வீட்டுக்கல்வி பற்றிய விவாதத்தில் (நீயா நானா), வீட்டுக் கல்வியில் என்ன பாடத்திட்டத்தை பின்பற்றுகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நண்பர் ஒருவர். “எந்த பாடத்திட்டமும் இல்லை, என் பிள்ளைகள் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப வளர்கிறேன்” என்றார். மேலும் “குழந்தைகளாக கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுவேன், அது தான் அவர்களுக்கு நான் வழங்கும் கல்வி” என்றார்.
ஆனால் அவரது இந்தப் பதிலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. அவர் செய்வது தவறு என்றும் அவரால் அவரது பிள்ளைகளின் எதிர்காலமே வீணாக போகப்போகிறது என்று பேச்சுக்கள் எழுத்தன. ஏன் சிலர் அந்த நிகழ்வில் அவரிடம் சண்டைக்கே சென்றுவிட்டனர்.
“தன்னிச்சையாய் வேர் விடும் காட்டு மரம் வளர்வதுப்போல் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வீட்டு மரம் அத்தனை உறுதியாய் இராது” என்பது பாடத்திட்டம்(Syllabus) இல்லா சுதந்திர கல்வி கற்கும் வீட்டுக் கல்வி குழந்தைகளுக்கு பொருந்தும். இன்றைய கல்வி முறை பாடத்திட்டத்தின் பின்னால் மட்டுமே செல்கிறது , அது ஒரு போன்சாய் போலத்தான் குழந்தைகளை வளரச்செய்கிறது. அதனை அவர் நன்றாக புரிந்துள்ளார் ஆதலால் தான் சுதந்திரமான கல்வி முறையை நோக்கி அவர் சென்றிருக்கிறார்.
குழந்தைகளுக்கான கல்வி என்பது, சமூக வாழ்விற்கு தயாராக்கும் பொறுப்பை எந்தளவிற்கு கையில் எடுத்துள்ளோம் என்பதைப் பற்றியது. ஆனால் இதுப் போல் சுதந்திரம் என்று பேசிக்கொண்டிருந்தால் அவர்களது பொது தேர்வு அதற்கெடுத்த கல்லூரி படிப்பு எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விகள் வருவது நியாமே. அவைப் பற்றி அடுத்தெடுத்த பதிவுகளில் பேசுவோம். தற்போது வீட்டுக் கல்வியின் முக்கிய அம்சத்தைப் பற்றி பேசுவோம். அது தான் “பொறுப்பான வீட்டுக் கல்வி”
ஆம் “unschooling with responsibilty” என்று ஒருவர் வரலாற்றில் ஒரு பக்கம் ஆரம்பித்தார். அவரே வீட்டுக் கல்வி என்ற விசயத்திற்கு வித்திட்டவர். கல்வி வரலாறு அனைவரும் அறிந்திருக்கலாம். அதில் வீட்டுக் கல்வி என்று ஒரு பகுதி உண்டு. அதன் முதல் பக்கத்தை அதிகாரபூர்வமாக எழுதியவர் ஜான் ஹோல்ட். அவர், பள்ளிக் கல்வி என்பது குழந்தைகளை தொழிற்சாலைகளுக்கும், வேலைகளுக்கும் தயார் படுத்தவே செயல்படுகிறதே தவிர அவர்களுக்கு தேவையான அறிவை வளர்க்கவில்லை என்றூ உறுதுனையாக நம்பினார். கல்வியாளர் ராபர்ட் மூரே என்பவரும் அவரின் கருத்தை ஆதரித்தார். “Unschooling” என்பதை பரப்ப ஆரம்பித்தார்.
“Grown without schooling” என்ற அமைப்பை ஜான் ஹோல்ட் 1977ல் துவங்க, இந்தப்பக்கம் 80களில் ராபர்ட் மூர் Home grown kids என்ற வீட்டுக் கல்வி பற்றிய புத்தகம் எழுதினார். பல பெற்றோர்களை ஜான் ஹோல்ட் சந்தித்து குழந்தைகளை பள்ளி எனும் சிறையில் இருந்து விடுவிக்க கேட்டுக்கொண்டார். அதற்கான இதழ்கள் ஆரம்பித்தது மட்டுமில்லாமல் வீட்டுக் கல்வி செய்வோர்கென குழுவினையும் துவங்கி அனைவருக்கும் வழிக்காட்ட ஆரம்பித்தார். பல பெற்றோர்களை ஒன்றிணைத்து அவர்களின் வீட்டுக் கல்வி பற்றிய கதைகளை பகிர வைத்தார்.
