அழ.வள்ளியப்பாவின் படைப்புகள் – சரவணன் பார்த்தசாரதி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகின் மாபெரும் ஞானிகளில் ஒருவரான கன்ஃபூசியஸ், ஒரு குழந்தைக்கு மொழியைக் கற்பிக்கச் சிறந்த வழி அம்மொழியின் பாடல்களை அதற்குச் சொல்லித்தருவதுதான் என்று கூறியிருக்கிறார்.

இன்றுவரை நமது ஆரம்பப்பள்ளி வகுப்பறைகளில் பாடல்கள் பாடங்களாய் இருப்பதற்கு கன்ஃபூசியஸின் இந்த அறிவுரையும் ஒரு காரணம். எந்தவொரு மொழியிலும் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதென்பது சவாலான பணியாகவே இருக்கிறது.

தமிழில் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதற்கெனத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் – அழ.வள்ளியப்பா. புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம் என்ற ஊரில் நவம்பர் 7, 1922 –ஆம் ஆண்டு பிறந்த அவர், தனது பதின்ம வயதில் எளிய சொற்களைக்கொண்டு பாடல்களை இயற்றத் தொடங்கினார். பின்னர் சக்தி பத்திரிக்கையில் பணிபுரிந்தபோது தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) அவர்களின் தூண்டுதலில் சில கதைகளை எழுதினார். அடுத்த சில மாதங்களிலேயே அவர் வங்கிப்பணிக்குச் சென்றுவிட்டாலும், சிறார்களுக்கான பாடல்கள், கதைகள் எழுதுவதைத் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார். குழந்தை எழுத்தாளர்கள் பலரை ஒன்று திரட்டி 1950-ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

குழந்தைக்கவிஞர் என்று அழைக்கப்பட்ட அவர் தனது வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவரது நூல்கள் சிலவற்றைப்பற்றி நாம் இப்போது பார்ப்போம்.

சின்னஞ்சிறு பாடல்கள்

முதன்முதலாக வசிப்பிற்குள் நுழைய நினைக்கும், பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய நூல் இது. தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் புகழ்பெற்ற, “மாம்பழம்” என்ற பாடல் இத்தொகுதியில்தான் உள்ளது.

மாம்பழமாம் மாம்பழமாம்.

மல்கோவா மாம்பழம்.

சேலத்து மாம்பழம்.

தித்திக்கும் மாம்பழம்.

அழகான மாம்பழம்.

அல்வாபோல் மாம்பழம்

தங்க நிற மாம்பழம்.

உங்களுக்கு வேண்டுமா?

இங்கே ஓடி வாருங்கள்

பங்குபோட்டுத் தின்னலாம்.

 

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் முதல் தொகுதி

பாடல்களின் வழியே கதை சொல்வது என்பது ஒரு கலை. வாசிக்கும் குழந்தைகளின் வயது, அவர்கள் அறிந்த சொற்கள், பாடலின் அளவு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் ஒரு கதையைப் பாடலாய் இயற்ற முடியும். அதே நேரம் சந்தம் தவறிவிட்டால் பாடலின் ஒழுங்கு கெட்டுவிடும். செம்மொழியாம் தமிழில் பாடல்கள் மட்டுமே இலக்கியமாக இருந்த காலம் ஒன்று உண்டு. பின்னர் உரைநடை செல்வாக்கு செலுத்தினாலும், தமிழில் இன்றுவரை சொற்களை உருவாக்கவும், இடத்தைப் பொறுத்து அவற்றின் பொருளை மாற்றவும் கவிஞர்களுக்கு மட்டுமே முழுச்சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியான தமிழ்க்கவிப் பாரம்பரியத்தில் வந்த ஒரு கவிஞர் என்பதால் அழ.வள்ளியப்பா கதைப்பாடல் இயற்றுவதில் தேர்ந்து விளங்கினர்.

உதாரணமாக இத்தொகுதியில் இருக்கும் ‘கடலின் ஆழம்?” பாடலைப் பார்ப்போம்.

காட்டை விட்டுக் குள்ள நரியும்

வெளியில் வந்ததாம்

கடலைப் பார்க்க வேண்டு மென்றே

ஆசை கொண்டதாம்.

காற்று வீசும் கடற்கரைக்கு

வந்து சேர்ந்ததாம்.

கரையில் நின்ற படியே கடலை

உற்றுப் பார்த்ததாம்.

“கடலின் ஆழம் அதிக மென்றே

எனது பாட்டனார்

கதைகள் சொல்லும் போதே எனக்குச்

சொல்லி யிருக்கிறார்.

கடலின் ஆழம் என்ன வென்றே

இந்த நேரமே

கணக்காய் நானும் அளந்து சொல்வேன்”

என்று ரைத்ததாம்.

 

தண்ணீர் அருகே சென்று நரியும்

நின்று கொண்டதாம்.

தனது வாலை மெள்ள மெள்ள

உள்ளே விட்டதாம்.

