மகிழ்ச்சி தரும் சிறுவர் இலக்கியம் : அடுத்த தலைமுறைக்கு, மொழியின் சிறப்பையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமாகத் திகழ்வது ‘சிறுவர் இலக்கியம்’ என்பது மறுக்கமுடியாத உண்மை.
அண்மைய இணையதள வளர்ச்சி, தொலைகாட்சி, கைபேசி போன்ற நவீன உபகரணங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள நாகரீகச்சூழலில், புத்தக வாசிப்பு சிறு பிள்ளைகள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. ஓவியமும் வண்ணங்களும் கண்களுக்கு விருந்தளிப்பன. அதுபோல கற்பனையோடு கலந்த கதைகள் இதயத்துக்கும் மனதுக்கும் விருந்தளிப்பன.
குழந்தைகளை ஊக்குவித்து கதை சொல்ல வைக்கவும், அவர்களிடம் கதை கேட்பதுமான மனம் படைத்தவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். உண்மையில் குழந்தைகள் அகன்ற காதுகளும் நீண்ட நாக்கும் அமையப் பெற்றவர்கள். பெரியோரின் சிந்தனைக்கு எட்டாத கற்பனை வளம் வாய்க்கப்பெற்ற சிறுவர்கள் ஏராளம். அதன் வழியே அவர்கள், நூறு நூறு உலகை, அரண்மனைகளை, அழகிய காடுகளை, விதவிதமான உயிரினங்களை உருவாக்கவல்லவர்கள்.
சிறுவர்களின் வயதுக்கு ஏற்ப அவர்களுக்காக எழுதப்படும் கதைகளிலும் பிற கட்டுரைகளிலும் மொழி எளிமையாக அமையவேண்டும் . அவர்களுக்கு ஏற்ற ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் அமையவேண்டும். பேசும் உயிரினங்கள், நூறு நூறு அதிசய உலகங்கள், அழகான தேவதைகள், காடுகளுக்குள் இன்ப சுற்றுலா, கதை பாடல்கள், கற்பனை தீவு போன்ற்வை சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சிகளில் பங்குபெற தமிழகம் முழுவதிலும் பல ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதையொட்டி அங்குள்ள நூலகங்களை பார்வையிடச் சென்றிருந்தேன். என் பயணத்தின்போது சந்தித்த ஒரு நூலகர் இதைச்சொல்லி தெளிவு படுத்தினார்:
“தமிழகத்தில், ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்துள்ள படக்கதைகளை குழந்தைகள் விரும்பிப் படிக்கிறார்கள். ஆங்கிலவழிப் பாடம் கற்கும் தமிழ் நாட்டுச் சிறுவர்கள், தமிழ் மொழியாக்கத்தில் வழியாக தமிழ் கற்க இருமொழிப் புத்தகங்கள் உதவியாக இருக்கின்றன. அதுபோல தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கில கதையை வாசித்து பயன்பெற இருமொழிப் புத்தகங்கள் உதவுகின்றன. அழகான படங்களுடன் ஒரு பக்கத்தில் ஆங்கிலத்திலும் மறுபக்கம் தமிழிலும் வெளியான சிறுவர் கதை நூல்களை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்” என்றார்.
அந்த நூலகருடைய விவாதம் என்னைச் சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டுவரும் உலக சிறுவர் இலக்கியத்தின் முக்கியமான சித்திரக்கதைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழ் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன்.
உலக அரங்கில் இரு மொழி புத்தகங்ககளின் வளர்ச்சி : இங்கிலாந்தில் பல்வேறு இனம் மொழி குழுக்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பல மொழி பேசும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய குழந்தைகளுக்கு பயனளிக்கும் இருமொழிப் புத்தக வெளியீடுகளை அதிக அளவில் ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ளது இங்கிலாந்து . ஆபிரிக்கா கண்டத்தின் பெரும்பான்மையான நாடுகள் இருமொழி, மும்மொழிப் புத்தகங்களை கருப்பின சிறுவர்களுக்காக அறிமுகம் செய்கின்றன. இது ஒரு முன்னேற்றப் பாதைக்கான அணுகுமுறைக்கு உதவுகின்றன. ஷோனா,டெபெல்,ஸோஸா போன்ற மொழிபேசும் மக்கள், தங்களது தாய் மொழியை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் இரு மொழிப் புத்தகங்களை குழந்தைகள் மத்தியில் அறிமுகம் செய்வதை நோக்கமாக்க் கொண்டுள்ளார்கள். தாய் மொழியை வளர்ப்பது, குறிப்பாக அச்சுறுத்தலுக்கு உள்ளான கலாச்சாரங்கள் மிகுந்த சூழல்களில் வளர்ப்பது, அங்கீகாரத்தை மீட்டெடுப்பது போன்ற முன்னெடுப்புகள், தனிமனிதனின் மிகமுக்கியமான கடமைகளுள் ஒன்றாகவே கருதப்படவேண்டும்.