ராபர்ட் மூர் அவரின் முக்கிய கருத்து, குழந்தைகள் மனம், உடல், அறிவு , உணர்வு நலத்துடன் இருக்க ஒன்பது வயது வரை பள்ளிக்கு செல்லக்கூடாது என்பதாக இருந்தது. பள்ளிக்கல்வி சுதந்திர சிந்தனையை சிதைப்பதாக கருதினார். இவர்களின் தூண்டுதலால் வீட்டுக் கல்வியை முழுமையாக மேற்கொண்ட முதல் தலைமுறையினர் வெளியே வந்தனர். சமூகத்தில் இவர்கள் புகழ் பெற ஆரம்பித்தனர். அறிவில் குறைவில்லாமல் ஏன் சற்று கூடுதலாக இருப்பதாக தெரிந்தது அமெரிக்க சமூகத்திற்கு. உடனே அதை பற்றிய விசாரிப்புகள் என வீட்டுக் கல்வி புகழ் பெற ஆரம்பித்தது.
பள்ளிக்கல்வி என்பது பெரிதும் வளர்க்கப்பட்டது மத அமைப்புகள் மூலமே. பின் அரசாங்கத்திடம் சென்றுவிட்டாலும். இன்று பல இடங்களில் மத அமைப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் உலகெங்கும் உண்டு. நன்னெறி போதனைகள் என செய்யப்படும் பல பாடங்கள் பொதுவானவதாக மாற்றப்பட்டாலும் ஒரு காலத்தில் மத கருத்துகளின் அடிப்படையிலியே அமைந்திருந்தது. இதை அசைக்கும் விதமாக வீட்டுக் கல்வி உருவாவுதாக இந்த மத அமைப்புகள் கருதின.
சுதந்திரம் என்பது கல்வியில் மிக அவசியம். ஆனால் சுதந்திரம் அதன் கட்டுப்பாடு, பொறுப்போடு வருவது அவசியம். கட்டற்ற சுதந்திரம் ஆபத்து. அப்படி ஒரு பொறுப்பான சுதந்திர கல்வி என்பதே ஹோம் ஸ்கூலிங் என்று ஜான் ஹால்ட் மற்றும் ராபர்ட் மூர் கருதினர். இவர்கள் மத அமைப்புகளில் இருந்து விலகி (secular ஆக இருப்பதையே) இருக்க விரும்பினர். ஆனால் வீட்டுக் கல்வி என்ற அமைப்பிலும் மத நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளே வந்து தனிக்குழுவாக மாநிலமெங்கும் பரவ தொடங்கினர்.
ஆக மொத்தம் மேல் நாடுகளில் வீட்டுக்கல்வி பரவலை யாராலும் தடுக்க முடியவில்லை. 80 களில் அமெரிக்க பள்ளிக்கல்வி சட்ட அமைப்பு கடுமையானது. அனைவருக்கும் பள்ளிக்கல்வி என்னும் முறையை கட்டாயமாக்கியது. இதனால் வீட்டுக்கல்வி குழந்தைகளுக்கு பல சட்ட சிக்கல்கள் எழுந்தன. ஜான், மூர் போன்றவர்கள் சட்ட அமைப்புக்கு முன் வாதங்கள் வைத்து வீட்டுக்கல்வி மாணவர்களுக்கு வழிக்காட்டினர். அதனை ஏற்று, பல அமெரிக்க மாநிலங்கள் கல்வி ஷரத்துகளை மாற்றி அமைத்தன. பல கல்லூரிகள், பல்கலைகழங்கள் வீட்டுக் கல்வியை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தன. 90 களில் வீட்டுக் கல்வி அமைப்புகள் மத நம்பிக்கை அடிப்படையிலும், மதச்சார்பற்ற (secular) நம்பிக்கை அடிப்படையிலும் வளர ஆரம்பித்தன.
குறிப்பிட்ட கட்டமைப்பிலிருந்து(system) வெளியே வர வேண்டும் என நினைத்த வீட்டுக்கல்வி தனக்கான ஒரு கட்டமைப்பை அவர்கள் அறியாமலே உருவாக்கி கொண்டனர். அது எப்படி?
அடுத்த பதிவில்…
