தண்ணீ ருக்குள் வாலை முழுதும்

விட்ட வுடனேயே

தரையும் அந்த வாலின் நுனியில்

தட்டுப் பட்டதாம்.

 

“கடலின் ஆழம் எனது வாலின்

நீளம் தானடா!

கண்டு பிடித்து விட்டே” னென்று

துள்ளிக் குதித்ததாம்.

“அடடா, ‘மிகவும் ஆழம்’ என்று

சொல்லும் கடலையே

அளந்து விட்டேன்” என்றே பெருமை

அளக்க லானதாம்!

 

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி

கதைகள் வழியே குழந்தைகளுக்கு அறவுரை சொல்வது, வாழ்வின் நோக்கங்களைப் புரிய வைப்பது, அறத்தைப் போதிப்பது என்பது காலங்காலமாக இருந்துவரும் நடைமுறைதான். ஆனால் குழந்தைப் பாடல்கள் இயற்றப்படும்போது கருத்து சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தைவிட பாடலின் சந்தம் மற்றும் ஓசை நயம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில்தான் கவிஞர்கள் கவனம் செலுத்துவார்கள். ஆனால் அழ.வள்ளியப்பாவின் “அன்னை மொழி” என்ற இப்பாடலை வாசித்துப்பாருங்கள்.

குருவி ஒன்று மரத்திலே

கூடு ஒன்றைக் கட்டியே

அருமைக் குஞ்சு மூன்றையும்

அதில் வளர்த்து வந்தது.

 நித்தம், நித்தம் குருவியும்

நீண்ட தூரம் சென்றிடும்;

கொத்தி வந்து இரைதனைக்

குஞ்சு தின்னக் கொடுத்திடும்.

 இறைவன் தந்த இறகினால்

எழுந்து பறக்கப் பழகுவீர்.

இரையை தேடித் தின்னலாம்’

என்று குருவி சொன்னது.

 ‘நன்று நன்று நாங்களும்

இன்றே பறக்கப் பழகுவோம்’

என்று கூறித் தாயுடன்

இரண்டு குஞ்சு கிளம்பின.

 ஒன்று மட்டும் சோம்பலாய்

ஒடுக்கிக் கொண்டு உடலையே,

அன்று கூட்டில் இருந்தது!

ஆபத் தொன்று வந்தது!

 எங்கி ருந்தோ வந்தனன்,

ஏறி ஒருவன் மரத்திலே.

அங்கி ருந்த கூட்டினை

அடைய நெருங்கிச் சென்றனன்.

 சிறகு இருந்தும் பறக்கவே

தெரிந்தி டாமல் விழித்திடும்

குருவிக் குஞ்சைப் பிடித்தனன்;

கொண்டு வீடு சென்றனன்.

 குருவிக் குஞ்சு அவனது

கூட்டில் வாடலானது.

அருமை அன்னை உரைத்தது

அதனின் காதில் ஒலித்தது.

குழந்தைகள் தாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்ட சொற்களைக்கொண்டு எழுதப்பட்ட கதைகளையும், பாடல்களையும் வாசிக்கும்போது அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை எளிதில் புரிந்துகொள்கின்றனர். பாடவும் ஏதுவான சந்தத்தில் அமைந்துள்ள இப்பாடல், சோம்பியிருப்பத்தின் விளைவை பொட்டில் அடித்ததுபோல் கூறுகிறது. இக்கருத்தை ஒரு குழந்தைக்கு இதைவிடவும் சிறப்பான முறையில் கூறிவிட முடியாது என்பதே நிதர்சனம்.

குழந்தைக்கவிஞரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையத்தளத்தில் (http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-82.htm) அவருடைய பாடல்கள் மட்டுமல்லாமல் பர்மா ரமணி, நீலா மாலா உட்படப் பல நெடுங்கதைகளும் வாசிக்கக்கிடைக்கின்றன. மேலும் youtube இணையத்தளத்தில் அவருடைய பாடல்கள் குழந்தைகளைக் கவரும் வண்ணம் அசைபடங்களாக (cartoons) மாற்றப்பட்டுக் காணக்கிடைக்கின்றன.

அழ.வள்ளியப்பாவின் இன்றைய தேவை

இரண்டாயிரத்திற்குப் பின்னர் ‘பாடல் வழியே தமிழ் கற்பித்தல்’ என்ற முறை மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. இதற்கு அரசின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றம், ஆங்கில வழிக்கல்வி ஆகியவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், தரமான குழந்தைப்பாடல்களை எழுதும் திறன்கொண்ட கவிஞர்கள் அருகிவிட்டதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். தமிழில் அப்படியான கவிஞர்கள் உருவாகி வரும்வரை இந்த இடைவெளியை இட்டு நிரப்பும் வலிமை அழ.வள்ளியப்பாவின் படைப்புகளுக்கு உண்டு என்று உறுதியாகக் கூறலாம்.

வண்ணநதி இதழில் வெளியான எனது கட்டுரை.

நன்றி: வண்ணநதி

Leave a comment