ஊக்குவிக்கும் உலக தமிழ் அமைப்புகள் : புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழக குழந்தைகளுக்காக இருமொழிப் புத்தகங்கள் புத்தக வடிவில் கிடைக்கின்றன. லண்டன் நகரை தலைமை இடமாக்கிக்கொண்டு இயங்கும் ‘மந்த்ரா லின்குவா’ என்ற அமைப்பு சிறுவர்களுக்கான இருமொழிப்புத்தகங்கள் பதிப்பித்து இணையம் வழியாக விற்பனை செய்து வருகிறது. பூதத்தின் கண்ணீர் , ஓநாய் திருட்டு, விவசாய வாத்து, லிமாவின் மிளகாய்ச் செடி, சின்னக்கோழியும் கோதுமையும், சீனாவின் சின்ட்ரிலா, மூன்று கரடிகள், நான் ரொம்ப சின்னவளா?, காட்டுக்குள் நடைப்பயணம், அழகான அரக்கன், மந்திரச் சிறுவர்கள், மூன்று வெள்ளாடுகள் ஆகிய புத்தகங்க்கள் முக்கியமானவை. அமெரிக்காவில் இயங்கும் ‘மெல்லினம் கல்வி நிறுவனம்’ குழந்தைகளுக்கான இரு மொழிக்கதைகள், பாடல்கள் என்று ‘ஐ-பாட்டி’ என்ற அமைப்பின் கீழ் பதிப்பித்து வருகிறது.
மதன் கார்க்கி எழுதிய தங்கச்சி சிரிப்பு , அனன்யா ஸ்ரீராம் எழுதிய புத்திசாலி எலி, மின்னிலா முத்துக்குமார் எழுதிய கழுத்து மணி, சாயி சஞ்சனா எழுதிய நிலாவில் நான், கதைக்களஞ்சியம் ஆகிய புத்தகங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவை.
தமிழகத்தில் இரு மொழிப் புத்தக வளர்ச்சி : துளிகா , யுரேகா, புக்ஸ் ஃபார் சில்ரன், பிரதம் பதிப்பகம் ஆகிய நிறுவனங்கள் குழதைகளின் பன்மொழி ஆளுமையை ஊக்கப்படுத்த இரு மொழிப்புத்தகங்கள் வெளியிட்டுள்ளன.
துளிகா புதிப்பகத்தின் பஞ்சதந்திரக் கதைகள் தொகுப்பு, அதிக கவனம் பெற்ற புத்தகங்கள் ஆகும். நிவேதிதா எழுதிய பாடும் கழுதை, ஜீவா ரகுனாத் எழுதிய வாயாடி ஆமை, சித்ரா செளந்தர் எழுதிய பாலுவின் கூடை, கலா சசிகுமார் எழுதிய நான்கு நன்பர்கள் ஆகிய புத்தகங்கள் குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.
‘பிராதம் புக்ஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ள இணைய வழி கதைப் பெட்டகம் ‘ஸ்டோரி வீவர்’ பல நல்ல தரமான கதைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வருகிறது. வண்ண படக்கதை புத்தகங்கள் அழகான மென்னூல் வடிவில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நல்ல தமிழ்க் கதைகள், உலகின் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வாசகர் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளனர்.
