அன்பு பரிமாறி குழந்தைமையைக் கொண்டாடிய அழ.வள்ளியப்பா – கொ.மா.கோ.இளங்கோ

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்த நாட்கள். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட எங்கள் வீட்டில், ஓர் அறை நூலகமாக மாறியிருந்தது. சுமார் 20000 புத்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கப் பட்டிருந்தன. அப்பா, புத்தகங்களுக்கு மத்தியில் நாற்காலி போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருப்பார். பேனாவைச் சுழற்றி, எழுதிக்கொண்டிப்பதைப் பார்த்து ரசிப்பேன். எட்டிப் பார்ப்பேன். மெதுவாக உள்ளே நுழைந்து, புத்தகங்களின் முதுகுப் பகுதியைத் தொட்டுப் பார்ப்பேன். மூளைக்குள் ஏதேதோ மின்னல்கள் வெட்டி மறையும்.

புத்தகங்களின் அட்டையைத் தொட்டுத் தொட்டு நூற்றுக்கணக்கான கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். அதிசமான கற்பனைக் கோட்டைக்குள் முன் அனுமதி பெறாமல் சுற்றித் திரிந்தேன். தங்கப் புதையல்களைக் கண்டெடுத்தேன். திகைப்பும் நம்பிக்கையும் நிறைந்த உலகை கண்டு ரசித்தேன். அதன் அடையாளமாக, சிறு வயதில் எனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை குழந்தைமையின் ‘ஒரு விரல் புரட்சி’ என்றே சொல்லலாம்.

தொடர்ச்சியாக என்னைக் கவனித்து வந்த அப்பா, ஆர்வத்தைப் புரிந்துகொண்டார். ஒரு நாள் ‘கோகுலம்’ மாத இதழ் வாங்கித் தந்தார். அதிலிருந்த கதைப்பாடல்கள், கதைகள் எல்லாம் மனதுக்குப் பிடித்ததாக, நெருக்கமானதாக இருந்தன. வாசகர் கடிதங்களும் பதிப்பாகியிருந்தன. ‘கோகுலம் சிறுவர் சங்கம்’ உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பும் ஆசையை அப்பாவிடம் சொன்னேன்.

ஒரு வார இடைவெளியில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கையெழுத்திட்ட ஓர் அஞ்சல் அட்டை வீட்டுக்கு வந்தது. அது நாள் வரை, கட்டுக்கட்டாக அப்பாவுக்கென்று வந்துசேரும் கடிதங்களை வாங்கிவைக்கும் பொறுப்பிலிருந்த எனக்கு, பெயர் குறிப்பிட்டு வந்த கடிதத்தைத் தொட்டபோதிதிருந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் மட்டுமே வர்ணித்துவிட முடியாது. வானத்துக்கு அப்பால், சிறகசைத்துப் பறக்க ஆரம்பித்தேன். கோலி விளையாடக் கூப்பிட்டுச் செல்லும் சக நண்பர்களை நிராகரித்து விட்டு புத்தகங்களை நண்பர்கள் ஆக்கினேன். கோகுலம் சிறுவர் சங்கத்தின் உறுப்பினர் எண் 3017 ஐ வாழ் நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

கோகுலம், பூந்தளிர், ரத்னபாலா போன்ற எல்லாச் சிறுவர் இதழ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். முதன்முதலாக, மதுரை பெரியார் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் புத்தகக் கடைகளிலிருந்து ‘மலரும் உள்ளம்’ இருதொகுதிகளையும், ‘சிரிக்கும் பூக்கள்’ பாடல் தொகுப்பையும் அப்பா வாங்கித் தந்தார். கெட்டியான அட்டையுடன் கூடிய புத்தகம் சுமார் 240 பக்கங்கள் வரை இருந்தது. ‘கைவீசம்மா கைவீசு’, ‘மாம்பலமாம் மாம்பலம்’, ‘தேசையம்மா தோசை’ என்ற அவரது பாடல்கள் காலம் கடந்து பிரபலமாகி இருக்கின்றன. பாடுவதற்கு வசதியான எளிய சொற்களுடன் எதுகை மோனையுடன் அமைந்திருப்பது முக்கியக் காரணம்.

“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்”

அழ.வள்ளியப்பாவின் இந்தக் கவிதை என்னைக் கவர்ந்திருந்தது. ஒரு சில நிமிடங்களில் மணனம் செய்து முடித்தேன். ஐயாவின் பெரும்பாலான கவிதைகள், சந்தம் அமைத்து எளிதாகப் பாட முடிந்தது. ‘லட்டும் தட்டும்’ என்ற பாடல் குழந்தைகள் அனைவரையும் கவரும் விதமாக எளிய வார்த்தைகளுடன் எழுதப்பட்டிருந்தது.

‘பயிலுவோம்’ என்ற தலைப்பில் குழந்தைக் கவிஞர் எழுதிய பாடல் மிகவும் கவர்ந்த பாடலானது.

தேனி ருக்கும் இடத்தினை
தேடி மொய்க்கும் வண்டுபோல்
சீனி யுள்ள இடத்தினை
தேடி ஊரும் எறும்புபோல்
பழம் நிறைந்த சோலையை
பார்த்துச் செல்லும் கிளியைப்போல்
வளம் நிறைந்த நாட்டிலே
வந்து சேரும் மக்கள்போல்
பள்ள மான இடத்தினைத்
பார்த்துப் பாயும் வெள்ளம்போல்
நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்!

