விளையாட்டும் வாழ்வும் – இனியன்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

விளையாட்டு பொழுதுபோக்குக்கான ஒன்றா? குழந்தைகளுக்கானது மட்டும்தானா? இந்த விளையாட்டை இவர்கள்தான் விளையாடணும் என்கிறப் பிரிவினைகள் சரிதானா? மாறிவரும் வாழ்வியல் சூழலில் கூடி விளையாடுதல் என்கிற ஒன்று என்னவாக இருக்கிறது. அப்படியான கூட்டு விளையாட்டுகள் தலைமுறை சிந்தனைகள் தாண்டி மழுங்கடிக்கபட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருந்த விளையாட்டுகள் அனைத்தும் புரந்தள்ளப்பட்டு சந்தைமைய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்படுவதன் பின்னணி என்ன? கல்வியில் புரட்சிகள் தேவை என்போரும், மாற்றுக்கல்வி பற்றிய உரையாடகளை நிகழ்துவோரும் விளையாட்டுகளின் அவசியத்தையோ விளையாட்டுகளின் மூலம் நிகழ்த்தப் பட வேண்டியக் கல்வி குறித்தோ உரையாடல்களை பெரியளவில் எடுத்துச் செல்வதில்லையே ஏன்? எனப் பலக் கேள்விகள் இருக்கிறது. இதற்கெல்லாம் விடையைத் தேடும் முன்பு விளையாட்டுகள் பற்றியப் புரிதல்கள் நம்மிடம் எந்தளவிற்கு இருக்கிறது என நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டியக் காலக் கட்டத்தில் இருக்கிறோம்.

விளையாட்டு என்பது நிலங்களையும், மக்களையும், அவர்களின் தொழில்சார் வாழ்வியலையும், பருவநிலையையும், அடிப்படையாக கொண்டு உருவாக்கப் பட்டவை. மனிதனால் கண்டுபடிக்கப்பட்ட அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் விளையாட்டுகள். இப்படியான விளையாட்டுகள் பற்றியத் தேடுதல் பயணங்கள் துவங்கி நான்கரை வருடங்கள் ஆகிறது. பயணங்களில் கிடைத்த அனுபவங்கள் என்பது ஏராளாம். அவற்றை அனுபவங்கள் என்று சொல்வதை விட அனுபவப் புரிதல்தகள் அல்லது சமூகப் புரிதல்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 95% க்கும் மேலாக அழிந்து விட்ட அல்லது தகவல்கள் சேகரிக்கப்படாத விளையாட்டுகளின் வரலாற்றுக் களம்தான் இது. மீதமிருக்கும் 5% நான் கண்ட அனுபவங்கள், சமூகம் மற்றும் வாழ்வியல் புரிதல்கள், உரையாடல்கள் என அனைத்தையும் அவ்வபோது எழுதி பொதுவெளியில் பகிரப் படாமால் மடிக்கணினியில் மடிந்துப் போயிருந்த நிலையில் அவற்றைப் பதிவதற்கான மனநிலையும், காலமும், களமும் கிடைத்திருகிறது.

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு இப்படியான நிலை எப்போதாவது மட்டுமே வாய்க்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள என்னை ஈர்த்திருக்கும் பஞ்சுமிட்டாய் இணைய இதழில் “விளையாட்டும் வாழ்வும் – பயணங்களும் அனுபவப் புரிதல்களும்” எனத் தொடராக கொண்டுவருவோம் என்று ஊக்கமளித்து தொடர்ந்து செயல்பாடுகளிலும் ஊக்கம் தந்துகொண்டிருக்கும் பஞ்சுமிட்டாய் குழும நண்பர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியையும் தெரிவித்து விரைவில் விளையாட வருகிறேன். இணைந்து விளையாடுவோம் எனச் சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி,
இனியன்

Leave a comment