ரஜ்ஜனி நாராயணன் எழுதிய ‘அன்னயாவின் கட்டைவிரல்’, கதைகளின் நகரம், சோளக்கொள்ளை பொம்மை, மினி சீனிவாசனின் ‘ நான் பயப்படவில்லை’, நரியும் களிமண் கட்டியும், நடனமாட விரும்பிய யானைகள் ஆகிய இருமொழிப் புத்தகங்கள் கவனம் பெற்றவை. யுரேகா புத்தக நிறுவனத்தின் இரு மொழிப் புத்தகங்கள், உயிரியல் பற்றிய விளக்கப் புத்தகமாக வெளிவந்துள்ளன. அவற்றுள் சேவலும் காகமும், வண்ணத்துப்பூச்சிகள், பூக்கள், மான் , ஒரு பூவின் கதை, போன்ற புத்தகங்கள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பயனுள்ள புத்தகமாக உள்ளன.
கதைப்புதையல் ( 24 புத்தகங்கள் மூன்று தொகுப்புகளாக)- புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
உலக நாடுகளின் புகழ்பெற்ற சித்திரக்கதைகளை தமிழாக்கம் செய்து, இரு மொழிப் புத்தகங்களாக வெளியான பொக்கிஷப் புதையல் தொகுப்பு இவை. இவற்றில் பல கதைகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கால்டி கோர்ட்’ விருதுபெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், சில எழுபதுக்கும் மேற்பட்ட பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவை, உலக அமைதி, அதிகாரத்துக்கு எதிரான எழுச்சி , குழந்தை மனவியல், கதைக் கணிதம், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, விலங்கியல் உண்மைகள், அறிவியல் கண்டுபிடிப்பு, மனித நேயம் என வெவ்வேறு தளங்களை, சின்னச்சின்ன கதைகளுக்குள் அடக்கிவைத்துவிட முடியுமா என்ற கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வகையில் எழுதப்பட்டவை. புகழ் பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்களான ஷெல்சில்வர்ஸ்டீன், மார்ஜோரி ப்ளேக் , மார்கரெட் வைஸ் பிரவுன், மன்ரோ லீப் , வண்ட கக், ராபர்ட் மெக்லோஸ்கே, யுகியோ துசியா, ஹட்ஜாக் குல்னஷர்யன், ராபர்ட் க்ராஸ், பி.டி.ஈஸ்ட்மேன், க்ரோகட் ஜான்சன், மெர்சியா ஜோன் ப்ரெளன், எலிசா க்லெவென், ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட சித்திரக்கதைகளின் ஆங்கில மூலமும் தமிழ் மொழியாக்கமும் கதைப்புதையல் தொகுப்பின் தனிச்சிறப்பு. குட்டன் ஆடு, அழகிய பூனை, மந்திர விதைகள், உயிர் தரும் மரம், தப்பியோடிய குட்டிமுயல்,குஞ்ச்சு வாத்து பிங்க், பெர்டின்ன், குட்டித்தாத்தா, ஆப்பிள் ஜானி, எலி எப்படிப் புலியாச்சு, அரோல்டும் ஊதா நிறக்கிரேயானும், ராஜாவின் காலடி, ஸ்னப்பி, சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி,கடைசிப்பூ, வீ கில்லீஸ், சாலுவின் ப்ளுபெர்ரி, வில்லி எலி, காக்கை சிறுவன், நீங்க என்னோட அம்மாவா?, முயல், ஆர்தரின் சூரியன், அன்புக்குரிய யானைகள் ஆகிய இருவத்திநான்கு புத்தகங்கள் கதைப்புதையல் தொகுப்பில் அடங்கும்.
இவை குழந்தைகளுக்கு மத்தியில் கொண்டாட்ட உணர்வை ஊக்குவிக்கின்றன. அழகான படங்களுடன் வழு வழு காகிதத்திலும் அச்சேறியுள்ளன என்பது தனிச்சிறப்பு.
வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும் வாசிப்புப் பழக்கம்: உலகெங்கிலும் இரு மொழிக் கதைநேரம், இரு மொழி வகுப்பறைகள், இரு மொழிக்கதை வாசிப்புப் பயிற்சி, இரு மொழிக்கதை விவாதம் என பல ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் நிகழ்ந்து வருகின்றன. மொழித்திறன், வாசிப்பு ஆற்றல், கல்வி அறிவு வளர்ச்சி, கலாச்சார இணைப்பு, வலிமையான எழுத்தாற்றல், பிற மொழிகளை மதிப்பீடு செய்யும் திறன் ஆகியவை இளையோர் மத்தியில் வளர்ச்சிபெற இரு மொழிக் கதைப்புத்தகங்கள் வரவு அதிகரிக்கவேண்டியது அவசியமாகிறது.