நாளுக்கு நாள் எனக்குள் துளிர் விட்ட கவிதை ஆர்வத்தை அறிந்த அப்பா, ஒரு நாள் அருகில் அழைத்து உட்காரவைத்து, மரபுக்கவிதை எழுதுவதற்கான பயிற்சி அளித்தார். எதுகை, மோனை, அசை, சீர் என்று கவிதை மரபின் முக்கியத்துவத்தை விளக்கினார். எளிய பயிற்சி அளித்தார். புரிந்துகொள்ளும் உதாரணங்களுடன் விளக்கினார். ஆசிர்வதிக்கப்பட்டவானாக உணர்ந்தேன்.

அது, இராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் வெள்ளி விழா ஆண்டு. தமிழகத்தைச் சேர்ந்த மாபெரும் அறிஞர்கள் பங்குபெற்ற விழா. இரண்டாம் நாள் மாலையில் ‘சிறுவர் சங்கம்’ தொடக்க நிகழ்வில் தலைமை ஏற்றார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அவருடன் சேர்ந்து, குழந்தை எழுத்தாளர் திரு. ரா.பொன்ராசன் (பெரியப்பா என்றுதான் உரிமையோடு அழைப்பேன்) கலந்துகொண்டார். சிறுவர்கள் சுமார் முப்பதுபேர் ‘காந்தி கலை மன்ற’ விழா மேடைக்கு முன்னால் தரையில் உட்கார்ந்து கொண்டோம். அழகழகான கவிதைகள், பாடல்களுக்குச் சொந்தக்காரரான அழ.வள்ளியப்பா கதைப் பாடல்கள் பாடிக் காண்பித்தார். பொன்ராசன் பெரியப்பா கதைகள் சொன்னார். கூட்டத்திலிருந்த சிறுவர்கள் உற்சாகமடைந்தோம். என்னுடைய முறை வந்தது. முதல் நாள் இரவு எழுதி வைத்திருந்த சிறுவர் பாடல் ஒன்றை பெரியவர்கள் முன்னிலையில் வாசித்துக் காண்பித்தேன்.
இதோ அந்தப் பாடல் :

முத்து எங்கள் முத்துவாம்
முரண்டு செய்யும் முத்துவாம்
சத்த மின்றி வந்துமே,
தட்டி விட்டு ஓடுவான்.

தத்தித் தத்தி ஒடுவான்.
தலை வலிக்கப் பாடுவான்.
அத்தான் வந்தால் மெல்லவே
அருகில் சென்று அமருவான்.

முரட்டுத் தனங்கள் யாவையும்
மூட்டை கட்டி வைத்துமே,
சிரத்தை யோடு படிக்கிறான்,
சென்ற இரண்டு தினங்களாய்!

புத்த கத்தைக் கைகளில்
பிடித்து நன்றாய்ப் படிக்கிறான்
அத்தான் சொன்ன அறிவுரை
அட்டா, திருத்தி விட்டதே!

இதில் பதினொன்று , பன்னிரெண்டாம் வரிகள் குழந்தைக் கவிஞர் திருத்தம் செய்தவை. (நான் எழுதிய வரிகள் மறந்து விட்டன). வாசித்து முடித்தவுடன், கையிலிருந்த காகிதத்தை வாங்கிக்கொண்டார் வள்ளியப்பா. ஊர் திரும்பியவுடன், அடுத்த மாத ‘கோகுலம்’ இதழில் ‘முத்து எங்கள் முத்துவாம்’ என்ற தலைப்பில் அதே கவிதை அச்சாக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்பா ‘சபாஷ்’ சொன்னார். நண்பர்கள் வாழ்த்தினார்கள். இப்படித்தான் 11-ம் வயதிலேயே கவிதை இயற்றும் திறன் கைவரப்பெற்றேன்.

குழந்தை எழுத்துப் பயணத்திற்கு பச்சைக்கொடி காட்டி வாழிகாட்டியவர்களில் குழந்தைக் கவிஞரின் பங்களிப்பு பெரும் பயன் விளைவித்தது. அடுத்தடுத்து, மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவிதை எழுதச்சொல்லி, வாசித்து, கோகுலம் இதழில் வெளியிட்டுப் பெருமை சேர்த்து, குழந்தை இலக்கிய எழுத்தாளனாக வளர்த்தெடுத்த பெருமை அழ.வள்ளியப்பா அவர்களுக்கு உண்டு. (அப்பாவுக்கு இணையாக)

‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்ற எனது முதல் சிறுவர் கதையையும் வெளியிட்டு கெளரவித்தது கோகுலம். இராஜபாளையத்தில் தொடங்கிய ‘கோகுலம் சிறுவர் சங்கத்தின்’ செயலராகப் பொறுப்பேற்று, அப்பா கொ.மா.கோதண்டம், அம்மா ராஜேஸ்வரி கோதண்டம், டாக்டர் கு.கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிறுவர்கள் ஒன்றுகூடி திருச்சி, திருநெல்வேலி, மதுரை வானோலி நிலையங்களில் பல்சுவை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தோம். சிந்தையை வளர்த்துக்கொண்டோம்.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களுடனான எனது சிறுவயது ஞாபகங்கள், என்னுள் உயிர்ப்போடிருக்கும் குழந்தைமையைத் தூண்டி, சிறார் இலக்கிய உலகில் கற்பனையின் எல்லைகளை விரிக்கத் தடையில்லாமல், ஓர் உந்து சக்தியை விதைத்துக்கொண்டே இருக்கிறது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

Leave a comment