000/- கொடுக்கப்பட்டது.
தஞ்சையில் நண்பர்கள் விஜயகுமார், ஸ்டாலின் சரவணன் மற்றும் விஜயன் அவர்களுடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சுற்றியுள்ள பகுதிகளில் உதவிகளை செய்ய முடிந்தது. ஏற்கனவே இனியன் அவர்கள் கேரள வெள்ளத்தில் உதவிய அனுபவங்கள் மூலம் தஞ்சையில் நிவாரண பணிகளுக்காக hub ஒன்றை உருவாக்கியிருந்தார். அதன் மூலமாகவும் உதவிகளை செய்ய முடிந்தது. நண்பர் வேல் முருகன் சென்னையிலிருந்து சிறார்களுக்கான உடைகளை எடுத்து வந்திருந்தார். அதனையும் பயன்படுத்திக்கொண்டோம். இது இல்லாமல் செல்லும் இடங்களில் வேறு சில நண்பர்களும் நிவாரண பொருட்களை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர். சில ஊர்களில் பொதுவாக உணவுகள் தயாரித்து அருகே உள்ள ஊர்களுக்கு பொட்டலமாக உணவு வழங்கப்பட்டது. அதற்காக சில நண்பர்களும் வந்திருந்தனர். நாங்களும் உணவு பொட்டலங்களை எடுத்துவந்து ஊர் திரும்பும் வேளையில் சில இடங்களில் வழங்கினோம். சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் மூலமாக பல இடங்களிலிருந்து நண்பர்கள் தங்களது பணிக்கு தேவையான பொருட்களையும் தொடர்புகளையும் பெற்று சற்று சுலபமாக தங்களது பணிகளை செய்ய முடிந்தது என்றே சொல்லலாம்.
இந்தச் செயல்களில் ஈடுப்படும் போது ஒவ்வொரு செயலுக்கு பின்னரும் நண்பர்களும் ஆதரவு தரும் குடும்ப சூழலும் அனைத்து நண்பர்களுக்கும் கிடைத்திருந்தது மிகப்பெரிய விசயமாக பார்க்கமுடிகிறது.
பண உதவியோடு பெங்களூரிலிருந்து பொருட்களாகவும் உதவிகள் கிடைத்தது. அதனை பல நண்பர்கள் கைக்கோர்த்து வெற்றிக்கரமாக நடத்தி இருந்தனர். பெங்களூரைச் சேர்ந்த அருண் அவர்களும் வாசக சாலை வழியாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வாசக சாலை மூலம் அனுப்பிய பொருட்கள் ஆசிரியர் மணிமாறன் அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைந்தது.
களத்திலுள்ள நண்பர்களுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இப்பொழுது செய்தது முதல் கட்ட உதவிகள் மட்டுமே. அடுத்தக்கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள சிறார்களுக்காக சில வேலைகளை துவங்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம். குழந்தைக்களுக்கான நிகழ்வுகளை நடத்தி அவர்களது மனநிலைக்கு உதவ திட்டமிடுகிறோம். அதன் வழியே குழந்தைகளின் மகிழ்வினை ஊக்கப்படுத்தும் கலைகளையும், புத்தகங்களையும் கொண்டுச் செல்ல யோசித்து வருகிறோம்.
எங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.